Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> அறிவுரைகள்

நமது தாய்நாடு!செப்டம்பர் 25,2013

162.இந்தியா அழிந்துவிடுமா? அது அப்படி அழிந்து விடுமானால் உலகிலிருந்து எல்லா ஞானமும் அழிந்து போய்விடும். நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும்.சமுதாயத்தின் மீது நமக்குள்ள இதயபூர்வமான இனிய அனுதாப உணர்ச்சிகள் எல்லாம் அழிந்து போய்விடும், அவை இருந்த இடத்திலே காமமும் ஆடம்பரமும் ஆண் தொய்மாகவும் , பெண் தெய்வமாகவும் குடிகொண்டு ஆட்சி செய்யும். பணமே அங்குப் பூசாரியாக உட்கார்ந்து கொள்ளும். வஞ்சகம் பலாத் காரம், போட்டி ஆகியவற்றையே அது தன்னுடைய பூஜைக்கிரியை முறையாக வைத்துக் கொள்ளும். மனித ஆன்மாவையே அது பலிபீடத்தில் பலியாக்கும். ஆனால் அப்படிபட்ட ஒரு நிகழ்ச்சி என்றுமே நடக்கபேவதில்லை.

உயர்ந்த பண்புஒழுக்கம், ஆன்மிகம் ஆகிய எல்லாச் சிறந்த பெருமைகளுக்கும் பிறப்பளித்தவள் நமது இந்திய தாய். முனிவர்கள் பலர் வாழ்ந்த நாடு இந்த நாடு. கடவுளுக்குச் சமமதன மகான்கள் இன்னமும் இந்த நாட்டிலேதான் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய இந்தியாவில் அழிந்து பேய்விடும்?

எனது அருமைச் சகோதரா? ஒரு பழைய விளக்கை எடத்துக் கொண்டு, இந்தப் பரந்த உலகிலுள்ள நாடு நகரங்கள் பட்டி தொட்டிகள் , காடு கழனிகள் எல்லாவற்றின் ஊடேயும் உன்னை நான் பின் தொடர்கிறேன். உன்னால் முடியுமானால், இப்படிப்பட்ட தலைசிறந்த மகான்களை வேறு எந்த நாட்டிலாவது தேடிக் காட்டு பார்க்கலாம்.

163.நமது தாய்நாட்டிற்கு இந்த உலகம் பட்டிருக்கும் கடன் மகத்தானதாகும். நாட்டுக்கு நாடு எடுத்து ஒப்பிட்டுபார்த்தால் பொறுமை உள்ள இந்துவுக்கு, சாதுவான இந்துவுக்கு உலகம் கடமைப்பட்டிருப்பதைப் போன்று பூமியிலே வேறு எந்த இனத்துக்கும் உலகம் இவ்வளவு பெரிய அளவிலே கடன்பட்டிருக்கவில்லை என்பதை நீ பார்க்கலாம்.

கிரீஸ் நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே, ரோம் நாகரிகம் பிறப்பதற்கு வெகு நீண்ட காலத்திற்கு முன்பே, தற்கால இந்த நவீன ஐரோப்பியர்களின் முன்னோர் காட்டுமிராண்டிகளாகத் தங்களுடைய உடலிலே பச்சை குத்திக்கொண்டு காடுகளில் திரிந்து வாழ்ந்த அந்தக் காலத்திலேயே, நமது நாட்டில் மிக உயர்ந்த நாகரிகம் இருந்து வந்திருக்கிறது. ஏன் , அதற்கும் முன்பேகூட வரலாற்றில் குறிப்புக்களே கண்டுபிடிக்க முடியாத , சரித்திரமே புக முடியாத, இருணட அவ்வளவு மிகப் பழமையான காலத்திலிருந்து இன்று வரையிலும் பல உயர்ந்த கருத்துக்களும் சிந்தனைகளும் இந்த நாட்டிலிருந்துதான் அலையலையாக வெளியே சென்று பரவியிருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் அன்புடனும் வாழ்த்துக்களுடனும் சமாதானத்துடனுமே சென்றிருக்கின்றன.

164.மற்ற ஆரிய நாடுகளின் முன்னேற்றத்தின் முன்பு, இந்தியாவின் முன்னேற்றம் ஒளி மங்கிக் காணப்படுவதற்கான காரணத்தை நீ சொல்ல முடியுமா? அவள் அறிவாற்றலில் குறைந்தவளா? அவளுடைய கலை கணித அறிவு, தத்துவங்கள் ஆகிய இவற்றைப் பார். பிறகு அறிவாற்றலில் இந்திய அன்னை குறைந்தவள் என்று நீ சொல்ல முடியுமா? அவள் தன்னுடைய மயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தனது நீண்ட நெடுங்கால உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும் . இந்த ஒன்றுதான் உலக நாடுகளின் முன்னணியில் தனக்கு உரிய உயர்ந்த இடத்தை அவள் திரும்பப் பெறுவதற்குத் தேவையாகும்....துறவும் தொண்டுமே இந்தியாவின் இலட்சியங்கள். இந்தப் பாதையிலே மேலும் அவனை ஈடுபடுத்துங்கள். மற்றவை தாமாக வந்து சேரும்.

165. அமரத்துவம் வாய்ந்த எனது அருமைக் குழந்தைகளே ! நமது நாடு என்னும் இந்தக் கப்பல் பல்லாயிரக்கணக்கான நீண்ட நெடுங்காலமாகத் தனது நாகரிகத்தை ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறது. தனது எண்ணற்ற அரும்பெரும் செல்வங்களால் இந்த உலகம் முழுவதையும் மேலும் மேலும் வளமாக்கிக் கொண்டிருக்கிறது. பல ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக நமது இந்தக் கப்பல் வாழ்க்கை என்னும் கடலைக்கடக்க நமக்கு உதவி புரிந்து வந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்களை வாழ்க்கைக் கடலின் துன்பமற்ற மறுகரைக்கு அழைத்துச் சென்றபடியே இருக்கிறது. ஆனால், இன்று அந்தக் கப்பலில் ஓர் ஓட்டை விழுந்து பழுதடைந்து போயிருக்கிறது. இந்த நிலைக்கு உங்களுøடைய தவறுகளே காரணம். அல்லது வேறு காரணங்களும் இருக்கலாம். அதைகுறித்து நாம் அவ்வளவாகப் பொருட்படுத்த வேண்டியதில்லை. நீங்கள் அதில் அமர்ந்துகொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் அதில் அமர்ந்துகொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் செய்ய போகும் காரியம் என்ன? அந்தக் கப்பலைத் திட்டிக்கொண்டு, நீங்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் ஒற்றுமையாக இணைந்து, அந்தக் கப்பலைப் பழுது பார்க்க உங்கள் திறமைகள் அனைத்தையும் பயன்ஙபடுத்தப் போகிறீர்களா? நமது இதயத்தை மனமுவந்து
அந்த பணிக்கு நாம் தருவோமாக அல்லது அந்தப் பணியிலே தோல்வி அடைந்தால் மனதில் திட்டிக் கொண்டிருக்காமல் வாழ்த்திக்கொண்டே அனைவரும் ஒன்றாக மூழ்கி இறந்துவிடுவோமாக.

