Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> வீர முழக்கம்

கும்பகோணம் சொற்பொழிவு!பிப்ரவரி 20,2013

3 பிப்ரவரி 1897 அன்று சுவாமிஜி கும்பகோணத்திற்கு வருகைபுரிந்து மூன்று நாட்கள் தங்கினார். அங்கு இந்து மாணவர்கள் அளித்த வரவேற்புரைக்குப் பதிலளித்து சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு.

வேதாந்தப் பணி: மிகக் குறைந்த அளவே செய்யப்படுகின்ற மதப்பணி கூட மிகப் பெரிய விளைவைத் தருகிறது - கீதை கூறுகின்ற இந்த உண்மைக்கு விளக்கம் வேண்டுமானால் எனது எளிய வாழ்க்கையைப் பார்த்தால் போதும். அதன் நிரூபணத்தை நான் ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் கண்டு வருகிறேன். எனது பணி உண்மையில் மிகச் சாதாரணமானது .ஆனால் கொழும்புவிலிருந்து இங்கு வரை என் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்குத் தரப்படுகின்ற மனமுவந்த, கனிவான வரவேற்புகள் எல்லா எதிர்பார்ப்புகளையும் மீறியவை; அதே நேரத்தில் இது நம் இந்துப் பாரம்பரியத்திற்குத் தகுதியானவை, நமது இனத்திற்கு தகுதியானவை. நம் இந்து இனத்தின் உயிர்ச் சக்தியும் வாழ்க்கைத் தத்துவமும் ஆதார நாடியும் மதத்தில்தான் இருக்கிறது. நான் கீழை மற்றும் மேலை நாடுகளில் பல்வேறு இன மக்களிடையே பயணம் செய்து, இந்த உலகத்தைக் கொஞ்சம் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு மகத்தான லட்சியம் இருப்பதை நான் கண்டேன்.அதுவே அந்த இனத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. சில நாடுகளில் இந்த தேசியப் பின்னணி அரசியலாக இருக்கிறது , சில நாடுகளில் சமுதாய கலாச்சாரமாக உள்ளது, மற்றும் சில நாடுகளில் அறிவுக் கலாச்சாரமாக உள்ளது. ஆனால் நமது தாய்நாட்டின் அடிப்படையாக வும் முதுகொலும்பாகவும் அதன் தேசியவாழ்க்கை முழுவதும் கட்டப்படுவதற்கான உறுதியான அடித்தளப்பாறையாகவும் மதமே உள்ளது.

சென்னை மக்கள் எனக்கு அமெரிக்காவில் அனுப்பிய அன்பான பாராட்டுரைக்கு நான் அனுப்பிய பதில் உங்களுள் பலரது நினைவில் இருக்கும். நம் நாட்டின் ஒரு குடியானவன், மேலை நாட்டிலுள்ள சீமான் ஒரு வனைவிடப் பல வழிகளில் சிறந்த மத அறிவு பெற்றவனாக உள்ளான் என்று அதில் நான் குறிப்பிட்டிருந்தேன். எனது அந்தச் சொற்கள் சந்தேகத்திற்கு இடமின்றிச் சரியாக இருப்பதை இன்று நான் காண்கிறேன். சாதாரண இந்தியர்கள் பல விஷயங்களை அறியாதவர்களாகவும் புதிய செய்திகளை அறிவதில் ஆர்வம் இல்லாதவர்களாகவும் இருப்பதைக்கண்டு ஒரு காலத்தில் நான் வெறுப்படைந்தது உண்டு. ஆனால் இப்போது அவர்களின் போக்கிற்கான காரணம் எனக்குப் புரிந்துவிட்டது. அவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ, அதைப் பற்றிய செய்திகளை அறிவதில் , என் பயணத்தில் நான் கண்ட மற்ற நாட்டு மக்களைவிட அவர்கள் பேரார்வம் காட்டுகிறார்கள்.

ஐரோப்பாவின் பரபரப்பான அரசியல் மாற்றங்களையும் ஐரோப்பிய சமுதாயத்தில் நடைபெறும் எழுச்சிகளைப் பற்றியும் நம் குடியானவர்களைக் கேளுங்கள். அவர்களுக்கு அவை எதுவும் தெரியாது. தெரிந்து கொள்வதில் அவர்களுக்கு ஆர்வம் கிடையாது. ஆனால் இந்தியாவிலிருந்து பல வழிகளிலும் பிரிக்கப்பட்ட, இந்திய வாழ்க்கை முறைகளிலிருந்து துண்டிக்கப்பட்ட இலங்கை விவசாயி - இலங்கை வயல்களில் உழைக்கின்ற அவர்கள்கூட, அமெரிக்காவில் ஒரு சர்வசமயப் பேரவை நடைபெற்றதையும் அதற்கு இந்திய சன்னியாசி ஒருவர் சென்றதையும் அங்கு அவர் ஏதோ சிறு வெற்றி பெற்றதையும் தெரிந்து வைத்திருக்கிறான். எனவே தாங்கள் விரும்புவதை அறிந்து கொள்வதில் இவர்களும் பிற நாட்டினரைப் போல் ஆர்வம் நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். மதம் ஒன்றுதான் இந்தியர்கள் முழு நாட்டம் கொள்ளக் கூடிய ஒன்றாகும்.

ஓர் இனத்தின் ஆதார சக்தி முழுவதும் மத லட்சியத்தில் இருப்பது நல்லதா அல்லது அரசியல் கொள்கைகளில் இருப்பது நல்லதா என்பது பற்றி இப்போது நான் பேசவில்லை . நல்லதற்கோ கெட்டதற்கோ, நமது ஆதார சக்தி முழுவதும் மதத்தில் தான் ஒருமுனைப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவு. இதை நீங்கள் மாற்ற முடியாது. அதை அழித்துவிட்டு அதற்குப் பதிலாக வேறு ஒன்றை வைக்க உங்களால் முடியாது. வளர்ந்துவிட்ட பெரிய மரத்தை ஓர் இடத்திலிருந்து பிடுங்கி மற்றோர் இடத்தில் நட்டு, உடனடியாக அது அங்கே வேர் பிடித்து வளரும்படிச் செய்ய உங்களால் முடியாது. நல்லதற்கோ கெட்டதற்கோ ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் மத லட்சியம் நிறைந்து பரவிக் கொண்டிருக்கிறது நல்லதற்கோ கெட்டதற்கோ இந்தியச் சூழ்நிலை மத லட்சியங்களால் நிரப்பப்பட்டு எத்தனையோ நூற்றாண்டுகளாக ஒளிவீசி வருகிறது. நல்லதற்கோ கெட்டதற்கோ நாம் இந்த மத லட்சியங்களை நடுவிலே பிறந்து வளர்க்கப்பட்டு இருக்கிறோம், அவை நம் ரத்தத்தோடு கலந்து, ரத்தக்குழாயில் ஓடுகின்ற ஒவ்வொரு துளியிலும் சிலிர்ப்பை ஊட்டி நம் உடம்போடு ஒன்றிப்போய் இருக்கிறது; நம் வாழ்வின் ஆதாரமாக சக்தியாக ஆகியிருக்கிறது.

அத்தகைய மதத்தை, எதிர்விளைவாக அதே அளவு சக்தியை எழுப்பாமல், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கின்ற அந்தப் பேராறு தனக்கென்று உண்டாக்கிக் கொண்ட கால்வாயை நிரப்பாமல், உங்களால் விட்டுவிட முடியுமா ? கங்கை மீண்டும் பனி மலைகளுக்குள் திரும்பிச் சென்று புதிய பாதையில் பாய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அது கூட ஒருவேளை முடிகின்ற காரியமாக இருக்கலாம். ஆனால் தன் தனிப் பண்பான மத வாழ்க்கையை ஏதாவது ஒன்றைத் தன் பாதையாக ஏற்றுக் கொள்வது இந்தியாவால் முடியாத காரியம். நீங்கள் வேலை செய்ய வேண்டுமானால், இயன்ற அளவு எதிர்ப்பு குறைவாக இருக்க வேண்டும். இந்தியாவில் அத்தகைய ஒரு பாதை மதம்தான். இந்தியாவில் இதுதான் வாழ்க்கை வழி, இதுதான் வளர்ச்சிக்கான வழி. மதப்பாதையைப் பின்பற்றியே இந்தியா முன்னேற்றம் கண்டிருக்கிறது.

பிற நாடுகளைப் பொறுத்தவரை, வாழ்க்கையின் எத்தனையோ தேவைகளுள் மதமும் ஒன்று. நான் அடிக் கடிப் பயன்படுத்தும் ஓர் உவமையைக் கூறுகிறேன்; சீமாட்டியின் வரவேற்பறையில் பல்வேறு பொருட்கள் இருக்கும், ஐப்பானிய ஜாடி ஒன்றையும் வைப்பது இந்நாளில் ஒரு நாகரீகம் ஆயிற்றே! அதை அவள் வாங்கியே தீர வேண்டும், அது இல்லாமல் வரவேற்பறை நன்றாக இருக்குமா என்ன! அதைப்போல், அன்பர்களே, பிற நாட்டினருக்கு வாழ்க்கையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன; அதனை முழுமையாக்க மதம் என்பதும் கொஞ்சம் தேவையாக இருக்கிறது. அதற்காக அவர்கள் அதையும் சிறிது வைத்திருக்கிறார்கள். ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் அரசியல், அதாவது சமுதாய முன்னேற்றம், அதாவது இந்த உலகம் தான் மேலை நாட்டினரின் லட்சியம். கடவுள், மதம் என்ப தெல்லாம் அந்த லட்சியத்தை அடைவதற்காக உதவுபவை, அவ்வளவுதான். அவர்களே இன்னும் கற்க வேண்டியுள்ளது, இதில் நம்மை விடத் தெரிந்தவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள். கடந்த நூறு இருநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்திய மதத்திற்கு எதிராக அவர்கள் கூறிவருவதெல்லாம் என்ன தெரியுமா ? நமது மதம் இவ்வுலக வாழ்க்கைக்கு ஆவன செய்யவில்லை, அது நமக்கு காசு பணங்களைத் தரவில்லை, நம்மை மற்ற நாடுகளைக் கொள்ளை அடிப்பவர்களாக ஆக்கவில்லை, பலசாலிகளைப் பலவீனமானவர்கள் மீது நின்றுகொண்டு அவர்களின் உயிர்ச் சக்தியை உறிஞ்சி தங்களை வளமாக்கிக் கொள்ளச் சொல்லவில்லை என்பதுதான். நிச்சயமாக நமது மதம் இதைச் சொல்லவில்லை. தன் காலடியில் உலகையே நடுங்கச் செய்கின்ற படைகளை அனுப்பி, மற்ற இனங்களைச் சூறையாடி நாசப்படுத்த அதனால் முடியாது. எனவே அவர்கள், இந்த மதத்தில் என்ன இருக்கிறது, வாய்க்குத் தீனியும் உடலுக்குப் பலமும் அளிக்காத ஒரு மதத்தில் என்னதான் இருக்க முடியும் என்று கேட்கிறார்கள்.

