Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்

சுவாமி விவேகானந்தருடன் ..ஜனவரி 08,2013

சசி மகராஜ் சென்னைக்கு வந்து சேர்ந்ததும் அவருக்கு சுவாமி விவேகானந்தரிடமிருந்து பின்வரும் கடிதம் வந்தது;

டார்ஜிலிங்
20 ஏப்ரல் 1897

அன்பு சசி,

நீங்கள் எல்லோரும் இதற்குள் கட்டாயமாக சென்னை போய்ச் சேர்ந்திருப்பீர்கள். பிலிகிரி உன்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார். சதானந்தர் உனக்குச் சேவை செய்கிறார் என்று நம்புகிறேன்.

சென்னையில் பூஜை, அர்ச்சனை முதலியவற்றை முற்றிலும் சாத்வீக பாவனையில் செய்ய வேண்டும்; ரஜோகுணத்தின் சாயலே அதில் இருக்கக் கூடாது. அளசிங்கன் இதற்குள் சென்னை திரும்பியிருப்பான் என்று நினைக்கிறேன்.

யாருடனும் விவாதங்கள் செய்யாதே; எப்போதும் சாந்தமாக இரு. இப்போதைக்கு பிலிகிரியின் வீட்டிலேயே குருதேவரைப் பிரதிஷ்டை செய்து பூஜை முதலியவற்றைச் செய்து வா. பூஜையை விரிவாகச் செய்யாதே. அந்த நேரத்தை வகுப்புகள் நடத்துவதிலும் சொற்பொழிவு செய்வதிலும் பயன்படுத்த வேண்டும். உன்னால் முடிந்த அளவு அன்பர்களுக்கு மந்திரோபதேசம் செய்வது நல்லது. இரண்டு பத்திரிகைகளையும் கவனித்துக் கொள், இயன்றவரையில் அதில் உதவு...

அதிகாலையில் பூஜை முதலானவற்றைச் சுருக்கமாக முடித்துக்கொண்டு, பிலிகிரியையும் அவர் குடும்பத்தினரையும் சேர்த்து கீதை முதலான நூல்களைச் சிறிதுநேரம் படி. ராதா-கிருஷ்ண பிரேமையைப்பற்றியெல்லாம் கற்பிக்க வேண்டியதே இல்லை. சீதாராமர், அல்லது ஹர-பார்வதி இவர்களிடம் தூய பக்திகொள்ளுமாறு போதனை செய். இதில் எந்தத் தவறும் ஏற்பட்டு விடக்கூடாது. ராதா-கிருஷ்ண லீலை இளம் மனங்களுக்கு விஷம் போன்றது என்பதை நினைவில் வை. அதிலும் முக்கியமாக, பிலிகிரி முதலியவர்கள் ஸ்ரீராமானுஜரின் நெறியைப் பின்பற்றுபவர்கள்; ராம உபாசகர்கள். அவர்கள் ஒருபோதும் தங்கள் சுத்த பக்தியை இழக்கும்படி நேரக் கூடாது.

மாலை நேரத்தில் இதேபோல் சாதாரண மக்களுக்குச் சிறிது கற்பிக்கலாம். இவ்வாறு படிப்படியாக மலையையும் தாண்டிவிடலாம்.

எப்போதும் பரிபூரணத் தூய்மை நிலவுமாறு காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.... மற்றபடி இறைவன் எல்லாவற்றையும் வழி நடத்துவார். பயம் வேண்டாம். பிலிகிரிக்கு எனது விசேஷ வணக்கத்தையும் அன்பையும் தெரிவி. அதேபோல் எல்லா பக்தர்களுக்கும் எனது வணக்கங்களைத் தெரிவி.

எனது நோய் இப்போது பேரளவிற்குக் குறைந்துள்ளது. முற்றிலும் குணமாகிவிடவும் கூடும். எல்லாம் இறைவனின் திருவுளப்படி ஆகும். எனது அன்பு, நமஸ்காரம் ஆசீர்வாதம் ஏற்றுக்கொள்.

அன்புள்ள
விவேகானந்தர்

பி.கு: டாக்டர் நஞ்சுண்ட ராவுக்கு தனது நல்வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவி. முடிந்த அளவு அவருக்கும் உதவு. தமிழ்களை, அதாவது பிராமணர் அல்லாதவர்களை. சம்ஸ்கிருதம் படிப்பதில் ஊக்கப்படுத்து.

