Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்

மடத்துப் பணிகளை விரிவாக்கல்!மார்ச் 30,2013

சென்னையில் ஆரம்ப காலம் சசி மகராஜிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கிடைத்த உதவி கொஞ்சமே. மடத்தின் நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கவில்லை. போதிய ஆதரவின்மை காரணமாகச் சென்னைப் பணிகள் வேண்டிய அளவிற்கு வளரவில்லை. என்பதை அறிந்த சுவாமிஜி அவரைக் கல்கத்தா திரும்புமாறோ அல்லது சென்னையை விட்டுவிட்டு, ராமேசுவரத்தில் மடம் ஆர்பிக்குமாறோ கூறியிருந்தார். அதற்கு உடன்பட என்னவோ சசி மகராஜின் மனம் இடம்கொடுக்கவில்லை. சில வேளைகளில் சாப்பிடுவதற்குக் கூட ஒன்றும் இருக்காது. ஆனால் அவருடைய பக்திக் கனல் சிரமங்களையும் பிரச்சனைகளையும் சுட்டெரித்து முன்னேறியது.

ஒருநாள் மாலையில் பக்தர்கள் சிலர் சசி மகராஜைக் காண மடத்திற்கு வந்தனர், சசி மகராஜ் பூஜையறையில் இருந்ததாகக் கேள்விப்பட்டு, கூடத்தில் அவரது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். பூஜையறையில் சசி மகராஜ் யாருடனோ உரத்த குரலில் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தது கேட்டது. நீங்கள் என்னை இங்கு அழைத்து வந்து எனக்கு உதவ யாருமின்றிச் செய்துவிட்டீர்களே! எனது பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் சோதிப்பதுதானே இது! இனி நான் என் தேவைக்காகவோ, உங்கள் தேவைக்காகவோ வெளியே சென்று யாரிடமும் எதையும் கேட்க மாட்டேன். தேடாமல் கேட்காமல் ஏதாவது கிடைக்குமானால், அதை உங்களுக்கு அளித்து, பிரசாதமாகச் சாப்பிடுவேன். இல்லையானால் கடற்கரை மணலைக் கொண்டுவந்து உங்களுக்கு நிவேதனமாகப் படைப்பேன் நானும் அதையே உண்டு வாழ்வேன். காத்திருந்த பக்தர்கள் புரியாமல் திகைத்தனர். சசி மகராஜ் யாரோ ஒருவருடன் என்ன காரணத்தாலோ சண்டையிடுகிறார் என்றே அவர்கள் நினைத்தனர். அதேவேளையில் பூஜையறையில் இவ்வாறு சத்தமிட்டுப் பேச மாட்டாரே என்ற எண்ணமும் அவர்களுள் எழுந்தது. அவர் இவ்வாறு மனம் நொந்து முறையிட்டது குருதேவரிடமே என்பதை அவர்கள் எவ்வாறு ஊகித்திருக்க முடியும்?

அன்று மாலை குருதேவருக்கு நான்கு மணிக்கு நிவேதிக்க எதுவும் இல்லை. மூன்று மணிக்குத்தான் இந்த விஷயம் தெரியவந்தது. அப்போதுதான் சுவாமிகள் பூஜையறையில் சென்று, மேற்கண்டது போல் முறையிட்டார். அதன்பின் வெளியே வந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். மடத்திலிருந்த துறவியருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சுமார் அரைமணி நேரம் அங்கு ஓர் இறுக்கமான சூழ்நிலை நிலவியது. அப்போது யாரோ கதவைத் தட்டுகின்ற மெல்லிய ஓசை கேட்டது. கதவைத் திறந்தால் கொண்டைய செட்டியார் கோதுமை மாவு, நெய், கற்கண்டு, உலர் பழங்கள் போன்வற்றுடன் வந்திருந்தார். யாரும் எதிர்பார்க்காத நிகழ்ச்சி அது. எல்லாவற்றையும் கொண்டு சென்று சசி மகராஜின் திருமுன்னர் வைத்து, தட்சிணையாக ஐந்து ரூபாயும் கொடுத்து வணங்கினார். அப்போது மணி 3.30 ஆகியிருந்தது. நைவேத்தியம் தடையில்லாமல் நடைபெற்றது.

1906 வரையில் சசி மகராஜ் ஐஸ் ஹவுஸில் தங்கினார். அந்த இல்லத்தின் சொந்தக்காரரான பிலிகிரி ஐயங்கார் சுவாமி விவேகானந்தரின் சீடர். வளர்ந்து வரும் மடத்திற்கு பிலிகிரி பெரும் ஆதரவாக இருந்தார். சசி மகராஜிற்கு 12 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று உயிலிலும் எழுதி வைத்தார். அவர் 1906 இல் ஐஸ் ஹவுஸ் ஏலத்தில் விடப்பட்டது. டாக்டர் எம்.சி நஞ்சுண்டராவும், மடத்தின் நலனில் அக்கறை கொண்ட வேறு சிலரும் ஏலத்தில் விலை கேட்க முயன்றனர். ஆனால் அவர்களுடைய சக்திக்கும் அதிகமாக விலை ஏறியதால் அவர்கள் விலக நேர்ந்தது.

