Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்

சென்னை மடத்தை நிறுவுதல்!ஜனவரி 08,2013

1897 மார்ச் 17 இல் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் சென்னைக்கு வந்து சேர்ந்தார். அந்தக் காலத்தில் ரயில் பாதை இல்லை. ஆகவே அவர் கப்பலில் வந்தார். டாக்டர் நஞ்சுண்ட ராவ், அளசிங்கப் பெருமாள் முதலான சுவாமிஜியின் பக்தர்கள் சசி மகராஜை அன்போடு வரவேற்றனர். சிறிது காலத்திற்கு சசி மகாராஜை ஐஸ் ஹவுஸ் சாலையில் இருந்த ஃப்ளோரா காட்டேஜ் என்ற வீட்டில் தங்கச் செய்தனர். பிறகு ஐஸ் ஹவுஸுக்கு இடம் மாறினர். சென்னைக்குக் கொண்டு வரப்படும் ஐஸ் கட்டிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்காக ஐஸ் ஹவுஸ் கட்டப்பட்டது. அதற்குக் காஸில் கெர்னன் என்றும் பெயர் உண்டு. திருவல்லிக்கேணிப் பகுதியில் மெரீனா சாலையில் அமைந்த மூன்று மாடிக் கட்டிடம் அது.

சசி மகராஜ் சென்னை வந்தபோது, அந்தக் கட்டிடம் பிலிகிரி ஐயங்காருக்குச் சொந்தமாக இருந்தது. அவர் சுவாமி விவேகானந்தரின் செல்வச் சிறப்புமிக்க பக்தர். 1897 -இல் மேலைநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த சுவாமிஜி ஐஸ் ஹவுஸில் ஒன்பது நாட்கள் தங்கினார். அந்த மாளிகையின் அடித்தளத்தை ஸ்ரீஐயங்கார் சசி மகராஜின் உபயோகத்திற்காகக் கொடுத்தார். வராக நகரிலும், ஆலம்பஜாரிலும் அமைத்தது போலவே, இங்கும் சசி மகராஜ் ஒரு பூஜையறையை அமைத்தார். தன்னுடன் கொண்டு வந்திருந்த குருதேவரின் சிறிய படம் ஒன்றை வைத்து வழிபாடுகளைத் தொடங்கினார்.

சசி மகராஜ் பூஜையறையில் முறைப்படி பூஜை செய்தார். அதேவேளையில் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் குருதேவரின் செய்தியைப் பரப்புவதற்கான தமது பணிகளையும் தொடங்கினார். சொற்பொழிவுகள் செய்தார். சமய வகுப்புகள் நடத்தினார். சமய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அந்த நாட்களில் சென்னையில் பல்வேறு அமைப்புகள் சமயப் பணிகளில் ஈடுபட்டிருந்தன. ஆரியன் சங்கம், தங்கசாலை. இந்து இளைஞர் சங்கம், திருவல்லிக்கேணி இலக்கியச் சங்கம் முதலிய சங்கங்கள் சசி மகராஜைச் சொற்பொழிவாற்ற அழைத்தன. கீதை, உபநிஷதங்கள், பாகவதம் ஆகியவை பற்றி அவர் வகுப்புகள் நடத்தினார்.

அவ்வப்போது சிறுசிறு மாற்றங்களுடன் இந்த வகுப்புகள் தொடர்ந்து பல ஆண்டுகள் நடைபெற்றன. அந்தக் காலத்தில் பயணம் செய்ய ஜட்கா என்னும் குதிரை வண்டிதான் உண்டு. அதில் போவது கஷ்டம். இருந்தாலும் அந்த வண்டியில்தான் சசி மகராஜ் சென்னையின் பல இடங்களுக்கும் போவார். ஜட்காடை வாடகைக்கு எடுக்க அவர் ஐஸ் ஹவுஸிலிருந்து ஒன்றரை மைல் தூரம் நடக்க வேண்டியிருந்தது. அவருக்கு உதவ சமையல்காரரோ வேறு வேலைக்காரரோ இல்லாததால், அந்த வேலைகளையும் அவரே செய்ய வேண்டியிருந்தது. சசிமகராஜ் சொற்பொழிவுகளுக்குப் பொதுவாக அன்பர்கள் பலர் வந்தனர்; சில வேளைகளில் அப்படி இல்லை. அவர் மட்டுமே உட்கார்ந்திருந்த வேளைகளும் உண்டு. யாரும் இல்லாமல் போனாலும் அந்த இடத்தில் அமர்ந்து ஒரு மணி நேரம் தியானம் செய்துவிட்டுத் திரும்பி வருவார் அவர்.