சுரேஷ் என்னும் 17 வயது இளைஞன் ராமகிருஷ்ண மடத்தில் துறவியாக விரும்பினான். அவனுக்கு வசந்த் என்னும் பெயரை அளித்த சுவாமி பிரம்மானந்தர் அவனுக்கு துறவி வாழ்க்கைக்குத் தேவையான பயிற்சிகளைக் கொடுக்க விரும்பினார். அதற்காக அவனை 1901 மே இல் சென்னையில் உள்ள சசி மகராஜிடம் அனுப்பி வைத்தார். பிறகு 1902 ஜனவரி முதல் வாரத்தில் கல்கத்தா, பேலூர் மடத்தில் சுவாமிஜி வசந்திற்கு சன்னியாச தீட்சை அளித்தார். அந்தச் சடங்கின்போது சசி மகராஜ் சன்னியாச மந்திரங்களை ஓதினார். வசந்திற்கு சுவாமி பிரமானந்தர் என்னும் சன்னியாசப் பெயர் அளிக்கப்பட்டது. சசி மகராஜுடன் சுவாமி பரமானந்தரும் சென்னை திரும்பினார். 1906 வரையிலும் அவர் சசி மகராஜிடம் பயிற்சி பெற்றார். பிறகு நியூயார்க்கில் வேதாந்தப் பணிகளுக்கு உதவி செய்வதற்காக அவர் அனுப்பப்பட்டார்.

பேலூர் மடத்தை விட்டுப் புறப்படுவதற்கு முன்னால், சசி மகராஜ் தன்னுடைய காணிக்கையாக நானூறு ரூபாயை சுவாமிஜியிடம் கொடுத்தார். இதைப்பற்றிப் பின்னாளில் சுவாமி விவேகானந்தர் தமது ஐரிஷ் சிஷ்யையான சகோதரி நிவேதிதைக்கு வாரணாசியிலிருந்து 1902 மார்ச் 4-இல் ஒரு கடிதம் எழுதினார்.

அன்பார்ந்த மார்கோ(மார்கரெட்)

.................... நான் இங்கு வருவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணானந்தர் வந்திருந்தார். வந்த கையோடு, தான் இத்தனை வருடங்கள் பாடுபட்டுச் சேர்த்த 400 ரூபாயை என் பாதங்களில் வைத்தார்! இப்படி ஒரு நிகழ்ச்சி என் வாழ்க்கையில் நடந்தது இதுவே முதன்முறை. என்னால் கண்ணீரை அடக்கவே முடியவில்லை. ஓ, அம்மா! அம்மா!! நன்றியெல்லாம், அன்பெல்லாம், ஆண்மையெல்லாம் இறந்துவிடவில்லை!!! என் மகளே, இது ஒன்று போதும்- மீண்டும் உலகை நிறைக்க இந்த ஒரு விதை போதும்.

அந்தப் பணம் மடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து நான் ஒரு காசைக் கூடத் தொட விரும்பவில்லை. உன்னைச் சேர்ந்தவர்களுக்கு நீ அந்தப் பணத்தைக் கொடுத்திருக்கலாமே என்று ராமகிருஷ்ணானந்தரிடம் சொன்னேன், அதற்கு அவர், உங்களைத் தவிர அதை யாரிடமும் கொடுப்பது பற்றி எல்லாம் நினைத்து பார்க்கவே முடியாது. இவ்வளவு சிறிய தொகையைச் சேர்க்க நான்கு வருடங்கள் ஆகிவிட்டனவே என்பது தான் வருத்தம் என்றார். நான் இறந்துவிட்டால் அந்த 400 ரூபாயும், அதன் ஒவ்வொரு பைசாவும் அவருக்குத் திரும்பிக் கொடுக்கப்படுமாறு பார்த்துக்கொள். உன்னையும் ராமகிருஷ்ணானந்தரையும் எம்பெருமானே ஆசீர்வதிக்கட்டும்.

உன் அன்புத் தந்தை
விவேகானந்தர்

சசி மகராஜுக்கு சுவாமிஜியிடம் ஆழ்ந்த பக்தி இருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணரின் செய்தியைப் பரப்புங்கள்; சமுதாயப் பணிகளில் ஈடுபடுங்கள் என்று சகோதரத் துறவிகளிடம் சுவாமிஜி கூறியபோது, முதலில் அவர்கள் தயங்கினர். ஆனால் சசி மகராஜ் எந்தக் கேள்வியும் கேட்காமல் சுவாமிஜியின் உத்தரவை அமைதியாக ஏற்றுக்கொண்டார்.