நமது மதம் இவ்வுலக வாழ்க்கைக்கு எதையும் செய்யவில்லை, என்ற அவர்களுடைய இந்த வாதத்தைவைத்துக் கொண்டே நாம் நமது மதத்தின் சிறப்பை உறுதி செய்யலாம் என்பதை அவர்கள் உணரவில்லை. நமது மதம் மட்டுமே உண்மையான மதம். ஏனெனில் மூன்று நாட்களே நிலைப்பதும் புலன்களால் உணரப்படுவதுமான இந்தச் சின்னஞ்சிறு உலகை வாழ்வின் அனைத்து மாகக் கொள்ளக் கூடாது, நமது மகத்தான லட்சியம் அதுவல்ல என்று நமது மதம்தான் கூறுகிறது. சில அடிகளுக்குள் அடங்கிவிடுகின்ற பூமியாகிய இந்தக் கோளம் ; நமது மதத்தின் காட்சியைக் கட்டுப்படுத்தவில்லை. நமது மதத்தின் லட்சியம் இவைகளுக்கு அப்பால், இன்னும் அப்பால் உள்ளது; புலன்களுக்கு அப்பால், இடத்திற்க்கு அப்பால், காலத்திற்கு அப்பால் இன்னும் அப்பால், ஆன்மாவின் கடல்போல் பரந்து விரிந்த மகிமையில் இந்த உலகம் சூன்யமாகி, பிரபஞ்சமே ஒரு துளிபோலாகின்றன அந்த இடமே நமது லட்சியம்.

நமது மதம்தான் உண்மையான மதம். ஏனெனில் கடவுள் ஒருவரே உண்மையானவர், இந்த உலகம் பொய்யானது, கணம் தோன்றி மறைவது, உங்கள் காசு பணமெல்லாம் தூசியைத் தவிர வேறல்ல, உங்கள் அதிகார மெல்லாம் வரம்பிற்கு உட்பட்டது, வாழ்க்கையே பல நேரங்களில் தீமையாகத்தான் இருக்கிறது என்று அது கூறுகிறது. எனவேதான் நமது மதம் உண்மையானது.

நமது மதம் தான் உண்மையான மதம். ஏனெனில் எல்லாவற்றையும் விட மேலாக, அது துறவைப் போதிக்கிறது. காலங்காலமாகப் பெற்ற ஞானத்தோடு எழுந்து நின்று, இந்துக்களாகிய நம்மோடு ஒப்பிட்டால், நமது முன்னோர்களால் இங்கே இதே இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்ட பழுத்த பண்பட்ட ஞானத்தை உடையவர்களான நம்மோடு ஒப்பிட்டால், நேற்றுதான் பிறந்த வர்களாகத் தோன்றும் நாடுகளுக்குத் தெளிவான சொற்களில் அது கூறுகிறது; குழந்தைகளே, நீங்கள் புலன்களின் அடிமைகள். புலன்களுக்கு வரையறை இருக்கிறது, புலன்களில் அழிவு மட்டுமே உள்ளது. இரண்டொரு நாட்களே நிலைக்கின்ற இந்த ஆடம்பர வாழ்க்கை இறுதியில் அழிவைத்தான் கொண்டு வரும். இவை அனைத்தையும் விட்டுவிடுங்கள். புலன்களிடமும் உலகத்திடமும் கொண்டுள்ள பற்றை விடுங்கள்; அது தான் மதத்தின் வழியாக அல்ல துறவின் மூலமே லட்சியத்தை அடைய முடியும் . அதனால் நம்முடையது மட்டுமே உண்மையான மதம்.

வினோதமானதோர் உண்மையைப் பாருங்கள். ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ நாடுகள் உலக மேடைக்கு வந்து, ஒரு சில கணங்கள் தங்கள் பாத்திரங்களை ஆரவாரமாக நடித்துவிட்டு, காலப் பெருங் கடலில் நீர்க்குமிழி போல், ஏறக்குறைய எந்த அடையாளத்தையும் நிறுத்தாமல் அழிந்து போய்விட்டன, இங்கு நாமோ நிரந்தரமானது போன்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மிகப் பெரும் தகுதி பெற்றதே வாழும் என்பதைப் பற்றிய புதிய பல கொள்கைகளையெல்லாம் அவர்கள் பெரிதாகப் பேசுகிறார்கள் ; வாழ்வதற்கான மிகப் பெரும் தகுதியாக உடல் வலிமையையே கருதுகிறார்கள். அது உண்மையென்றால் பிற நாடுகளை ஆக்கிரமித்ததான பழைய நாடுகளுள் ஒன்றாவது இன்றும் பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும், ஒருபோதும் எந்த இனத்தையோ நாட்டையோ வெல்லாத பலவீனமான இந்துக்கள் அழிந்திருக்க வேண்டுமே ! ஆனால் நாம் முப்பதுகோடி பேர் இன்னும் வலிமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.(ஒரு முறை இளம் ஆங்கிலப் பெண்ணொருத்தி, இந்துக்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் ஓர் இனத்தைக்கூட வெற்றி கொள்ளவில்லையே! என்று என்னைக் கேட்டாள்.)

இனி, நமது ஆற்றல்கள் எல்லாம் செலவழிந்து விட்டன என்பதோ, நம் நாடு படிப்படியாக அழிந்து வருகிறது என்பதோ சிறிதும் உண்மை அல்ல. நம்மிடமிருந்து போதுமான வலிமை இருக்கிறது. தேவை ஏற்படும் போது சரியான நேரத்தில் அது வெள்ளமெனப் பொங்கியெழுந்து உலகை நிரப்பவே செய்கிறது.

மிகப் பழங்காலத்திலிருந்தே நாம் உலகத்திற்க்குச் சவால் விட்டுக்கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஒரு மனிதன் எவ்வளவு அதிகமாக வைத்துக்கொள்ள முடியும் என்ற பிரச்சனையைத் தீர்க்க மேலை நாட்டினர் முயன்று கொண்டிருக்கிறார்கள். இங்கோ ஒரு மனிதன் எவ்வளவு குறைவான உடைமைகளைக் கொண்டு வாழ முடியும் என்ற கேள்விக்கு விடைகாண முயன்று கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டமும் இந்த வேறுபாடும் பல நூற்றாண்டுகள் தொடரவே செய்யும். ஆனால் வரலாற்றில் ஏதாவது உண்மையாகி இருக்குமானால், ஆருடங்கள் எப்போதாவது உண்மையாகி இருக்கிறதென்றால், அது யார் குறைவான பொருட்களைக் கொண்டு வாழக் கற்றுக் கொள்கிறார்களோ, கட்டுப்பாட்டுடன் வாழ்கிறார்களோ அவர்களே முடிவில் வெல்கிறார்கள், யார் போகத்தின் பின்னாலும் ஆடம்பரத்தின் பின்னாலும் ஓடுகிறார்களோ அவர்ளின் வாழ்க்கை எவ்வளவு பரப்பரப்பாக அந்ந நேரத்தில் காணப்பட்டாலும் அவர்கள் அழிந்தே தீர வேண்டும், மாய்ந்தேயாக வேண்டும் என்பதுதான்.

மனித வாழ்க்கையில், ஏன் நாடுகளின் வரலாற்றில் கூட ஒரு வகையான களைப்பு, வேதனை தரத்தக்க வகையில் அதிகமாக நிலவுகின்ற சில நேரங்கள் உண்டு. அத்தகையதோர் அலை இப்போது மேலைநாடுகளில் மோதுவது போல் தோன்றுகிறது. அங்கும் மகத்தான சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். இப்படிப் பணம் பதவி என்று அவற்றின் பின்னால் ஓடுவது வெறுமையிலும் வெறுமை என்று அவர்களும் கண்டுபிடித்து விட்டார்கள். அங்குள்ள பலரும், ஏன், பண்பாட்டோருள் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் இந்தப் போட்டி, போராட்டம், வாணிப நாகரீகத்தின் காட்டு மிராண்டித்தனம் இவைகளால் ஏற்கனவே களைத்துப் போய்விட்டார்கள். மேலான ஒன்றை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதே÷ வேளையில் ஐரோப்பாவின் தீமைகளுக்கெல்லாம் அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்களே ஒரே தீர்வுஎன்றும் சிலர் இன்னும் அங்கே பிடிவாதமாக நம்பிக்கொண்டுருக்கினர் கொண்டுதான் இருக்கின்றனர்

ஆனால் அங்குள்ள மகத்தான சிந்தனையாளர்களிடம் வேறு சிந்தனைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. மனித வாழ்வில் எவ்வளவு தான் அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் தீமைகளைத் தீர்க்க முடியாது என்பதை அவர்கள் கண்டு விட்டார்கள். அக வாழ்வில் ஓர் உறுதியான மாற்றம் மட்டுமே வாழ்க்கையின் தீமைகளை நீக்கும். படைகளோ அரசாங்கமோ சட்டக்கொடூரங்களோ எவ்வளவு தான் இருந்தாலும் ஓர்இனத்தின் நிலையை மாற்ற முடியாது. ஆன்மீகப் பண்பாடும் நீதிநெறிப் பண்பாடும் மட்டுமே மனித இனத்தின் தவறான போக்குகளை மாற்றி, அதை நல்ல வழியில் திருப்ப முடியும் ,எனவே மேலைநாட்டினர் ஏதாவது புதிய சிந்தனைகளையும் புதிய தத்துவங்களையும் பெறுவதற்காக ஆர்வத்தோடு இருக்கிறார்கள். அவர்களது மதமான கிறிஸ்தவம் பல விஷயங்களில் நல்லதாகவும் பெருமை மிக்கதாகவும் இருந்தாலும் அதனை அவர்கள் முழுமையாக உணரவில்லை; உணர்ந்தபோதோ அது அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. எனவே மேலை நாட்டின் அறிவுஜீவிகள், நம் பழைய தத்துவங்களில், அதிலும் குறிப்பாக வேதாந்தத்தில், தாங்கள் தேடிக் கொண்டிருக்கின்ற புதிய சிந்தனைத் துடிப்பையும் தங்கள் பசிக்கும் தாகத்திற்கும் ஏற்ற ஆன்மீக உணவையும் நீரையும் காண்கிறார்கள். இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

ஒவ்வொரு மதத்திலும் உள்ள எத்தனை எத்தனையோ விந்தையான கருத்துக்களைக் கேட்பது எனக்குப் பழக்கமாகிவிட்டது. சிறிதுகாலத்திற்கு முன்பு கூட, கிறிஸ்தவ மதம் மட்டுமே உலகம்தழுவிய மதம் என்று என் சிறந்த நண்பரான டாக்டர் பரோஸ் உரிமை பாராட்டியதை நீங்கள் கேட்டிருக்கலாம் . இந்த விஷயத்தைப்பற்றிச் சிறிது சிந்திக்க விரும்புகிறேன். வேதாந்தம், வேதாந்தம் மட்டுமே உலகம் தழுவிய மதமாக முடியும்; வேறெந்த மதமும் அத்தகைய ஒன்றாக இருக்க முடியாது என்றே நான் கருதுகிறேன். அதற்கான காரணங்களை இப்போது கூறுகிறேன்.