166. ஓர் அரக்கி தன்னுடைய உயிரை ஒரு சிறிய பறவையில் வைத்திருந்தாள். அந்தப் பறவை கொல்லப்பட்டாலன்றித் தன்னை ஒருவராலுமே கொல்ல முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இந்த அரக்கியின் கதையை நாம் குழந்தைகளாக இருந்தபோது கேட்டிருக்கிறோம். ஒரு நாட்டின் வாழ்க்கையும் அதைப் போன்றதே ஆகும்.. இப்போது நமது நாடாகிய இந்த அரக்கியின் உயிர்நாடி எங்கே இருக்கிறது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். அது மதத்தில்தான் இருக்கிறது. இதை ஒருவராலுமே அழித்துவிட முடியவில்லை எனவேதான் இந்திய நாடு எத்தனை எத்தனையோ துன்பங்களையும் சோதனைகளையும் கடந்து இன்னமும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு நாட்டினுடைய உயிர்நாடியைச் சமய வாழ்க்கையில் வைத்துக்கொண்டிருப்பதனால் என்ன நன்மை ஏற்பட்டுவிடப்போகிறது? அதை மற்ற நாடுகளில் உள்ளதைப் போன்று, சமுதாயச் சுதந்திரத்திலோ அல்லது அரசியல் சுதந்திரத்திலோ வைத்தால் என்ன? என்று படித்த இந்தியர் ஒருவர் கேட்கிறார். இவ்வாறு பேசிக்கொண்டிருப்பது மிகவும் சுலபம்.. உண்மை இதுதான். ஓர் ஆறு தன்னுடைய உற்பத்தி ஸ்தானமாகிய மலையிலிருந்து ஓராயிரம் மைல் தூரம் கீழே இறங்கி ஓடி வந்திருக்கிறது. அந்த ஆறு மீண்டும் தனது உற்பத்தி ஸ்தானத்துக்குத் திரும்பிப் போகுமா? அல்லது போகத்தான் முடியுமா? ஒருவேளை எப்போதாவது அந்த ஆறு அப்படித் திரும்பிப் போக முயற்சி செய்யுமானால், நாலாபுறங்களிலும் சிதறி, ஒன்றுமே இல்லாமல் வற்றிப் போய்விடும். எப்படி இருந்தாலும், அந்த ஆறு, பரந்த அழகிய சமவெளிகளில் பாய்ந்தோடியோ அல்லது கரடுமுரடான நிலத்தில் பாய்ந்து சென்றோ, விரைவிலோ அல்லது காலம் தாழ்ந்தோ உறுதியாகக் கடலில் சென்று கலக்கத்தான் போகிறது. பதினாயிரம் ஆண்டுகளாக நமது நாட்டில் இருந்து வரும் நமது சமுதாயத்தின் வாழ்க்கை அமைப்பு முறையைத் தவறு என்று சொன்னால், அதைத் திருத்துவதற்கு வேறு வழியே கிடையாது. இப்போது அதற்கு ஒரு புதிய இயல்பை உருவாக்குவதற்கு முயற்சி செய்தால், அது அழிவில்தான் முடியும். இந்த முடிவு தவிர்க்க முடியாததாகிவிடும்.

167. நமது நாட்டின் உயிர் வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்த்தால் சாம்பல் பூத்து இறந்து விட்டதைப் போலக் காணப்படுகிறது. ஆனால் அதன் அடியில் நெருப்பைப் போன்று அது இன்றும் கனன்று எரிந்துகொண்டிருக்கிறது. நமது நாட்டின் வாழ்க்கை மதத்தில்தான் அமைந்திருக்கிறது. அதன் மொழியும் மதம்தான்; மதமே அதனுடைய கருத்துக்கள்; அதனுடைய அரசியல், சமுதாயம், நகராட்சி மன்ற அமைப்புக்கள், பிளேக் தடுப்பு வேலைகள், பஞ்ச நிவராணப் பணிகள் ஆகிய இவை எல்லாமே மதத்தின் மூலமாகத்தான் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. இனிமேலும் அப்படியே நடத்தப்படவேண்டும். அவ்விதம் இந்தப் பணிகள் நடத்தப்படாவிட்டால், எனது நண்பரே, உம்முடைய எல்லாக் கூச்சல்களும் புலம்பல்களும் ஒன்றுமே இல்லாமல் பயனற்றவையாக முடிந்து போகும்.

168. ஒவ்வொரு நாட்டிலும் மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. வலிமை படைத்த ஒருசிலர் கட்டளை இடுகிறார்கள். அவற்றை எல்லாம் எஞ்சியுள்ள மக்கள் அனைவரும் செம்மறி ஆடுகளைப் போல, முடிந்த முடிவுகளாக ஏற்றுப் பின்பற்றி நடப்பார்கள். அவ்வளவுதான் விஷயம். உங்களுடைய பாராளுமன்றம், சட்டசபை, வாக்களிப்பு முறை, உங்கள் பெரும்பான்மை மக்களுடைய ரகசிய வாக்களிப்பு முறை - ஆகிய இவை அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். எனது நண்பரே, இவை எல்லாம் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் நடைபெறுகின்றன. இப்போது இங்கு இருக்கிற கேள்வி இதுதான்: இத்தகைய வலிமையைப் பெற்றவர்கள் இந்தியாவிலே யார் இருக்கிறார்கள்? ஆன்மிகத்துறையில் மிகப் பெரும் வலிமை படைத்த சமயச் சான்றோர்களிடையே அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தாம் நமது சமுதாயத்தை முன்னின்று வழி நடத்துகின்றனர். தேவைப்படும்போது மீண்டும் அவர்களே சமூகத்தின் விதிமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் மாற்றியமைக்கிறார்கள். அவர்கள் சொல்வதை நாம் அமைதியுடன் கேட்கிறோம். அவர்களின் கட்டளைகளைப் பின்பற்றி நடக்கவும் செய்கிறோம்.

