Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> கவிதைகள், கடிதங்கள்,

கேத்ரி மன்னருக்கு விவேகானந்தர் எழுதிய கடிதம் ..ஜனவரி 11,2013

அமெரிக்கா
1894

.....ந க்ருஹம் க்ருஹமித்யாஹுர்க்ருஹிணீ க்ருஹமுச்யதே- வீட்டை வீடென்று சொல்வதில்லை. மனைவியையே வீடென்று சொல்வார்கள். என்று ஒரு சம்ஸ்கிருதக் கவிஞர் சொல்கிறார். எவ்வளவு உண்மை, வெயில், குளிர், மழையிலிருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கின்ற கூரையை, அதைத் தாங்கி நிற்கின்ற தூண்களைக் கொண்டு- அவை மிகச் சிறந்த கொரிந்தியன் (தெற்கு கிரீஸிலுள்ள ஓர் இடம். அலங்காரக் கலைக்குச் சிறப்புபெற்ற இடம்.) தூண்களாக இருந்தாலும் சரி மதிப்பிடக் கூடாது. அந்த வீட்டிற்கு உண்மையான தூணாக, நடுநாயகமாக, உண்மை ஆதாரமாக விளங்குபவளான பெண்ணை வைத்துதான் மதிப்பிட வேண்டும். இந்த அளவைக் கொண்டு பார்த்தால், அமெரிக்கர்களின் வீடு உலகின் எந்த வீட்டிற்கும் தரத்தில் குறைந்ததாக இருக்காது.

அமெரிக்க வீடுகளைப்பற்றி நான் பல கதைகளைக் கேட்டதுண்டு. சுதந்திரம் அங்கே அத்துமீறியுள்ளது. பெண்மையே இல்லாத பெண்கள், தங்கள் வெறிபிடித்த சுதந்திரத்தின் காரணமாக இல்லற வாழ்க்கையின் அமைதி இன்பம் அனைத்தையும் காலால் மிதித்துக் குலைத்துவிடுகின்றனர் என்றெல்லாம் பலர் பிதற்றுவதுண்டு. ஆனால் ஒரு வருட காலமாக அமெரிக்க வீடுகளிலும் அமெரிக்கப் பெண்களுடனும் பழகியபோது, இத்தகைய முடிவுகள் அப்பட்டமான பொய், முற்றிலும் தவறு என்று எனக்குத் தோன்றுகிறது. அமெரிக்கப் பெண்களே, உங்களுக்கு நான் பட்டுள்ள நன்றிக் கடனைத் தீர்ப்பதற்கு ஒரு நூறு பிறவிகள்கூடப் போதாது. அதைச் சொல்வதற்கு போதிய வார்த்தைகள் என்னிடம் இல்லை. கீழை நாட்டினரின் மிகையான வர்ணனையே, அந்தக் கீழை நாட்டினரின் நன்றியுணர்ச்சியின் ஆழத்தை வெளிப்படுத்தவும் வல்லது. இந்துமாக் கடலையே ஒரு மைக்கூடாக, மிக உயர்ந்த இமயத்தையே பேனாவாக பூமியைக் காகிதமாக, காலத்தையே எழுதுபவனாகக் கொண்டாலும் நான் உங்களிடம் கொண்டுள்ள நன்றியைத் தெரிவிக்க முடியாது.

சென்ற கோடையில் நான் இந்த நாட்டிற்கு வந்து சேர்ந்தேன். நெடுந்தொலைவிலுள்ள ஒரு நாட்டிலிருந்து வந்த ஒரு நாடோடிப் பிரச்சாரகன் நான். எனக்குப் பெயரில்லை. புகழ் இல்லை, செல்வமில்லை, கல்வி இல்லை, நண்பர் இல்லை, உதவியில்லை-கிட்டத்தட்ட ஆதரவற்ற நிலையிலேயே இருந்தேன். அந்த நிலையில் அமெரிக்கப் பெண்கள் என் உதவிக்கு வந்தார்கள். தங்க இடம் தந்தார்கள், உணவு தந்தார்கள், என்னைத் தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்று தங்கள் சொந்த மகனாக, சகோதரனாக நடத்தினார்கள். அவர்களின் மத குருமார்கள் இந்த பயங்கர அஞ்ஞானி யை விட்டுவிடுமாறு வற்புறுத்தயபோதும் அவர்கள் என் பக்கம் நின்றார்கள். அவர்களது சிறந்த நண்பர்கள், இந்த அறிமுகமில்லாத அன்னியன் பயங்கர குணம் கொண்டவனாக இருக்கலாம் என்று சொல்லியும் அவர்கள் என்னை விடவில்லை. மனிதனையும் அவனது குணத்தையும் மதிப்பிடுவதில் அவர்கள் சிறந்தவர்களாக இருந்தார்கள். ஏனெனில் சுத்தமான கண்ணாடிதானே பிம்பத்தை நன்றாகப் பிரதிபலிக்கும்!