ஏலம் நடந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்தக்கொண்டே சுவாமி ராமகிருஷ்ணானந்தர் அமைதியாகவும், எந்தவிதப் பற்றுதலும் இல்லாமலும் சுற்றுத் தள்ளி அமர்ந்திருந்தார். எதிர் காலத்தைப்பற்றி அவருக்கு எந்தக் கவலையும் இல்லை. கவலைப்படுவது கடவுள்மீது நம்பிக்கை. இல்லாமையைக் காட்டுகிறது என்று பின்னாளில் அவர் ஒருமுறை கூறியதுண்டு. நம்பிக்கை, கொழுந்து விட்டெரியும் நம்பிக்கை- சசி மகராஜிடம் அதிக அளவில் இருந்தது. தான் செய்து கொண்டிருப்பது கடவுடைய பணி, அந்தப் பணியை அவர் காப்பாற்றுவார் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

சுவாமி விவேகானந்தர் மறைந்த பிறகு, 1902 ஜூலை 25 ஆம் நாள் சென்னையிலுள்ள பச்சையப்பா ஹாலில் சென்னை நகரத்தினர் இரங்கற்கூடம் நிகழ்த்தினர். சென்னை நகரத்தில் பிரபலமானவர்களும், சுவாமிஜியின் சீடர்களும், சசி மகராஜும் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து, சுவாமிஜியின் நினைவைப் போற்றுவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது; அவருக்கென்று நினைவாலயம் ஒன்று எழுப்புவதற்காக பணமும் வசூலிக்கப்பட்டது. அதில் சுவாமி விவேகானந்தர் நினைவு நிதி உருவாக்கப்பட்டது. அந்த நிதியில் அரம்பிக்கப்பட்டன. ஸ்ரீ எ.எஸ் பாலசுப்ரமணிய ஐயர் உயர்நீதி மன்ற வக்கீல், அவர் கட்டிடப் பணியை மேற்பார்வையிட்டார். 1909 பிப்ரவரி 10-ல் ராமகிருஷ்ண விவேகானந்த இல்லக் குழுவுக்கு அவர் இவ்வாறு எழுதுகிறார்.

நிதியில் பெரும் பகுதி சுவாமி ராமகிருஷ்ணானந்தரால் வீடு வீடாகச் சென்று திரட்டப்பட்டது. அவரது அமைதியான பணியும், ஆற்றல் மிக்க செல்வாக்குமே ராமகிருஷ்ண விவேகானந்தர் இல்லம் (மடத்தின் ஆரம்ப கால பெயர்) கட்டப்பட்டதற்குக் காரணம் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

1907 மார்ச் இறுதியில் கட்டிடப் பணி தொடங்கியது. அதே ஆண்டு நவம்பர் ஆரம்பத்தில் நிறைவுற்றது. ஸ்ரீராமகிருஷ்ணர் உயிருணர்வுடன் இருக்கிறார் என்பதை சசி மகராஜ் முற்றிலுமாக நம்பினார். ஸ்ரீராமகிருஷ்ணரின் தெய்வீக சான்னித்தியத்தை அவர் எப்போதும் உணர்ந்தார். அவரது செயல்கள் அதையே வெளிப்படுத்தின.

சுவாமி சர்வானந்தர் (பின்னாளில் சசி மகராஜைத் தொடர்ந்து சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் இரண்டாம் தலைவர் ஆனவர்) பிரம்மச்சாரியாக ஆறு மாதகாலம் சசி மகராஜுடன் தங்கினார். சசி மகராஜின் அளப்பரிய பக்தியைக் காட்டும் ஒரு நிகழ்ச்சியை சுவாமி சர்வானந்தர் சொல்லுகிறார். ஒருநாள் இரவு உணவிற்குப் பிறகு சுவாமிகள் கட்டிலில் படுத்திருந்தார். நான் வழக்கம்போல் அவருடைய கால்களைப் பிடித்துவிட்டுக்கொண்டிருந்தேன். பதினொரு மணி ஆகியது. தாங்கொணாத சூடு! திடீரென்று அவர் எழுந்து பூஜையறைக்குச் சென்றார். என்னையும் தொடர்ந்து செல்லுமாறு கூறினார். பூஜையறைக்குள் சென்று, அங்கே கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த குருதேவரின் படத்திற்கு விசிறித் தொடங்கினார். ஹே பிராணநாதா, ஹே பிரபோ என்றெல்லாம் அன்புடன் கூறியவாறே சுமார் ஒரு மணிநேரம் விசிறி சேவை செய்தார். அருகில் ஒரு பீடத்தில் வைக்கப்பட்டிருந்த சுவாமிஜியின் படத்திற்கு விசிறுமாறு என்னிடம் கூறினார். இந்த நிகழ்ச்சி என்னுள் மிகவும் ஆழப் பதிந்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் இருக்கிறார். அந்தக் கட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கிறார், சுவாமிஜி அந்தப் படத்தில் இருக்கிறார். அவர்களுக்கே நான் சேவை செய்துகொண்டிருக்கிறேன் என்ற எண்ணம் என் நெஞ்சில் மாறாமல் பதிந்தது.

