Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> அறிவுரைகள்

நம்பிக்கையும் வலிமையும்!செப்டம்பர் 25,2013

1. எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது.

2. தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்விகத்தை வெளியே வரவழைக்கிறது. நீ எதையும் சாதிக்க முடியும். அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு உண்மையாக நீ முயற்சி செய்யாதபோதுதான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்தவுடனேயே அழிவு வருகிறது.

3. நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை - இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும் மேலும் அவ்வப்போது உங்களிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து, ஆனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்குக் கதிமோட்சமில்லை.

4. ஆன்மாவால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே. அப்படி நினைப்பது, சமயத்திற்கு மிகப் பெரிய முரண்பட்ட கருத்தாகும்.பாவம் என்பது ஒன்று உண்டு என்றால், அது நான் பலவீனமானவன். மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.

5. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.

6. சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன்-உனது கடந்த கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெறமுயற்சி செய்ததையும், அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்து வந்தவையாகத்தான் இருக்கும்.

7. இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே. என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது. காலமும் இடமும்கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக்கூடியவன். சர்வவல்லமை படைத்தவன் நீ.

8. நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தை பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் பெற்றவர்கள். மண்ணுலகின் தெய்வங்களே, நீங்களா பாவிகள்! அப்படி மனிதனை அழைப்பதுதான் பாவம். அது மனித இயல்பின்மீதே சுமத்தப்படும் பழிச்சொல்லாகும். ஓ சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள். சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள்

9. போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே. பக ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒருபோதும் மனிதனாகிவிடாது. எனவே இந்தத் - தோல்விகளையும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒருபோதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.

10. பலவீனத்திற்கான பரிகாரம். ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பதுதான். மக்களுக்கு. ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.

11. உபநிஷதங்களிலிருந்து வெடிகுண்டைப் போலக் கிளம்பி அறியாமைக் குவியல்களில் மீது வெடிகுண்டைப் போன்று வெடிக்கும் சொல் ஒன்றை நீ காண்பாயானால் அந்தச் சொல் அஞ்சாமை என்பதுதான்.

12. நீ கவனித்துப் பார்த்தால், உபநிஷதங்களைத் தவிர வேறு எதையும் ஒருபோதும் நான் மேற்கோளாக எடுத்துச் சொன்னதில்லை என்பது புலப்படும். மேலும், உபநிஷதங்களின் வலிமை என்னும் அந்த ஒரே ஒரு கருத்தைத்தான் நான் எடுத்தாண்டிருக்கிறேன். வேத வேதாந்தங்களின் சாரமெல்லாம் அந்த ஒரு சொல்லிலேதான் அடங்கியிருக்கிறது.

13. எனது இளம் நண்பர்களே, வலிமை உடையவர்களாக இருங்கள், இதுவே நான் உங்களுக்கு வழங்கும் அறிவுரை, கீதை படிப்பதைவிடக் கால்பந்தின் மூலம் நீங்கள் சொர்க்கத்திற்கு அருகில் இருப்பீர்கள். இவை தைரியமான வார்த்தைகள். ஆனால், உங்களை நேசிக்கின்ற காரணத்தால் இவற்றை நான் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். செருப்பு எங்கே கடிக்கிறது என்பதை நான் அறிவேன். ஒரு சிறிது அனுபவமும் பெற்றிருக்கிறேன். உங்கள் தோள்கள், தசைகளின் சற்றுக் கூடுதலான வலிமையால் கீதையை இன்னமும் சற்றுத் தெளிவாகப் புரிந்துகொள்வீர்கள்.

14. ஒவ்வொரு மனிதன் முன்பும் இந்த ஒரு கேள்வியை நான் வைக்கிறேன்- நீ வலிமையுடையவனாக இருக்கிறாயா? நீ வலிமையை உணர்கிறாயா? ஏனென்றால் உண்மை ஒன்றுதான் வலிமை தருகிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். உலகத்தின் நோய்க்கு வலிமை ஒன்றுதான் சரியான மருந்து.

