Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்

பணிகளின் வளர்ச்சியும் பயணங்களும் ..ஜனவரி 08,2013

காளி பாத கோஷ் ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்களில் ஒருவர். அவர் ஜான் டிக்கின்ஸன் கம்பெனியில் உள்ளூர்ப் பிரதிநிதியாக இருந்தார். 1903-இல் அவர் சசி மகராஜை திருவனந்தரபுரத்திற்கு வருமாறு அழைத்தார். சசி மகராஜ் அவரது வீட்டில் தங்கினார். ஸ்ரீராமகிருஷ்ணரில் ஜெயந்தி விழாக்களில் பங்கேற்றார். அப்போது ஏராளமான ஏழைகளுக்கு அன்னதானம் வழக்கப்பட்டது. விழாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் தலைப்பில் சசி மகராஜ் சொற்பொழிவு செய்தார்.

திருவனந்தபுரத்தில்

சசி மகராஜ் திருவனந்தபுரத்தில் ஒரு மாதம் தங்கினார். பல இடங்களில் சொற்பொழிவாற்றினார். திருவாங்கூர் திவானன் பட்டணத்து உறை விடமான பத்மவிலாசம் அரண்மனையிலும் அவர் ஓர் உரை நிகழ்த்தினார். பக்தி என்னும் தலைப்பில் திருவனந்தபுரம் டவுன் ஹாலில் (தற்போதைய விக்டோரியா ஜூபிலி டவுன் ஹால்) பேசினார்.

சசி மகராஜ் திருவனந்தபுரத்தில் திங்கியிருந்தபோது, புகழ்பெற்ற அனந்த பத்மநாப கோயிலுக்கு ஒருமுறை போனார். அவர் கருவறைக்குள் செல்ல விரும்பினார்; ஆனால் கோயில் அர்ச்சகர் அவரைத் தடுத்து, நீங்கள் பிராமணரா? என்று கேட்டார். அர்ச்சகரின் தடங்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல் சசி மகராஜ் உரத்த குரலில் பின்வரும் சம்ஸ்கிருத சுலோகத்தைப் பாடினார்.

நாஹம் மனுஷ்யோ ந ச தேவ யöக்ஷள
ந ப்ராஹ்மண க்ஷத்ரிய சூத்ர
ந ப்ரஹ்மசாரி ந க்ருஹீ வனஸ்த
பிக்ஷúர்ந சாஹம் நிஜ போத ரூப

நான் மனிதனல்ல. தேவனல்ல யட்சனுமல்ல; பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர இனத்தவனும் அல்ல, நான் பிரம்மச்சாரியும் அல்ல, இல்லறத்தானும் அல்ல, வனத்தில் சுற்றி அலையும் ஏகாந்தவாசியுமல்ல. தெருவில் பிச்சை கேட்டுத்திரியும் துறவியும் அல்ல. நான் தூய உணர்வுப் பொருளான ஆன்மா ஆவேன்.

சசி மகராஜின் கணீரென்ற குரலும் அமைதியான தோற்றமும் பக்தியுணர்வும் அந்த அர்ச்சகரின் மனத்தில் ஒருவித பயத்தையும் மரியாதையையும் உண்டாக்கின. அவர் அமைதியாக விலகி நின்று வழிவிட்டார்; சசி மகராஜ் கருவறைக்குள் சென்று வழிபட்டார்.

பெங்களூரில்

ஸ்ரீராமகிருஷ்ணரின் செய்தியை போதிக்கும் ஒரு சிறந்த போதகராக சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் புகழ் பரவ ஆரம்பித்தது. பல அழைப்புகள் வரத் தொடங்கின.

