Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> வீர முழக்கம்

விவேகானந்தரின் பாம்பன் சொற்பொழிவு!ஜனவரி 12,2013

26 ஜனவரி 1897 அன்று யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாக சுவாமி விவேகானந்தர் பாம்பனுக்கு வந்து சேர்ந்தார். மேலை வெற்றிகளுக்குப் பிறகு பாரதத் திரு நாட்டில் அவர் திருவடி பதிக்க முதல் இடம் அது. அங்கே ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி அவரை அன்புடன் வரவேற்றார். வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு, அலங்காரப் பந்தல் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. பாம்பன் மக்களின் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்புரைக்குப் பின் மன்னர் உணர்ச்சிபூர்வமானதொரு வரவேற்புரை நிகழ்தினார். அதற்குப் பதிலளித்து சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு.

நமது புனிதமான தாய் திருநாடு ஆன்மீகமும் தத்துவமும் தழைத்த நாடு, ஆன்மீகச் செம்மல்களைப் பெற்ற நாடு, துறவின் உன்னத நாடு. இங்கு, இங்கு மட்டுமே மிகப் பழங்காலத்திலிருந்து மிக நவீன காலம் வரை, வாழ்வின் மிகவுயர்ந்த லட்சியம் மனிதனுக்குக் காட்டப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் நான் இருந்திருக்கிறேன், பல நாடுகளில் பயணம் செய்திருக்கிறேன், பல்வேறு இன மக்களுடன் பழகியிரக்கிறேன். ஒவ்வொரு நாடும் ஒவ்வோர் இனமும் ஒரு குறிப்பிட்ட லட்சியத்தைப் பெற்றிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. வாழ்க்கை நீரோட்டம் முழுவதிலும் அந்த லட்சியம் பாய்ந்து பரவுகிறது, தேசியவாழ்க்கையின் முதுகெலும்பாக அமைந்து இருக்கிறது. அரசியலோ, வாணிகத் தலைமையோ, தொழில் நுட்ப உயர்வோ, ராணுவ ஆற்றலோ இந்தியாவின் முதுகெலும்பாக இல்லை நாம் பெற்றதெல்லாம்,பெற விரும்புவதெல்லாம் மதம், மதம் மட்டுமே.ஆன்மீகம் என்பது இந்தியாவில் எப்போதும் இருந்து வந்திருக்கிறது.உடல் வலிமையின் வெளிப்பாடுகள் மகத்தானவை. விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளிலும் எந்திரங்களிலும் காணப்படுகின்ற அறிவு வெளிப்பாடுகள் உன்னதமானவை. ஆனால் இவை எதுவும் ஆன்மீக சக்தியை விட அதிக ஆற்றல் கொண்டவை அல்ல.

நமது நாடு செயல்திறம் மிக்கதாக இருந்து வந்திருப்பதை நம் இனத்தின் வரலாறு காட்டுகிறது. நம்மை இன்னும் சரியாகபுரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்ற சிலர், இந்துக்கள் மந்தமானவர்கள் உற்சாகமற்றவர்கள் என்று பறைசாற்றி வருகிறார்கள். மற்ற நாட்டு மக்களுக்கு இது ஏதோ பழமொழி போலவே ஆகிவிட்டது. இந்தியா ஒரு போதும் அவ்வாறு மந்தமாக இருந்ததில்லை என்று கூறி , நான் அவர்களின் கருத்தையே ஒதுக்குகிறேன். ஆசீவதிக்கப்பட்ட நமது இந்த நாட்டைப்போல் செயல்திறம் வேறெங்கும் இவ்வளவு வெளிப்படையாக இருந்ததில்லை. மிகப் புராதனமான பெருந்தன்மை வாய்ந்த நமது இனம் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பதே அதனை நிரூபிக்கிறது.வாழ்வது மட்டுமல்ல, ஆண்டுகள் செல்லச்செல்ல பெருமை மிக்க அதன் வாழ்வு புத்திளமை பெற்று அழியாமலும் அழிக்க முடியாமலும் இருந்து வருகிறது. செயல்திறம் இங்கே மதத்தில் வெளிப்படுகிறது.