நமது மதத்தைத் தவிர, ஏறக்குறைய உலகின் மற்ற பெரிய மதங்கள் எல்லாமே அதைத் தோற்றுவித்த ஒருவர் அல்லது பலரது வாழ்க்கையோடு இணைக்கப்பட்டடுள்ளன. அந்த மதங்களின் கொள்கைகளும் போதனைகளும் கோட்டுபாடுகளும் அற நெறிகளும் அவைகளைத் தோற்றுவித்தவர்களின் வாழ்க்கையைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. அவர்களின் வாழ்க்கையே அந்த மதங்களின் ஆதாரமாகவும் அதிகாரமாகவும் ஆற்றலாகவும் உள்ளது. விசித்திரம் என்னவென்றால் அத்தகைய மதங்களாகிய கட்டிடம் அவர்களது வாழ்க்கையின் வரலாற்று ஆதாரம் என்ற அஸ்திவாரத்தின் மீதுதான் முற்றிலும் கட்டப்பட்டுள்ளது. அந்த வரலாற்று ஆதாரத்தில் மட்டும் ஓர் அடி விழுமானால், பாறை போன்ற அஸ்திவாரம் என்று பெருமைப்பட்டுப் கொள்கிறார்களே அது மட்டும் அசைக்கப்படுமானால், தூளாக்கப்படுமானால் முழுக்கட்டிடமுமே நொறுங்கிக் சுக்கல் சுக்கலாகி விடும். அவை மீண்டும் பழைய பெருமையைப் பெறுவதே இல்லை. இன்று அப்படித்தான் நடைபெறுகிறது. அத்தகைய மதங்களைத் தோற்றுவித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றில் பாதி நிச்சயமான உண்மை என்று நம்பப்படவில்லை; மீதிப் பாதியும் தீவிரமான சந்தேகத்திற்கு உரியதாகக் கருதப்படுகிறது.

நமது மதத்தைத் தவிர மற்ற பெரிய மதங்கள் அனைத்தும் இத்தகைய வரலாற்று மனிதர்கள் மீதே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது மதம் தத்துவங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. வேதங்களை உரு வாக்கியதாக எந்த ஆணோ பெண்ணோ உரிமைபாராட்ட முடியாது. அவை என்றும் அழியாத உண்மைகளின் திரண்ட வடிவமாகும். ரிஷிகள் அவற்றைக் கண்டுபிடித்தார்கள். வேதங்களில் அந்த ரிஷிகளின் பெயர்கள் வெறும் பெயர்கள் மட்டுமே இங்குமங்குமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் யார், என்ன செய்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. பலருடைய தந்தையின் பெயர் இல்லை ; அவர்கள் எப்போது எங்கே பிறந்தார்கள் என்ற குறிப்புகூட பெரும்பாலும் இல்லை. அவர்கள், அந்த ரிஷிகள் தங்கள் பெயரைப்பற்றிக் கவலைப்பட்டார்களா என்ன அவர்கள் உண்மைகளைப் போதித்தார்கள். தங்கள் போதித்த உண்மைகளுக்கு, தங்களால் இயன்ற அளவு உதாரணமாக விளங்கினார்கள்.

நமது கடவுள் சகுணமாகவும் அதே வேளையில் நிர்க்குணமாகவும் இருப்பதைப்போல் நமது மதமும் அழுத்தமான வகையில் தத்துவங்களின் மீது கட்டப்பட்ட ஒன்றாகவும், அதே நேரத்தில் மனிதர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப எண்ணற்ற விதங்களில் பின்பற்றுவதற்கு ஏற்ற விதமாகவும் அமைந்துள்ளது. நமது மதத்தை விட அதிகமான அவதார புருஷர்களை, மகான்களை, தீர்க்கதரிசிகளை வேறு எந்த மதம் தந்துள்ளது இன்னும் எண்ணற்றறோரைத் தருவதற்கும் தயாரக இருக்கிறது?

அவதாரங்கள் கணக்கற்றவை என்று பாகவதம் கூறுகிறது; நீங்கள் விரும்புகின்ற அளவு அதிகமாக இன்னும் வைத்துக்கொள்வதற்கு போதுமான வாய்ப்பைத் தந்துள்ளது. ஆகையால் நம் இந்திய மத வரலாற்றிலுள்ள அவதாரபுருஷர்களிலும் சரி, மகான்களிலும் சரி, ஒருவரோ பலரோ வாழ்வதற்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டாலும் அதனால் நம் மதத்திற்க்கு எந்தவித தீங்கும் இல்லை. அப்போதும் நம் மதம் எப்போதும் போல் உறுதியாகவே இருக்கும். ஏனென்றால் அது தத்துவங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளதே தவிர மனிதர்களை அல்ல. உலகிலுள்ள அனைவரையும் ஒரே மனிதரைச் சுற்றித் திரளும்படிச் செய்ய முயல்வது வீண். ஏன் உலகம்தழுவியதும், அழிவேயில்லாத உண்மைகளின் கீழும்கூட உலக மக்கள் எல்லோரையும் ஒன்றுசேர்ப்பது என்பது முடியாத ஒன்று.

மதம் என்ற துறையில் மனித இனத்தின் பெரும் பகுதியையேனும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கச் செய்ய வேண்டுமானால், அது தத்துவ உண்மைகளின் மூலம் தான் முடியுமே தவிர, மனிதர்களின் மூலம் முடியாது என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். நான் முன்பு கூறியதுபோல் நமது மதம் அதற்கு வேண்டிய அதிகாரத்தையும் ஆற்றலையும் மிகுதியாகப் பெற்றதாக உள்ளது. இஷ்ட தெய்வக் கொள்கை இருக்கிறதே, அது அற்புதமானது. உங்களுக்கு உகந்த மகான்களை நீங்கள் தேர்ந்துதெடுத்துக் கொள்வதற்க்கு முழுமையான சுதந்திரத்தைக் இது அளிக்கிறது. இவர்களுள் எந்த மகானையோ ஆச்சாரியரையோ உங்கள் வழிக்காட்டியாக, வழிபாட்டிற்கு உரியவராக நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம், அது மட்டுமல்ல, நீங்கள் தேர்ந்தெடுப்பவரே மகான்களுள் மிக மேலானவர், அவதாரபுருஷர்கள் மிக உயர்ந்தவர் என்று நினைக்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதில் தவறில்லை. ஆனால் அதற்குப் பின்னணியாக உறுதியான, நிரந்தரமான தத்துவ உண்மைகள் இருக்க வேண்டும். ஓர் ஆச்சரியகரமான உண்மை என்னவென்றால் நமது அவதார புருஷர்களின் மதிப்பெல்லாம் அவர்களின் வாழ்க்கை வேத உண்மைகளுக்கு விளக்கமாக அமையும் போது மட்டுமே. ஸ்ரீகிருஷ்ணரின் பெருமை யெல்லாம், அவர் நமது சனாதன தர்மத்தின் கொள்கைகளை மிகச் சிறப்பாகப் போதித்தவர் என்பதிலும், இந்தியாவில் இதுவரை வாழ்ந்த வேதாந்த ஆச்சாரியர்களுள் மிகச் சிறந்தவர் என்பதிலும் தான் இருக்கிறது.

உலகத்தின் கவனத்திற்கு வேதாந்தம் விடுக்கின்ற இரண்டாவது கருத்து; உலக சாஸ்திரங்கள் அனைத்திலும் வேதாந்த போதனைகள் மட்டுமே, இக்கால விஞ்ஞானத்தின் புறவுலக ஆராய்ச்சி முடிவுகளோடு முழுக்கமுழுக்க இயைபு உடையதாக உள்ளது. அடிப்படை, பரஸ்பரத் தொடர்பு, மற்றும் உறவு இவற்றைப் பொறுத்தவரை ஒரே மூலத்தைக் கொண்டு இரண்டு மனங்கள் வரலாற்றின் மங்கலான கடந்தகாலத்தில் வெவ்வேறு பாதைகளில் புறப்பட்டன. ஒன்று புராதனமான இந்து மனம், மற்றொன்று புராதனமான கிரேக்க மனம். இந்துக்கள் அகவுலகத்தை ஆராய்வதன் மூலம் பயணத்தை தொடங்கினார், கிரேக்கர்கள் புறவுலகத்தை ஆராய்வதன் மூலம், அப்பாலுள்ள அந்த லட்சியத்தை நோக்கித் தங்கள் பயணத்தைக் தொடங்கினர். மனங்களின் பயண வரலாறுகள் எவ்வளவோ வேறுபாடுகளை உடையதாக இருந்தாலும், அந்த இரண்டு வகையான சிந்தனை அலைகளும் அப்பாலுள்ள அந்த இரண்டு வகையான சிந்தனை அலைகளும் அப்பாலுள்ள அந்த லட்சியத்தின் ஒரே மாதிரியான எதிரொலிகளையே எழுப்புகின்றன; இதனை நாம் எளிதாக அறிய முடிகிறது அறிய முடிகிறது. தற்கால விஞ்ஞானத்தின் முடிவுகள் வேதாந்திகள் அல்லது இந்துக்களின் மதத்தோடுதான் இயைபாகப் பொருந்துவதாகத் தோன்றுகிறது. இன்றைய விஞ்ஞானம் தன் முடிவுகளை வைத்துக்கொண்டு, அதே நேரத்தில் வேதாந்தத்தின் முடிவுகளின் வாயிலாக ஆன்மீகத்தையும் நாடலாம் என்றே தோன்றுகிறது. இன்றைய விஞ்ஞானத்தின் முடிவுகள் நெடுங்காலத்திற்க்கு முன் வேதாந்தம் கண்ட முடிவே என்றுதான் , நமக்கு மட்டுமல்லாமல் ஆராய்ச்சியில் விருப்பம் உள்ள அனைவருக்கும் தோன்றுகிறது. ஒரு வித்தியாசம் என்னவென்றால், இன்றைய விஞ்ஞானம் தூல மொழியில் எழுதப்பட்டுள்ளது.

தற்கால மேலை நாட்டறிஞர்களை வேதாந்தம் கவர்வதற்கான மற்றொரு காரணம், வேதாந்ததின் அற்புதமான பகுத்தறிவுக் கொள்கை வேதாந்தத்தின் முடிவுகள் மிகவும் ஆச்சரியமான வகையில் அறிவுபூர்வமாக இருப்பதாக இன்றைய மிகச் சிறந்த மேலை நாட்டு அறிஞர்கள் பலர் என்னிடம் கூறினர். அவர்களுள் ஒருவரை எனக்க நெருக்கமாகத் தெரியும். உண்பதற்கோ தன் ஆராய்ச்சிக்கூடத்தை விட்டு வெளியே செல்வதற்கோகூட நேரமில்லாத அவர் என் வேதாந்தச் சொற்பொழிவுகளைக் கேட்பதற்க்காக மணிக்கணக்கில் காத்திருப்பார். வேதாந்தம் மிகவும் அறிவுபூர்வமானது; காலத்தின் தேவையை முழுக்க முழுக்க அது பூர்த்தி செய்கிறது; தற்கால விஞ்ஞானம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன முடிவுகளுடன் அப்படியே இயைந்திருக்கிறது என்பார் அவர்.