அல்சூர் வேதாந்த சங்கத்தினரின் அழைப்பை ஏற்று சசி மகராஜ் 1903 ஜூலையில் பெங்களூர் சென்றார். காலை ஆறு மணிக்குக் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை அடைந்தார். ராஜ மரியாதையுடன் மக்கள் அவரை வர வேற்றனர். நாலாயிரம் அன்பர்கள் மற்றும் ஐம்பத்து மூன்று பஜனை குழுவினர் ஒரு நீண்ட ஊர்வலமாக அவரை அழைத்துச் சென்றனர். கண்டோன்மென்ட் பகுதியின் முக்கிய வீதிகளின் வழியாக அவர்கள் சென்றனர். ஊர்வலம் மூன்று மைல் தூரம் போயிற்று. காலை பத்து மணிக்கு அவர்கள் கிளாரென்டன் ஹாலை அடைந்தனர்.

பெங்களூரில் சசி மகராஜ் இருபது நாட்கள் தங்கியிருந்தார். அங்கே அவர் பன்னிரண்டு சொற்பொழிவுகள் ஆற்றினார்; பல பேட்டிகளும் அளித்தார்.

ஜூலை 25- இல் சசி மகராஜ் சென்ட்ரல் கல்லூரியில் உலகிற்கு ஸ்ரீராமகிருஷ்ணரின் செய்தி என்ற தலைப்பில் பேசினார். விழாவிற்கு மைசூர் திவான் சர்.பி.என் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

ஜூலை 26-இல் அவர் மல்லேஸ்வரத்தில் உள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் யோகம் என்பது என்ன? என்ற தலைப்பில் பேசினார். தலைமை நீதிபதியான திவான் பகதூர் எ. ராமசந்திர ஐயர் தலைமை தாங்கினார். ஜூலை 29-இல் மேயோ ஹாலில் வேதாந்தம் என்ற தலைப்பில் பேசினார். மைசூர் ராஜ்ய மன்றத்தின் மூத்த உறுப்பினரான ஸ்ரீ வி.பி மாதவ ராவ் தலைமை தாங்கினார். ஜூலை 31. இல் அவர் எல்லா மதங்களின் பொதுவான லட்சியம் என்பது பற்றிச் சொற்பொழிவு செய்தார். மைசூர் அரசின் செயலாளரான ஸ்ரீ எச்.பி நஞ்சுண்டையா கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். சொற்பொழிவு மேயோ ஹாலில் நடைபெற்றது.

ஜூலை, 30 இல் பக்தி யோகம் பற்றி அனந்த சுவாமி மடத்தில் பேசினார்.

ஆகஸ்ட் 2-இல் ஆரிய தர்ம போதினி சபையினர் ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இடம்: சாமராஜப் பேட்டையில் உள்ள சம்ஸ்கிருதக் கல்லூரி. பொருள்: ராமாயணம் தரும் படிப்பினைகள் தலைமை: மன்ற உறுப்பினர் ஸ்ரீ சி. ஸ்ரீனிவாச ஐயங்கார்.

ஆகஸ்ட் 2-இல் பசவன் குடிசங்கத்தினரின் அழைப்பை ஏற்று மற்றொரு சொற்பொழிவும் அவர் ஆற்றினார். இடம் நந்திக் கோயில். பொருள்: ஈசுவரன்-கோட்பாடு தலைமை: புகழ்பெற்ற சட்ட அறிஞரான சுப்பராய ஐயர்.

ஆகஸ்ட் 3-இல் அவர் இரண்டு உரைகள் ஆற்றினார். இடம்: பூர்ணையா சத்திரம். 1. ஸ்ரீராமகிருஷ்ணரும் சுவாமி விவேகானந்தரும்; 2. மதத்தின் தேவை தலைமை: எக்ஸைல் கமிஷ்னர் ஸ்ரீ பி.என் பூர்ணையா. ஆகஸ்ட் 4-இல் ரானடே நினைவுச் சங்கமும் நண்பர்கள் சங்கமும் இணைந்து கூட்டம் நடத்தினர். இடம்: லண்டன் (ஐக்கிய) மிஷன் பள்ளி. பொருள்: வாழ்க்கை லட்சியங்கள். தலைமை: ராஜ்ய மன்ற உறுப்பினர் ஸ்ரீ சி.ஸ்ரீனிவாச ஐயங்கார்.