169. முதலில் இதை நீ புரிந்துகொள்ள முயற்சி செய். மனிதன் சட்டங்களை உருவாக்குகிறானா அல்லது சட்டங்கள் மனிதனை உருவாக்குகின்றனவா? மனிதன் பணத்தைச் சம்பாதிக்கிறானா அல்லது பணம் மனிதனைப் படைக்கிறதா? பெயரையும் புகழையும் மனிதன் தேடிக் கொள்கிறானா அல்லது பேரும் புகழும் மனிதனை உருவாக்குகின்றனவா? எனது நண்பனே, முதலில் மனிதனாக இரு. அதன் பிறகு இவை எல்லாம் தாமாகவே உன்னைத் தொடர்ந்து வருவதைக் காண்பாய். வெறுக்கத்தக்க பொறாமையையும், நாய்களைப் போல ஒருவரை ஒருவர் பார்த்துப் பொறாமையுடன் குரைத்துக்கொண்டிருப்பதையும் விட்டொழித்துவிடு. ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்கு. நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். நீ வாழ்ந்து மறைந்ததற்கு உன் பின்னால் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல்.

170. உண்மை, அன்பு, நேர்மை ஆகியவற்றை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது. நீ நேர்மை உள்ளவனாக இருக்கிறாயா? இறந்தே போனாலும் சுயநலம் இல்லாதவனாக இருக்கிறாயா? அன்பு செலுத்துபவனாக இருக்கிறாயா? அப்படியானால் மரணத்துக்கும் நீ அஞ்ச வேண்டியதில்லை.

எனது அருமைக் குழந்தைகளே! முன்னேறிச் செல்லுங்கள். பரந்த இந்த உலகம் ஒளியை வேண்டுகிறது. அதை எதிர்பார்க்கிறது. இந்தியா மட்டும் அத்தகைய ஒளியைப் பெற்றிருக்கிறது. ஜாலவித்தையிலே இந்தியா அந்த விளக்கைப் பெற்றிருக்கவில்லை. போலித் தன்மையினாலும் அந்த விளக்கைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் உண்மையான மதத்தின் தலைசிறந்த சமய போதனையாகவும் மிகவும் உயர்ந்த ஆன்மிக உண்மையாகவும் அந்த விளக்கை இந்தியா பெற்றிருக்கிறது. ஆகையால் தான் பலவிதமான இன்ப துன்பங்களில் இருந்தும் இன்று வரையிலும் கடவுள் இந்தியாவைப் பாதுகாத்து வைத்திருக்கிறார். இப்போது அதற்கு உரிய சரியான நேரம் வந்துவிட்டது. எனது வீரக் குழந்தைகளே, நீங்கள் மகததான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்து நின்று வேலை செய்யுங்கள்.

171. மிருகபலத்தால் அல்லாமல், ஆன்மிக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப்போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக, அமைதி, அன்பு ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும்.. புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்துவிட்டாள். தனது அரியணையிலே அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று, என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள்- இந்தக் காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போலத் தெளிவாக நான் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்.

172. கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழும்பட்டும்! மீனவர்கள், சக்கிலியர்கள், தோட்டிகள் ஆகியவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழட்டும்! பலசரக்குக் கடைகள், பலகாரக் கடைகளிலிருந்தும் அவள் தோன்றட்டும்! தொழிற்சாலைகள். கடைவீதிகள், சந்தைகள் ஆகியவற்றிலிருந்தெல்லாம் புதிய இந்தியா எழுந்து வெளிவரட்டும்!

173. இந்தியர்களாகிய நம்மிடம் மிகப் பெரிய ஒரு குறைபாடு இருக்கிறது. அது காரணமாக நாம் மிகவும் துன்பப்படுகிறோம். அதாவது, நிரந்தரமான ஒரு ஸ்தாபனத்தை நாம் உருவாக்க இயலாதவர்களாக இருக்கிறோம். அதற்குக் காரணம், நம்முடைய அதிகாரத்தைப் பிறருடன் நாம் பங்கிட்டுக்கொள்ள ஒருபோதும் விரும்புவதில்லை. நாம் இறந்துபோன பிறகு என்ன நடக்கும் என்பதைப்பற்றியும் நாம் ஒருபோதும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

174. ஜெனரல் ஸ்ட்ராங் என்னும் எனது ஆங்கிலேய நண்பர் ஒருவர், சிப்பாய்க் கலகத்தின் போது இந்தியாவில் இருந்தார். அவர் சிப்பாய்க் கலகம் பற்றிய பல கதைகளை எனக்குக் கூறுவது வழக்கம். ஒரு நாள், நான் அவருடன் பேசிக்கொண்டிருந்த போது இடையில் அவரைக் கேட்டேன்: சிப்பாய்கள் போதுமான அளவுக்குத் தேர்ச்சி பெற்ற வீரர்களாக இருந்திருக்கிறார்கள். மேலும் அதோடு அவர்களிடம் தேவையான அளவு துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் உணவுப் பொருள்களும் இருந்திருக்கின்றன. அப்படி இருந்தும் அவர்கள் ஏன் படுதோல்வியடைந்தார்கள்?