மத ஒப்புமையிலிருந்து பெறப்பட்டுள்ள அத்தகைய இரண்டு விஞ்ஞான முடிவுகள் மீது உங்கள் கவனத்தைச் சிறிது திருப்ப விரும்புகிறேன்- ஒன்று, மதங்களின் சமரசம்; மற்றொன்று, எல்லாம் ஒன்றே என்னும் கொள்கை. பாபிலோனிய வரலாற்றிலும் யூத வரலாற்றிலும் ஒரு சுவையான விஷயத்தை நாம் காணலாம். பாபிலோனியர்களும் யூதர்களும் பல்வேறு குழுக்களாக பிரிந்துள்ளனர். ஒவ்வொறு குழுவிற்கும் ஒரு தெய்வம் உண்டு. இந்தக் தெய்வங்கள் பெரும்பாலும் ஒரு பொதுவான பெயரைப் பெற்றிருந்தனர். பாபிலோனியர்களின் தெய்வங்கள் பால் என்று வழங்கப்பட்டனர். இவர்களுள் பால் மெரோடக் தலைமை தெய்வம். நாளடைவில் இந்தக் குழுக்களில் ஒன்று மற்றவற்றை வென்று, அவற்றைத் தன்னுடன் ஒன்று சேர்த்துவிட்டது. அதன் விளைவாக , வென்ற குழுவின் தெய்வம் எல்லா குழுக்களின் தெய்வங்களுக்கும் தலைமை தெய்வமாகிவிடுவார். இவ்வாறுதான், இன்று தம்பட்டம் அடித்துக் கொள்வதான, செமிட்டிக் இனத்தின் ஒரே கடவுள் கொள்கை உருவாகியது.

யூதர்களின் தெய்வங்கள் மொலாக் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். இவர்களுள் இஸ்ரேல் என்னும் குழுவிற்க்கு சொந்தமானவர் மொலாக்-யஹ்வா அல்லது மொலாக் -யாகவா என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் இஸ்ரேல் குழு அதே இனத்தைச் சேர்ந்த மற்ற குழுக்களை வென்று, அவர்களின் மொலாக்குகளை எல்லாம் அழித்துத் தங்கள் சொந்த மொலாக்தான் மொலாக்குகள் அனைவரிலும் உயர்ந்தவர் என்று அறிவித்தது. இத்தகைய ஒரு மத வெற்றிக்காகச் சிந்தப் பட்ட ரத்த வெள்ளங்களும், நடத்தப்ட்ட கொடுமைகளும் எவ்வளவு என்பது உங்களுள் பலருக்கும் தெரியும். பிற்காலத்தில் பாபிலோனியர்கள் இஸ்ரேலியர்களின் மொலாக் யஹ் வாவின் அழிக்க முயன்றார்கள், ஆனால் மடியவில்லை.

மத விஷயங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவதற்க்கு பல்வேறு குழுக்கள் நிகழ்த்திய இத்தகைய போராட்டம் இந்தியா எல்லைகுள்ளும் நடந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இங்கும் ஆரியர்களின் பல்வேறு இனங்களுக்குள் தங்கள் தெய்வங்களின் தலைமைக்காகக் கருத்து வேற்றுமைகள் நிலவியிருக்கலாம். ஆனால் இங்கு நிகழ்ந்தது வேறு. இந்திய வரலாறு யூதர்களின் வரலாற்றிலிருந்து. மற்ற நாடுகள் எதைவிடவும் சகிப்புத் தன்மைக்கும் ஆன்மீகத்திற்க்கும் இருப்பிடமான நாடாக இந்தியா மட்டுமே இருக்க வேண்டியிருக்கிறது. எனவே இனச் சண்டைகள் இங்கு நெடுங்காலம் நீடிக்கவில்லை.

வரலாறு எட்ட முடியாத, பாரம்பரியங்கள் தங்கள் பார்வையைச் செலுத்தத் துணியாத அளவிற்கு மிகத் தொலைவான, அடர்ந்ததான அந்தப் பழங்காலத்தில் இந்தியாவில் தோன்றிய மகத்தான ரிஷிகளுள் ஒருவர்,ஏகம் ஸத் விப்ரா பஹீதா வதந்தி - இருப்பவர் ஒருவரே, ரிஷிகள் அவரைப் பலவாறாக அழைக்கிறார்கள் என்று கூறினார். இது இதுவரை கூறப்பட்ட வாக்கியங்களுள் நினைவில் நிறுத்த வேண்டிய வேண்டிய ஒன்றும், இது வரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகத்தான உண்மைகளுள் மிகச் சிறந்த உண்மையும் ஆகும். இந்துக்களாகிய நமக்கு இந்த உண்மை, தேசிய வாழ்வின் முதுகெலும்பாக அமைந்துள்ளது. ஏகம் ஸத் விப்ரா பஹீதா வதந்தி என்கின்ற இந்த ஒரு கருத்து நமது தேசிய வாழ்வில் எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்து நம்மிடம் வந்துள்ளது; காலந்தோறும் அளவிலும் நிறைவிலும் புதிய வேகம் பெற்று இன்று அது நமது தேசிய வாழ்வில் இரண்டற ஒன்றுபட்டுள்ளது, ரத்தமாகக் கலந்து நம்மில் ஒன்றாகியுள்ளது. இந்த உண்மை நம் ரத்தகுழாய் தோறும் ஓடிக் கொண்டிருக்கிறது; நம் நாடு மத சகிப்புத்தன்மையின் மகத்தான நிலமாக ஆகிவிட்டது. இங்கே இந்த நாட்டில் மட்டுமே மக்கள் தங்கள் மதத்தையே இகழ வந்த மதங்களுக்கும் கோயில்களும் சர்ச்சுகளும் கட்டித் தருகின்றனர். இந்த மகத்தான ஒரு கருத்தைத்தான் உலகம் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

மேலை நாடுகளில் எந்த அளவிற்க்குச் சகிப்பற்ற தன்மை நிலவுகிறது என்பது பற்றி உங்களுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது. அங்கேயே உயிரைவிட நேருமோ என்றுகூட நான் பலமுறை நினைக்கின்ற அளவிற்கு அங்கே மதச் சகிப்பின்மை தலைவிரித்து ஆடுகிறது. மதத்திற்காக ஒரு மனிதனைக் கொல்வது என்பது அங்கே சர்வ சாதாரணமான ஒன்று. தங்கள் நாகரீகத்தைப்பற்றிப் பெருமையடித்துக் கொள்கின்ற அவர்கள் அதையும் ஒரு நாகரீகமாகச் சொல்லி, இன்று இல்லா விட்டால் நாளைக்குச் செய்யலாம். மேலை நாட்டில், மேலை நாட்டில், நாடு ஏற்றுக் கொண்டுள்ள மதத்திற்க்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை சொன்னால் போதும், அவன் மிகக் கொடூரமான வகையில் சமுதாயத்தைக் விட்டு விலக்கப்படுவான். அவர்கள் நமது ஜாதி முறைகளைப் பற்றிச் சரளமாக அதே வேளையில் நயமாகக் குறை கூறுவார்கள். நீங்கள் மேலைநாடுகளுக்குச் சென்று என்னைப்போல் அங்கே சில ஆண்டுகள் வாழ்ந்து பாருங்கள். மிகப் பெரிய பேராசிரியர்கள் என்று நீங்கள் கேள்விப்படுகின்ற சிலர்கூட மதத்தைப்பற்றித் தாங்கள்கொண்டுள்ள கருத்தில், நூற்றில் ஒரு பங்கைக்கூட வெளியே சொல்வதற்க்கு தைரியமில்லாத வடிக்கட்டின கோழைகளாக இருப்பதைக் காண்பீர்கள்.

இந்தச் சகிப்புத்தன்மை என்றும் மகோன்னதமான கருத்திற்காக உலகம் காத்திருக்கிறது. நாகரீகத்திற்கு அது ஒரு மகத்தான செல்வமாக விளங்கும்; அது மட்டுமல்ல இந்தக் கருத்தைக் ஏற்றுக்கொள்ளாமல் எந்த நாகரீகமும் நீண்ட காலம் வாழ முடியாது.வெறியும் ரத்த வெள்ளமும் கொடூரமும் நிறுத்தப்பட்டாலன்றி எந்த நாகரீகமும் வளர முடியாது. மனிதர்கள் ஒருவருக்கொருவரை அன்புணர்வுடன் அணுகாதவரை எந்த நாகரீகமும் தலை நிமிரவே முடியாது. மிகவும் தேவையான அந்த அன்புணர்வின் முதல் படி, பிற மதக் கருத்துக்களை அன்போடும் கனிவோடும் பார்ப்பதாகும் அன்புணர்வுடன் இருந்தால் மட்டும் போதாது, நமது மதக் கருத்துக்களை அன்போடும் கனிபோடும் பார்ப்பதாகும். அன்புணர்வுடன் இருந்தால் மட்டுமே போதாது, நமது மதக் கொள்கை களும் நம்பிக்கைளும் எவ்வளவுதான் வேறுபட்டதாக இருந்தாலும், அந்த மதங்களுக்கு ஊக்கத்துடன் உதவவும் வேண்டும். சற்றுமுன் நான் கூறியது போல் இந்தியாவில் அதையே இப்போது செய்து கொண்டிருக்கிறோம். இங்கே இந்தியாவில் தான் இந்துக்கள் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளும், முகமதியர்களுக்கு மசூதியும் கட்டித் தந்தனர்; இன்றும் கட்டித் தருகின்றனர். அது தான் செய்யப்பட்ட வேண்டிய, கொடூரங்கள் அவர்களின் கொடுமைகள் ஆதிக்க வெறி இவற்றிற்கு இடையிலும் நம்மைப்பற்றிப்பேசும் இழிவான பேச்சுக்களுக்கு இடையிலும், நாம் அவர்களை அன்பினால் வெற்றி கொள்ளும்வரை நிச்சயும் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளையும் முகமதியர்களுக்கு மசூதிகளையும் கட்டிக் கொடுப்போம்; கொடுத்துக்கொண்டே இருப்போம். அன்பு மட்டுமே நிலைக்கக்கூடிய ஒன்று வெறுப்பு அல்ல; மென்மைதான் நெடுங்காலம் வாழ்வதற்குரிய வலிமையையும் பலனையும் தரவல்லது அன்றி வெறும் காட்டுமிராண்டித்தனமோ உடம்பின் வலிமையோ அல்ல என்பதை உலகத்திற்கு நிரூபிக்கும் வரை நாம் இவ்வாறு செய்துகொண்டே இருக்க வேண்டும்.

நம்மிடமிருந்து இன்றைக்கு உலகம் பெற விரும்புகின்ற மற்றொரு மகத்தான கருத்து , உலகம் முழுமையின் ஆன்மீக ஒருமை ஐரோப்பாவின் சிந்தனையாளர்களுக்கு, இல்லை, இந்த உலகம் முழுவதற்க்கும் - உயர்ந்தோரைவிடப் பாமரருக்கு, படித்தவர்களைவிடப் படிக்காதவர்களுக்கு, பலசாலிகளை விடப் பலவீனருக்கு- தேவையானது இந்தக் கருத்தே. மேலை நாட்டின் தற்கால ஆராய்ச்சிகள்,தூல உப கரணங்கள் மூலமே பிரபஞ்சத்தின் ஒருமைப்பாட்டையும் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள எல்லாமே ஒன்றையொன்று சார்ந்திருப்பதையும் நிரூபித்துள்ளது. ஜடப் பொருட் கடலில் சின்னஞ்சிறு அலைகளாகவோ அலைத் தொகுதிகளாகவோ இருக்கிறோம்; அது போலவே உடம்பும் மனமும் ஜடப்பொருளாகிய கடலில் சின்னஞ்சிறு அலைகளே, அதாவது பெயர் வேறுபாடே என்பதை நெடுங்காலத்திற்கு முன்பே இந்திய மன இயல் காட்டியுள்ளது. வேதாந்தம் இதற்கும் ஒரு படி மேலாகச் சென்று, இந்த பிரபஞ்சத்தின் ஒருமைப் பாட்டுக் கருத்தின் பின்னணியில் மகத்தான, ஒன்றேயான உண்மை ஆன்மா இருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறது. இவற்றை யெல்லாம் சென்னைப் பல்கலைக் கழகப் பட்டதாரிகளாகிய உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே ஓர் ஆன்மாதான் உள்ளது. இருப்பவை எல்லாம் ஒன்றே.