மைசூரை ஆண்ட பிரபல மன்னரான மகாராஜா கிருஷ்ண ராஜேந்திர உடையாரையும் சசி மகராஜ் பெங்களூரில் சந்தித்துப் பேசினார்.

மைசூரில் ..

1903 அக்டோபரில் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் மூன்று நாட்களுக்கு மைசூருக்கு விஜயம் செய்தார். அங்கு சம்ஸ்கிருதக் கல்லூரியில் அவர் சம்ஸ்கிருதத்தில் ஒரு சொற்பொழிவு வழங்கினார்.

சம்ஸ்கிருத அறிஞர்கள் கூடியிருந்த அந்தச் சபையில் சசி மகராஜ் சமயசமரசம் என்ற பொருளில் பேசினார். அந்த உரையின் ஒரு பகுதி: க்ருகலாஸோ யதா ச்வேச்சயா ஸ்வவர்ணம் பரிவர்த்ததே, கதாபி வா அவர்ணோ பூத்வா அவதிஷ்ட்டதி ஸ்ரீபகவானபி ததா பக்தானுக்ரஹாய பஹுருபைராத்மானம் ப்ரகாசயதி ஸமகாலமேவ ஸ ஸாகாரோ நிராகாரச்ச, கர்த்தா அகர்த்தா ச, தஸ்ய கர்த்தாரமபிமாம் வித்த்யகர்த்தாரம் அவ்யயமிதி பகவதுக்தே பக்திஸ்தத் பாதமூலம் ஸுலபி கரோதி

மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யேபி ஸ்யு பாபயோனய ஸ்த்ரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தேபி யாந்தி கதிம் பச்சோந்தி தன் விருப்பத்தினால் தன்னுடைய வண்ணத்தை மாற்றிக்கொள்கிறது. சிலவேளைகளில் நிறம் இல்லாமலும் இருக்கிறது. அதைப்போல் பக்தர்களுக்கு அருள் புரிவதற்காக பகவான் பல்வேறு உருவங்களை எடுத்துக் கொள்கிறார். ஒரே சமயத்தில் அவர் உருவத்தோடும் உருவம் இல்லாமலும், செயல்படுபவராகவும் செயல்படாதவராகவும் இருக்கிறார். கீதையில் பகவான் கூறுவதுபோல் உலகைப் படைத்தவராக இருந்தும் அவர் எந்தச் செயலிலும் ஈடுபடாதவர் பக்தியால் பகவானை எளிதில் அடையலாம். அனுகூலம் இல்லாத சூழ்நிலையில் பிறந்தவர்கள், பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் யார் என்னைத் தஞ்சமடைகிறார்களோ அவர்கள் நிச்சயமாக மேலான கதியை அடைகிறார்கள்.

இந்தப் பயணத்தின் போது சுவாமி ராமகிருஷ்ணானந்தர் மைசூரில் நான்கு சொற்பொழிவுகள் ஆற்றினார். இடம்: ரங்காச்சார்லு நினைவு மண்டபம் (தற்போதைய மைசூர் ஹால்)

மைசூரிலிருந்து சென்னைக்குத் திரும்பி வரும் வழியில் ஸ்ரீரங்கப்பட்டணம் என்னும் புண்ணியத்தலத்தில் சசி மகராஜ் தங்கினார். அங்கே ஒரு கூட்டத்தில் பேசினார். சென்னைக்குத் திரும்பி வந்த உடனேயே அவருக்கு ÷ஷாலாபூரிலிருந்து (இப்போது மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது) பேசுவதற்கு ஓர் அழைப்பு வந்தது. அதன்படி 1904 ஜூலையில் அவர் அங்கு சென்றார்.

