Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> போட்டிகள், கட்டுரைகள்

குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளர விடுங்கள்!ஆகஸ்ட் 20,2013

சேலம், சிவாஜி நகரில் உள்ள வித்யா மந்திர் பள்ளியில் பெற்றோருக்கான ஒரு நிகழ்ச்சி 8.6.2013 அன்று நடந்தது. மாணவ மாணவிகளின் வளர்ப்பில் தாய் தந்தையருக்கான கடமைகள் பற்றி கலந்தாய்வு நடைபெற்றது. பெற்றோர்களின் பொறுப்புகளையும் மகள்/ மகன்களின் வளரும் முறையும் பற்றிப் பேசப்பட்டன. அப்போது, ஓர் இளந்தாய் அபிராமி, இன்றைய இளந்தலைமுறையினரின் இனிய பிரதிநிதியாக இருக்கும் தன் மகளைப் பற்றிக் கூறினார். என் மகளும் இப்படி இருக்கணும் என்று எந்தத் தாயையும் ஏங்க வைக்கும் ஒரு நெகிழ்வு அது. சில மாதங்களுக்கு முன்பு அபிராமி ஒரு விபத்தில் காலில் அடிபட்டு படுத்த படுக்கையாகக் கிடந்தார். எல்லாமே பெட்டில்தான். சுமார் 38 வயது உடைய அபிராமிக்கு 13 வயது மகள் சாய் சுதர்சனி எல்லாக் காரியங்களையும் பொறுப்புடன் செய்தாள். துள்ளிக் குதிக்கும் சிறுவயதில், மிகுந்த பொறுமையுடன் தாயின் தேவைகளைப் பேணினாள் அந்தச் சிறுமி. பிற வேளைகள் செய்யும்போது தாய் அபிராமி அமைதியாக இருந்தாலும், தமது கழிவுகளை மகள் அகற்றும்போது ஆடிப் போய்விடுவார். ஒரு நாள் மகளிடம், கண்ணு, இம்மாதிரி அசிங்கமான வேலை செய்யிறப்போ உனக்குக் கஷ்டமா இருக்குல்லே? என்று கேட்டார் கண்ணீருடன். அதற்கு உடனே சாய் சுதர்சனி அம்மாவின் கரங்களைப் பற்றிக் கொண்டு இல்லவே இல்லை மா. என்னோட சின்ன வயசிலே நீ எனக்கு இதெல்லாம் செஞ்சப்போ, நீ கவலைப்பட்டியா? ஜாலியாகத்தானே செஞ்சே? நானும் இப்ப அது மாதிரிதான்... என்றாள். பெற்றோர்களே, பிள்ளைகளை வளர்க்காதீர்கள், வளர விடுங்கள்.

மாணவர்கள் மூலமே மாணவ வளர்ச்சி: கும்பகோணத்திலுள்ள கார்த்தி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் பிரைமரி மாணவ மாணவிகளுக்கும், நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் உள்ள இணக்கம் அருமையானது. 5-ஆம் வகுப்பு படிப்பவர்கள் எல்கேஜி யுகேஜி படிக்கும் பாப்பாக்களைத் தங்களது தம்பி தங்ககைகளாகக் காணக் கற்றுக் கொடுக்கிறார்கள். அதற்கு கார்த்தி வித்யாலயாவின் தாளாளர் திரு.கார்த்தி எடுத்த ஒரு முயற்சி நமக்குப் புதிய நம்பிக்கையை ஊட்டுகிறது. 8,9 ஆம் வகுப்பு படிப்பவர்களுக்குப் பள்ளியில் சேர்ந்ததும் ஒரு ப்ராஜெக்ட் தரப்படுகிறது. அதன்படி, அந்த மாணவர்கள் அதே பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு சிறுவர் சிறுமியரின் குணங்கள், சிறப்பான பழக்க வழக்கங்கள் அவர்களுக்குள்ள தனித்திறமை ஆகியவற்றைக் கண்டறிய வேண்டும். பின் அவற்றை எழுதி, தங்களது ஆசிரியர்களிடம் தர வேண்டும். அவற்றை அவர்கள் சரிபார்த்து நூலாக வெளியிட்டுள்ளார்கள். இவ்வருடம் முதல் வெளிவரும் அந்த நூலின் பெயர் தி லிட்டல் புக் ஆப் டெலன்ட் 2013. அதோடு கார்த்தி கூறிய இன்னொன்றும் குறிப்பிடத்தக்கது. பள்ளி தொடங்கிய முதல் ஒரு வாரத்திற்குள் ஒவ்வோர் ஆசிரியருக்கும் தங்களது வகுப்பிலுள்ள அனைத்து மாணவ மாணவிகளின் பெயர்களும் அத்துபடியாக வேண்டும். அடேயப்பா! இதை வாசிக்கும் ஒவ்வொரு பள்ளி நிர்வாகியும் ஆசிரியரும் இதைச் செய்து பாருங்கள். உங்கள் பள்ளியும் உன்னதப் பள்ளியாகப் பரிணமிக்கும்.

