Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்

சகோதர சீடர்கள் மற்றும் அன்னையுடன்!மார்ச் 30,2013

சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் அன்பும் ஆழ்ந்த ஆன்மீகப் பண்பும் பல சகோதரச் சீடர்களையும் ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர்களையும் சென்னைக்கு வருமாறு தூண்டின.

1897-இல் ஸ்ரீராமகிருஷ்ணரின் துறவிச் சீடர்களுள் ஒருவரான சுவாமி சுபோதானந்தர் சென்னைக்கு வந்தார். சசி மகராஜ் அவரை அன்போடு வரவேற்றார். ஜார்ஜ் டவுனில் உள்ள இந்து இளைஞர் சங்கத்தில் அவரது சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்தார்; அங்கே அவர் சன்னியாசமும் பிரம்மசரியமும் என்பது பற்றி பேசினார்.

சென்னைக்கு விஜயம் செய்த மற்றொரு சகோதரச் சீடர் சுவாமி திரிகுணாதீதானந்தர் 1902-நவம்பரில் அமெரிக்கா செல்லும் வழியில் அவர் சென்னையில் தங்கினார். அந்தக் காலத்தில் சென்னை மடத்தில் அடிப்படை வசதிகள் கூடப் போதிய அளவு இருக்கவில்லை. இருப்பினும் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் சகோதரச் சீடர்களை அன்புடன் வரவேற்று, இயன்ற வரையில் அவர்களது தேவைகளைக் கவனித்துக் கொண்டார்,

அமெரிக்காவில் வேதாந்தப் பணிகள் செய்து வந்த சுவாமி அபேதானந்தர் 1906-இல் திரும்பி வரும்போது, பரமானந்தருடன் கொழும்பிற்கே சென்று அவரை வரவேற்று வந்தார். சுவாமி ராமகிருஷ்ணானந்தர் இலங்கையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சுவாமி அபேதானந்தர் உரையாற்றினார். அப்போது சுவாமி ராமகிருஷ்ணானந்தரும் உடன் சென்றார். கண்டி, அனுராதபுரம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை அவர்கள் சேர்ந்து பார்வையிட்டனர். பிறகு தூத்துக்குடி வழியாக சென்னை வந்து சேர்ந்தார்.

சுவாமி பிரேமானந்தர் 1906-இல் தன் தாயார் மற்றும் சகோதரியுடன் தென்னிந்தியாவிற்குத் தீர்த்த யாத்திரையாக வந்தார். சுவாமி ராமகிருஷ்ணானந்தர் அவர்களையும் வரவேற்று தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். தாமும் அவர்களோடு கூடவே பயணித்தார்.

ஜனவரி 1903-இல் சுவாமி சதானந்தர், சகோதரி நிவேதிதை, பிரம்மசாரி அமூல்யர் (பின்னாளில் ராமகிருஷ்ண இயக்கத்ததின் ஏழாவது தலைவரான சுவாமி சங்கரானந்தர்) ஆகியோர் சென்னைக்கு வந்தனர். அவர்கள் சசி மகராஜின் பணிகளால் பெரிதும் கவரப்பட்டனர். சசி மகராஜின் ஆழ்ந்த பக்தி சுவாமி சங்கரானந்தரை மிகவும் ஈர்த்தது. அவர் தமது நினைவுக்குறிப்பில் கூறுகிறார்.