÷ஷாலாப்பூரில்

1904 ஜூலை 28-இல் சசி மகராஜ் ஆனந்தம் என்னும் பொருள் பற்றி பேசினார். இடம்: ÷ஷாலாப்பூர் ரிப்பன் மண்டபம். 300 க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். ஜூலை 31-இல் அதே ஹாலில் அவர் சுவாமி விவேகானந்தரின் செய்தி என்ற தலைப்பில் பேசினார்.

மசூலிப் பட்டணத்தில்
மசூலிப் பட்டணத்து (தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது) அன்பர்கள் சசி மகராஜை தங்கள் ஊருக்கு அழைத்தனர். பழமையான துறைமுகப் பட்டினம் அது. 1904 ஆகஸ்ட்டில் சசி மகராஜ் அங்கு சென்றார். அங்கே சுவாமி விவேகானந்தரின் நினைவாகக் கட்டப்பட்ட விவேகானந்த மந்திரம் என்னும் கோயிலைத் திறந்து வைத்தார். சமய சமரசத்தைக் கருத்தில் கொண்டு கட்டப்பட்ட அந்தக் கோயில் பீடத்தில் ஓம் என்ற மந்திரம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டது.

1890 இல் தொடங்கப்பட்ட இந்து மத பால சமாஜம் என்ற சங்கத்தின் சார்பில் அந்தக் கோயில் அமைக்கப்பட்டது. அந்தக் கட்டிடம் இப்போது இல்லை. அதே வடிவத்தில் ஒரு புதிய கட்டிடம் 1972-இல் எழுப்பப்பட்டது. அந்தக் கோயில் சமய, கலாசாரப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.

திருநெல்வேலியில்

தமிழ்நாட்டின் தென்பகுதி திருநெல்வேலி அங்குள்ள நரசிம்ம நல்லூரில் பிரம்ம நிஷ்டை மடம் உள்ளது. மடத்தின் மூன்றாவது ஆண்டு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொள்ளுமாறு மடத்தினர் சசி மகராஜை வேண்டினர். 1904 டிசம்பர் 25-31 நாட்களில் சசி மகராஜ் அங்கு சென்றார். திருநெல்வேலி ரயில் நிலையத்தில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓர் ஊர்வலமாக அவரை மடத்திற்கு அழைத்துச் சென்றனர். நான்கு நாட்கள் அவர் பிரம்ம நிஷ்டை மடத்தில் தங்கியிருந்தார் அங்கு இந்து மதம் என்பது என்ன? ஆன்மாவின் இயல்பு பக்தி ஆகிய தலைப்புகளில் பேசினார்.

பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அவர் டிசம்பர் 29-இல் திருநெல்வேலி நகருக்குச் சென்றார். நெல்லையப்பர் கோயில் வசந்த மண்டபத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவை மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கேட்டனர்.

சொற்பொழிவுக்குப் பிறகு சசி மகராஜ் நெல்லையப்பர் கோயிலுள் சென்றார் நம பார்வதீ பதயே! ஹர ஹர மஹாதேவ! என்று கோஷமிட்டுக்கொண்டே திரளான பக்தர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். டிசம்பர் 30-இல் அவர் சென்னைக்குப் புறப்படுவதாக இருந்தது. ஆனால் பக்தர்கள் ஆர்வத்துடன் வேண்டிக் கொண்டதால் அவர் தன் பயணத்தைத் தள்ளிவைத்தார். டிசம்பர் 30 அன்று அவர் பராபக்தி பற்றி பேசினார். அவருடைய உரையைக் கேட்பதற்குப் பெரும் திரளான மக்கள் கூடியிருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்குக் காவல்படையைக் கூப்பிட வேண்டியதாயிற்று. சசி மகராஜ் ஆங்கிலத்தில் பேசினார். அந்த உரையை ஓர் உள்ளூர்த் துறவி தமிழில் மொழிபெயர்த்தார். அடுத்த நாள் சசி மகராஜ் திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு. 1905 ஜனவரி முதல் நாள் காலையில் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

கேரளத்தில்

1905 ஜனவரி 18-இல் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் ஆலப்புழையில் சனாதன தர்ம வித்யாலயம் (ஆண்கள்) பள்ளியைத் தொடங்கி வைத்தார். அதே நாள் மாலையில் சனாதன தர்மம் என்பது பற்றியும், அதற்கு அடுத்த நாளில் கீதையைப் பற்றியும் பேசினார்.

ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரது வாழ்க்கையையும், உபதேசங்களையும் பற்றிய சசி மகராஜின் உரை அந்தப் பகுதி மக்களிடையே பெரும் ஆர்வத்தை எழுப்பியது. குறிப்பாக அடுத்த கிராமத்தில் இருந்த மீனவர்களிடையே பெரும் ஆர்வத்தை எழுப்பியது.

ஜனவரி 19-இல் எர்ணாகுளம் தியாசபிகல் சொசைட்டியினர் சசி மகராஜை அழைத்தனர். சொசைட்டியின் தலைவர் சசி மகராஜுக்கு வரவேற்பு உரை வழங்கிச் சிறப்பித்தார்; அவரது ஆன்மீகப் பெருமைகளைப் புகழ்ந்து பேசினார். அடுத்த நாள் அங்கு சசி மகராஜ் மனிதன் அடைய வேண்டிய நான்கு லட்சியங்கள் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

ஜனவரி 20 இல் மகாராஜா கல்லூரியில் மரணமும் அதன் பிறகும் என்பது பற்றியும் அடுத்த நாள் பக்தி பற்றியும் பேசினார். நூற்றுக் கணக்கானோர் அவரது உரைகளைக் கேட்கக் கூடினர்.

ரங்கூனில்

அட்சய குமார் சேன் ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்களில் ஒருவர். ஸ்ரீஸ்ரீராமகிருஷ்ண புந்தி என்ற ஸ்ரீராமகிருஷ்ணரின் திவ்ய சரிதமான கவிதைக் காவியத்தை இயற்றியவர். பர்மாவிலுள்ள (தற்போதைய மியான்மர்) ரங்கூனில் (தற்போதைய யாங்கோன்) அவர் ராமகிருஷ்ண சேவக சமிதி என்ற சங்கத்தை நடத்திவந்தார். அங்கே ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறந்த நாள் விழா ஏற்பாடாகி இருந்தது. அந்த விழாவில் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் கலந்து கொள்ள வேண்டும் என அட்சயர் விரும்பினார். அவ்வாறே சங்கம் சசி மகராஜுக்கு அழைப்பு விடுத்தது. 1905 மார்ச் 20-இல் அவர் ரங்கூன் போய்ச் சேர்ந்தார். ஸ்ரீகுருமகராஜின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பேசினார். அதைத் தவிர அவர் ரங்கூன் நகரில் நான்கு சொற்பொழிவுகள் ஆற்றினார்.

சசி மகராஜ் ரங்கூனில் குறைந்த நாட்களே தங்கியிருந்தார். புத்த மதக் கோயில் போன்ற சில முக்கியமான இடங்களைப் பார்வையிட்டார். நிலா ஒளி வீசிய ஓர் இரவில் அவர் அருகில் இருந்த சுவேதாகன் பகோடாவிற்குப் போனார். மிகுந்த பக்தியுடன் கோயிலை வலம் வந்தார். அந்த அழகிய இயற்கைச் சூழல் அவருடைய மனத்தைக் கவர்ந்தது.

அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு புத்த மதத் துறவியை சுவாமி ராமகிருஷ்ணானந்தர் கோயிலில் சந்தித்தார். அடுத்த நாள் சசி மகராஜ் செய்த சொற்பொழிவு அந்தத் துறவியின் மனத்தை ஈர்ப்பதாக இருந்தது.

ஐரிஷ் துறவி: சொல்லப்போனால், உலகின் மதங்கள் அனைத்துமே குறுகிய நோக்கம் கொண்டவைதான்; புத்த மதம் மட்டுமே உண்மையானது. மிகவும் பரந்த கொள்கைகளை உடையது. அதனால்தான் உலகிலுள்ள மக்களில் பாதி பேர் புத்த மதத்தினராக உள்ளனர். அதனால்தான் நானும் பவுத்தனாக உள்ளேன்.