பிரபஞ்சம் முழுமையின் இந்த அடிப்படை ஒருமைப்பாட்டுக் கருத்து இந்த நாட்டில் கூடப் பலரைப் பயமுறுத்தி இருக்கிறது. இன்றும் சில நேரங்களில் அந்தக் கருத்தை ஆதரிப்பவர்களைவிட எதிர்ப்பவர்களே அதிகம் உள்ளனர் என்றாலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; புத்துயிர் அளிக்கின்ற இந்த ஒரு மகத்தான கருத்தைதான் இன்றைக்கு உலகம் நம்மிடம் வேண்டி நிற்கிறது. தங்கள் உரிமைக்காக குரல் எழுப்ப முடியாத பாமர மக்களின் விடிவிற்கு இந்தக் கருத்து தான் தேவை. அனைத்தின் இந்த ஒருமைப்பாட்டுக் கருத்தை நடைமுறையிலும் அன்றாட வாழ்க்கையிலும் செயல்படுத்தாமல் யாராலும் நமது நாட்டில் முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியாது.

எதையும் ஆராய்ச்சிக் கண்ணுடன் அணுகுகின்ற மேலைநாடு தன் தத்துவம், நீதிநெறி முதலிய அனைத்திற்கும் ஆதாரமான பகுத்தறிவை ஆர்வத்துடன் தேடுகிறது. எவ்வளவு மகத்தானவர்களாக இருந்தாலும் தெய்வீகமானவர்களாக இருந்தாலும், ஒரு தனிமனிதனின் ஒப்புதலினால் மட்டுமே நீதி நெறியை உண்டாக்க முடியாது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் நீதிநெறிக்கு இத்தகைய ஆதாரத்தை உலகின் சிந்தனையாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீதி நெறியும் ஒழுக்க விதிகளும் மக்களைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், மனித ஆதாரத்தைவிடச் சற்று மேலான ஆதாரம் ஏதாவது வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். நிரந்தரமான சில உண்மையிலிருந்து அல்லாமல் அந்த எல்லையற்ற ஒரே உண்மையிலிருந்து அல்லாமல் அந்த நிரந;ஞூதர ஆதாரத்தை வேறு எங்கே காண முடியும்? ஆன்மாவின் எல்லையற்ற ஒருமையே எல்லா ஒழுக்க விதிகளின் ஆதாரமாகும். மனிதனின் முக்கிக்கான போராட்டத்தைப்பற்றிச் சொல்கின்ற ஒவ்வொரு நாலும் சகோதரர்கள் என்பது மட்டுமல்ல, உண்மையில் நீங்ககளும் நானும் ஒன்றே. இதுதான் இந்தியத் தத்துவத்தின் ஆணித் தரமான கருத்து இந்த ஒருமைதான் எல்லா நீதி நெறிக்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படை இது நமது பாமர மக்களுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவையோ, அவ்வுளவு அவமசரமாக ஐரோப்பியர்களுக்க தேவைப்படுகிறது. இங்கிலாந்திலும் பிரான்சிலும் அமெரிக்காவிலும் இன்று உருவாகி வருகின்ற நவீன அரசியல் மற்றும் சமுதாய மலர்ச்சிகளுக்கு, அவர்கள் அறியாமலே, இந்த மகத்தான கருத்துதான் அடிப்படையாக இருக்கிறது.

நண்பர்களே, நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் தனிமனித முக்திக்காகவும், சர்வ முக்திக்காகவும் மனிதனின் போராட்டதைப்பற்றிக் கூறுகின்ற எல்லா நூல்களிலிலும் இந்திய வேதாந்தக் கருத்துக்கள் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றை எழுதியவர்களுள் சிலருக்கு தாங்கள் எழுதியள்ளவற்றின் மூலகாரணம் எது என்பது தெரியவில்லை. சிலரோ அவை தங்கள் சொந்தக் கருத்துக்கள் போல் தோன்றுகின்ற அளவிற்கு எழுதியுள்ளனர். தைரியமும் நன்றியுணர்வும் கொண்ட ஒரு சிலர் மட்டுமே மூல நூலைக் குறிப்பிட்டுத் தங்கள் நன்றியைச் செலுத்தியுள்ளனர்.

நான் அளவுக்கு அதிகமாக அத்வைதத்தைப் போதிப்பதாகவும் பக்தியைப் பற்றிக் குறைவாகவே கூறுவதாகவும் குற்றம் சாட்டப்படுவதை அமெரிக்காவில் இருந்தபோது கேள்விப்பட்டேன். துவைத நெறிகளிலம் உள்ள பிரேம பக்தியும் பரவச நிலைகளும் அவை தருகின்ற எல்லையற்ற ஆனந்தமும் எனக்கு நன்றாகவே தெரியும். அவை எல்லாவற்றையுமே நான் அறிவேன். ஆனால் நமக்கு இது அழுவதற்கான நேரமல்ல ஆனந்தக் கண்ணீர்கூட இப்போது கூடாது. போதுமான அளவு நாம் அழுதாயிற்று. மென்மையானவர்கள் ஆவதற்க்கு இது தருணம் அல்ல . மென்மை மென்மை என்று நாம் வெறும் பஞ்சுப் பொதிகளாகி விட்டோம், பிணங்களாக மாறிவிட்டோம். நமது நாட்டிற்கு வேண்டுவது இரும்பாலான தசையும், எஃகாலான நரம்புகளும், அவற்றுடன் இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளையும் ரகசியங்களையும் ஊடுருவிப் பார்க்கவும், அவசியமானால் அதற்ககக் கடலின் அடியாழம் வரை சென்று மரணத்தையும் நேருக்கு நேராகச் தடுக்க முடியாததான சங்கல்பமும் தான் நமக்கு இப்போது தேவை. நமக்குத் தேவையானது இது தான். இதனை உருவாக்கி நிலைநிறுத்தி பலப்படுத்த, லட்சியத்தை நன்குணர்ந்து, அதனை அனுபவத்தில் கொண்டு வருவதால்தான் முடியும்.

நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடம் நம்பிக்கை, நம்பிக்கை ,இறைவனிடம் நம்பிக்கை இதுவே மனோன்னதத்தின் ரகசியம். உங்களுடைய புராண தெய்வங்கள் முப்பத்து முக்கோடிபேரிடமும், வெளிநாட்டினர் அவ்வப்போது உங்களிடமே திணிக்கின்ற அனைத்து தெய்வங்களிடமும் நம்பிக்கை வைத்து, அதே வேளையில் உங்களுக்குக் கதிமோட்சமில்லை உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நம்பிக் கையை ஆதாரமாகக் கொண்டு எழுந்து நில்லுங்கள் வலிமை உடையவர்களாக இருங்கள். நமக்குத் தேவைப்படுவது இதுதான் .

வருவோரும் போவோருமான விரல்விட்டு எண்ணக்கூடிய அன்னியர் முப்பத்து மூன்று கோடி மக்களாகிய நம்மை மதித்து அரசாளக் காரணம் என்ன? அவர்களுக்குத் தன்னம்பிக்கை இருந்து, நமக்கு இல்லை. மேலைநாட்டில் நான் என்ன கற்றுக்கொண்டேன்? மனிதன்பாவி, இழிந்தவன் என்று திருப்பித்திருப்பிச்சொல்கின்றன கிறிஸ்தவ மதப் பிரிவுகளின் வெற்று உபதேசங்களுக்குப் பின்னால் நான் கண்டது என்ன? மனிதர்கள் தங்களிடமே கொண்டுள்ள நம்பிக்கையாகிய மாபெரும் சக்தி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தேசிய நீரோட்டத்தின் மையத்தில் ததும்பி நிற்பது தான் எனக்குத் தெரிந்தது. நான் ஆங்கிலேயன் என்னால் எதையும் செய்ய முடியும் என்றே ஆங்கிலேயச் சிறுவன் ஒருவன் சொல்வான், அமெரிக்கச் சிறுவனும் இதையே சொல்வான், ஐரோப்பாவிலுள்ள எந்தச் சிறுவனும் இதையே தான் சொல்வான் . ஆனால் இங்குள்ள நம் சிறுவர்கள் இதைச் சொல்வார்களா ? மாட்டார்கள். சிறுவர்கள் ஏன் அவர்களின் தந்தையரே சொல்ல மாட்டார்கள். நாம் தன்னம்பிக்கையை இழந்து விட்டோம். எனவே தங்கள் சொந்த ஆன்மாவின் மகிமையை மக்களுக்குக் காட்டுவதற்கும் அவர்களுடைய இதயத்தில் உறைந்துள்ள ஆற்றலைக் கிளார்ந்தெயச் செய்வதற்கும் வேதாந்தத்தின் அத்வைதக் கருத்தை உபதேசித்தேயாக வேண்டும், அதனால் தான் நான் அத்வைதத்தை எடுத்துக் கூறினேன். வேதாந்த மதத்தைச் சாந்தவன் என்ற ஒரு பிரிவு மனப்பான்மையுடன் அதை நான் கூறவில்லை. அது மிகப்பரந்த அளவில் உலகம் முழுவதிலும் ஒப்புக்கொள்ளப்படுவதான ஒன்று என்பதால் தான் அதை நான் கூறினேன்.

துவைதியையோ விசிஷ்டாத்வைதியையோ வருத்த முறச் செய்யாமல் எளிதாக ஓர் இணைப்பு வழியைக் கண்டறிய முடியும். கடவுள் நம்முள் இருக்கிறார், எல்லாவற்றிலும் தெய்வீகம் உறைகிறது என்ற கொள்கை இல்லாத ஒரு நெறிகூட இந்தியாவில் இல்லை. தூய்மையும் பூரணத்துவமும் வலிமையும் எல்லாமே நம் ஆன்மாவில் முழுமையாக இருக்கிறது என்பதை எல்லா வேதாந்த நெறிகளும் ஏற்றுக் கொள்கின்றன. இந்தப் பூராணத்துவம் சில வேளைகளில் சுருங்குவது போலவும் சில நேரங்களில் விரிவது போலவும் ஆகிறது, ஆனாலும் அது இருக்கவே செய்கிறது என்று வேதாந்தத்தின் சில நெறிகள் கூறுகின்றன. அத்வைதத்தின்படி அது சுருங்குவதும் இல்லை விரிவதும் இல்லை; அவ்வப்போது மறைக்கப்படவும் மீண்டும் மறைப்பு விலக்கப்படவும் செய்கிறது. ஏறக்குறைய விஷயம் ஒன்றுதான். ஒன்று மற்றொன்றை விடச் சற்று தர்க்கரீதியானதாக இருக்கலாம், ஆனால் விளைவும் நடைமுறை விளக்கங்களும் ஒன்றுபோலவே உள்ளன இந்த ஒரு முக்கியக் கருத்தே இப்போது உலகத்திற்குத் தேவையாக உள்ளது; மற்ற இடங்களைவிட நம் தாய் நாட்டிற்குத்தான் இதன் தேவை அதிகமாக உள்ளது.