கோடைக்கால நாட்களில் ஒருநாள் காலை வகுப்பு நடத்திவிட்டு, ஜட்காவில் ஆடியும் குலுங்கியும் அவஸ்தைப் பட்டுக்கொண்டு, சுமார் பத்தரை மணிக்கு மடத்திற்கு வந்துசேர்ந்தார் சசி மகராஜ், தமது அறைக்குள் நுழைந்து, சட்டை, மேல்துணி இவற்றையெல்லாம் கழற்றிவிட்டுக் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு தமக்குத் தாமே விசிறிக் கொள்ளலானார். வெப்ப மிகுதியாலும் சவாரிக் களைப்பினாலும் வியர்வை ஒழுகிய அவருக்குப் பிரம்மசாரி ஒருவரும் பின்னால் நின்று விசிறினார். ஓரிரு நிமிடங்ள் ஆன பிறகு அவர்கள் தம் கையிலிருந்து விசிறியைக் கீழே போட்டுவிட்டு, தமக்கு முன்னால் ஏதோ உருவத்தைக் காண்பவர் போன்று, அந்த உருவத்திடம் கைமுஷ்டியைக் காட்டியவாறு, உனக்காகத் தான் நான் இவ்வளவு சிரமப்படுகிறேன். நான் என்ன பாடுபடுகிறேன் என்பதை நீயே பார் என்று குறைபட்டுக் கொண்டார் மறுகணமே சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி, கைகூப்பியவாறு, இல்லை இல்லை, சகோதரா, என்னை மன்னித்துவிடு, நீ செய்திருப்பது முற்றிலும் சரி என்று கூறிவிட்டு ஒளிவீசும் முகத்துடன் எழுந்து அமைதியாக அமர்ந்தார். அவர் கோபம் காட்டியதும் மன்னிப்புக் கேட்டதும் சுவாமிஜியிடம்தான்! அவர்தானே அவரைச் சென்னைக்கு அனுப்பி, ஸ்ரீராமகிருஷ்ணரின் செய்தியை வாழ்ந்து காட்டுமாறு கூறினார்!

1909-ஏப்ரலில் கல்கத்தாவிலிருந்து நிர்மல் (பின்னாளில் சுவாமி மாதவானந்தர், ராமகிருஷ்ண இயக்கத்தின் ஒன்பதாவது தலைவர்) என்னும் இளைஞர் சென்னை மடத்திற்கு வந்தார். சசி மகராஜின் மகிமைபற்றி அவர் நிறையக் கேள்விப் பட்டிருந்தார். அவர் சசி மகராஜுடன் எட்டு நாட்கள் தங்கியிருந்தார். அவருக்கு அவை மறக்க முடியாத நாட்கள். அவர் எழுதுகிறார்.

சுவாமி ராமகிருஷ்ணானந்தர் துறவின் உருவாகத் திகழ்ந்தார். புலனடக்கம் இல்லாத மனிதர்களை அவர் ஆமோதித்ததில்லை. ஒருமுறை ஒரு குறிப்பிட்ட அன்பரைப் பற்றிக் கூறி அவர்களுக்கும் மனைவி மீதுள்ள பற்றை விட முடியவில்லை. அதற்கேற்பவே தங்கள் கடவுளர்க்கும் மூன்று மனைவிகளைக் கற்பனை செய்துகொள்கிறார்கள் என்று கூறினார்.

பொதுவாக அவர் அனபர்களுடன் கனிவாக, புரிந்துகொள்பவாரக, நேசம் மிக்கவராகப் பழகினார். ஒருமுறை ஒரு வகுப்பை நிறைவு செய்துவிட்டு திரும்பி வந்தபோது வண்டிக்காரன் அளவுக்கு அதிகமான வாடகை கேட்டபோது அவனைச் சற்றுக் கடிந்து கூறியதை ஒருமுறை மட்டுமே கண்டேன். கடிந்து கூறினாலும் அவன் கேட்ட தொகையைக் கொடுக்குமாறு உடனே கூறிவிட்டார். மென்மையாகப் புன்னகைத்தபடியே, அவனிடம் பேசுவது காலத்தை வீணடிப்பதாகும் என்று கூறினார் அவர்.

சுவாமிகள் ஆரம்பித்த மாணவர் இல்லத்தின் மாணவர்கள்தான் பொதுவாக மடத்திற்கான காய்கறிகள் போன்றவற்றை வாங்கி வருவார்கள். அவர்களுக்கும் அவர் அறிவுரை கூறுவார். எப்படி காய்கறிகளை நறுக்குவது என்பதைக் கற்பிப்பார். அவருக்கு மிகவும் பிடித்த வேலை ஸ்ரீராமகிருஷ்ண பூஜை. ஸ்ரீராமகிருஷ்ணர் பூஜையறையில் உயிருணர்வுடன் திகழ்வதை அவர் உணர்ந்தார். அவர் பூஜை செய்யும்போது அவருடைய மனம், உடல் அனைத்தும் அந்த பூஜையில் ஈடுபட்டிருப்பதை ஒருவர் உணர முடியும். பூஜையின் சிறுசிறு கிரியைகளையும் விடாமல் செய்வார். எவ்வளவு நேரம் ஆனாலும் அவர் கிரியைகளை விடுவதில்லை. அவரது பூஜை ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