சசி மகராஜ்: நாங்கள் உலகின் இன்றைய மதங்களை அனைத்தையும் மதிக்கிறோம். அவை ஒவ்வொன்றும் உண்மை. ஒரே நோக்கம் கொண்டவை என்று நம்புகிறோம்.

ஐரிஷ் துறவி: நீங்கள் கூறுகின்ற இந்தக் கருத்தை உபதேசித்தது யார்?

சசி மகராஜ்: ஸ்ரீராமகிருஷ்ணர்; அவர் இந்த யுகத்தின் அவதார புருஷர். இந்த மாபெரும் செய்தியை அவர் தமது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினார், போதிக்கவும் செய்தார்.

ஐரிஷ் துறவி: அவரது செய்தியின் சிறப்பு என்ன?

சசி மகராஜ்: சமய சமரசம் இந்த உண்மையை அவர் தமது அனுபூதியில் உணர்ந்தார்; தமது வாழ்வில் வாழ்ந்து காட்டினார் புத்தர், ஏசு, முகமது மற்றும் பிற மதங்களின் தலைவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் போதிக்கின்ற மதம் மட்டுமே மோட்சத்திற்கான பாதை என்று கூறினர். ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் மற்ற மதத் தலைவர்களுக்கும் இருந்த வித்தியாசம் இதுதான்; அவர் எந்தப் புதிய மதத்தையும் போதிக்கவில்லை. ஆனால் அவர் தமது வாழ்வில் எல்லா மதங்களையும் பின்பற்றினார். அவை அனைத்திலும் அடிப்படையாகத் திகழ்கின்ற உலகம்தழுவிய உண்மையை அனுபூதியில் உணர்ந்தார். அவரது செய்தியை எத்தனை மதங்களோ அத்தனை வழிகள் என்ற ஒரு வாக்கியத்தில் சுருக்கமாகக் கூறிவிடலாம்.

கோவிலில் இருந்த பதினான்கு அடி உயரமுள்ள மிகப் பெரிய மணியைப் பார்த்து சசி மகராஜ் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். மூன்று டன் எடையுள்ள அந்த மணி பாலி மொழியில் மஹா திஸத்த கண்டா என்று அழைக்கப்படுகின்றது. ஆறு மனிதர்கள் வசதியாக நிற்பதற்கு உள்ள இடம் கொண்ட அவ்வளவு பெரிய மணி அது.

சசி மகராஜ் அந்தக் கோவிலில் உட்கார்ந்து தியானம் செய்யலானார். அவர் தியானத்தில் ஆழ்ந்து மூழ்கியிருந்தபோது, சில பர்மியப் பெண்கள் சில மலர்களை அமைதியாக அவருக்கு சமர்ப்பித்து விட்டுச் சென்றனர். சுவாமியிடம் அவர்களுக்குகிருந்த உள்ளார்ந்த பக்தியின் அடையாளமே அந்த மலர்கள் என்று பிறகு கோயில் காவலர் கூறினார்.

ஒவ்வொருநாளும் சசி மகராஜ் பூஜை செய்தார். சொற்பொழிவு ஆற்றினார். குருதேவரைப்பற்றி பேசினார். குருதேவருக்கு விருப்பமான நாகேஸ்வர சம்பா மலர்கள் நான்கு மைல் தொலைவில் ஒரு தோட்டத்தில் இருப்பதை அறிந்தார். ஜெயந்தி விழா அன்று பூஜைக்கு அந்த மலர்களைப் பறித்து வருவதற்காக நடந்தே சென்றார். வழியில் சரத் சந்திரர் (பின்னாளில் பிரபல நாவலாசிரியரான சரத் சந்திர சட்டோபாத்யாயர் என்ற இளைஞரும் அவருடன் சேர்ந்து கொண்டார். சிந்தனையாளர்களை அவர் படித்திருந்தார். தன்னை ஒரு நாத்திகர் என்று அவர் கூறுவார்அவர்களிடையே நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதி:

சரத்: ஏன் நீங்கள் இவ்வளவு அதிகமாகப் பூஜை செய்கிறீர்கள்?