பின்னர் அவர் பூஜையறையை விட்டு வெளியில் வந்து வராந்தாவில் சிறிது நேரம் நின்றார். நான் ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து இட்டேன். அவர் அமர்ந்துகொண்டார். நான் அவருக்கு விசிறத் தொடங்கினேன். அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவரது மனம் ஏதோ கண்காணாத உலகங்களில் சஞ்சரிப்பதுபோல் இருந்தது. திடீரென்று அவர் என் பக்கம் திரும்பி இதோ பார், என் மனம் உயர் தளங்களில் சஞ்சரிக்கிறது. இப்போது நான் அமர்ந்தால் சமாதியில் உடனடியாக ஆழ்ந்து விடுவேன் என்று கூறினார். அந்தச் சூழ்நிலையின் நுண்மையையும் ஆழத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நான் அமைதியாக நின்றேன். காலை இரண்டு மணி ஆகியிருக்கலாம். அப்போது அவர் எழுந்து இனி நாம் சற்று ஓய்வுகொள்ளலாம் என்று கூறினார். சுவாமிகளின் உன்னதமான அந்த நிலை அன்றிரவு எனக்கு ஒரு ஆசீர்வாதமாக, மறக்க முடியாததாக அமைந்தது.

மயிலாப்பூரில் மடம் கட்டி இரண்டு வருடத்திற்குள்ளாகவே கட்டிடத்தின் பல இடங்களில் விரிசல் கண்டு விட்டது. மழைக் காலத்தில் விரிசல்கள் வழியாக மழைநீர் இறங்கும் அளவுக்கு விரிசல்கள் பெரிதாகிவிட்டன. பூஜையறையிலும் இதே நிலைதான். மழை பெய்யும் போதெல்லாம் சசி மகராஜ் பூஜையறையினுள் சென்று பார்ப்பார். ஒருநாள் இரவு மழைநீரால் குருதேவரின் படம் நனையத் தொடங்கியது. குடையுடன் ஓடிச் சென்றார் சசிமகராஜ். குருதேவரின்மீது நீர்த்துளி விழாதவாறு குடையைப் பிடித்தவண்ணம் இரவு முழுவதும் நின்றுகொண்டே இருந்தார். படத்தை எடுத்து மழைத்துளி சொட்டாத இடத்திற்கு அப்புறப்படுத்தி இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்வது அகால வேளையில் குருதேவரின் உறக்கத்தைக் கலைப்பதாகும்! அதைச் செய்யவில்லை சசி மகராஜ்.

சென்னை மடத்தில் சசி மகராஜிற்கு உதவியாக இருந்த சுவாமி தியானானந்தர் சசி மகராஜின் செயல்களையும் நடைமுறைகளையும் பார்த்தால் அவர் உயிருள்ள ஸ்ரீராமகிருஷ்ணருடன் பழகுவதுபோல் தோன்றும் என்று கூறுவார்.

சிறிது காலத்திற்குப் பிறகு கட்டு மானத்தில் தரக்குறைவினால் மடத்துக் கட்டிடம் வசிப்பதற்குத் தகுதியற்றதாகிவிட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அருகில் உள்ள மனையில் மடத்திற்குப் புதிய கட்டிடம் எழுப்பப்பட்டது. ராமகிருஷ்ண இயக்கத்தின் முதல் தலைவரான சுவாமி பிரம்மானந்தர் 1916 இல் அதற்கு அடிக்கல் நாட்டினார். பிறகு 1917 இல் அதைத் திறந்தும் வைத்தார். அப்போது சசி மகராஜ் பூத உடலோடு இருக்கவில்லை.

சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பணிகளை ஓர் உறுதியான அடித்தளத்தில் அமைத்து, அவற்றை விரிவுபடுத்துவதற்காக சசி மகராஜ் தளராத சுறுசுறுப்போடும் உறுதியோடும் பாடுபட்டார்.