ஆனால் மனித இயல்பின் ஒரு விசித்திரம் என்ன வென்றால், தன் சொந்தச் செயல்பாட்டின் அளவு கோலைக் கொண்டே பிறரையும் மதிப்பிடுவதாகும். செருப்பு தைப்பவனை எடுத்துக் கொள்வோம் . அவன் செருப்பு தைப்பதை மட்டுமே புரிந்து கொள்வான் செருப்பு தயார் செய்வதை விட வாழ்க்கையில் வேறு எதுவுமே சிறந்தத இல்லை என்று எண்ணுகிறான் அவன். கொத்த வேலை செய்பவனுக்கு அதைத் தவிர, வேறு எதுவும் தெரியாது. அதையே அன்றாடம் தன் வாழ்நாள் முழுவதும் செய்துகொண்டிருப்பான். இதை இன்னொரு காரணத்தின் வாயிலாகவும் விளக்கலாம். ஒளியின் அதிர்வுகள் மிகவும் அடர்த்திழாக இருந்தால் நம்மால் ஒளியைக்காண முடியாது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்த ஒழியைக் காண முடியாதவாறு நாம் ஆக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு யோகியால் அது முடியும். அவர் தமது ஆன்மீக உள்ளுணர்வின் துணையுடன் கீழ்நிலை மக்களின் உலகியல் திரையை ஊடுருவி அப்பால் காண்கிறார்.

உலகம் முழுவதன் கண்களும் ஆன்மீக உணவிற்காக இப்போது இந்தியாவை நோக்கித் திரும்பியுள்ளன; எல்லா இனங்களுக்கும் இந்தியா அதைத் தந்தாக வேண்டும். மனித குலத்திற்கான மிகச் சிறந்த லட்சியம் இங்கு மட்டுமே உள்ளது. நமது சமஸ்கிருத இலக்கியங்களிலும் தத்துவங்களிலும் உள்ளதும், காலங்காலமாக திகழ்வதுமாகிய இந்த லட்சியத்தைப் புரிந்துகொள்வதற்காக இப்போது மேலை நாட்டு அறிஞர்கள் அரும்பாடு பட்டுவருகின்றனர்.

வரலாறு தொடங்கியதிலிருந்து இந்து மதக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பரப்புவதற்கு இந்தியாவிற்கு வெளியே எந்தப் பிரச்சாரகரும் சென்றதில்லை. ஆனால் இப்போது நம்மிடம் ஓர் ஆச்சரியகரமான மாறுதல் ஏற்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தர்மம் குன்றிஅதர்மம் மேலோங்கும் போது உலகிற்கு உதவ நான் மீண்டும்மீண்டும் வருகிறேன் என்று கூறுகிறார். நம்மிடமிருந்து நீதி நெறிக் கோட்பாடுகளைப் பெறாத நாடே இல்லை என்ற உண்மையை மத ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. ஆன்மா அழிவற்றது போன்ற மேலான கருத்துக்கள் எந்த மதத்திலாவது காணப்பட்டால், அது நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்மிடமிருந்து பெறப்பட்டதே ஆகும்.

இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் காணப்படுவதைப்போல், இதற்கு முன்பு இவ்வளவு அதிகமான கொள்ளைகளும், முரட்டுத்தனங்களும், பலமானவர்கள் பலவீனர்களுக்கு இழைக்கும் அடக்கு முறைகளும் உலக வரலாற்றில் இருந்ததில்லை. ஆசைகளை வெல்வதன் வாயிலாக மட்டுமே முக்தி கிட்டும் , ஜடப்பொருளின் தளையில் கட்டுண்ட எந்த மனிதனும் சுதந்திரமாக இருக்க முடியாது என்பதை ஒவ்வொரு வரும் அறிந்துகொள்ள வேண்டும். இந்த மகத்தான உண்மையை எல்லா நாடுகளும் மெல்லமெல்லப் புரிந்து கொள்ளவும் பாராட்டவும் தொடங்கி இருக்கின்றன. இந்த உண்மையைச் சீடன் புரிந்து கொள்ளும் நிலையை அடைந்ததும், குருவின் வார்த்தைகள் அவனது உதவிக்கு வருகின்றன. ஒருபோதும் தடை படாததும், எப்போதும் எல்லா இனங்களின் மீதும் பாய்ந்து கொண்டிருக்கின்ற தன் எல்லையற்ற கருணையைத் தன் சொந்தக் குழந்தைகளுக்கு அனுப்பி உதவு கிறான் இறைவன். நம் இறைவன் எல்லா மதங்களின் இறைவன். இந்தக் கருத்து இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமானது, உலகின் வேறு சாஸ்திரங்கள் எதிலாவது இத்தைகைய கருத்தைக் காட்ட முடியுமா என்று உங்களுக்குச் சவால் விடுகிறேன்.