15. மிகப் பெரிய உண்மை இது- வலிமைதான் வாழ்வு; பலவீனமே மரணம். வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை. நிரந்தரமான வளவாழ்வு. அமரத்துவம் ஆகும். பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரமேதான்!

16. வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியையும் பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன். சமுத்திரத்தையே குடித்துவிடுவேன். எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாகவேண்டும் என்று சொல்கிறான். அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழை. உனது குறிக்கோளை நீ அடைவாய்.

17. மனிதர்கள், மனிதர்களே நமக்கு வேண்டும். மற்றவை அனைத்தும் தயாராக வந்து சேரும். ஆனால் வலிமை மிக்க, சுறுசுறுப்பான், சிரத்தை பொருந்திய இளைஞர்கள்; உண்மையில் பிடிப்புக் கொண்ட இளைஞர்களே தேவை. அத்தகைய ஒரு நூறு இளைஞர்களால் இந்த உலகமே புரட்சிகரமான மாறுதலைப் பெற்றுவிடும்.

18. இந்த நாட்டில் பேரிகைகள் செய்யப் படுவதில்லையா? தாரைகளும் தப்பட்டைப் பறைகளும் இந்தியாவில் கிடைக்காமலா? போய் விட்டன? இத்தகைய கருவிகளின் பெருமுழக்கத்தை, நமது குழந்தைகளைக் கேட்கச் செய், பெண்களாக்கும் மென்மை மிக்க இசைகளைக் குழந்தைப் பருவம் முதலே கேட்டுக் கேட்டு, இந்த நாடே கிட்டத்தட்டப் பெண்கள் நிறைந்த சமுதாயமாக மாற்றப்பட்டிருக்கிறது.

19. அறியாமை மிக்க, உயிரற்ற புல்பூண்டு வாழ்க்கையைக்காட்டிலும் மரணமே மேலானது. தோல்வியைத் தழுவி உயிர்வாழ்வதைவிடப் போர்க்களத்தில் மாய்வதே மேல்.

20. வா, வந்து ஏதாயினும் வீரச் செயலைச் செய். சகோதரர்களே, நீங்கள் முக்தி அடையாமற் போனால்தான் என்ன? மேலும் ஒரு சில தடவை நரகத் துன்பத்தை நீங்கள் மேற்கொண்டால்தான் என்ன? சிந்தை, சொல், செயல்களால் நிறைந்த புனிதம் ததும்பும் சில ஞானிகள், முழு உலகையும் தங்கள் எண்ணற்ற பயன் மிக்க பணிகளால் மகிழ்விக்கிறார்கள். மற்றவர்களிடமுள்ள அணு அளவு குணநலனையும் அவர்கள் பெரும் மலை போன்று விரியச் செய்து தங்கள் இதயத்தை மலரச் செய்கிறார்கள்- இந்த அறிவுரை பொய்த்துவிடுமா?

21. ஒவ்வொருவனும் தனது அதிகபட்ச ஆற்றலை மிச்சமீதமின்றிச் செலுத்தி உழைக்காவிட்டால், எதையேனும் செய்து சாதிக்க முடியுமா? உழைப்பே வடிவெடுத்த; சிங்கத்தின் இதயம் படைத்த ஆன்மகனையே திருமகள் நாடிச் செல்கிறாள். பின்னால் திரும்பிப் பார்க்கத் தேவையில்லை. முன்னோக்கிச் செல். அளவற்ற ஆற்றல், பெரும் ஊக்கம், அளவு கடந்த அஞ்சாமை, அளவில்லாத பொறுமை-இவையே நமக்குத் தேலை. இவை இருந்தால் மட்டுமே, மகத்தான காரியங்களை நம்மால் சாதிக்க முடியும்.

22. நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்திமுனையில் நடப்பதைப்போல் மிகவும் கடினமானதுதான். எனினும் எழுந்திரு. விழித்துக்கொள். மனம் தளராதே. நீ அடைய வேண்டிய உனது இலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.