நண்பர்களே, வருத்தம் தரக்கூடிய சில உண்மைகளை உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். நம் இந்தியன் ஒருவன் ஓர் ஆங்கிலேயனால் கொலை செய்யப்பட்டான் என்றோ கேவலமாக நடத்தப்பட்டான் என்றோ பத்திரிக்கையில் வருகிறது. உடனே நம் நாடு முழுதும் கூக்குரல்கள் எழுகின்றன . நானும் படிக்கிறேன், அழுகிறேன். அடுத்த வினாடியே இதற்கெல்லாம் யார் பொறுப்பு என்ற கேள்வி என் மனத்தில் எழுகிறது. ஒரு வேதாந்தி என்ற முறையில் எனக்குள்ளே இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க என்னால் முடியாது. இந்து தனக்குள் மூழ்குபவன். அவன் தனக்குள்ளும் தன் மூலமும், தன்னை அடிப்படையாகக் கொண்டும் எதையும் பார்க்க விரும்புகிறோன். எனவே என்னையே நான் கேட்டுக்கொள்கிறோன் இதற்கு யார் பொறுப்பு? எனக்கு ஒவ்வொரு முறையும் கிடைக்கின்ற பதில் இதுதான்; ஆங்கிலேயர்கள் அல்ல, அவர்கள் பொறுப்பல்ல; நமது எல்லா துன்பங்களுக்கும் எல்லா இழிவுகளுக்கும் நாம், நாம் மட்டுமே பொறுப்பாளிகள்.

பிரபுத்துவ வெறி பிடித்த நமது முன்னோர்கள் இந்த நாட்டுப் பாமர மக்களைத் தங்கள் காலின் கீழிட்டு மிதித்துக் கொடுமைப்படுத்தினார்கள். பாவம் அவர்களுக்கு எந்த உதவியும் இல்லை. காலப்போக்கில் அந்த ஏழைகள் தாங்கள் மனிதர்கள் என்பதையே மறந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் பல நாற்றாண்டுகளாக அவர்கள் வெறும் விறகுவெட்டிகளாகவும் தண்ணீர் இறைப்பவர்களாகவுமே வாழ்வதற்குக் கட்டாயபடுத்தப்பட்டார்கள். விளைவு அவர்களை தங்களை பிறவி அடிமைகள் என்றும் விறகு வெட்டவும் தண்ணீர் இறைக்கவும் மட்டுமே பிறந்தவர்கள் என்றும் நம்பவே தொடங்கி விட்டார்கள். பெருமையடித்துக் கொள்கிறோம். ஆனால் யாராவது அவர்களுக்குப் பரிந்து ஒரு வார்த்தை சொன்னாலும், தாழ்த்தப்பட்ட அந்த அப்பாவிகளைக் கைதூக்கி விடுவதான கடமையை விட்டுவிட்டு, நம் மக்கள் பின்வாங்குவதையே நான் காண்கிறேன். முட்டாள்தனமான சில பரம்பரைக் காரணங்கள், அவை போன்ற சில மேலை நாட்டு உளறல்கள் , இவற்றிலிருந்தே சில காட்டுமிராண்டிகள், மிருகத்தனமான, மிருகத்தனமான வாதங்கள் இவையெல்லாம் அந்த ஏழைகளை மேலும் அடங்கி ஒடுக்குவதற்காக முன்வைக்கப்படுகின்றன.

அமெரிக்காவில் சர்வசமயப் பேரவையில் நீக்ரோ இளைஞன் ஒருவன் கலந்து கொண்டான். உண்மையான ஆப்ரிக்க நீக்ரோ அவன். அழகாகப் பேசினான். எனவே அவனிடம் பேச வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அவனிடம் அவ்வப்போது பேசினேன். ஆயினும் அவனைப் பற்றி எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை ஒரு முறை இங்கிலாந்தில் இருந்தபோது சில அமெரிக்கர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் அவனைப்பற்றிக் கீழ்வரும் செய்திகளைச் சொன்னார்கள். அந்த இளைஞன் மத்திய ஆப்ரிக்காவில் வாழ்ந்த ஒரு நீக்ரோ இனத்தலைவனின் மகன். ஒருநாள் மற்றோர் இனத்தின் தலைவன் அந்த இளைஞனின் தந்தை மீது கோபம் கொண்டு அவனது தந்தையையும் தாயையும் கொன்று விட்டான் . கொன்றதுடன் தின்றும் விட்டான். குழந்தையையும் கொன்று சமைக்கக் கட்டளையிட்டான் அவன். ஆனால் சிறுவன் தப்பிவிட்டான் பல பயங்கரமாக இன்னல்களை அனுபவித்து, பல நூறு மைல்கள் பயணம் செய்து கடற்கரையை அடைந்தான். பின்னர் அமெரிக்காக் கப்பல் ஒன்றில் அமெரிக்கா கொண்டு வரப்பட்டான். அந்தப் பையன் தான் அவ்வளவு சிறப்பாக உரையாற்றினான். அதை கேட்ட பிறகு உங்கள் பரம்பரை வாதத்தைப்பற்றி என்னதான் எண்ண இருக்கிறது?

ஏ பிராமணர்களே, பரம்பரை காரணமாக பிராமணர்களுக்குக் கீழ் ஜாதியினரைவிட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கிறது என்றால் பிராமணர்களின் படிப்பிற்கு எந்தப் பணமும் இனி செலவழிக்காதீர்கள்; எல்லாவற்றையும் கீழ் ஜாதியினருக்காகச் செலவிடுங்கள். உதவியற்றவர்களுக்கு கொடுங்கள், ஏனெனில் அவர்களுக்குதான் எல்லா செல்வமும் தேவைப்படுகிறது. பிராமணன் பிறவியிலேயே அறிவாளி அல்லாத பிறர் எல்லா போதனைகளையும் ஆசிரியர்களையும் பெறட்டும். இதுதான் நான் புரிந்து கொண்ட நீதியும் பகுத்தறிவுமாகும்.

நமது ஏழைகளும் தாழ்த்தப்பட்ட இந்தப் பாமர ஜனங்களும்தான் உண்மையில் தாங்கள் யார் என்பதைக் கேட்கவும் அறிந்து கொள்ளவும் வேண்டியிருக்கின்றது ஜாதி குலம் பலம் பலவீனம் போன்ற எவ்வித பாகுபாடுமின்றி ஒவ்வோர் ஆணும் பெண்ணும் குழந்தையும் இதைக் கேட்கட்டும்; வலிமையானவர் வலிமையற்றவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் ஆன்மா உள்ளது மகத்தானவர்களாக மேலோர்களாக ஒவ்வொருவரும் மாறுவதற்கான எல்லையற்ற வாய்ப்பும் எல்லையற்ற ஆற்றலும் அந்த ஆன்மாவில் உள்ளது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும் உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வரான் நிபோதத எழுந்திருங்கள் விழித்திருங்கள், லட்சியத்தை அடையும்வரை நில்லாமல் செல்லுங்கள் என்று ஒவ்வொருவரிடமும் முழங்குவோம். விழித்திருங்கள் பலவீனமாகிய இந்த மனவசியத்திலிருந்து விடுபட்டெழுங்கள். உண்மையில் யாரும் பலவீனர் இல்லை. ஆன்மா எல்லையற்றது எல்லா ஆற்றலகளும் உடையது எல்லாம் அறிந்து எழுந்த நில்லுங்கள், உங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், உங்களுள் உறைகின்ற இறைவனை வெளிப்படுத்துங்கள், அவரை மறுக்காதீர்கள்.

அளவுக்கு அதிகமான சோம்பல் அளவை மீறிய பலவீனம், ஆழ்ந்த மனவசியம் இவை நம் இனத்தின் மீது படிந்துள்ளது, படிந்தவண்ணம் உள்ளது. ஓ தற்கால இந்துக்களே, மனவசியத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். அதற்கான வழி உங்கள் சாஸ்திரங்களில் உள்ளது. அதைப் படியுங்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மை இயல்பைப் போதியுங்கள். உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும் பெருமை வரும், நன்மை வரும் தூய்மை வரும், எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும். கீதையில் நான் விரும்பும் பகுதி ஏதாவது ஒன்று இருக்கிறது என்றால், அதன் சாரமாகவும் சுருக்கமாகவும் உள்ள கண்ணனின் இந்த இரண்டு சுலோகங்கள்தாம்- யார் எல்லா உயிர்களிலும் பரம்பொருளாய் சமமாக உறைவதைக் காண்கிறானோ, அழிகின்ற பொருட்களில் அழியாதவரான இறைவனைக் காண்கிறானோ அவனே உண்மையில் காண்கிறான். ஏனெனில் எங்கும் இறைவன் சமமாக உறைவதைக் காண்பவன் ஆன்மாவை ஆன்மாவால் அழிக்க மாட்டான். இவ்வாறு அவன் உயர் லட்சியத்தை அடைகிறான்.

இங்கும் இதர நாடுகளிலும் வேதாந்தத்தின் மூலம் பயனுள்ள காரியங்கள் செய்வதற்கு இவ்வாறு மகத் தான வாய்ப்பு உள்ளது. மனித இன வளர்ச்சிக்காகவும் மேன்மைக்காகவும் இந்த அற்புதக் கருத்தை, ஆன்மா ஒன்றே, அது எங்கும் நிறைந்தது என்பதான அற்புதக் கருத்தை இங்கும் பிற இடங்களிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும் எங்கெல்லாம் தீமை இருக்கிறதோ, எங்கெல்லாம் அறியாமை நிலவுகிறதோ அஞ்ஞானம் உள்ளதோ அங்கெல்லாம் அவற்றிற்கு மூலகாரணமாகக் காணப்படுவது வேறுபாட்டு உணர்ச்சிகளே. சமத்துவம், பொருட்களின் அடிப்படையாகத் திகழ்கின்ற சமநிலை மற்றும் ஒருமைப்பாடு - இவற்றின் மீதுள்ள நம்பிக்கையிலிருந்தே எல்லா நன்மைகளும் பிறக்கின்றன. நம் சாஸ்திரங்கள் இவ்வாறே கூறுகின்றன. என அனு பவமும் இதையே சொல்கிறது இதுவே வேதாந்தத்தின் மகத்தான லட்சியம். ஒரு லட்சியத்தைக் கொள்வது என்பது ஒன்று, அதனை அன்றாட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நடைமுறையில் கடைபிடிப்பது என்பது முற்றிலும் வேறான ஒன்று ஒரு லட்சியத் தைக் காட்டுவது, மிகவும் நல்லதுதான் ஆனால் அதை அடைவதற்க்கு உரிய செயல்முறை எங்கே இருக்கிறது?