சுவாமி ராமகிருஷ்ணானந்தருக்கு மிகவும் இளகிய மனது. ஏழை எளியவர்களையும் அனாதைகளையும் கண்டால் அவருக்கு இரக்கம் பொங்கும், மைசூரிலிருந்து ஒரு சிறுவன் வந்தான். அவனுடைய தாய் தந்தையர் பிளேக் நோயால் இந்திருந்தனர். இச்சிறுவனை மடத்திற்கு அழைத்துச் சென்று அவர் உணவளித்தார். ஆனால் மடமே பணக் கஷ்டத்தில் இருந்தது. மடத்தின் கண்டிப்பான நடைமுறை விதிகள் அந்தச் சிறுவனின் கல்வி உதவிக்குச் சாதகமாக இல்லை. எனவே சசி மகராஜ் தமது பணியில் மிகவும் உதவுபவரான ராமுவை (ஸ்ரீராமசுவாமி ஐயங்கார்) அழைத்து அந்தச் சிறுவனுக்கு உதவுமாறு கூறினார். ராமு தமது நண்பர்களின் வீட்டில் பேசி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் ராமு தெருவோரத்தில் நான்கு ஆந்திரச் சிறுவர்கள் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர்கள் சென்னையில் படிக்கலாம் என்ற எண்ணத்தில் குண்டூரிலிருந்து வந்தவர்கள். ஆனால் அவர்கள் நினைத்ததுபோல் எதுவும் சென்னையில் நடக்கவில்லை. மனம் தளர்ந்து அமர்ந்திருந்த அவர்களைக் கண்வு ராமுவின் மனம் இளகியது. அவர்களையும் சேர்த்து ஓர் மாணவர் இல்லம் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டார் அவர். சசி மகராஜின் ஆசிகளாலும் ராமுவின் தளராத முயற்சியினாலும் ஓர் இலவச மாணவர் இல்லம் (இதுவே தற்போது ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் என்ற பெயரில் மயிலாப்பூரில் இயங்கி வருகிறது) தொடங்கப்பட்டது. மயிலாப்பூரில் கேசவப் பெருமாள் தெற்கு மாட வீதியில் இருந்த டாக்டர் எம்.சி. நஞ்சுண்டராவின் ஒரு சிறிய வீட்டில் அந்த இல்லம் தொடங்கப்பட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு அந்த இல்லம் வேறு இடத்திற்கு மாறியது. மாதம் மூன்று ரூபாய் வாடகையில் ராமு ஒரு வீடு அமர்த்தினார்; மாதம் இன்னொரு மூன்று ரூபாய் சம்பளத்தில் சமையல்காரருக்கும் ஏற்பாடாயிற்று.

பக்தி மிகுந்த அவருடைய தாயார் அந்த ஏழை மாணவர்களுக்குச் சமைப்பதற்குத் தேவையான பாத்திரங்களைக் கொடுத்தார். அன்புள்ளம் கொண்ட பல பெண்கள் மளிகை சாமான்களைக் கொடுத்தனர்.

இல்லத்திற்காக சசி மகராஜ் வீடுவீடாகப் பணம் கேட்கத் தொடங்கினார். அவருடன் ராமுவும் சேர்ந்துகொண்டு நன்கொடை வசூலித்தார். ராமு சிறிதும் சுயநலம் இல்லாமல் பணியாற்றினார். மயிலாப்பூரிலும், திருவல்லிக்கேணியிலும் வசித்த பெரிய மனிதர்களைச் சந்தித்து நன்கொடை பெற்றார். ஆன்மீகத் துறையில் மட்டும் அல்லாமல், சாதாரண மக்களுடன் பழகும் முறையிலும் சசி மகராஜ்தான் அவருக்கு வழிகாட்டி நன்கொடைக்காகப் போகும்போது, யாராவது அநாகரிகமாக நடந்துகொண்டாலும் பொறுமையாக இருக்க வேண்டும்; அத்தகையோரிடமிருந்தும் புன்னகையோடு விடைபெற்று வர வேண்டும் என்று அவர் ராமுவுக்கு எடுத்துச் சொல்வார்.