அதற்கு அவர், சிப்பாய்க் கலகத்தின் படைத் தலைவர்கள், போரில் தாங்கள் முன்னணியில் ஈடுபடுவதற்குப் பதிலாக, படைக்குப் பின்னால் பாதுகாப்பான ஒரு பகுதியில் இருந்துகொண்டு, வீரர்களே, சண்டை போடுங்கள்! என்று கத்திக்கொண்டிருந்தார்கள். தலைமை ஏற்பவர்கள், தாங்கள் முதலில் மரணத்தை எதிர்நோக்க முன்வந்தாலன்றி, எஞ்சிய படைவீரர்கள் முழுமனதுடன் போரில் ஈடுபட முன்வரமாட்டார்கள் என்று பதில் சொன்னார். ஒரு தலைவன் என்பவன் தன்னுடைய தலையைப் பலி கொடுக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். ஓர் லட்சியத்துக்காக நீ உன் உயிரையும் அர்ப்பணிக்கக் கூடியவனாக இருந்தால்தான், நீ ஒரு தலைவனாக இருக்க முடியும். ஆனால் நாம் அனைவரும் தேவையான தியாகம் எதையும் செய்யாமலேயே தலைவர்களாகிவிட விரும்புகிறோம். அதன் விளைவு வெறும் பூஜ்யமாக முடிந்து போய்விடுகிறது. நாம் சொல்வதை ஒருவரும் கேட்பதில்லை.

175. முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள். மேலைநாட்டு மக்களிடையே சுதந்திர மனப்பான்மை மிகவும் அதிகம். என்றாலும் அவர்களிடம், கீழ்ப்படியும் தன்மையும் அதற்கு நிகராகவே இருக்கிறது. ஆனால் இங்கு நாமோ, கர்வம் கொண்டவர்களாக இருக்கிறோம். இந்த உணர்ச்சி எப்போதும் எந்தக் காரியத்தையும் சாதிப்பதில்லை. பெருமளவில் துணிவு, எல்லையற்ற வீரம், அளவு கடந்த ஆற்றல், அதோடு இவை அனைத்திற்கும் மேலாக முழு அளவிலான கீழ்ப்படியும் தன்மை ஆகிய இந்தக் குணங்கள்தாம் தனி மனிதனின் முன்னேற்றத்துக்கும் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கும் இட்டுச் செல்கின்றன. இத்தகைய குணங்கள் நம்மிடம் அறவே இல்லாமற் போய்விட்டன.

176. அடிமைகளின் குணமாகிய பொறாமைதான் நமது நாட்டின் அழிவுக்கே காரணமாக அமைந்திருக்கிறது. ஆண்டவனே தன் முழு வலிமையைச் செலுத்தியும் இந்தக் காரணத்தால் நமக்கு உதவி ஒன்றுமே செய்ய முடியாமற் போயிற்று. தன் கடமைகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு இறந்துபோன ஒருவனாக இப்போது என்னை நீ நினைத்துக்கொள். அந்த வேலைகளின் சுமை முழுவதும் உன் தோள்களின் மீதே சுமத்தப்பட்டிருப்பதாக நினைத்துக்கொள். நமது தாய்நாட்டின் இளைஞர்களே! இந்தப் பணியை நிறைவேற்றுவதற்காகவே விதியால் நீங்கள் கருதுங்கள். இத்தகைய ஆக்கபூர்வமான நற்பணிகளில் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்காக முழுமனதுடன் ஈடுபடுங்கள்.

177. தனி ஒரு மனிதனோ அல்லது ஒரு நாடோ மற்றச் சமூகத்தினரிடமிருந்து விலகி நின்று வாழ முடியாது என்பதை மனப்பூர்வமாக நம்புகிறேன். ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதும் வாங்குவதும்தான் இயற்கையில் உள்ள விதியாகும். இந்தியா மீண்டும் ஒரு முறை தன் உயர்ந்த நிலையை அடைய விரும்பினால், அது தன்னிடமுள்ள அரும் பெரும் ஆன்மிகப் பொக்கிஷங்களை வெளியே கொண்டு வந்து ஏனைய உலக நாடுகளிடையே பரப்பியாக வேண்டும். அதற்குப் பதிலாக மற்ற நாடுகள் கொடுப்பதையும் பெறத் தயாராக இருக்க வேண்டும். இது முற்றிலும் இன்றியமையாததாகும். விரிந்துகொண்டே போவதுதான் வாழ்க்கை. குறுகிச் செல்வதை மரணம் என்றுதான் சொல்ல வேண்டும். அன்புதான் வாழ்க்கையாகும். வெறுத்து ஒதுக்குவதை மரணம் என்றுதான் சொல்ல வேண்டும். என்றைய தினம் மற்ற இனத்தவர்களை நாம் வெறுக்க ஆரம்பித்தோமோ, அன்று முதலே நாம் இறந்துபோகத் தொடங்கிவிட்டோம். மலர்ந்து விரிவதாகிய வாழ்க்கைக்கு நாம் திரும்பிச் செல்லாவிட்டால், நமது அழிவை எதுவுமே தடுத்து நிறுத்த முடியாது.

178. பாமர மக்களைப் புறக்கணித்து ஒதுக்கியதுதான் நமது நாடு செய்த பெரும்பாவம் என்று நான் கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் பாமர மக்களுக்குச் சிறந்த கல்வியையும், நல்ல உணவு வசதிகளையும் கொடுத்து, அவர்களை நன்றாகக் கவனிக்க வேண்டும். அந்தப் பாமர மக்கள்தாம் நம்முடைய கல்விக்கு வரியாகப் பணம் தருகிறார்கள். அவர்களே நமது கோயில்களையும் கட்டுகிறார்கள். ஆனால் அவற்றுக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைப்பதோ வெறும் உதைகள்தாம். நடைமுறையில் அவர்கள் நம் அடிமைகளாகவே இருக்கின்றனர். இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால், இந்தப் பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும்.

