Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்

அஞ்சலி!மார்ச் 30,2013

சுவாமி ராமகிருஷ்ணானந்தர் மறைந்த செய்த கேட்டபோது அன்னை ஸ்ரீசாரதாதேவி ஆ! சசி போய்விட்டான் என் முதுகே ஒடிந்ததுபோல் ஆகிவிட்டது என்று கண்ணீருடன் கூறினார். புரியில் இருந்த சுவாமி பிரம்மானந்தருக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. வருத்தத்துடன் அவர் தென் திசை காவல் நாயகர் காலமாகி விட்டார். தென் திசையே இருண்டது போலாகிவிட்டது என்று கூறினார். தங்கள் ஆன்மிக வளர்ச்சிக்காகச் சொந்த வாழ்வை அர்ப்பணம் செய்த சுவாமி ராமகிருஷ்ணானந்தருக்குச் சென்னை அன்பர்கள் நினைவுக்கூடம் நடத்தி அஞ்சலி செலுத்தினர். 1911 செப்டம்பர் 4-ஆம் நாள் வடசென்னை பச்சையப்பா அரங்கத்தில் பொதுகூட்டம் நடைபெற்றது. நகரப் பிரமுகர்கள் சுவாமி ராமகிருஷ்ணானந்தருக்குப் புகழாரம் சூட்டினர். சமயம், கல்வி ஆகிய இரு துறைகளிலும் சுவாமியின் தன்னலம் கருதாத சீரிய பணிகளைப் பாராட்டினர். அவர்களுள் ஒருவர் கூறினார்.

புனிதமான உத்தமமான துளியும் தன்னலமில்லாத வாழ்க்கை வாழ்ந்தவர் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் தென்னிந்திய மக்களின் தார்மீக மற்றும் ஆன்மீக நலனுக்காகவே அவரது பெருவாழ்வு முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அவரது வாழ்க்கையில் எந்த ஆடம்பரமோ ஆரவாரமோ இல்லை, முற்றிலும் எளிமைமயமாக இருந்தது அவரது வாழ்வு அவரது மறைவினால் சென்னை இந்துக்கள் மிகப் பெரும் நஷ்டத்தை உணர்கிறோம். இந்தக் கூட்டத்தில் எங்கள் இதய பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விவேக போதினி என்னும் தமிழ்ப் பத்திரிகை 1911 செப்டம்பர் இதழில் பின்வருமாறு எழுதியது. சுவாமி ராமகிருஷ்ணானந்தர் மிகச் சிறந்த குரு பக்தர் செத்தால் தானே சுடுகாட்டிற்கு வழி தெரியும் என்று ஒரு தமிழ்ப் பழமொழி சொல்லுகிறது. அதாவது ஆன்மீக சாதனைகளின் மூலம்தான் ஒருவன் இந்த உலகத்தை மறக்க முடியும். பெயரற்ற, உருவமற்ற உண்மை நிலைக்குப் போகும் வழியை அறிய அதன் மூலம்தான் முடியும்.... மிகவுயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்த ஒரு மகானை இழந்த உணர்வுதான் சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் மறைவு எங்களுக்குத் தந்தது. அவரது ஆன்மீக வழிகாட்டுதலால் பயன்பெற்ற எங்களில் பலரும் அவரை இழந்து வருந்துகிறோம்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் இன்னொரு நேரடிச் சீடர் சுவாமி சிவானந்தர்; இயக்கத்தின் இண்டாவது தலைவர் அவர். சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் கடிதத் தொகுப்பான ஆறுதல் மொழிகள் என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் கூறுகிறார். அன்புக்கும் புனிதத்திற்கும் சசி மகராஜ் ஓர் உண்மையான உருவகம் உள்ளம், உடல் இரண்டிலும் அத்தகைய புனிதத்தை நான் இது வரை கண்டதில்லை. அவரது வாழ்க்கையும் வழியுமான ஸ்ரீராமகிருஷ்ணரிடம் அவர் கொண்ட பக்திக்கு எல்லையே இல்லை. ஸ்ரீராமரிடம் இணையாக இதைச் சொல்லலாம். சுவாமி விவேகானந்தர், சுவாமி பிரம்மானந்தர் போன்ற சகோதர சீடர்களை அவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஓர் அம்சமாகவே கருதினார். அவர்களிடம் அவர் கொண்டிருந்த அன்பும் பாசமும் ஒரு வழி பாடாகவே திகழ்ந்தது.