நன்கொடைகள் சற்று அதிகமாக வந்ததும் மாணவர் இல்லம் சற்றே பெரியதோர் இடத்திற்கு மாற்ப்பட்டது. நாகப்பட்டினத்தில் மாவட்ட முன்சீபாக இருந்த ஸ்ரீ எஸ்.ஜி ஸ்ரீனிவாசாச்சாரியார் தமது சொத்தான 15 கிரவுண்ட் மனையை 1916-இல் நன்கொடையாக வழங்கியிருந்தார். மயிலாப்பூர் சல்லிவன் தோட்டச் சாலையில் சோலைகள் சூழ்ந்துள்ள இந்த மனையிடத்தில்தான் தற்போது இந்த இல்லம் அமைந்துள்ளது. பணம், பொருள், சிறந்த பொறியாளர்களின் உதவி ஆகியவை நாலா பக்கங்களிலிருந்தும் வந்தன. இல்லத்திற்கு ஒரு நிலையான இடம் கிடைத்தது. 1921 மே 10 அட்சய திருதியை தினத்தில் ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் முதல் தலைவரான சுவாமி பிரம்மானந்தரால் மாணவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. இதனை ஏழைகளின் மாளிகை என்று அழைத்தார் அவர்.

அன்று முதல் இந்த மாணவர் இல்லம் மிகவும் கவுரவமானதோர் அமைப்பாக வளர்ந்து வருகிறது. பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும், கைவிடப்பட்ட சிறுவர்களுக்கும் இது உண்மையிலேயே மாளிகையாகத் திகழ்கிறது. ராமுவுக்கு ராமானுஜாச்சாரி என்று ஓர் உறவினர். அவரும் ராமுவுடன் இணைந்து வேலை செய்தார். இவரை ராமானுஜன் என்று அழைப்பார் சசி மகராஜ். இவர்கள் இருவரும் சசி மகராஜுக்கு நேருக்கமான அன்புத் தொண்டர்களாக விளங்கினர்.

சென்னை ஜார்ஜ் டவுனில் ஆரம்பப் பள்ளியின் ஆரம்பம்

1906-இல் சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் தூண்டுதலால் வடசென்னை ஜார்ஜ் டவுனில் வசிக்கும் அன்பர்கள் சிலர் பெண்களுக்கான ஓர் ஆரம்பப் பள்ளியைத் தொடங்கினர். அதற்கு தேசியப் பெண்கள் பள்ளி என்று பெயர். பள்ளியைச் சீராக நடத்த நிதி தேவைப்பட்டது. அதற்காக சசி மகராஜ் கையில் ஒரு பெரிய மர உண்டியலை ஏந்தியபடி சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து ஜார்ஜ் டவுன் வரை தெருக்கள் வழியாக நடந்து நிதி திரட்டினார். அவ்வாறு கிடைத்த தொகையை அவர் உள்ளூர்த் தபால் நிலையத்தில் இருந்த பள்ளியின் கணக்கில் சேர்த்து விடுவார், அவர் பயன்படுத்திய உண்டியல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

ஜார்ஜ் டவுன் கிருஷ்ணப்ப நாயக்கன் அக்ரகாரத்தில் இருந்த கன்னிகா பரமேஸ்வரி கோயில் சத்திரத்தில் இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மூன்று மாணவிகள் இருந்தனர். 1921 இல் பள்ளி நிர்வாகத்தை ஸ்ரீராமகிருஷ்ண மடம் மேற்கொண்டது. சென்னை, தங்கசாலையில் பேஸின் பிரிட்ஜ் சாலையில் இப்போது உள்ள சொந்தக் கட்டிடத்திற்குப் பள்ளி 1981-இல் இடம் மாறியது. இப்போது அந்தப் பள்ளிக்கு ஸ்ரீராமகிருஷ்ண மடம் தேசியப் பள்ளி என்று பெயர்.

பெங்களூரில் ராமகிருஷ்ண மடம்

அல்சூர் வேதாந்தச் சங்கத்தின் அழைப்பை ஏற்று, சசி மகராஜ் 1904 ஆகஸ்ட்டில் பெங்களூருக்குச் சென்றார். அங்கு மூன்று சொற்பொழிவுகள் செய்தார். உடன் சென்ற சுவாமி ஆத்மானந்தரை, அங்கே ஒரு நிரந்தர மையத்தை உருவாக்குவதற்காக விட்டு வந்தார்.

சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் தலைமைப் பொறுப்பில் ஆத்மானந்தர், விமலானந்தர். போதானந்தர் ஆகிய சுவாமிகள் 1906 வரையில் பணியைத் தொடர்ந்து செய்தனர். 1906 இல் சுவாமி அபேதானந்தருடன் மைசூருக்கும் பங்களூருக்கும் சசி மகராஜ் சென்றார். ஆகஸ்ட் 7 முதல் 12 தேதி வரை அவர்கள் மைசூரில் தங்கினர். சுவாமி அபேதானந்தர் இரண்டு பொதுக்கூட்டங்களில் பேசினார். மைசூர் மகராஜாவுடன் ஒரு சந்திப்பும் இருந்தது.