179. இந்துக்கள் தங்களுடைய கடந்த கால வரலாற்றை ஆழ்ந்து படிக்கும் அளவிற்கு ஏற்ப, அவர்களின் எதிர்காலம் மேலும் மேலும் பெருமைக்கு உரியதாக அமையும். யார் ஒருவர் இந்தியாவின் கடந்த காலப் பெருமைகளை வீடுதோறும் கொண்டு சென்று போதிக்கிறாரோ, அவரே நம் தாய்நாட்டிற்கு மிகப் பெரிய அளவில் நன்மை செய்தவராவார். இந்தியாவின் வீழ்ச்சி, பண்டைக் காலத்தில் நிலவிய சட்டங்களும் பழக்க வழக்கங்களும் தவறானவையாக இருந்த காரணத்தால் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக, அவற்றுக்கு உரிய நியாயமான முடிவு கிட்டும் வரையிலும் அவற்றைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாத காரணத்தால்தான் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

180. செய்து முடிக்கப்பட வேண்டிய பணிகள் மிகவும் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அவற்றை நிறைவேற்றி முடிப்பதற்கான வசதிகளோ இந்த நாட்டில் இல்லை. நம்மிடம் அறிவு இருக்கிறது. ஆனால் பணிபுரிவதற்கான கைகள்தாம் இல்லை. நம்மிடம் வேதாந்தக் கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய ஆற்றல் இல்லை. நமது நூல்களில் உலக சமத்துவம் பற்றிய கொள்கை கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையிலோ நாம் பெருமளவுக்கு வேற்றுமை பாராட்டுகிறோம். இதே இந்தியாவில் தான், மிகவும் உயர்ந்த சுயநலமற்ற, பயன்கருதாத பணியைக்குறித்த உண்மைகள் போதிக்கப்பட்டன. ஆனால் நடைமுறையில் நாம் மிகவும் கொடூரமானவர்கள்; இதயம் இல்லாதவர்கள் நமது சதைப்பிண்டமாகிய உடலைத் தவிர வேறு எதைப்பற்றியுமே நினைக்க முடியாதவர்கள்.

செல்வச் செழிப்பை இழந்து, அதிர்ஷ்டத்தை இழந்து, பகுத்தறிவையும் அறவே இழந்து, நசுக்கப்பட்டு, என்றைக்கும் பட்டினியால் வாடியபடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டவர்களாகவும் பொறாமை கொண்டவர்களாகவும் உள்ள இந்த இந்திய நாட்டு மக்களை, யாரேனும் ஒருவர் மனப்பூர்வமாக நேசித்தால், இந்தியா மீண்டும் விழித்துக்கொள்ளும் என்று நான்கூடத்தான் நம்புகிறேன். எப்போது, பரந்த இதயம் படைத்த நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் வாழ்க்கையின் ஆடம்பரங்களையும் எல்லா இன்பங்களையும் துறந்துவிட்டு, ஆதரவற்ற நிலை, அறியாமை ஆகிய நீர்ச்சுழலில் சிறிது சிறிதாக மிகக் கீழ்நிலைக்கு மூழ்கிச் சென்றுகொண்டிருக்கும் நம் நாட்டுக் கோடானுகோடி மக்களின் நல்வாழ்விற்காக வருந்தித் தங்களின் முழு ஆற்றலையும் செலுத்தி உழைக்க முன்வருவார்களோ, அப்போதுதான் இந்தியா விழித்தெழும்.

181. இந்தியாவிலுள்ள எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படை வேராக அமைந்துள்ளது இந்த நாட்டு ஏழை மக்களின் இழிந்த நிலையே ஆகும். மேலைநாட்டு ஏழை மக்களைப் பேய்கள் என்றுதான் சொல்லவேண்டும். அவர்களோடு ஒப்பிட்டால் நம் நாட்டு மக்களைத் தேவதூதர்கள் என்றே சொல்ல வேண்டும். ஆகவே, இவர்களின் நிலையைச் சுலபமாக உயர்த்திவிடலாம். இவர்களுக்குக் கல்வியை அளித்து, இவர்கள் இழந்துவிட்ட தனித்தன்மையை வளர்த்துக் கொள்ளும்படி செய்வதே இப்போது நாம் இவர்களுக்குச் செய்ய வேண்டிய ஒரே சேவையாகும்.

182. கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக இந்தியாவில் சீர்திருத்த மன்றங்களும் சீர்திருத்தக்காரர்களும் நீர்க்குமிழிகளைப் போலத் தோன்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தோ! அவர்களில் ஒவ்வொருவரும் தோல்வியே அடைந்திருக்கின்றனர். சீர்திருத்தத்தின் ரகசியம் எங்கே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாமற் போய்விட்டது. அவர்களுக்கு இருந்த அவசரத்தில் நமது சமுதாயத்திலுள்ள எல்லாத் தீமைகளையும் மதத்தின் மேலேயே அவர்கள் சுமத்திவிட்டார்கள். தன் நண்பனின் நெற்றியிலே உட்கார்ந்த கொசுவைக் கொல்வதற்காக ஒருவன் முயற்சி செய்தான். அவன் கொடுத்த பலமான அடிகள் மனிதனையும் கொசுவையும் சேர்த்தே கொன்றுவிட்ட கதையைப் போல, இந்தச் சீர்திருத்த முறைகளும் அமைந்துவிட்டன. ஆனால், இந்த முயற்சியில் அதிர்ஷ்டவசமாக அசைக்க முடியாத ஒரு பெரிய பாறையின் மீதே மோதிக் கொண்டார்கள். மோதலினால் ஏற்பட்ட அந்த அதிர்ச்சியே அவர்களை நசுக்கி அழித்துவிட்டது. சுயநலம் இல்லாத, உயர்ந்த, ஆனால் அதே சமயத்தில் தவறான வழியில் சென்ற அந்தச் சீர்திருத்தக்காரர்களின் புகழ் வாழட்டும். உறங்குகிற கும்பகர்ணனை எழுப்புவதற்கு, அந்தப் பெரிய அதிர்ச்சிகளெல்லாம் தேவைப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் அழிவு வேலைகளைச் சேர்ந்தவையே ஆகும். ஆக்கப்பணிகள் ஆகிவிடா. இந்தக் காரணத்தால்தான், அந்த முயற்சிகள் எல்லாம் நிலைத்து நிற்கக் கூடியவை அல்ல. எனவே தான் அவையாவும் அழிந்து போயிருக்கின்றன. நாம் அவர்களை வாழ்த்துவோமாக. அவர்களின் அனுபவத்தின் மூலமாக நாம் பயனடைவோம். நீ கிழக்கு, மேற்குத் திசைகள் எல்லாவற்றிலும் முயற்சி செய்து பார். இந்து என்னும் இனம் முற்றிலும் அழிந்து மறைந்து, அதற்குப் பதிலாக வேறு ஒரு புதிய இனம் அந்த இடத்துக்கு வரும் வரையிலும், இந்தியா அழிந்து மறையும் வரையிலும், இந்தியா ஒருபோதும் ஐரோப்பாவாக ஆகிவிடாது.