உயர்ந்தவர்-தாழ்ந்தவர் ஏழை பணக்காரர் என்ற வேறுபாடுகள் அவரிடம் இருக்கவில்லை. அனைவருடைய நலனிலும் அவர் அக்கறை கொண்டிருந்தார். எல்லோரையும் இனிமையாக வரவேற்றுத் தம்மிடம் உள்ளதை எல்லாம் வழங்கினார். ஒவ்வோர் உயிரிலும் ஸ்ரீராமகிருஷ்ணரைக் கண்டு அவர்களை வழிபடுவதையும், அவர்கள் ஒவ்வொருவரும் தன்னுள்ளே தெய்வீகத்தை உணர உதவுவதையும் அவர் தமது கடமையைக் கொண்டிருந்தார்; அந்தக் கடமையை நிறைவேற்றுவதில் அவர் தன்னையே தியாகம் செய்தார். மற்றவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று விரும்பினாரோ, அதைத் தாமே வாழ்ந்து காட்டினார். ஸ்ரீராமகிருஷ்ணருக்காக அவர் இந்த உலகத்தில் பிறந்தார். முழுமனதோடு அவருக்குச் சேவை செய்தார்; அவரிடமே திரும்பிச் சென்றார். சுவாமி விவேகானந்தர் அவருக்கு சுவாமி ராமகிருஷ்ணானந்தர் என்று பெயரிட்டது மிகவும் பொருத்தமே

சுவாமி ராமகிருஷ்ணானந்தர் எழுதிய ஸ்ரீராமனுஜ சரிதம்(தமிழில் ஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாறு) வங்க நூலுக்கு எழுதிய முன்னுரையில் சுவாமி சாரதானந்தர் கூறுகிறார். 1863-இல் பிறந்த ராமகிருஷ்ணானந்தர் நம்முடன் 48 வருடங்கள்தான் வாழ்ந்தார். அதே வேளையில் நீங்காத பதிவுகளை அவர் நமது மனங்களில் விட்டுச் சென்றுள்ளார். ஒருபுறம், அவரது மேலான குரு பக்தி, உறுதியான செயல் நோக்கம், முழு மனத்துடன் சேவை செய்தல், சுடர் வீசும் துறவு, இறைபக்தி ஆகிய குணநலன்கள் அவரை பக்தர்களுக்கு ஓர் உன்னத லட்சியமாக ஆக்கின; மறுபுறம் அவரது புலமை அறிவுக் கூர்மை, அடக்கம், சாஸ்திர ஞானம், பரிவு, பெருந்தன்மை ஆகிய குணநலன்கள், துயரில் வாடும் மக்களுக்கு அவரை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அமைதியின் இருப்பிடமாக ஆக்கின.

சுவாமி ராமகிருஷ்ணானந்தர் ஒரு தெய்வீக வாழ்க்கை வாழ்ந்தார். தன்னையே பலியாக்கிக் கடுமையாக உழைத்தார். ஸ்ரீகுருவின் திருப்பாதங்களில் சரணடைந்தவர்களில் அவர் ஓர் உண்மையான வீரர். அவரது இந்தப் பெரு வாழ்வின் பலனாகச் சென்னையிலும், பொதுவாகத் தென்னிந்தியாவிலும், செயற்கரிய செயல்கள் பல நிறைவேறின. அவருடைய மறைவு சென்னையிலும், தென்னிந்தியாவிலும் வாழும் மக்களுக்குப் பெரும் துயரத்தை அளித்துள்ளது. அவரது நினைவை பக்தியோடும் நன்றியறிதலோடும் இன்றும் அவர்கள் நெஞ்சார நேசித்துப் போற்றுகின்றனர்.

சுவாமி விரஜானந்தர் எழுதுகிறார்

1904 க்கும் 1905 க்கும் இடையில் சசி மகராஜை நான் கடைசி முறையாகச் சந்தித்தேன். அப்போது அவர் சென்னையிலிருந்து பேலூர் மடத்திற்கு வந்துச் சில நாட்கள் தங்கியிருந்தார்....... அவரது உயர்ந்த குணங்களில் ஒன்றை இங்கு சொல்லலாம். நான் பிரபுத்த பாரதாவின் ஆசிரியராக இருந்தேன். அந்தப் பத்திரிகையில் வெளியிடுவதற்காக அவர் தமது சென்னைச் சொற்பொழிவுகள் வகுப்புகள் ஆகியவற்றின் குறிப்புக்களை அனுப்புவது வழக்கம். என்னுடைய விருப்பம்போல் அவற்றை மாற்றியமைக்க அவர் எனக்கு முழு உரிமை அளித்திருந்தார். நான் சேர்த்தவை மற்றும் மாற்றியவை அனைத்தையும் அவர் முழுமனதோடு அங்கீகாரம் செய்வார். அவருடைய பணிவை இது காட்டுகிறது.