அரண்மனைக்கு இரு துறவிகளும் அழைக்கப்பட்டனர். சம்ஸ்கிருத பண்டிதர்கள், அரசின் உயர் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய பேரவைக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. துறவிகளுக்கு மதிப்புத் தரும் வகையில் மகாராஜா ஸ்ரீகிருஷ்ண ராஜ உடையார் தமது அரச சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து கீழே கம்பளத்தின் மேல் துறவிகளோடு உட்கார்ந்தார். அந்தப் பேரவை இரண்டரை மணி நேரம் நடந்தது.

மைசூர் திவான் சர் வி.பி மாதவராவ் பெங்களூர் மடத்திற்கு இரண்டு ஏக்கர் இடத்தை நன்கொடையாக அளித்திருந்தார். ஆகஸ்ட் 20 இல் சசி மகராஜ் திட்டப்படி சுவாமி அபேதானந்தர் பெங்களூர் மடத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னாளில் சில காரணங்களுக்காக அந்த அடிக்கல் அதிக வசதியான ஓர் இடத்திற்கு மாற்றப்பட்டது.

சென்னை மடத்திற்குச் செய்ததைப் போலவே சசி மகராஜ் பெங்களூரின் புதிய மடத்திற்கு நிதி திரட்டுவதிலும் முக்கியப் பங்கு ஏற்றார். நன்கொடை சேகரிப்பதற்காக அவர் சகோதரி தேவமாதாவுடன் வீடு வீடாகப் போனார். சகோதரி தேவமாதா ஓர் அமெரிக்கப் பெண்மணி. 1899 இல் நியூயார்க்கில் அவர் சுவாமி விவேகானந்தரைச் சந்தித்தார். அவர் இந்தியாவுக்கு வந்து சில ஆண்டுகளைச் சென்னையிலும் கழித்தார். இந்திய மடத்தில் சில நாட்கள் என்ற தமது நூலில் அந்த அனுபவங்களை எழுதியுள்ளார். நன்கொடைக்காகச் செல்லும் நேரங்களில் வரும் எதிர்ப்புக்களை சுவாமி ராமகிருஷ்ணானந்தர் எப்படி எதிர்கொண்டார் என்ற அந்த நூலில் அவர் எழுதுகிறார்.

மகாராஜாவின் பணியில் உள்ள ஓர் அதிகாரியின் வீட்டிற்கு சசி மகராஜும் நானும் சென்றோம். சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்த பிறகுதான் அதிகாரி வெளியில் வந்தார். நான் அவரிடம் சுருக்கமாக மடத்து நிர்மாணத்திட்டத்தை எடுத்துக் கூறி, பண உதவி கோரினேன். நான் பேச்சை முடிப்பதற்குள் அந்த அதிகாரி குறுக்கிட்டு, ஆகா, இந்த ஸ்ரீராமகிருஷ்ணரை ஏன்தான் இவர்கள் இவ்வளவு பிரமாதப் படுத்துகிறார்களோ தெரியவில்லை! என்று வெடுக்கெனக் கூறினார். நான் எதுவும் பேசவில்லை. ஆனால் சுவாமிகள் புன்னகையுடன், நான் உங்களுக்கு அவரைப் பற்றிச் சொல்கிறேன், நான் அவரது தொண்டன் என்று கூறிவிட்டு, ஸ்ரீகுருதேவரைப்பற்றி உணர்ச்சிமயமாகப் பேசத் தொடங்கினார். அந்த அதிகாரி அரை மணி நேரம் அப்படியே அமர்ந்திருந்து சுவாமிகள் கூறிய அனைத்தையும் கேட்டார். அதன்பின் கணிசமான ஒரு தொகையை சுவாமிகளிடம் கொடுத்தார்.

1908 முடிவில் ஆசிரமக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தன. 1909 ஜனவரி 20 இல் சுவாமி பிரம்மானந்தரால் ஆசிரமம் வைக்கப்பெற்றது. அந்த விழாவில் விசேஷ பூஜையும் ஹோமமும் முக்கிய அங்கம் வகித்தன. பல சொற்பொழிவாளர்கள் உரை ஆற்றினர். சசி மகராஜும் பேசினார். பெங்களூர் மக்களின் சார்பில் மைசூர் திவான் வரவேற்புப் பத்திரம் வழங்கினார். சுவாமி பிரம்மானந்தர் ஒரு சிறிய சொற்பொழிவு செய்தார்(சுவாமி பிரம்மானந்தர் செய்த பொதுச் சொற்பொழிவு இது மட்டும்தான்) விழாவுக்காக மிகப் பெரிய பந்தல் போடப்பட்டது. 1200க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். விழாவிற்காக மைசூர் மன்னர் கூடாரங்களும் அலங்காரங்களும் அளித்திருந்தார். அலங்காரம் பிரமாதமாக இருந்தது.