23. சகோதரா, நீ அழுவதேன்? மரணமோ, நோயோ உனக்கில்லை. நீ அழுவதேன் சகோதரா? துன்பமோ துரதிருஷ்டமோ உனக்குக் கிடையாது. சகோதரா, நீ ஏன் அழ வேண்டும்? மாற்றமே மரணமோ உனக்கு விதிக்கப் படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு.

24. மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே. நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.

இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அது தான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன். என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தைப் பொருட்படுத்தாதிருந்தால் பாம்பின் விஷம்கூடச் சக்தியற்றதாகிவிடும்.

25. ஒரு சமயம் நான் காசியில் இருந்தபோது ஒரு பாதை வழியாகச் சென்றுகொண்டிருந்தேன். அந்தப் பாதையின் ஒரு புறம் நீர் நிறைந்த ஒரு பெரிய குளமும், மறு புறம் உயர்ந்த சுவரும் எழுப்பப்பட்டிருந்தன. அந்த இடத்தில் பல குரங்குகள் இருந்தன.

காசியைச் சேர்ந்த குரங்குகள் மிகவும் பொல்லாதவை. சில சமயங்களில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடியவை. அவை தங்கள் பாதையில் என்னைச் செல்ல விடக்கூடாது என்று நினைத்தன போலும்! எனவே நான் செல்லச் செல்ல அவை கிறீச்சிட்டுப் பெரும் சப்தமிட்டபடி என் கால்களை பற்றின. அவை நெருங்க நெருங்க நான் ஓட ஆரம்பித்தேன். ஆனால் நான் ஓட ஓட அவையும் பின்தொடர்ந்து ஓடி வந்து என்னைக் கடித்தன. அந்தக் குரங்களிடமிருந்து தப்பவே வழியில்லை என்று எனக்குப்பட்டது. ஆனால் அப்போது முன்பின் அறிமுகமில்லாத ஒருவரை வழியில் சந்தித்தேன். அவர் என்னை நோக்கி, குரங்குகளை எதிர்த்து நில் என்று கூவினார். நான் திரும்பிக் குரங்குகளை எதிர்த்து நின்றேன். அவை பின்வாங்கி முடிவில் ஓடியே மறைந்தன. இதுவே வாழ்க்கை முழுவதற்கும் படிப்பினையாகும். பயங்கரத்தை எதிர்த்து நில். அஞ்சாமல் அதை எதிர்த்து நில்.

26. எழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது. கருத்து இதுதான்- எது வந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையிலிருந்து நட்சத்திரங்கள் பிறழட்டும். முழு உலகம் நமக்கு எதிராக எழுந்து எதிர்த்து நிற்கட்டும். மரணம் என்றால் வேறு உடை மாற்றுவதுதான். அதனால் என்ன போயிற்று? இப்படிப் போராடு. கோழையாவதனால் நீ எந்த ஒரு பயனையும் பெறமாட்டாய். ஓர் அடி நீ பின்வாங்குவதனால் எந்த ஒரு துரதிருஷ்டத்தையும் தவிர்த்துவிட முடியாது. உலகிலுள்ள அத்தனை கடவுள்களையும் நீ கூவியழைத்துப் பார்த்தாகிவிட்டது. துன்பம் அதனால் ஓய்ந்துவிட்டதா? நீ வெற்றி பெற்றபோது கடவுளார் உனக்கு உதன முன்வந்தார்கள். அதனால் என்ன பயன்? போராடி முடி, நீ எல்லையற்றவன்; மரணமற்றவன்; பிறப்பற்றவன். எல்லையற்ற ஆத்மா ஆதலால் நீ அடிமையாக இருப்பது உனக்குப் பொருந்தாது எழுந்திரு! விழித்துக்கொள்! எழுந்து நின்று போராடு!

Bookmark and Share

மேலும் அறிவுரைகள்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)