ஆசிரியர்கள் வழங்கும் மாணவ வளர்ச்சி: எப்போதடா முடியும்? என்று காத்திருந்து, பள்ளி முடிந்து பேரிரைச்சலுடன் வீட்டுக்கு ஓடும் குழந்தைகளைப் பொதுவாகக் காணலாம். ஆனால் நமக்கு வெற்றி வேண்டுமானால், பள்ளி என்னும் களத்தை நமக்கு பயன்படுத்துவது மிகவும் சிறப்பானது என்பது ஒரு புதிய சிந்தனை. இந்தச் சிந்தனையை மாணவர்கள் மனதில் விதைத்துத் திறமையானவர்களை வருடந்தோறும் ஒரு பள்ளி படைத்து வருகிறது. புதுவையில், மண்ணாடிப்பட்டு கொம்யூனில், வாதானூர் கிராமத்தில் மதகடிப்பட்டு திருக்கானூர் சாலையிலுள்ள ஓர் அரசுப் பள்ளியின் பெயரிலேயே அதன் மகிமை பொதிந்துள்ளது!ஆம், அன்னை சாரதாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியிலுள்ள ஆசிரியர்கள் தமது 10-வது வகுப்பு மாணவர்களுக்காக இரவு 10 மணி வரை மாணவர்களுடன் தங்கியிருந்து பாடம் நடத்துகின்றனர். மொத்தம் உள்ள 19 ஆசிரியர்களும் மிகச் சிறப்பாகப் பணி புரிந்து மாணவ, மாணவியர்களுக்குச் சேவை புரிந்து வருகின்றனர். ஆறுமுகம் என்பவர் தொழிற்கல்வி ஆசிரியர் மாணவ மாணவிகளுக்குக் கைத்திறன் கலைகளைக் கற்றுத் தருகிறார்.

மாணவர்களிடம் அதிக ஈடுபாடுள்ள இவருக்குப் பார்வை இல்லாவிட்டாலும், பள்ளியின் அனைத்துச் செயல்பாடுகளையும் கண்காணிப்பதில் தமக்கு எந்தக் குறையும் இல்லை என்கிறார் அவர். மாணவர்கள் மிகவும் நேசிக்கும் மற்றொரு ஆசிரியர் வீ. வீரய்யன் தமிழாசிரியரான இவரும் 70% பார்வை இழந்தவர். இந்த சிறப்பு வகுப்பில் நிரந்தரமாக இடம் பெற்றுள்ளவர் ஹரி கிருஷ்ணன், 40 ஆண்டுகள் பணி முடிந்து அண்மையில் ஓய்வு பெற்ற இவரே, இப்பள்ளியின் மற்ற எல்லா ஆசிரியர்களுக்கும் முன்மாதிரி. இந்தப் பள்ளியில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் முக்கியமானவை. தினமும் காலை 4 மணிக்கு அரசுத் திட்டத்தின்படி அனைத்து மாணவர்களுக்கும் பால் மற்றும் பிஸ்கெட் பெற்றுக் கொள்வதிலிருந்து, அவற்றை விநியோகிப்பதில் ஊழியர்களுக்கு உதவுவது உட்பட அனைத்திலும் மாணவர்களின் செய்நேர்த்தியைக் காண முடிகிறது. இந்தப் பள்ளியின் 9,10 வது வகுப்புகளில் எந்த மாணவரையும் சரியாகப் படிக்கவில்லை என்று காரணம் காட்டித் தேர்ச்சி விழுக்காட்டிற்காக, வெளியேற்றுவதில்லை என்பது முக்கியமானது.

தொடர்ந்து 90% க்கும் மேல் தேர்ச்சி பெற்று. அரசின் ரூபாய் ஒரு லட்சம் ரொக்க விருதைக் கடந்த 4 ஆண்டுகளாகப் பெற்று வருகிறது இப்பள்ளி. இப்பள்ளியில் கடந்த ஆண்டின் முதல் மதிப்பெண் 457/500. 63 பேர் எழுதிய தேர்வில் 23 பேர் 400க்கும் மேல் மதிப்பெண் பெற்றனர். 1954-55 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 2003 ல் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்ட இந்த அன்னை சாரதாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியின் சிறந்த வெற்றிக்கு மாலை நேரச் சிறப்பு வகுப்புகள் மிக முக்கிய காரணம். சேவை நோக்குடன் பணிபுரியும் ஆசிரியர்களும், பெற்றோர்களின் ஒத்துழைப்பும் பள்ளியின் தரத்தை மேம்படுத்துகின்றன. இரவு 10 மணிவரை தொடரும் வகுப்புகளில் அர்ப்பணிப்பு குணத்துடன் கல்விச் சேவை செய்து வரும் ஆசிரியர்களும், இம்மாணவர்களின் எதிர் காலத்திற்கு நம்பிக்கை ஒளி கிடைக்கும்வண்ணம் செயல்பட்டு வருகிறது மனதிற்கினியது.

மேலும் போட்டிகள், கட்டுரைகள்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)