எத்தனை அற்புதமான வீடுகளை நான் கண்டேன்! தூய நற்பண்புகள் நிறைந்த எத்தனை தாய்மார்கள்! அவர்கள் தங்கள் குழந்தைகள்மீது கொண்டுள்ள சுயநலமற்ற அன்பைச் சொல்லி முடியாது. எத்தனை மகள்கள்! வெண்பனிபோல் தூய்மையான எத்தனை பெண்கள்! அவர்களின் பண்பாடு, கல்வி, உயர்ந்த ஆன்மீகம் எதைச் சொல்வது! அப்படியானால் அமெரிக்கா முழுவதும் சிறகுகள் இல்லாத தேவதைகள்தான் பெண்களின் உருவில் நடமாடுகிறார்களா? எங்கும் நன்மையும் தீமையும் இருக்கவே செய்கின்றன. ஆனால் ஒரு நாட்டை, தீயவர்கள் என்ற அதன் பலவீனப் பகுதியினரைக் கொண்டு மதிப்பிடுவது சரியல்ல. ஏனெனில் இவர்கள் வளர்ச்சியின்றி பின்தங்கிக் கிடக்கின்ற வெறும் களைகளே, எனவே நல்லவர், கண்ணியமானவர். தூயவர் இவர்களைக் கொண்டே மதிப்பிட வேண்டும். இவர்களே நாட்டின் தேசிய நீரோட்டம் தெளிவாக வேகமாக ஓடுவதைக் காட்டுபவர்கள்.

ஆப்பிள் மரத்தையும், அதன் பழங்களின் சுவையையும் அறிய நினைத்தால் அந்த மரத்தின் பழுக்காத பூச்சிகளால் அரிக்கப்பட்ட, தரையில் வீழ்ந்து கிடக்கின்ற பழங்களைக் கொண்டா மதிப்பிடுவீர்கள்? சிலவேளைகளில் அத்தகைய பழங்கள் ஏராளமாகவே இருந்தாலும் அவற்றால் மரத்தை மதிப்பிடலாமா? கனிந்து பழுத்த பழம் ஒன்றேவொன்று இருந்தாலும், அந்த ஒரு பழம்தானே ஆப்பிள் மரத்தின் சக்தி, அதன் சாத்தியக்கூறு, அதன் மதிப்பு இவற்றைக் காட்ட வல்லது! கனியாத நூற்றுக்கணக்கான பழங்கள் அவற்றைக் காட்ட முடியுமா?

அந்த நவீன அமெரிக்கப் பெண்கள்-அவர்களுடைய விரிந்த தாராளமான உள்ளங்களை நான் பாராட்டுகிறேன். தாராள இயல்பும் விரிந்த மனப்பான்மையும் கொண்ட பல ஆண்களையும் இந்த நாட்டில் கண்டுள்ளேன், மிகக் குறுகிய போக்குடைய மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடையேகூட இத்தகைய விரிந்த மனத்தினர் சிலரைக் கண்டேன். ஆனால் வித்தியாசம் இதுதான். ஆண்கள் தாராள மனப்பான்மையைக் கொள்வதற்காக மதத்தையும், ஆன்மீகத்தையும் விட்டுவிடுகின்ற ஓர் அபாயம் உள்ளது. பெண்களோ சொந்த மதத்தைச் சிறிதும் விடாமல், நல்லவை எங்கிருந்தாலும் அவற்றுன் ஒத்துப்போகின்றனர்; தாராள மனப்பான்மையுடன் இருக்கின்றனர். இது ஆக்கபூர்வமான முறை, அழிவுபூர்வமானதல்ல. இணைக்கும் முறை, பிரிக்கும் முறையல்ல என்பதை உள்ளுணர்வால் அவர்கள் அறிந்துள்ளனர். எல்லாவற்றிலும் அதன் உடன்பாட்டு அம்சம், ஆக்கபூர்வமான அம்சம் மட்டுமே சேர்த்து வைக்கப்படும். இவ்வாறு இயற்கையின் உடன்பாட்டுப் பகுதிகளை உடன்பாடாக இருப்பதன் காரணமாகவே சேர்த்து வளர்ச்சிச் சக்திகளாக விளங்குகின்ற பகுதிகளைச் சேர்த்து வைப்பதுதான் உலகின் எதிர்மறையான, அழிவுபூர்வமான அம்சங்களை ஒழிக்க வல்லது என்பதை அவர்கள் நாளுக்குநாள் உணர்ந்து வருகின்றனர்.

சிகாகோவின் அந்த உலகக் கண்காட்சிதான் என்ன அற்புதமான சாதனை தெரியுமா! சர்வமத மகாசபைதான் என்னவோர் அற்புதம்! உலகத்தின் எல்லா மூலைகளிலிருந்தும் வந்த மதக் கருத்துக்கள் அருகே ஒலித்தன. டாக்டர் பிரோஸ், மிஸ்டர் போனி இவர்களின் தயவு காரணமாக எனது கருத்துக்களை அங்கே கூறவும் அனுமதி கிடைத்தது. மிஸ்டர் போனி ஓர் அற்புத மனிதர். மகத்தான இந்தப் பேரவைக் பெருமுயற்சியை வெற்றிகரமாகத் திட்டமிட்டு நடத்தி முடித்த அவரது உள்ளத்தின் பெருமையைச் சிந்தித்துப் பாருங்கள்! அவர் ஒரு பாதிரி அல்ல. அவர் ஒரு வழக்கறிஞர். ஆனாலும் மத இயக்கங்கள் அனைத்திலுமுள்ள முக்கியமானவர்கள் அமர்ந்த சபைக்குத் தலைமை தாங்கி நடத்தினார்; இனிமையும் கல்வியும் பொறுமையும் நிறைந்தவர் அவர். ஒளி நிரம்பிய அவரது கண்களில் அவரது அந்தராத்மாவே பேசியது

உங்கள்
விவேகானந்த

Bookmark and Share

மேலும் கவிதைகள், கடிதங்கள்,

வாசகர் கருத்து (1)
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)