ஓய்வு நேரங்களில் அவர் உணர்ச்சிபூர்வமான குரலில் ஸ்ரீகுருமகராஜ் அல்லது அது போன்ற மந்திரங்களை உச்சரித்தபடியே கூடத்தில் மேலும்கீழுமாக நடப்பார். பொதுவாக கம்பீரமாக இருந்தாலும் எளிதில் ஒரு சிறுவனைப்போல் சிரித்து மகிழ்வார். அவரது உடை மிகவும் எளிமையாக இருக்கும். அவரைப்பற்றிய ஒவ்வொன்றும் அவர் ஒரு மகான் என்பதைப் பறைசாற்றி நிற்கும்.

அன்னை மற்றும் சுவாமி பிரம்மானந்தரின் புனிதப் பாதம் பட்டால், தென்னிந்தியா முழுவதுமே புனிதம் பெறும் என்று சுவாமி ராமகிருஷ்ணானந்தர் உறுதியாக நம்பினார். எனவே பணப் பற்றாக்குறை இருந்தபோதிலும், அவர்களுடைய விஜயத்திற்காக மிகப் பெரிய அளவில் ஏற்பாடுகளைச் செய்தார்.

சுவாமி பிரம்மானந்தர் 1908-இல் சிறிது காலம் புரியில் தங்கியிருந்தார். அவரைச் சென்னைக்கு அழைத்து வருவதற்காக சுவாமி ராமகிருஷ்ணானந்தர் புரிக்குப் போனார். புறப்படு முன்னால் அவர் சகோதரி தேவமாதாவிடம் கூறினார். சுவாமி பிரம்மானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் சொந்தப் பிள்ளை நீ அவரைப் பார்க்கும்போது, ஸ்ரீராமகிருஷ்ணர் எப்படி இருந்தார் என்பதை ஓரளவிற்குப் புரிந்துகொள்ளலாம். சுவாமி பிரம்மானந்தரிடம், நான் என்னும் உணர்வு முற்றிலுமாக அழிந்துவிட்டது. அவர் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அது தெய்வீகமானதே

சுவாமி ராமகிருஷ்ணானந்தர் புரியில் இருந்தபோது ஜகன்னாதர் கோயிலுக்குச் சென்றார். தரிசனத்திற்குப் பிறகு அவர் உடன் வந்திருந்த பரம்மசாரியைப் பார்த்து, தரிசனத்திற்குப் பிறகு பிரசாதத்தை விலை கொடுத்து வாங்கு. பிறகு மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் ஜகன்னாதரின் ÷க்ஷத்திரத்தில் ஜாதி மத வேற்றுமையின்றி எல்லோரும் ஒன்றுகூடி உட்கார்ந்து பிரசாதத்தை உண்ணும் வழக்கம் இருக்கிறது. சிலர் தங்கள் கையாலேயே மற்றவர்களுக்கு ஊட்டி விடுவார்கள் என்று கூறினார். பிறகு சுவாமி ராமகிருஷ்ணானந்தர் பிரசாதப் பாத்திரத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, தாமும் சிறிது உண்டார்.

சுவாமி பிரம்மானந்தரும் சுவாமி ராமகிருஷ்ணானந்தரும் 1908 இறுதியில் சென்னைக்கு வந்தனர். சகோதரி தேவமாதா எழுதுகிறார்: அவர்கள் வருமுன்பு மடம் முழுவதையும் பெருக்கி, தூசிதட்சிச் சுத்தம் செய்தனர். மடம் பளபளப்பாகத் திகழ்ந்தது. சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் அறை புதுப்பிக்கப்பட்டது அவருடைய உபயோகத்திற்காகத்தான் நாங்கள் இதைச் செய்தோம். ஆனால் அந்த அறை துப்புரவாகத் தோற்றமளிப்பதைப் பார்த்ததும் அவர் மிகவும் நன்றாக உள்ளது. இதை மூடி வைத்து விட்டு பிரம்மானந்தர் தங்குவதற்காக வைத்துக் கொள்வோம். நான் அந்த அடுத்த அறையைப் பயன்படுத்துவேன் என்று கூறிவிட்டார்.