விழா நிறைவுற்றதும், புதிய கட்டிடத்தின் சாவிகளை திவான் சுவாமி பிரம்மானந்தரிடம் கொடுத்தார், பிரம்மானந்தர் கதவைத் திறந்து, முதலாவதாகக் கட்டிடத்தின் உள்ளே போனார். மற்றவர்கள் அனைவரும் கட்டிடத்தை வலம் வந்தனர். மைய அறையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஸ்ரீராமகிருஷ்ணர் பூஜையறையில் ஒன்று கூடினர், சுவாமி ராமகிருஷ்ணானந்தர் திருவிளக்கு ஏற்றினார். மலர் தூவி வழிபட்டார். வேத மந்திரங்களை ஓதினார்,. உள்ளூர் அர்ச்சகர்கள் வேதம் ஓதினர். ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும் அவர்கள் பீடத்தில் ரோஜா இதழ்களைச் சொரிந்தனர். ரோஜா இதழ்கள் குவிந்து ஸ்ரீராமகிருஷ்ணரின் படத்தையே மறைப்பதுபோல் ஆகிவிட்டது.

சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் வாழ்க்கையும் ஆளுமையும் மேலும் சில பார்வைகள்

பெங்களூர் ராமகிருஷ்ண ஆசிரமத்திற்கு அருகில் கவி சங்காதரேஸ்வரர் கோயில் உள்ளது. சுவாமி ராமகிருஷ்ணானந்தர் ஒருமுறை சகோதரி தேவமாதாவை அந்தக் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அந்த அனுபவத்தைப் பற்றி அவர் நினைவுகூர்கிறார்.

பெங்களூரில் பழமையான புனிதமான குகைக் கோயில் ஒன்றிற்கு ஒருமுறை சென்றேன். அந்தக் கோயிலின் நிலங்களும், வனப்பு மிக்க ஏரியும் நமது தற்போதைய மடத்திற்குப் பக்கத்தில் உள்ளன. ஆனால் அப்போது நமது மடம் நிறுவப்படவில்லை. ஒரு மைலுக்கும் சற்று அதிகத் தொலைவில் இருந்த ஒரு வீட்டில் நாங்கள் தற்காலிகமாக வசித்தோம். சுவாமி ராமகிருஷ்ணானந்தர் என்னை அழைத்துப்போனார். நாங்கள் விந்தினராகத் தங்கியிருந்த வீட்டு எஜமானரும் உடன் வந்தார். நாங்கள் நடந்தே போனோம். அது மாலை வேளை, கோயில் அமைதியாக இருந்தது. இருள் கவிய ஆரம்பித்திருந்தது. முன்னால் இருந்த நந்தவனத்தில் பக்தர்கள் காத்திருந்தனர். ஆரதி தொடங்கவில்லை; கதவு மூடப்பட்டிருந்தது.

கோயிலின் இருண்ட முன் மண்டபத்தில் உட்கார்ந்தோம். ஆரதி செய்யப் பூசாரி வரவில்லை, அவரது மகன் வந்தார். அவர் என்னைப்பார்த்ததும் நான் உள்ளே செல்வதற்கு மறுப்பு தெரிவித்தார். ஆனால் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் அதிகாரத்தோடு கைகளை வீசி, இறைவனின் குழந்தை இறைவனிடம் போக வேண்டும். வா, சகோதரி என்று சொல்லி என்னை உள்ளே அழைத்துச் சென்றார். நாங்கள் உள்ளே போனோம். தீபாராதனைக்கு உதவினோம். பிரதட்சிணம் செய்தோம். அந்தக் குகையின் கூரை தாழ்வாக இருந்தது. எனவே, ஆங்காங்கே குனிந்து சென்று சன்னிதியை மூன்று முறை சுற்றினோம். இறைவனிடம் ஆசி பெற வந்த ஒரு கல்யாணக் கூட்டத்தைக் கவனித்தோம். பிறகு வீடு திரும்பினோம். கருநீல வானத்தில் நட்சத்திரங்கள் மின்ன அமைதியாக வீட்டிற்கு நடந்தோம்.

சசி மகராஜ் அபாரமான நம்பிக்கை உடையவர். திருவல்லிக்கேணியில் இருந்தபோது, பலமுறை பார்த்தசாரதி கோயிலுக்குப் போய் தரிசனம் செய்துள்ளார். ஸ்ரீகிருஷ்ணரின் ஒரு பெயர் பார்த்தசாரதி என்றால் அர்ஜுனனின் (பார்த்தன்) தேரோட்டி(சாரதி) என்று பொருள்.

பார்த்தசாரதி வெறும் சிலை அல்ல; அங்கே கருவறையில் மகான்கள் பலர் அவரது நேரடி தரிசனம் பெற்றிருக்கின்றனர். என்று சசி மகராஜ் சொல்வது வழக்கம்.