183. இதை நீ கவனத்தில் வைத்துக்கொள். ஆன்மிக லட்சியத்தைப் புறக்கணித்துவிட்டு, மேலை நாட்டு லவுகிக நாகரிகத்தின் பின்னால் நீ செல்வாயானால், அதன் விளைவாக மூன்றே தலைமுறைகளில் உனது இனம் அழிந்துபோய்விடும். ஏனென்றால், நமது நாட்டின் முதுகெலும்பு முறிந்து, எந்த அடிப்படையின் மீது நமது நாட்டின் கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளதோ, அந்த அடித்தளம் ஆட்டம் கண்டுவிடும். நாலா பக்கங்களிலும் அழிவைத்தான் நீ காண்பாய்.

184. எனது சகோதரர்களே! நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக. உறங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால இந்தியா நமது உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது. இந்தியத் தாய் தயாராகக் காத்திருக்கிறாள். அவள் உறங்கிக்கொண்டு மட்டும்தான் இருக்கிறாள். எழுமின்! விழிமின்! இந்த நமது தாயகமாகிய தேவி, தனது அழிவற்ற அரியணையின் மீது புத்திளமை பெற்றவளாக, முன்பு எப்போதும் இருந்ததை விடவும் அதிகமான மகிமை கொண்டவளாக அமர்ந்திருப்பதைக் காணுங்கள்.

185. கண்டனம் செய்யும் சொல் எதையுமே சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக்கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் நாட்டின் சுமை முழுவதும் உங்களின் தோள்களின் மீதே சுமத்தப்பட்டிருப்பதாக எண்ணிக்கொண்டு, இந்த நாட்டின் கதிமோட்சத்திற்காகவும் உலகத்தின் கதிமோட்சத்திற்காகவும் பணியாற்றுங்கள். வேதாந்தத்தின் ஒளியையும் வாழ்க்கை முறைகளையும் வீட்டுக்கு வீடு எடுத்துச் செல்லுங்கள். ஒவ்வொருவரிடமும் மறைந்திருக்கும் தெய்விகத் தன்மையை அதன் மூலமாக வெளிப்படுத்துங்கள்.

186. உங்களுடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுங்கள். நமக்குத் தேவை, இரும்பைப் போன்ற தசைகளும், எஃகைப் போன்ற நரம்புகளும்தாம். காலமெல்லாம் அழுதுகொண்டிருந்ததுபோதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக்கூடாது. சுய வலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.

187. உறுதியுடன் இரு. அதற்கு மேலாகத் தூய்மையாகவும், முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு. உன் விதியில் நீ நம்பிக்கை கொண்டிரு. அது, கையில் காசில்லாத உன்னை நம்பித்தான் இருக்கிறது. ஏழையாக இருக்கிறாய். ஆகவே நீ வேலை செய்வாய். உன்னிடம் எதுவுமே இல்லாத காரணத்தால் சிரத்தை உள்ளவனாக இருப்பாய். அவ்விதம் இருப்பதனால் எல்லாவற்றையும் துறந்துவிடுவதற்கும் நீ தயாராக இருப்பாய். இதைத்தான் நான் இப்போது உனக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

188. என் குழந்தைகளே! இரக்கம் கொள்ளுங்கள். ஏழைகள், அறியாமையில் இருப்பவர்கள், நசுக்கப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள். இதயமே நின்றுபோகும் வரையிலும், மூளை கொதித்துப் போகும் வரையிலும் இரக்கம் கொள்ளுங்கள். உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று நினையுங்கள். அதன்பிறகு கடவுளின் காலடிகளில் உங்கள் ஆன்மாவை அர்ப்பணியுங்கள். அப்போது உங்களுக்கு ஆற்றல் வந்து சேரும், உதவி வந்து சேரும். அசைக்கவே முடியாத உறுதியான வலிமை வந்து சேரும். போராட்டம்! போராட்டம்! இதுவே கடந்த பத்து ஆண்டுகளாக என் வாழ்க்கையின் லட்சியமாக இருந்து வந்திருக்கிறது. இப்போதும் போராட்டம் என்றுதான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். எங்கும் எல்லா இடத்திலும் இருள் சூழ்ந்திருக்கும் போதும் போராட்டம் என்றுதான் நான் சொல்வது வழக்கம். வெளிச்சம் வரும் போதும் போராட்டம் என்றுதான் நான் சொல்கிறேன். என் குழந்தைகளே! அஞ்ச வேண்டாம்.

189. கொழுந்து விட்டெரியும் ஆர்வத்தை நாலாபுறங்களிலும் பரப்புங்கள். செயலாற்றுங்கள்! செயலாற்றுங்கள்! வேலை செய்யும்போது ஒரு வேலைக்காரனைப் போலவே இருங்கள். சுயநலம் அற்றவர்களாக இருங்கள். ஒரு நண்பன் மற்றொருவரைத் தனிமையில் தூற்றுவதை ஒருபோதும் கேட்டுக்கொண்டிருக்காதீர்கள். எல்லையற்ற பொறுமையைக் கடைப்பிடியுங்கள். வெற்றி உங்களுடையதே. கவனமாக இருங்கள். உண்மை அல்லாதவற்றில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உண்மையில் பிடிப்புள்ளவர்களாக இருங்கள். மெதுவாகவே என்றாலும் நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறப்போவது உறுதி. முழுவேலையும் உங்களையே பொறுத்திருப்பதாக நினைத்து, வேலையில் ஈடுபடுங்கள். ஐம்பது நூற்றாண்டுகள் உங்களை எதிர்நோக்கி இருக்கின்றன. எதிர்கால இந்தியா உங்களைப் பொறுத்தே அமையப் போகிறது. வேலை தொடரட்டும்.

190. இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், நவீனத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஆகிய உங்களிடம்தான் என் நம்பிக்கை இருக்கிறது. இவர்களிடமிருந்தே என் தொண்டர்கள் தோன்றுவார்கள். சிங்கங்களைப் போல அவர்கள் எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து வைப்பார்கள். நான் என் கருத்தை வகுத்து அதற்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறேன். இந்தியா முழுவதும் இந்தக் கருத்துக்கள் பரவும் வகையிலும், அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இந்த அரிய கருத்துக்களைப் பரப்பிக்கொண்டே செல்வார்கள்.