சென்னையில் சில நாட்கள் தங்கியபிறகு, சுவாமி பிரம்மானந்தர் சுவாமி ராமகிருஷ்ணானந்தருடன் ராமேசுவரம் முதலான இடங்களுக்குத் தீர்த்த யாத்திரை சென்றார். முதலில் அவர்கள் ராமேசுவரத்தை அடைந்தனர். மூன்று நாட்களுக்கு ராமநாதபுரம் மன்னரின் விருந்தினராகத் தங்கினர். சுவாமி பிரம்மானந்தர் வாராணாசியிலிருந்து கங்கை நீர் கொண்டு வந்திருந்தார். சகோதரச் சீடர்கள் இருவரும் அதனால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து முறைப்படி வழிபட்டனர்.

ராமேஸ்வரத்திலிருந்து சென்னை திரும்பும் வழியில் அவர்கள் மதுரையில் மூன்று நாட்கள் தங்கினர். மதுரை மீனாட்சி கோயிலுக்குச் சென்றனர். சசி மகராஜ் அவரைக் கோயிலின் கருவறைக்குள் அழைத்துப் போக விரும்பினார். ஆனால் கருவறைக்குள் போகக் கட்டுப்பாடுகள் இருந்தன. எனவே சசி மகராஜ் ஆழ்வார் ஆழ்வார் என்று தமிழில் கூவினார். பிரம்மானந்தர் பெரிய மகான் என்பதைப் புரிந்துகொண்டு அர்ச்சகர்களும் அவர்களைக் கருவறையில் அனுமதித்தனர். வெளியில் வந்து தேவியை இருவரும் தரிசித்த போது, மீனாட்சி தேவி அருள் கனிந்து தம்மை நோக்கி வருவதாக சுவாமி பிரம்மானந்தர் தெய்வீகக் காட்சி பெற்றார். அவர் ஆனந்த பரவச நிலை அடைந்து விட்டதை உணர்ந்த சசி மகராஜ் அந்தப் பெரிய கூட்டத்தின் நடுவில் சுமார் ஒரு மணி நேரம் அவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டார். கண்களில் நீர் பெருக சுவாமி ராமகிருஷ்ணானந்தரும் தேவீமாஹாத்மிய சுலோகங்களைப் பாடினார். பிறகு சன்னதியிலிருந்து இருவரும் வெளியே வந்தனர். கோயிலின் முன் மண்டபத்தில் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் ஆதி சங்கரரின் சன்னிதியில் உள்ளே சென்று தமது தலையால் ஸ்ரீசங்கரரின் பாதங்களைத் தொட்டு வழிபட விரும்பினார். ஆனால் அர்ச்சகர் அவரை விடவில்லை. இந்த மகா புருஷரை நான் வழிபடுவதை யார் தடை செய்ய முடியும்? என்று சொல்லிக் கொண்டே அர்ச்சகரை ஒரு பக்கமாகத் தள்ளிவிட்டு, உள்ளே சென்று சசி மகராஜ் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

காஞ்சிபுரத்தில்

சுவாமிகள் இருவரும் சென்னை திரும்பினர். சுவாமி பிரம்மானந்தரை சசி மகராஜ் காஞ்சிபுரத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் காமாட்சி அம்மன், ஏகாம்பரேசுவரர், வரதராஜர் ஆகிய கோயில்களுக்கு விஜயம் செய்தனர்.

சுவாமி ராமகிருஷ்ணானந்தருக்கு எழுதும் போதெல்லாம் சுவாமி பிரம்மானந்தர் மிகுந்த மரியாதைமிக்க சொற்களைப் பயன்படுத்தி எழுதுவார். அருள்திரு மதிப்புமிக்க மடத்துத் தலைவர் சுவாமி ராமகிருஷ்ணானந்தஜி மஹந்த் அவர்களுக்கு என்ற விலாசம் இருக்கும் எனது அன்பார்ந்த மதராஸ் மஹந்த் மஹராஜ் ஜி என்று கடிதங்கள் தொடங்கும்.