மயிலாப்பூரில் உள்ள புதிய மடத்திற்கு வந்த பிறகு சசி மகராஜ் அருகிலுள்ள கபாலீசுவரர் கோயிலுக்கு அடிக்கடி போவார். அன்னை ஸ்ரீசாரதாதேவி சுவாமி பிரம்மானந்தர், சுவாமி பிரேமானந்தர் ஆகியோரையும், மற்ற சீடர்களையும் பக்தர்களையும் அவர் அங்கே அழைத்துச் செல்வார். கோயிலின் வருடாந்திர தேர்த் திருவிழாவின் போது அவர் பக்தர் கூட்டத்தோடு சேர்ந்து தாமும் தேரிழுப்பார்.

இதுவரையில் நான் திருவல்லிக்கேணியில் இருந்தேன். பார்த்தசாரதி என்னைப் பல சோதனைகளுக்கு ஆளாக்கினார். இப்போது கபாலீசுவரர் என்னைத் தம்மிடம் இழுத்துக்கொண்டுள்ளார். கபாலீசுவரர் என்றால் துறவியர் தலைவர் என்பது பொருள். எனவே இனிமேல் அவர் என்னை நிச்சயமாகப் பாதுகாப்பார் என்று சசி மகராஜ் நகைச்சுவையோடு சொல்வார்.

சுவாமி ராமகிருஷ்ணானந்தர் மிகவும் பரந்த மனப்பான்மை உடையவர். தமது சமய, ஆன்மீக நம்பிக்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அதேவேளையில் மற்ற மதங்களையும் வரவேற்றனர். இதுபற்றிய நிகழ்ச்சி ஒன்றை ராமகிருஷ்ணானந்தரின் பக்தரான மாணிக்க சுவாமி முதலியாரின் நினைவுக்குறிப்புகளில் காண்போம்.

சசி மகராஜ் வைதீகமானவர். ஆசாரசீலர்; அதேவேளையில் அவரது இதயம் பரந்தது. ஒரு முறை சைதாப்பேட்டையில் அவரது மாணவர் ஒருவரின் வீட்டில் இரவு உணவிற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார், சுவாமி பரமானந்தரும் நானும் உடன் சென்றோம். உணவிற்குப் பிறகு அருகிலிருந்த செயின்ட் தாமஸ் மலையின் (பரங்கிமலை) உச்சியிலிருந்த சர்ச்சுக்குச் சென்றோம். சசி மகராஜ் அங்கே செல்வதுபற்றி ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே அங்குள்ள தலைமை பாதிரியார் கதவுகளைத் திறந்து எங்களை உள்ளே அனுப்பினார். சசி மகராஜ் நேராக பீடத்தின் அருகே சென்று முழந்தாளிட்டு கிறிஸ்தவ முறைப்படி வணங்கி பிரார்த்தனை செய்தார்; எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சுவாமி ராமகிருஷ்ணானந்தர் ஆற்றிய இன்னொரு பணி பற்றிக் காண்போம்: அவருடைய வழிகாட்டுதலின்படி சென்னையைச் சுற்றி பல இடங்களிலும் விவேகானந்தர் சங்கங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் வாணியம்பாடி, அரசம்பட்டி, கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற இடங்கள் குறிப்பிடத்தக்கவை.

சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் சொற்பொழிவுகளும் வகுப்புகளும் நல்ல வரவேற்பு பெற்றன. பின்னாளில் அவரது மாணவர்களில் சிலர் இவற்றை நூல் வடிவில் வெளியிட்டனர்.

1898 ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியின்போது திருவல்லிக்கேணி இலக்கியச் சங்கத்தில் அவர் ஸ்ரீகிருஷ்ணர் என்னும் குரு என்ற தலைப்பில் உரையாற்றினார். 1899 இல் அங்கு அதே விழாவில் மன்னர்களை உருவாக்கும் ஸ்ரீகிருஷ்ணர் என்பதுபற்றி பேசினார். இந்த இரண்டையும் ஒன்றுசேர்த்து மாணவர் ஒருவர் 1909 இல் ஒரு நூலாக வெளியிட்டார்

1908 நவம்பர் 20 ஆம் நாள் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் கே. லட்சுமி நாராயண செட்டியார், டி. சடகோபன் போன்றோருக்கு எழுதிய கடிதம். இவர்கள் தாராபுரத்திலுள்ள விவேகானந்த சங்கத்தின் பணியாளர்கள் ஆவர். சென்னையில் சுவாமி விவேகானந்தரைச் சந்தித்த ஒருவரால் 1905 இல் கோவை தாராபுரத்தில் தொடங்கப்பட்டது இந்தச் சங்கம்.

மேலும் விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)