சசி மகராஜிற்கு சுவாமிஜியிடம் இருந்த பக்திக்கு மற்றோர் உதாரணம். சசி மகராஜ் ஒரு முறை எர்ணாகுளம் போயிருந்தார். அங்கு வக்கீல் துரைசாமி ஐயரின் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு ஆகியிருந்தது. வீட்டிற்குள் நுழைந்ததும் அவர் அந்த வக்கீலிடம், சுவாமி விவேகானந்தர் ஒரு முறை உங்கள் வீட்டில் தங்கியிருந்தாராமே? இது ஒரு தீர்த்தம், ஒரு ÷க்ஷத்திரம். அவர் தங்கியிருந்த அந்த இடத்தை நான் முதலில் பார்க்க வேண்டும் என்று கேட்டார். அதற்குத் துரைசாமி ஐயர், இப்போது நாம் இருவரும் நின்றுகொண்டிருக்கும் இதே இடத்தில்தான் சுவாமிஜி வந்ததும் அமர்ந்தார் என்று பதிலளித்தார். இதைக் கேட்ட உடனே சசி மகராஜ் அந்த இடத்தில் தரையில் வீழ்ந்து, புரண்டு, அந்தத் தரையை முத்தமிட்டார்.

பேலூர் மடத்தில் தமது அறையில் 1902- ஜூலை 4-இல் சுவாமி விவேகானந்தர் மகாசமாதி அடைந்தார். இரவு சுமார் ஒன்பது மணிக்கு அவர் தமது உடலை உகுத்தார். அதே சமயத்தில் சசி மகராஜ் சென்னை ஐஸ் ஹவுஸில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். சிறிதுநேரத்திற்குப் பிறகு அவர் சுவாமி சச்சிதானந்தரை அழைத்துக் கூறினார். இதோ பார், சற்றுமுன் சுவாமிஜி என்முன் தோன்றினார், சசி, உமிழ்நீரை உமிழ்வதுபோல் என் உடம்பைத் துப்பிவிட்டேன் என்று கூறிவிட்டு இரண்டு மூன்று முறை துப்பியும் காட்டினார். என்று அவரிடம் தெரிவித்தார். மறுநாள் காலையில் அளசிங்கரும் வேறு சில பக்தர்களும் பேலூர் மடத்திலிருந்து வந்த தந்தி ஒன்றைக் கொண்டுவந்து சசி மகராஜிடம் கொடுத்தனர். அதில் சுவாமிஜி மறைந்த செய்தி கூறப்பட்டிருந்தது.

ஜூலை 25-ஆம் நாள் சென்னையிலுள்ள பச்சையப்பா அரங்கத்தில் சென்னை நகரத்தினர் இரங்கற்கூட்டம் நிகழ்த்தினர். சென்னை நகரத்தில் பிரபலமானவர்களும், சுவாமிஜியின் சீடர்களும், சசி மகராஜும் கலந்துகொண்டனர். சசி மகராஜ் உணர்ச்சிபூர்வமான தமது உரையில் சுவாமிஜிக்கென்று சென்னையில் கோயில் ஒன்று எழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பண்டைய ரிஷிகள் நமக்கென்று விட்டுச் சென்ற கூர்த்த அறிவும் மெய்ஞானமும் நமக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு வெளியுலகிற்கும் தேவைப்படுகிறது. அந்த ஞான ஒளியைப் பரப்புவதற்காக இங்கே, சென்னையின் முக்கியமான பகுதியில், ஆனந்த மந்திர்(விவேகானந்தரின் நினைவாக ஓர் ஆனந்தக் கோயில்) ஒன்று எழ வேண்டும். அங்கிருந்து எழுகின்ற ஆன்மீக ஒளி தொடர்ந்து, விரிந்து, பரந்து அருகிலுள்ளவற்றையும் தொலைவில் உள்ளவற்றையும் தழுவிச் செல்ல வேண்டும்.

இதைத் தொடர்ந்து, சுவாமிஜியின் நினைவைப் போற்றுவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அவருக்கென்று நினைவாலயம் ஒன்று எழுப்புவதற்காகப் பணமும் வசூலிக்கப்பட்டது. ஆயினும் பெரிதாக எதுவும் நடைபெறவில்லை.

மேலும் விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)