சுவாமி பிரம்மானந்தரையும் சுவாமி ராமகிருஷ்ணானந்தரையும் சுவாமி விவேகானந்தரின் நெருங்கிய சீடரான டாக்டர் எம்.சி நஞ்சுண்ட ராவ் ஒருமுறை விருந்திற்கு அழைத்துச் சென்றார். புகழ்பெற்ற கவிஞரான சரோஜினி நாயுடுவும் சகோதரி தேவமாதாவும் உடன் இருந்தனர். விருந்து பற்றி சகோதரி தேவமாதா எழுதுகிறார்:

நாங்கள் உள்ளே போனதும், நாங்கள் கை கழுவுவதற்காக நீர் வார்த்து உபசரித்தனர். அகன்ற அழகான கூடம் அவற்றை ஒட்டித் தரையில் பாய்கள் விரித்திருந்தனர். நாங்கள் பாயில் அமர்ந்தோம். எங்களுக்குப் பெரிய இலையில் சாதம் பரிமாறப்பட்டது. சுற்றிலும் பல சிறிய இலைக் கிண்ணங்களில் இனிப்பு, பழங்கள், பலவகைக் கறிகள், கூட்டுகள் எல்லாம் தரப்பட்டன. விருந்தினர் தெய்வமே என்ற உணர்வுடன் உபசரிப்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம்: உரிமையும் கூட அந்த உரிமையை அவர்கள் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. இல்லத்தலைவியும் அவரது பெண்களும்கூட விருந்தாளிகளுக்குத் தாங்களே அகமகிழ்ந்து உணவு பரிமாறினர். பணிவோடும் இன்சொற்களோடும் அவர்கள் விருந்தினரை உபசரித்தது விருந்தின் சிறப்பை அதிகரித்தது. விருந்து முடிந்ததும் எங்களுக்குக் கை கழுவ மறுபடியும் நீர் வார்த்தனர். நாங்கள் வீடு திரும்பினோம்.

1909 பிப்ரவரி 22 அன்று ஸ்ரீராமகிருஷ்ணரின் ஜெயந்தி விழாவைக் கொண்டாட சுவாமி ராமகிருஷ்ணானந்தர் ஏற்பாடுகள் செய்தார். தொடர்ந்த ஞாயிறன்று பொது விழா நடைபெற்றது. மடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவிலுள்ள தண்ணீர்த் துறை சந்தையில் சுமார் 5000 ஏழைகளுக்குத் தைத்த இலையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

சுவாமி விவேகானந்தர் (பின்னாளில் ராமகிருஷ்ண இயக்கத்தின் எட்டாவது தலைவர்) அந்த ஜெயந்தி விழாவின்போது சென்னையில் இருந்தார் அவர். அந்த நிகழ்ச்சியை நினைவுகூர்கிறார்.

1909 பிப்ரவரி 22 அன்று ஸ்ரீராமகிருஷ்ணரின் ஜெயந்தி விழாவின்போது சுவாமி பிரம்மானந்தர் சென்னையில் இருந்தார். மடத்துக் கட்டிடம் சிறியது. விழாக்குத் திரளான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே மகராஜ் தங்குவதற்காக மடத்தின் எதிரில் இருந்த இன்னொரு வீடு அமர்த்தப்பட்டது. அவர் வராந்தாவில் உட்கார்ந்திருந்தார். விழாவில் கலந்துகொள்வதற்காக, மக்கள் கூட்டங்கூட்டமாக மடத்திற்கு வந்துகொண்டிருந்தனர். நான் அறையினுள் இருந்தேன். மகராஜ் திடீரென ஏதோ சொன்னார். அவர் சொன்னது என்னவென்று புரியவில்லை. எனவே அவருக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்டேன் சுவாமி பிரம்மானந்தர் என் பக்கமாகத் திரும்பிச் சொன்னார். இல்லை எனக்கு எதுவும் வேண்டாம். இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது எனக்கு ஒரு பழைய சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. ஸ்ரீராமகிருஷ்ணர் மறைவதற்குச் சில தினங்களுக்கு முன்னால் நடந்தது அது. குருதேவர் மிகவும் தளர்ந்துபோய்க் கட்டிலில் கிடந்தார். நான் அவரது பக்கத்தில் இருந்தேன். அந்த அறைச் சுவரில் மாட்டப்பட்டிருந்த தமது புகைப்படத்தைக் கேட்டார். கொடுத்தேன். அவர் அதை வாங்கித் தன் நெஞ்சின் மீது வைத்துக் கொண்டார். ஐந்து அல்லது பத்துநிமிடங்களுக்குக் கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தார். பிறகு கொஞ்சம் பூக்கள் வேண்டுமென்று கேட்டார். தன் கண்களை மூடியவாறே அவர் அந்தப் பூக்களைப் புகைப்படத்தின் மீது வைத்தார். பிறகு அவர் கூறினார். புகைப்படத்தை அங்கேயே வைத்துவிடு. ஒவ்வொரு விட்டிலும் அது வணங்கப்படுவதை நீ கண்கூடாகப் பார்ப்பாய் முதலில் நான் அதை நம்பவில்லை ஆனால் 22 வருடங்களுக்குப் பிறகு மாபெரும் மக்கள் கூட்டம் ஜெயந்தி விழாவுக்கு வருவதைக் காணும்போது எனக்கு அந்த நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. அந்தச் சமயத்தில் இதையெல்லாம் நான் கனவில்கூட நினைத்ததில்லை.