சுவாமிகள்: எனக்கு அதில் பேரானந்தர் கிடைக்கிறது.

சரத்: அப்படியென்றால் பூஜை செய்வதுதான் மிக உயர்ந்த வழிபாடா?

சுவாமிகள்: இறைவனை எல்லா இடத்திலும் காண்பதே மிக உயர்ந்த வழிபாடு. தியானம் அதற்குக் குறைந்தது; பிரார்த்தனை, ஜபம் போன்றவை அதற்கும் கீழானவை; மிகத் தாழ்ந்தது பூஜை.

சரத்: அப்படியானால் பூஜையில் மக்கள் ஏன் இவ்வளவு பகட்டும் படாடோபமும் காட்ட வேண்டும்?

சுவாமிகள்: பூஜை என்பது வெறும் புறக்கிரியை அல்ல, அது உள்ளத்துடன் தொடர்பு கொண்டது சாதாரண மக்கள் பூஜை செய்வது கடவுளுக்குத் தம்மிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியிலிருந்து தப்பவோ அல்லது சில ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவோதான். இவையெல்லாம் தாழ்ந்த நோக்கங்கள். உள்ளத்தில் பக்தி நிறைந்து வழிய, கண்களில் கண்ணீர் ஆறாய்ப் பெருக, இறைக் காட்சி இன்னமும் கிட்டவில்லையே என்று ஏங்கித் தவிக்கும் வரையில் நாம் செய்யும் பூஜை உண்மையான பூஜை ஆகாது.

பம்பாயில்

சசி மகராஜ் ரங்கூனில் ஐந்து நாட்கள் தங்கினார், பிறகு மார்ச் 25 இல் சென்னை வழியாக பம்பாய்க்குக் கப்பலில் புறப்பட்டார். மார்ச் 29 இல் போய்ச் சேர்ந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரின் 72-ஆம் பிறந்த நாள் விழாவுக்கு அங்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். காளி பாத கோஷ் சசி மகராஜுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

காளி பாத கோஷ் ஜான் டிக்கின்ஸன் கம்பனியின் உள்ளூர் பிரதி நிதி. அந்தக் கம்பெனியில் பணியாற்றும் சில பக்தர்கள் பம்பாய் கிரான்ட் சாலையில் உள்ள தோபிவாலா சால் என்னும் இடத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரை வழிபட்டு வந்தனர். அங்கே தங்கள் ஆண்டுவிழாவில் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் பெரிதும் விரும்பினர்.

அந்த ஆண்டுவிழா 1905 ஏப்ரல் 1-இல் ஃபாம்ஜி கவஸ்ஜி ஹாலில் கொண்டாடப்பட்டது. சர் பாலகிருஷ்ணர் தலைமை வகித்தார். இந்த விழாப் பேருரை தவிர சசி மகராஜ் பம்பாயில் மூன்று சொற்பொழிவுகள் ஆற்றினார். அவற்றில் ஒரு நிகழ்ச்சிக்குப் பெரிய தேச பக்தரும், அரசியல் தலைவருமான பாலகங்காதர திலகர் தலைமை தாங்கினார். பம்பாயில் ராமகிருஷ்ண மிஷனின் ஒரு நிரந்தர மையத்தைத் துவக்க வேண்டும் என்று திலகர் வேண்டுகோள் விடுத்தார் ஆனால் இருபது ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவருடைய விருப்பம் நிறைவேறியது.

சுவாமி ராமகிருஷ்ணானந்தர் மேலும் மூன்று உரைகள் ஆற்றினார். அவை பக்தி யோகம் உலகம் தழுவிய மதம் ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள் ஆகியவை.

மேலும் விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)