பல நூற்றாண்டுகளாகவே நம் மக்களின் மனத்தை ஆக்கிரமித்திருப்பவையும் வெறுப்டையச் செய்து. வருபவையுமான ஜாதி மற்றும் சமூகச் சீர்திருத்தம் பற்றிய கடினமான சில கேள்விகள் இந்த இடத்தில் இயல்பாகவே எழுகின்றன. நான் ஜாதிகளை உடைப்பவனோ, வெறும் சமூகச் சீர்திருத்தவாதியோ அல்ல என்பதை வெளிப்படையாக உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் ஜாதிகளிலோ சமூகச் சீர்த்திருத்தத்திலோ நேரடியாக எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நீங்கள் ஜாதியைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் அதற்காக ஏன் மற்றொருவனை, மற்றொரு ஜாதியை நீங்கள் வெறுக்க வேண்டும்? நான் போதிப்பது அன்பு, அன்பு ஒன்றை மட்டுமே. பிரபஞ்சம் முழுவதன் ஆன்மா ஒன்றே, அது எங்கும் நிறைந்தது என்ற மகத்தான வேதாந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் நான் பிரச்சாரம் செய்கிறேன்.

ஏறக்குறைய கடந்த நூறு ஆண்டுகளாக நமது நாடு சமூகச் சீர்திருத்தவாதிகளாலும் பல வகையான சமுதாயச் சீர்திருத்தத் திட்டங்களாலும் மூழ்கடிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சீர்திருத்தவாதிகளிடம் என்னால் தவறு எதையும் காண முடியவில்லை அவர்களுள் பெரும்பாலானோர் நல்லவர்கள், தெளிவான சிந்தனையுடையவர்கள், சில விஷயங்களில் அவர்களது நோக்கங்கள் கூடப் பாராட்டத் தக்கவையாகவே உள்ளன அதேவேளையில், இந்த நூறு ஆண்டுகளின் சமுதாயச் சீர்த்திருத்தம் உருப்படியான, பாரட்டத்தக்க, நிலையான எந்த விளைவையும் இந்த நாட்டில் எங்குமே தோற்று விக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை ஆயிரக்கணக்கானோர் மேடையில் முழங்குகிறார்கள். அப்பாவியான இந்து இனத்தின் மீதும் அதன் நாகரீகத்தின் மீதும் மூட்டை மூட்டையாகக் கண்டனங்கள் சுமத்தப்படுகின்றன. ஆனாலும் நடைமுறையில் எந்த நல்ல பலனையும் காணோம். ஏன் ?இதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. அது அவர்களின் கண்டனத்திலேயே உள்ளது. நான் முன்பு கூறியது போல், முதலில் காலங் காலமாக நாம் பெற்று வந்துள்ள நமது நாட்டின் பண்பைக் பாதுகாக்க முயல வேண்டும் . பிற நாடுகளிலிருந்து பல விஷயங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், வெளியிலிருந்து பல பாடங்களை நாம் கற்றாக வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறோன். ஆனால் பெரும்பாலான நமது நவீனச் சீர்த்திருத்த இயக்கங்கள் சிறிதும் சிந்திக்காமல் மேலை முறைகளைக் காப்பியடிப்பவைகளாக உள்ளன. இது இந்தியாவிற்கு ஏற்றதல்ல என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதனால்தான் நமது சமீப காலச் சீர்த்திருத்த இயக்கங்கள் எதுவும் எந்தப் பலனையும் அளிக்கவில்லை

இரண்டாவதாக, கண்டனம் ஒருபோதும் நன்மை செய்வதற்கான வழியல்ல. நம்முடைய சமூகத்தில் சில கேடுகள் இருக்கின்றன, இதை ஒரு குழந்தையாலும் காண முடியும். எந்தச் சமூகத்தில்தான் தீமைகள் இல்லை? என் நாட்டு மக்களே, நான் பார்த்த பல்வேறு இன மற்றும் நாட்டு மக்களோடு, நம் மக்களை ஒப்பிட்டபின் நான் கண்ட முடிவை இந்த வேளையில் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். என்னவென்றால், நம் மக்களே எல்லோரையும் விட மிகவும் ஒழுக்கம் வாய்ந்தவர்கள், மிகவும் தெய்வீக மானவர்கள். நமது சமுதாய அமைப்புக்களே மனித குலத்தை மகிழ்ச்சிகரமாக்க, அமைப்பிலும் நோக்கத்திலும் மிகவும் பொருத்தமானவை. எனவே நான் எந்த சீர்திருத்தத்தையும் விரும்பவில்லை. எனது லட்சியம் வளர்ச்சி, விரிவு, தேசியப் பாதையில் முன்னேற்றம். நம் நாட்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது, இந்த உலகம் முழுவதிலும் எந்த நாடும் இதைப்போல மனித மனத்தின் வளர்ச்சிக்காக அதிகமான காரியங்களைச் செய்யவில்லை என்பதைக் நாம் காண முடியும். எனவே என் நாட்டை நிந்திக்கும் எந்த வார்த்தையும் என்னிடம் இல்லை. அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், நீங்கள் நன்றாகச் செய்திருக்கிறீர்கள், இன்னும் நன்றாகச் செய்ய முயலுங்கள் என்பது தான். இந்த நாட்டில் மகத்தான காரியங்கள் கடந்த காலத்தில் செய்யப்பட்டுள்ளன. அதைவிடச் சிறப்பான காரியங்களைச் செய்வதற்கான நேரமும் வாய்ப்பும் இப்போது உள்ளது. எதுவும் செய்யாமல் நம்மால் இருக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும் என்பது உறுதி. எதுவும் செய்யாமலிருந்தால் செத்துப்போவோம். ஒன்று நாம் முன்னே செல்ல வேண்டும் அல்லது பின்னே செல்ல வேண்டும்; முன்னேற வேண்டும் அல்லது வீழ்ச்சி அடைய வேண்டும். கடந்த காலத்தில் நம் முன்னோர்கள் மகத்தான காரியங்களைச் செய்தார்கள். நாமும் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, அவர்கள் செய்ததை விட மகத்தான சாதிக்க வேண்டும் . இந்த நிலையில் நம்மால் எப்படிப் பின்னே சென்று நம்மை நம்மையேஇழிவுபடுத்திக் கொள்ள முடியும்? அது முடியாது, அப்படிச் செய்யவும் கூடாது. பின்னால் செல்வது என்பது இந்த நாட்டை நாசத்திற்க்கும் மரணத்திற்க்குமே அழைத்துச் செல்லும். எனவே முன்னேறிச் செல்வோம் மகத்தான காரியங்களைச் செய்வோம். நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது இதுதான்.

அவ்வப்போதைய தேவைகளை மட்டும் நிறை வேற்றுவதான சமூகச் சீர்த்திருத்தத்தைப் போதிக்கின்ற பிரச்சாரகன் அல்ல நான். தீமைகளை நீக்குவதற்கும் நான் முயலவில்லை , ஆனால் மனித இனத்தின் முன்னேற்றத்திற்காக நமது முன்னோர்கள் மிகவும் சிறப்பாக வகுத்துத் தந்துள்ள திட்டத்தைச் செயல்படுத்த முனைந்து முன் செல்ல வேண்டும் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். மனிதனின் சார்புத்தன்மை மற்றும் அவனது தெய்வீக இயல்பு போன்ற வேதாந்த லட்சியத்தை உணர்ந்துகொள்ளப் பாடுபட வேண்டும் என்று மட்டும்தான் கூறுகிறேன்.

எனக்கு நேரம் இருந்திருந்தால், நாம் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைச் சட்டங்களை வகுத்துத் தந்த நமது முன்னோர்கள் எப்படி பல்லாண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளார்கள், நமது தேசிய அமைப்புகளில் இதுவரை நிகழ்ந்துள்ள மாற்றங்களையும் இனி வரப் போகின்ற மாற்றங்களையும் எப்படி அன்றே உணர்ந்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் மகிழ்ச்சியுடன் எடுத்துச் சொல்லியிருப்பேன். அவர்களும் ஜாதியை ஒழிக்வே விரும்பினார்கள். ஆனால் அவர்கள் தற்கால மனிதர்களைப் போன்றவர்கள் அல்ல. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் அதற்காக, நகர மக்கள் அனைவரும் ஓர் இடத்தில் திரண்டு, எல்லோரும் மதுவும் மாட்டிறைச்சியுமாக விருந்துண்டுகளிக்க வேண்டும்; முட்டாள்களும் பைத்தியங்களும், அவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்துகொண்டு இந்த நாட்டை ஒரு பைத்தியக்கார விடுதியாக மாற்ற வேண்டும் என்றெல்லாம் அவர்கள் கூறவும் இல்லை. அவ்வாறு வளம் பெற்ற ஒரு நாட்டை நான் இனிதான் காண வேண்டும்.

நம் முன்னோர்களின் லட்சிய மனிதனாகத் திகழ்ந்தவன் பிராமணன். நம் சாஸ்திரங்களிலும் இந்த பிராமணன். நம் சாஸ்திரங்களிலும் இந்த பிராமண லட்சியம் சிறப்பாகக் காணப்படுகிறது. ஐரோப்பாவின் கார்டினல் பிரபு தன் முன்னோர்கள் மேன்மையானவர்கள் என்பதை நிரூபிக்க எவ்வளவே சிரமப்பட்டு ஆயிரமாயிரம் பணத்தைச் செலவழிக்கிறார். இறுதியில் அந்த முன்னோர்கள் ஏதோ ஒரு மலையில் வாழ்ந்து, வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் யாத்திரீகர்களைக் கொள்ளையடித்து வாழ்ந்த சில கொடுங்கோலர்கள் என்பதை அறியும்வரை அமைதி அடையமாட்டார். மேலை நாட்டின் மேன்மை மிக்க முன்னோர்களின் தொழில் இதுதான். ஆனால் கார்டினல் பிரபுவுக்கோ இவர்களிலிருந்தே தன் பரம்பரை வந்துள்ளது என்பதை அறிந்தால் தான் திருப்தி. மாறாக இந்தியாவிலோ, கோவணம் அணிந்து, காடுகளில் வாழ்ந்து, கிழங்குகளை உண்டு, வேதங்களை ஓதிய ஏதோ ஒரு ரிஷியின் சந்ததியாக இருப்பதையே பேரரசர்களும் விரும்புவார்கள். அங்கு தான் இந்திய மன்னர்கள் தங்கள் பாரம்பரியத்தை தேடினார்கள். உங்கள் பரம்பரை ஒரு ரிஷியிடமிருந்து தொடங்குமானால் நீங்கள் உயர்ந்த ஜாதியினர், இல்லை யென்றால் உயர்ந்த ஜாதியினர் அல்ல.