அன்னையின் வருகை

1911 பிப்ரவரியில் அன்னை சென்னைக்கு விஜயம் செய்தார். சுவாமி ராமகிருஷ்ணானந்தர் மடத்திற்கு எதிரில் இருந்த சுந்தர் நிவாஸ் என்ற மாடி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தார். அந்த வீட்டில் அன்னை ஒரு மாத காலம் தங்கினார்.அன்னையும் குழுவினரும் மதுரை மற்றும் ராமேசுவரத்திற்குச் செல்வதற்கு சுவாமி ராகிருஷ்ணானந்தர் ஏற்பாடுகள் செய்திருந்தார்; தாமும் உடன் சென்றார். தமது ராமேசுவர யாத்திரையைப்பற்றி அன்னை பின்னாளில், ராமேசுவரத்தில் சிவபெருமானை வழிபட 108 தங்க வில்வ தளங்களை சசி எனக்காக ஏற்பாடு செய்திருந்தான் என்று கூறினார்.

சென்னை திரும்பும் வழியில் அவர்கள் மதுரைக்குச் சென்றனர். அங்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், நாயக்கர் மஹால் ஆகிய இடங்களுக்குச் சென்றனர்.

சென்னையில் கபாலீசுவரர் கோயில், பார்த்தசாரதி கோயில், மெரீனா கடற்கரை, மீன் காட்சியகம், கோட்டை ஆகிய இடங்களுக்கு அன்னை விஜயம் செய்தார். அதற்கு வேண்டிய வசதிகளையும் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் ஏற்பாடு செய்திருந்தார். 1911 மார்ச் 2-இல் சென்னை மடத்தில் கொண்டாடப்பட்ட ஸ்ரீராமகிருஷ்ண ஜெயந்தி விழாவில் அன்னையும் கலந்துகொண்டார். அந்த நாளில் பல பக்தர்களுக்கு மந்திர தீட்சையும் அளித்தார்.

பெங்களூரில் அன்னையுடன்

மார்ச் 24 வெள்ளிக் கிழமை அன்று அன்னையும் குழுவினரும் சுவாமி ராமகிருஷ்ணானந்தரும் ரயிலில் பெங்களூரை அடைந்தனர். பெங்களூர் ஆசிரமத்தின் அன்றைய தலைவராக இருந்த சுவாமி நிர்மலானந்தரின் தொடர்ந்த முயற்சிகளே அன்னையின் பெங்களூர் விஜயத்திற்குக் காரணம். பெங்களூரில் அன்னையைத் தரிசிக்க மக்கள் கூட்டம் திரண்டு வந்தது. சிலவேளைகளில் மக்கள் கொண்டு வந்த மலர்கள் மலைபோல் குவிந்தன! அன்னை மூன்று நாட்கள் அங்கு ஆசிரம வளாகத்தின் உள்ளேயே தங்கினார். அவர் தங்கிய அறை அன்னையின் கோயிலாகத் தற்போது திகழ்கின்றது.

அரியதொரு நிகழ்ச்சி

பெங்களூரில் ஒருநாள் மாலைவேளை, மடத்தின் பின்புறத்தில் இருக்கும் ஒரு சிறு பாறையின்மீது அன்னை அமர்ந்து, கதிரவன் மறையும் அழகை அனுபவித்த வண்ணம் இருந்தார். சில துறவிச் சீடர்களும் அங்கு இருந்தனர். அன்று இயற்கையின் எழில் விவரிக்கவொண்ணா மாட்சியுடன் மிளிர்ந்தது. நீலவானத்தில் வெண்மேகங்கள் மிதந்து சென்றன.