பிரபுத்த பாரதா சுவாமி விவேகானந்தரால் சென்னையில் தொடங்கப் பெற்ற ஒரு மாதப் பத்திரிகை. தற்போது இமாலயத்திலுள்ள மாயாவதி என்ற இடத்தில் அமைந்திருக்கும் அத்வைத ஆசிரமத்திலிருந்து வெளியிடப்படுகிறது. 1911 அக்டோபரில் அந்தப் பத்திரிகை சுவாமி ராமகிருஷ்ணானந்தர் சிறப்பு மலராக வெளிவந்தது. அதில் சுவாமி விவேகானந்தரின் அமெரிக்கச் சீடரான ஃபிராங்க் ஜி அலெக்சாண்டர் துயரக் கவிதையை எழுதியுள்ளார்.

சகோதரி தேவமாதா தமது மனத்தில் பதிந்த மறக்க முடியாத சில நிகழ்ச்சிகளைப் பின்வருமாறு தருகிறார்.

தமது தோற்றத்தைப்பற்றி சசி மகராஜ் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. ஒருமுறை அவரது புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டது. அதில் அவரது தலை மழிக்கப்பட்டதாக இருந்தது. நேரில் பார்ப்பதைவிட படம் மோசமாக இருந்தது. நான் அதனை அவரிடம் காட்டி மகராஜ் இப்படி ஒரு புகைப்படம் எடுக்க ஏன் சம்மதித்தீர்கள்? என்று கேட்டேன். சகோதரி நான் எப்படி இருக்கிறேனோ அப்படித்தான் புகைப்படத்திலும் வர முடியும். அதற்கு நான் என்ன செய்வது? என்று கேட்டார் அவர்.

சசி மகராஜின் தோற்றம் கம்பீரமானது, அதேவேளையில் மிகவும் எளிமையானது. அவரது புன்னகை அலாதியானது. அவர் புன்னகைக்கும் போது முகமே ஒரு தனி ஒளியுடன் பொலியும், அவரது தோற்றமே உருமாறியதுபோல் ஓர் ஆன்மீக அழகுடன் திகழும்.

சசி மகராஜின் ஆன்மீக ஆழத்தைப்பற்றி சொல்வது எளிதல்ல. அது மிகவும் நுண்மையானது. ஒரு வார்த்தையிலோ வரியிலோ அடங்குவது அல்ல.... ஒருநாள் அவர் மடத்தின் கதவிற்கு வெளியில் நின்றிருந்த தென்னை மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார். அது மாலை வேளை, அவர் மோனத்தில் ஆழ்ந்திருந்தார், அவரது மனம் அகமுகமாகி எங்கோ ஆழங்களில் சஞ்சரிப்பது போல் இருந்தது. நான் அவரிடம் ஓரிரு கேள்விகள் கேட்டேன். அதற்கு அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. பிறகு என்னைப் பார்த்து, பொறுத்துக்கொள் சகோதரி! இப்போது நான் அமைதியாக இருக்க விரும்புகிறேன் என்றார்.

சிறிது நேரத்தில் அந்த தியான நிலை நிறைவிற்கு வந்து சசி மகராஜ் பேச ஆரம்பித்தார். மடத்திலுள்ள சில சிரமமான பிரச்சினைகளைப் பற்றி அவர் கூறினார். அமைதியில் திளைக்கின்ற இவரைப் போன்ற மகானுக்கு இத்தகைய பிரச்சினைகள் வந்து தொல்லை கொடுக்கின்றனவே என்று நினைத்தேன் நான். அதை அவரிடம் கூறவும் செய்தேன் அவர் தன் தலையைத் தூக்கி என்னைப் பார்த்தார். அவரது கண்கள் ஒளி பெற்று மின்னின. உறுதியான குரலில் என்னிடம் கூறினார்.

எனது வாழ்க்கை என்றென்றும் நிலையானது( தோன்றி மறைகின்ற) இந்த வாழ்க்கை கடவுளுக்குச் சொந்தமானது. அதனைப் படைத்தவர் அவர். அவரது திருவுளம்போல் அந்த வாழ்க்கையை அவர் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும்.

இறைவனை அணுகுவதற்கு அனேக பாதைகள் உள்ளன, அவற்றின் ஒருங்கிணைந்த உருவமே சுவாமி ராமகிருஷ்ணானந்தர். அவர் மிகச் சிறந்த ஒரு ஞானி, ஆனால் அவர் ஆண்டவனை அணுகியதோ பக்தி என்னும் அமுதப் பாதை வழியாக, இந்த வாழ்க்கையை இறையுணர்வுடன் வாழ முடியும் என்பதற்கு அவரது வாழ்க்கை நிகரற்ற உதாரணமாக விளங்குகிறது. அவர் ஆரம்பித்த கல்வி, சமய மற்றும் சேவை நிறுவனங்கள் இன்று செழித்தோங்கும் மையங்களாகத் திகழ்கின்றன. தமது மாபெரும் வாழ்க்கையின் மூலம் அவர் இந்த நிலவுலகில் நிரந்தரமாக வாழ்கிறார்.

மேலும் விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)