ஆண்டுதோறும் ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதையும் சென்னையில் தொடங்கினார் சசி மகராஜ். இது இரண்டு நாள் விழாவாக மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது; பூஜை, ஹோமம், ஹரி கதை, சங்கீர்த்தனம், பொதுக்கூட்டம், அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் அதில் இடம் பெற்றன. சசி மகராஜ் பக்திப் பரவசமாக ஆடுவதைப் பற்றி சகோதரி தேவமாதா எழுதுகிறார். பஜனைப் பாடல்கள் உச்ச கதியை அடையும்போது பாடகர்கள் எழுந்து நடனமாடுவது பஜனையின் ஒரு பகுதியாகவே உள்ளது. இவ்வாறு ஆடுபவர்களுடன் சசி மகராஜும் ஆடுவதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். ஒருமுறை அவர் எழுந்து முகத்தைப் பூஜையறையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமகிருஷ்ணரை நோக்கித் திருப்பி, கைகளை நீட்டி மெல்லமெல்ல ஆடத் தொடங்கினார். தாளத்திற்கேற்ப ஆடியபடி அவர் பீடத்தை நோக்கி நகர்ந்தார். முகம் ஸ்ரீராமகிருஷ்ணரை நோக்கியபடி, கைகள் நீட்டியபடி இருந்தன- ஒரு கணம்கூட அது மாறவில்லை. எல்லோரும் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். அன்று காலையில்தான் அவர் என்னிடம் சகோதரி, நான் ஆடத் தொடங்கினால் அதனைத் தடுத்துவிடு என்று கூறியிருந்தார். ஆனால் என்னால் அதனைச் செய்ய முடியவில்லை. அவர் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருந்தால் அதை நான் கலைத்திருப்பேனா! அதுபோல்தான் இந்த நிலையும் அவர் அவ்வளவு ஸ்ரீராமகிருஷ்ணரில் ஒன்றியிருந்தார். தாள ராகத்துடன் கலந்த பிரார்த்தனை மற்றும் வழிபாட்டின் ஒரு திரண்ட வடிவாக அவர் திகழ்ந்தார். தம்மை மறந்த நிலையில் பீடத்திற்கு முன்பு சென்று சேர்ந்ததும், இத்தனை கண்கள் நம்மையே நோக்கியிருப்பதை அவர் சட்டென உணர்ந்தார்.

உடனே அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டார். சுமார் ஒரு மணி நேரம் அவர் திரும்பவில்லை. சில வேலைகளில் ஸ்ரீராமகிருஷ்ண ஜெயந்தி விழாக்கள் வாணியம்பாடி போன்ற வெளியிடங்களிலும் நடத்தப்பட்டன. சசி மகாராஜின் வாழ்க்கை வறுமையும் சிரமங்களும் நிறைந்ததாக இருந்தது. ஆனால் இந்தக் கஷ்டங்களைப் பற்றி அவர் பக்தர்களிடம் பேச மாட்டார். அவரைப் பொறுத்தவரையில் ஸ்ரீராமகிருஷ்ணர் வெறும் படமாக இல்லை. அதில் அவர் உயிரோடு இருந்தார். எனவே அவரிடடம் சென்று சசி மகராஜ் முறையிடுவார். ஒருமுறை அவர் குருதேவரின் முன்னால் இவ்வாறு கோபமாகப் பேசுவதை பக்தர்கள் கேட்கவும் நேர்ந்தது; முதியவரே! நீங்கள் என்னை இங்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்; பிறகு உதவி செய்யாமல் விட்டுவிட்டீர்கள்! எனது பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் சோதிக்கிறீர்களா? எனக்காகவோ உங்களுக்காகவோ கூட இனிமேல் நான் வெளியே போய்ப் பிச்சை எடுக்க மாட்டேன். கேளாமலேயே ஏதாவது வந்தால் உங்களுக்குப் படைப்பேன். அந்தப் பிரசாதத்தை நானும் உண்பேன். இல்லாவிட்டால் கடற்கரை மணலையே உங்களுக்குப் படைப்பேன். அதையே நானும் உண்பேன். அத்தகைய வேளைகளில் எங்கிருந்தோ யாராவது பக்தர்கள் வந்து தேவையான உணவுப் பொருட்களைக் கொடுப்பார்கள்.

சசி மகராஜ் பக்தி நெறியைப் பின் பற்றியவர்,சிறந்த பக்தர். எனவே அவரது மனம் இயல்பாகவே ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கையிலும் உபதேசங்களிலும் ஈடுபட்டது. 1899 இல் அவர் ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கையை வங்க மக்களுக்குத் தெரிவிக்கும் நோக்கத்துடன் உத்போதன் பத்திரிக்கையில் தொடர்க் கட்டுரையாக எழுதினார். 1899 முதல் 1906 வரையில் இந்தக் கட்டுரைகள் வெளிவந்தன. அதற்காக ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் போன்ற ஸ்ரீராமானுஜர் தொடர்புடைய இடங்களுக்கெல்லாம் சென்று தகவல்கள் திரட்டினார். இந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டது. பின்னாளில் இது சுவாமி புதானந்தரால் ஆங்கிலத்திலும், கா.ஸ்ரீ. ஸ்ரீ யால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலிருந்து வெளிவந்தது.

மேலும் விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)