191. தங்களுடைய தாய்நாட்டின் நன்மைக்காக எல்லாவற்றையும் துறக்கவும் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்யவும் கூடியவர்களாக ஒருசில இளைஞர்களே நமக்குத் தேவை. முதலில் அவர்களுடைய வாழ்க்கையை நாம் நல்ல முறையிலே உருவாக்க வேண்டும். அதன் பிறகுதான் ஏதாவது உண்மையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

192. மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது. மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு நினைப்பதுங்கூடச் சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இதயத்திற்குப் படிப்படியாகத் தருகிறது. நான் உங்களை எல்லாம் மிகவும் நேசிக்கிறேன். என்றாலும், நீங்கள் அனைவரும் பிறருக்காக உழைத்து உழைத்து அந்தப்

உண்மை தூய்மை சுயநலமின்மை ஆகிய இந்த மூன்றும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ, அவற்றைப் பெற்றிருப்பவர்களை நசுக்கக்கூடிய ஆற்றல் விண்ணுலகிலோ மண்ணுலகிலோ எங்குமே கிடையாது. இந்த மூன்றையும் பெற்றுள்ள ஒருவனைப் பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து நிற்கக்கூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு.

மக்கள் உன்னைப் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, அதிர்ஷ்ட தேவதை உனக்கு அருள் புரியட்டும். அல்லது புரியாமல் போகட்டும். உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போகட்டும். நீ மட்டும் உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவேனும் பிறழ்ந்து செல்லாமல் இருப்பதில் கவனமாக இரு. அமைதியாக துறைமுகத்தை ஒருவன் அடைவதற்குள் எத்தனை எத்தனை பெரும் புயல்களையும் அலைகளையும் சமாளித்து வரவேண்டியிருக்கிறது. மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி, அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும்.

193. தன் உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரையிலும் உள்ள நாடி நரம்புகளில் பாய்ந்து செல்லும் ஏராளமான ரஜோகுணத்தைப் பெற்ற ஒரு மாவீரன்-ஆன்மிக உண்மைகளை அறிய வேண்டும் என்னும் துணிவும், தேவைப்பட்டால் அதற்காகத் தன் உயிரையும் பணயம் வைக்கவும் தயாராக உள்ள வீரன் - தியாகத்தையே தன் கவசமாகவும் ஞானத்தையே வாளாகவும் ஏந்திய ஒரு வீரன்-இத்தகைய ஒரு மாவீரனே இப்போது நமக்கு மிகவும் தேவைப்படுகிறான். வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து உருகி நிற்கும் காதலனின் மனநிலை நமக்குத் தேவையே இல்லை. மாறாக, வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாது எதிர்த்து நிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது தேவை.

194. உங்களிடமே நீங்கள் நம்பிக்கை வையுங்கள். ஒரு காலத்தில் நீங்கள் வேதகாலத்தைச் சேர்ந்த ரிஷிகளாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் வேறுவித வடிவம் தாங்கி வந்திருக்கிறீர்கள். அவ்வளவுதான் விஷயம். உங்கள் அனைவரிடமும் எல்லையற்ற ஆற்றல் குடிகொண்டிருப்பதைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போல அவ்வளவு தெளிவாக நான் பார்க்கிறேன். ஆடைகளை வரிந்து கட்டிக்கொண்டு உங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் முழு அளவில் ஈடுபடுத்தி வேலைகளில் மும்முரமாக ஈடுபடுங்கள். நிலையில்லாத இந்தப் பொருளையும் புகழையும் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? நான் என்ன நினைக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? முக்தி அல்லது இவை போன்றவற்றைக் குறித்து நான் பொருட்படுத்தவே இல்லை. உங்கள் அனைவருடைய உள்ளத்திலும் இத்தகைய எண்ணங்களை எழுப்பி விடுவதுதான் என் வாழ்க்கையின் குறிக்கோள். ஒரே ஒரு மனிதனுக்கு நல்வழியில் பயிற்சி அளிப்பதற்காக, நூறாயிரம் பிறவிகளை எடுப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன்.

195. என் மகனே! மரணம் நேருவதைத் தடுப்பதற்கில்லை என்றால் கற்களைப் போலவும் கட்டைகளைப் போலவும் செத்து மடிவதைவிட வீரர்களைப் போல இறப்பது மேலானது அல்லவா? நிலையில்லாத இந்த உலகிலே இரண்டொரு நாள் அதிகமாகவே வாழ்ந்து விடுவதனால் பெறப்போகிற பயன் என்ன? வாழ்க்கை என்னும் கத்தி துருப்பிடித்து அழிந்து போவதைவிடத் தேய்ந்து அழிவதே மேலானது. அதிலும் குறிப்பாக, மற்றவர்களுக்கு ஒரு சிறிதளவிற்கு நன்மை செய்வதற்காக அழிந்துபோவது மிகவும் நல்லது.

196. உடலில் உறுதி இல்லாமலும், மனதில் ஊக்கம் இல்லாமலும், தங்களுக்கென்று புதிய கருத்து எதுவுமே இல்லாமலும், உயிரில்லாத களிமண் உருண்டைகள் போல இவர்கள் என்னதான் செய்யப்போகிறார்கள்? உற்சாகப்படுத்தித் தூண்டிவிடுவதன் மூலமாக இவர்களிடம் நான் உயிர்ப்பு உண்டாக்க விரும்புகிறேன். இந்தப் பணிக்காக நான் என்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறேன். வேத மந்திரங்களின் தவிர்க்க முடியாத எழுச்சி மிக்க வலிமையால் இவர்களை நான் எழுப்பி விடுவேன். எழுமின்! விழிமின்! என்னும் இந்த அச்சமற்ற செய்தியை இவர்களிடம் அறைகூவிச் சொல்வதற்காகவே நான் பிறந்திருக்கிறேன். இந்தப் பணியில் நீங்கள் என்னுடைய உதவியாளர்களாக இருங்கள்.