எனவே உயர்குலப் பிறப்பைப் பற்றிய நமது லட்சியம் மற்றவர்களிலிருந்து வேறானது. ஆன்மீகப் பண்பாடும் துறவும் கொண்ட பிராமணனே நமது லட்சியம். பிராமண லட்சியம் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன்? உலகியல் சிறிதும் இல்லாத உண்மை அறிவு வளம் மிக்க பிராமணத்துவத்தையே நான் கூறுகிறேன். இதுதான் இந்து இனத்தின் லட்சியம். பிராமணன் சட்டத்திற்குக் கட்டுபட்டவனல்ல அவனுக்கு சட்டமே இல்லை, அவன் அரசனுடைய ஆளுகைக்கு உட்பட்டவனல்ல, அவனை யாரும் துன்புறுத்தக் கூடாது என்றெல்லாம் நமது நீதி நூல்கள் கூறுவதை நீங்கள் கேட்டதில்லையா? அது முற்றிலும் உண்மை . சுயநலமிக்க முட்டாள்களின் விளக்கத்தின்படி இதனை நீங்கள் புரிந்து கொள்ளக் கூடாது, வேதாந்தத்தின் உண்மையான ஆதாரபூர்வமான விளக்கத்தின்படி புரிந்துகொள்ள வேண்டும் அறிவையும் அன்பின் ஆற்றலையும் பெறுவதிலும், அதைப் பரப்புவதிலும் முனைந்து ஈடுபடுபவனாகவும், சுயநலம் என்பதே இல்லாதவனாகவும் இருப்பவனே பிராமணன் என்றால் பொதுநலமும் ஆன்மீகமும் நல்லொழுக்கமும் நற்பண்புகளும் இத்தகைய ஆண்களும் பெண்களுமாகிய பிராமணர்கள் மட்டுமே ஒரு நாட்டில் வாழ்வார்கள் என்றால், அந்த நாட்டைச் சட்டங்களுக்குக் கட்டுப்படாததாகவும் கருதுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? அவர்களை ஆள போலீசோ ராணுவமோ எதற்கு? அவர்களை ஏன் ஒருவர் ஆட்சி செய்ய வேண்டும்? அவர்கள் நல்லவர்கள், சான்றோர்கள், மனித தெய்வங்கள். இவர்கள்தான் நமது லட்சிய பிராமணர்கள்.

சத்திய யுகத்தில் ஒரே ஒரு ஜாதிதான் இருந்ததாகவும் அந்த ஒரே ஜாதி பிராமண ஜாதியே என்றும் சாஸ்திரங்களில் நாம் படிக்கிறோம். ஆரம்பக் காலத்தில் உலகம் முழுவதிலும் பிராமணர்கள் மட்டுமே இருந்தார்கள் அவர்கள் இழிவடைய ஆரம்பித்த பின்னரே பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்தனர், இந்தச் சுழற்சி ஒரு சுற்று முடியும்போது எல்லோரும் மீண்டும் பிராமணர்களாகி விடுவர் என்று மகாபாரதத்தில் படிக்கிறோம். இந்த யுகச் சுழற்ச்சி இப்போது ஒரு சுற்றை நிறைவு செய்யும் நிலையில் உள்ளது. இந்த விஷயத்தில் நீங்கள் கவனம் கொள்ளுமாறு வேண்டுகிறேன். எனவே உயர்ந்த நிலையில் இருப்போரைக் கீழ்நிலைக்கு இழுப்பதோ, குடித்துக் கும்மாளம் அடிப்பதோ, அதிக போகத்தை நாடி எல்லை மீறிக் குதிப்பதோ ஜாதிப் பிரச்சனைக்கான நமது தீர்வு அல்ல நாம் ஒவ்வொரு வரும் ஆன்மீகத்தை நாட வேண்டும் வேதாந்த மதத்தின் நியதிகளைக் கடைபிடிக்க வேண்டும், லட்சிய பிராமணர்களாக வேண்டும். ஜாதிப் பிரச்சனைக்குத் தீர்வு இவ்வாறுதான் ஏற்பட முடியும்.

நீங்கள் ஆசிரியர்களோ, ஆசியர் அல்லாதவர்களோ ரிஷிகளோ பிராமணர்களோ, மிகவும் தாழ்த்தப்பட்ட ஜாதியினரோ யாராக இருந்தாலும் இந்த நாட்டில் உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் முன்னோர்கள் ஒரு நியதியை வகுத்து வைத்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் நியதி, ஆணை ஒன்றுதான் - மிக உயர்நிலை மனிதனிலிருந்து மிகவும் கீழான நிலையில் இருப்பவன்வரை இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முயன்று, நில்லாமல் முன்னேரி லட்சிய பிராமணன் ஆக வேண்டும். இந்த வேதாந்தக் கருத்து நமது நாட்டிற்க்கு மட்டுமல்ல உலகிற்கே ஏற்புடைய ஒன்றாகும் அஹிம்சையில் வேரூன்றிய, அமைதியான, உறுதியான வணங்கத்தக்க, தூய்மையான தியான நிலையில் திளைக்கின்ற ஓர் ஆன்மீக மனிதன் என்ற உயர் லட்சியத்திற்க்கு மனித குலத்தையே நிதானமாகவும் மென்மையாகவும் உயர்த்துவதே ஜாதி பற்றிய நமது லட்சியமாகும். இந்த லட்சியத்தில் இறைவன் குடி கொள்கிறார்.

இவற்றையெல்லாம் செய்வது எப்படி? சபிப்பதாலும் கேவலப்படுத்துவதாலும் நிந்திப்பதாலும் எந்த நல்ல விளைவையும் கொண்டுவர முடியாது என்பதைக் நான் உங்களுக்கு அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். இந்த வழிகளில் எல்லாம் ஆண்டுக்கணக்காக முயற்சி செய்தாகிவிட்டது. குறிப்பிடத்தக்க எந்த விளைவும் கிடைக்கவில்லை. அன்பு, கனிவு இவற்றின் மூலமே நன்மை உண்டாக முடியும். இத ஒரு மகத்தான விஷயம். இது சம்பந்தமான எனது திட்டங்களையும் இது பற்றி என் மனத்தில் நாள்தோறும் தோன்றிக் கொண்டிருக்கின்ற கருத்துக்களையும் உங்களிடம் சொல்வதென்றால் அதற்க்கு பல சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டியிருக்கும்.

எனவே ஓர் உண்மையை மட்டும் நினைவுபடுத்தி, எனது சொற்பொழிவை நிறைவு செய்கிறேன். இந்துக்களே, நமது நாடாகிய இந்தக் கப்பல் காலங்காலமாக நமக்கு எவ்வளவோ நன்மை செய்தபடி பயணம் செய்து கொண்டிருக்கிறது. இன்று ஒரு வேளை அதில் ஓர் ஓட்டை விழுந்திருக்கலாம், ஒரு வேளை கொஞ்சம் பழுதுபட்டிருக்கலாம். இந்த நிலையில் ஓட்டைகளை அடைத்து தண்ணீர் உள்ளே செல்வதைத் தடுப்பதுதான் நீங்கள் நான் என்று நாம் ஒவ்வெருவரும் செய்ய வேண்டிய வேலை. நம் நாட்டு மக்களுக்கு ஆபத்தை எடுத்துச் சொல்வோம்; அவர்கள் விழித்தெழட்டும், விழித்து நமக்கு உதவட்டும். மக்களுக்கு நிலைமையை எடுத்துக்கூறி அவர்களின் கடமையை உணர்த்துவதற்காக, நான் இந்த நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று, உரத்த குரலில் அவர்களை அழைக்கப் போகிறேன்! என் குரலை அவர்கள் கேட்காமல் போகலாம். என்றாலும் அவர்களைப்பற்றி ஒரு நிந்தனைச் சொல்லோ ஒரு சாபமோ என் வாயிலிருந்து வராது. கடந்த காலத்தில் நாம் அரிய காரியங்களைச் சாதித்திருக்கிறோம். எதிர்காலத்தில் அத்தகைய காரியங்களைச் செய்யமுடியாமல் போனால், கடந்த காலத்தில் செய்திருக்கிறோம் என்ற ஆறுதலுடன் அனைவரும் ஒன்றாக மூழ்கி, அமைதியாக இறப்போம்.

நாட்டுப்பற்று உடையவர்களாக இருங்கள். கடந்த காலத்தில் இவ்வளவு மகத்தான காரியங்களைச் செய்த இந்த இனத்தை நேசியுங்கள். என் நாட்டு மக்களே உங்களை மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிட்ட நோக்குந் தோறும் உங்களை அதிகமாக நான் நேசிக்கிறேன். நீங்கள் நல்லவர்கள், தூயவர்கள், மென்மையானவர்கள். நீங்கள் எப்போதும் அடக்குமுறைக்கே ஆளாகியிருக்கிறீர்கள், இந்த ஜடவுலக மாயையின் கொடுமை அது. அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். காலைப்போக்கில் உணர்வுப் பொருளே வெற்றி பெறும். இதற்கிடையே நாம் உழைப்போம், நம் நாட்டைக் குறை கூறாதிருப்போம். காலத்தின் கடுமைகளைத் தாங்கி உழைப்பால் களைத்துத் தேய்ந்து கொண்டிருக்கின்ற நமது புனிதமிக்க நாட்டின் அமைப்புகளைச் சபிக்கவோ பழிக்கவோ வேண்டாம் மூட நம்பிக்கைகள் மலிந்த அறிவுக்குப் பொருந்தாத அமைப்புகளைக்கூட நிந்திக்காதீர்கள். ஏனென்றால் கடந்தகாலத்தில் அவை ஏதோ நன்மை செய்திருக்கும், நம் நாட்டு அமைப்புகளைவிட உண்மையிலேயே சிறந்த நோக்கங்களையும் முடிவுகளையும் கொண்ட அமைப்புகள் உலகில் வேறு எங்குமே இல்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

ஏறக்குறைய உலகின் எல்லா நாடுகளிலுமே ஜாதிகள் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் அவற்றின் திட்டமும் நோக்கமும், நம் நாட்டைப்போல் வேறெங்கும் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஜாதி என்பது தவிர்க்க முடியாதது என்றால், பணத்தால் உருவாகின்ற ஜாதியை விட, தூய்மை, பண்பாடு, தன்னலமின்மை இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஜாதியையே நான் விரும்புகிறேன். எனவே ஒரு கண்டனச் சொல்கூட வேண்டாம். உதடுகளை மூடிக்கொள்ளுங்கள், உங்கள் உள்ளங்கள் திறக்கட்டும் உங்கள் ஒவ்வொருவரின் தோள்மீதுதான் முழுப் பொறுப்பும் இருப்பதாக எண்ணி, இந்த நாட்டின் மற்றும் உலகம் முழுவதன் நற்கதிக்காகப் பாடு படுங்கள். வேதாந்தத்தின் ஒளியையும் வழியையும் ஒவ்வொரு ஆன்மாவிலும் மறைந்துள்ள தெய்வீகத்தை விழித் தெழச் செய்யுங்கள். இதன்பிறகு எந்த அளவிற்கு உங்களுக்கு வெற்றி கிடைத்தாலும், நீங்கள் ஒரு மகத்தான லட்சியத்திற்காக வாழ்ந்தீர்கள், உழைத்தீர்கள் என்ற மனநிறைவோடு இறந்து போகலாம். எப்படியானாலும் இந்த லட்சியத்தின் வெற்றியைப் பொறுத்தே இப்போதும் இனி வரும் காலத்திலும் மனித குலத்தின் கதிமோட்சம் நிர்ணயிக்கப்படும்.

மேலும் வீர முழக்கம்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)