கடவுளின் திருவுளத்தால் இந்துக்களாகிய நாம் இப்போது நெருக்கடியும் பொறுப்பும் மிக்க இடத்தில் வைக்கப்பட்டு இருக்கிறோம். ஆன்மிக உதவிக்காக வைக்கப்பட்டு இருக்கிறோம். ஆன்மீக உதவகிக்காக மேலை நாடுகள் நம்மை நாடி வந்து கொண்டிருக்கின்றன. மனித வாழ்வின் அடிப்படைப் பிரச்சினைகளில் உலக மக்களுக்கு ஒளி காட்டுகின்ற தார்மீகப் பொறுப்பு பாரதத் தாயின் பிள்ளைகளிடம் உள்ளது. அதற்குத் தகுதி படைத்தவர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது.

ஒன்றை நாம் கவனிக்கலாம்.மற்ற நாடுகளின் மாமனிதர்கள், ஏதோ மலைக்கோட்டையில் வாழ்ந்து கொண்டு, அவ்வப்போது வெளிவந்து வழிப்போக்கர்களைக் கொள்ளையடித்து வாழ்க்கை நடத்திய கொள்ளையர் தலைவனின் வழி வந்தவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறார்கள். ஆனால் இந்துக்களாகிய நாமோ, மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்து, கிழங்குகளையும் கனிகளையும் உண்டபடி, இறைவனை தியானம் செய்து வந்த ரிஷிகளின், மகான்களின் வழித்தோன்றல்கள் என்று கூறுவதில் பெருமைப்படுகிறோம். நாம் இப்போது இழிவையும் பிற்போக்கையும் அடைந்திருக்கலாம். எவ்வளவுதான் இழிவையும் பிற்போக்கையும் அடைந்திருந்தாலும், நமது மதத்திற்காக, சரியான உற்சாகத்தோடு வேலை செய்யத் தொடங்கினால் மறுபடியும் மகத்தானவர்களாக ஆகிவிடுவோம்.

எனக்கு நீங்கள் தந்த மனம் நிறைந்த கனிவான வரவேற்பிக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை ஏற்றுக் கொள்ளுங்கள். மேன்மை தங்கிய ராமநாதபுர மன்னர் என்னிடம் கொண்டிருக்கும் அன்பிற்கு வார்தைகள் மூலம் நன்றி செலுத்துவது என்பது முடியாத காரியம். என்னாலும் என் வாயிலாகவும் ஏதாவது நற்காரியம் செய்யப்பட இருக்குமேயானால், அது இந்த மனிதரால் தான். இந்தியா இந்த நல்ல மனிதருக்குக் கடமைப் பட்டு இருக்கிறது. ஏனெனில் நான் சிகாகோ சர்வ சமயப் பேரவைக்குப் போக வேண்டும் என்று நினைத்தவரே இவர்தான் . அந்த எண்ணத்தை என் மனத்தில் எழுப்பியவரும், நான் அங்கு நிச்சயம் சென்றாக வேண்டும் என்று இடைவிடாமல் வற்புத்தியவரும் இவர்தான். இப்போது என் பக்கத்தில் நின்று கொண்டு, முன்பு போலவே, உற்சாகத்துடன் மேலும் மேலும்நான் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அன்பான நமது தாய்நாட்டின் உயர்விற்காக ஆன்மீக வழியில் பாடுபட இவரைப்போல் இன்னும் ஐந்தாறு மன்னர்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறோன்.

மேலும் வீர முழக்கம்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)