197. மக்களின் எண்ணிக்கையோ, செல்வமோ, வறுமையோ முக்கியமல்ல. சொல், செயல், சிந்தனைகளால் ஒன்றாக விளங்கும் ஒருசிலரால் உலகையே ஆட்டி வைக்க முடியும்-இந்த உண்மையை எப்போதும் மறந்துவிடாதீர்கள். எதிர்ப்பு ஏற்படுவது நல்லதுதான். அணை போட்டுத் தடுக்காவிட்டால் ஓர் ஆறு வேகத்தைப் பெற முடியுமா? ஓர் இயக்கம் புதிதாகவும் நன்மை தருவதாகவும் இருக்கும் அளவுக்கு ஏற்ப ஆரம்பத்தில் எதிர்ப்புகளைச் சந்திக்கவும் நேரும். இந்த எதிர்ப்புகளே பிறகு வரப்போகும் வெற்றிக்கு அறிகுறியாகும்.

198. பாராட்டப்படுகிறேனோ இல்லையா, இந்த இளைஞர்களை ஒன்று திரட்டிச் செயலில் ஈடுபடச் செய்வதற்காக நான் பிறந்திருக்கிறேன். அது மட்டுமல்ல, ஒவ்வொரு நகரத்திலும் நூற்றுக்கணக்கான பேர் என்னுடன் சேர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தவே முடியாத அலைகளைப் போலப் புரட்டி அடித்துக்கொண்டு போகும் வகையில் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்க விரும்புகிறேன். அவர்கள் மிகவும் தாழ்ந்தவர்களாகவும் சமுதாயத்தால் நசுக்கப்பட்டவர்களாகவும் உள்ளவர்களின் வீட்டு வாசலுக்கே சென்று, வசதி, ஒழுக்கம், மதம், கல்வி ஆகியவற்றைக் கொண்டு சேர்ப்பார்கள். இதை நான் சாதித்தே தீருவேன்! அல்லது செத்து மடிவேன்.

199. நீங்கள் உண்மையிலேயே என் குழந்தைகளானால், எதற்குமே அஞ்சி ஸ்தம்பித்து நின்றுவிடமாட்டீர்கள். நீங்கள் சிங்க ஏறுகளைப் போலத் திகழ்வீர்கள். இந்தியாவையும், இந்த உலகம் முழுவதையுமே நாம் தட்டியெழுப்பியாக வேண்டும். தங்களுடைய பணியைச் செய்து முடிப்பதற்காகத் தீயில் குதிப்பதற்கும் என் குழந்தைகள் தயாராக இருக்க வேண்டும்.

200. ஓ பாரத நாடே! உன் பெண்மையின் லட்சியம் சீதை, சாவித்திரி, தமயந்தி என்பதை நீ மறந்துவிடாதே! நீ வணங்கும் தெய்வம் யோகிகளுக்கெல்லாம் பெரிய யோகியும் எல்லாவற்றையும் துறந்து விட்ட சங்கரரும் ஆகிய உமாபதியே என்பதை நீ மறக்க வேண்டாம். உன் திருமணம், உன் செல்வம், உன் வாழ்க்கை ஆகியவை உன் ஐம்புலன் இன்பத்துக்காக அல்ல; உன் தனிப்பட்ட சுய இன்பத்துக்காகவும் அல்ல என்பதை நீ மறந்துவிடாதே. தேவியின் பலிபீடத்தில் பலியாவதற்கென்றே பிறந்திருக்கிறாய் என்பதை நீ மறக்காதே. தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள், அறியாமை மிக்கவர்கள், ஏழைகள், கல்வியறிவற்றவர்கள், சக்கிலியர், தோட்டிகள் ஆகியவர்கள் அனைவருமே உன்னுடன் இரத்தத் தொடர்புடைய நெருக்கமான உறவினர்களே, உன் உடன்பிறந்த சகோதரர்களே என்பதை நீ மறந்துவிடாதே.

201. எங்கெல்லாம் கொள்ளை நோய் பரவுகிறதோ, பஞ்சம் ஏற்படுகிறதோ மக்கள் துன்பத்தில் வாடுகிறார்களோ அங்கெல்லாம் நீங்கள் அனைவரும் சென்று அவர்களுடைய துன்பத்தைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். மிஞ்சிப் போனால் இந்த முயற்சியில் அதிகப் பட்சம் நீங்கள் உயிரிழக்க நேரிடலாம். அதனாலென்ன? உங்களைப் போல எத்தனை எத்தனையோ பேர் நாள்தோறும் புழுக்களைப் போலப் பிறப்பதும் இறப்பதுமாக இருக்கிறார்கள். அதனால் இந்தப் பரந்த உலகத்திற்கு என்ன குறைந்து போய்விட்டது? மரணம் வருவதோ உறுதி. ஆனால் இறப்பதற்கு என்று மேலான லட்சியத்தைக் கொண்டிரு. மேலானதொரு குறிக்கோளுக்காக வாழ்ந்து இறந்துபோவது மிகவும் சிறந்தது.

202. மேலைநாட்டு உதவி எதையுமே நீங்கள் நம்பி இருக்கக்கூடாது. தனிமனிதர்களைப் போலவே நாடுகளும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்துகொள்ள வேண்டும். இதுதான் உண்மையான தேசபக்தியாகும். ஒரு நாடு அவ்விதம் செய்ய முடியாமற் போனால், அதற்கு உரிய சரியான நேரம் இன்னும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட நாடு, காலம் வரும் வரையிலும் சற்றுக் காத்திருக்கத்தான் வேண்டும்.

203. மரணம் வரும் வரையிலும் வேலை செய். நான் உன்னுடன் இருக்கிறேன். நான் இறந்த பிறகும் என் ஆவி உன்னுடன் இருந்து வேலை செய்யும். இந்த வாழ்க்கை வருவதும் போவதுமாக இருக்கிறது. செல்வம், புகழ், இன்பங்கள் இவை எல்லாமே ஏதோ ஒரு சில நாட்களுக்குத்தான் நிலைத்திருக்கப் போகின்றன. உலகப் பற்று நிறைந்த ஒரு புழுவைப் போல இறந்து போவதைவிட, உண்மையை எடுத்துப் போதித்துக் கொண்டே கடமை என்னும் களத்திலே உயிரை விடுவது மிக மிக மேலானது. முன்னேறிச் செல்!

Bookmark and Share

மேலும் அறிவுரைகள்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)