அவற்றின்மீது மாலைச் சூரியன் தன் வர்ண ஜாலங்களை வீசி ஆகாயத்தை ஒப்பில்லா அழகுக் களஞ்சியமாக ஆக்கியிருந்தான். பிரகிருதியின் இந்த அழகைப் பார்த்ததும், பிரகிருதியின் மூலப்பொருளான பரமாத்மாவின் சொல்லொணா அழகும் பெருமையும் நினைவுக்கும் வந்ததோ என்னவோ, அன்னை ஆழ்ந்த தியானத்டல் மூழ்கிவிட்டார். இயற்கையின் வனப்பு அவரை இறையுணர்வில் ஆழ்த்தியது! இதனைக் கேள்வியுற்ற சுவாமிகள், ஆகா! அன்னை மலைமகள் ஆகிவிட்டார் என்று கூறிவிட்டு, அன்னை இருந்த பாறையின் உச்சிக்கு விரைந்து ஏறினார். பருத்ததேகம் உடையவர் ஆதலால் அந்தச் சிறு பாறையின் உச்சிக்குப் போவதே அவரைப் பெருமூச்சு விடச் செய்தது. நேராக அன்னையின் திருமுன்னர் சென்று நமஸ்காரம் செய்து, அவரது திருப்பாதங்களில் தலைவைத்து, தேவி மாஹாத்மியத்திலுள்ள சுலோகங்களைச் சொல்லித் துதித்தார்.

ஸர்வ மங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமஸ்து தே
ஸ்ருஷ்டி ஸ்திதி விநாசானாம் சக்தி பூதே ஸநாதனி
குணாச்ரயே குணமயே நாராயணி நமோஸ்து தே
சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமோஸ்து தே

மங்கலம் அனைத்திற்கும் மங்கலப் பொருளே! எல்லா நன்மைகளையும் அளிப்பவளே! பக்தர்களின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றுபவளே! அனைவருக்கும் புகலிடமாக விளங்குபவளே! சூரியன், சந்திரன், அக்கினி என்று மூன்றையும் கண்களாக உடையவளே! சிவ பெருமானின் துணைவியே! நாராயணீ, உன்னை வணங்குகிறேன்.

தன்னைச் சரணடைந்த எளியோரையும் துன்புற்றோரையும் காப்பாற்றுவதையே தொழிலாகக் கொண்டவளே! எல்லோருடைய துன்பங்களையும் துடைப்பவளே! ஒளிமயமானவளே! நாராயணீ, உன்னை வணங்குகிறேன்.

பிறகு சசி மகராஜ் கருணைபுரி தாயே! கருணைபுரி அம்மா! என்று பிரார்த்தித்தார் கெஞ்சிக் கேட்கும் மகனைச் சாந்தப்படுத்தும் தாய் போன்று அன்னை அவரது தலையை அன்பாகத் தடவிக் கொடுத்தார். சசி மகராஜுடன் சென்ற சுவாமி நிர்மாலனந்தர் ஜபம் செய்யுமாறு அன்னையை வேண்ட, அவர் ஜபத்தை முடித்து விட்டுத் தமது அறைக்குத் திரும்பினார்.

அதிலிருந்து அந்தப் புனிதப் பாறை அன்னையின் பாறை என்று அழைக்கப்படுகிறது. அந்தப் பாறையின் நீளம் சுமார் 200 அடி, அகலம் 60 அடி முன்பக்கம் சுமார் 10 அடி உயரம், பின் பக்கம் 30 அடி உயரம். 1967 இல் இந்த இடத்தில் ஒரு கல் மண்டபம் கட்டப்பட்டது. அதனுள் அன்னையின் புகைப்படம் ஒன்றும் வைக்கப்பட்டது.

1993-இல் வண்ணக் கண்ணாடியில் வரையப்பட்ட ஸ்ரீசக்ரம் படம் அன்னையின் படத்தின் மேல் பொருத்தப்பட்டது.

மேலும் விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)