ஓம் ஜெய ஜெய ஹரஹர விவேகா னந்தம் ஜெகத்குரு மலரடி போற்றி
ஓம் பிரம்மம் உணர்ந்து பிரம்மத்தில் திளைத்த பெருமான் மலரடி போற்றி
ஓம் அகண்ட பிரம்ம அனுபவம் உடைய ஐயன் மலரடி போற்றி
ஓம் அகமும் புறமும் தூய்மையாய் துலங்கிட அருளுரை அளித்தவன் போற்றி
ஓம் அகயிருள் நீக்கும், ஆணவம் அறுக்கும் ஞான ஞாயிறு போற்றி
ஓம் புவனேஸ் வரியின் சிவபூஜை பயனே உருவாய் உதித்தவன் போற்றி
ஓம் பரம ஹம்சரின் முதன்மைச் சீடனாய் பாரில் உதித்தவன் போற்றி
ஓம் பரம ஹம்சரின் பாற்கடல் தவத்தில் உதித்த அமுதம் போற்றி
ஓம் மங்களம் தந்திட மண்ணில் உதித்த விண்ணின் ஒளியே போற்றி
ஓம் மானுட வேடம் தரித்தே வந்த வீரேஸ் வரனே போற்றி
(ஓம் ஜெய ஜெய ஹர ஹர விவேகா னந்தம் ஜெகத்குரு... மலரடி போற்றி)
ஓம் வங்க மண்ணில் பாங்குற வளர்ந்த பங்கயக் கண்ணன் போற்றி
ஓம் பவதா ரிணியின் சந்நதி தன்னில் நெகிழ்ந்து நின்றவன் போற்றி
ஓம் மோனத் தவத்தில் முத்திரை பதித்து முழுநில வானவன் போற்றி
ஓம் காசிப் பூரில் நிர்வி கல்ப சமாதி பெற்றவன் போற்றி
ஓம் எங்கும் எதிலும் இறைவனைக் கண்ட ஞான நாயகன் போற்றி
ஓம் சாரதைத் தாயின் ஆசிகள் பெற்ற அருந்தவச் செல்வன் போற்றி
ஓம் அலைகடல் குமரியில் அருந்தவம் புரிந்த அறத்தின் நாயகன் போற்றி
ஓம் தங்கத் தமிழகம் வந்து மகிழ்ந்த வங்கத்தின் சிங்கம் போற்றி
ஓம் பகவான் ராம கிருஷ்ணரின் பாதம் நித்தம் பணிந்தவன் போற்றி
ஓம் புவியோர் போற்றும் பரம ஹம்சரின் பெருமை உணர்த்தினன் போற்றி
(ஓம் ஜெய ஜெய ஹர ஹர விவேகா)
ஓம் முதன்முத லாகக் கடலைக் கடந்த ஹிந்துத் துறவியே போற்றி
ஓம் அமெரிக்க நாட்டில் சரித்திரம் படைத்த சிகாகோ செல்வன் போற்றி
ஓம் இந்திய நாட்டை உலக அரங்கினில் உயர்த்திய அண்ணல் போற்றி
ஓம் எத்தனை இருளோ அத்தனை இருளையும் அகற்றிய ஆதவன் போற்றி
ஓம் சோதனை களையே சாதனை யாக்கி சரித்திரம் படைத்தவன் போற்றி
ஓம் ÷க்ஷமம் தந்திட சேதுவில் வந்து இறங்கிய செல்வன் போற்றி
ஓம் அறிவுக் கூர்மையால் அறந்தனை நிறுவிய ஆதி சங்கரன் போற்றி
ஓம் சிவசிவ சிவசிவ என்றே உரைத்த சிவனின் அம்சம் போற்றி
ஓம் தூய்மை தூய்மை தூய்மை எனவே தூய்மையாய் வாழ்ந்தவன் போற்றி
ஓம் தன்னம் பிக்கை, கம்பீரத் தோற்றம், வீரம் கொண்டவன் போற்றி
(ஓம் ஜெய ஜெய ஹர ஹர விவேகா)
ஓம் சிங்கத்தின் ஏறாய் செயலில் வீரனாய் அறந்தனை நாட்டினாய் போற்றி
ஓம் தெள்ளிய ஞானச் சிங்கமாய் விளங்கிய தனிப்பெரும் மூர்த்தி போற்றி
ஓம் புதுயுகம் படைக்க பாரதம் எழுக என்ற முழங்கினன் போற்றி
ஓம் நாட்டுக் குழைக்கும் நல்லோர் படையை உலகிற் களித்தவன் போற்றி
ஓம் பலமே வாழ்வு பலவீனம் மரணம் என்று பகர்ந்தனன் போற்றி
ஓம் பீடுடை நடையான், பொறிபுலன் வென்றான், பெருமான் மலரடி போற்றி
ஓம் புதுவிதி செய்து புதுயுகம் படைத்த புதியநல் புத்தன் போற்றி
ஓம் மனஉறுதி யிலென்றும் இமயம் நிகர்த்த மாசிலாத் துறவி போற்றி
ஓம் வான்போல் பரந்த இதயம் படைத்த விவேகா னந்தன் போற்றி
ஓம் வீர நாயகன், விவேக நாயகன், வெற்றி நாயகன் போற்றி
(ஓம் ஜெய ஜெய ஹர ஹர விவேகா)
ஓம் ஆன்ம சக்தியால் அகிலம் வென்ற அற்புதத் தவமணி போற்றி
ஓம் தஞ்சம் அளிக்கும் தாயும் தந்தையு மான தயாபரன் போற்றி
ஓம் நலிந்தோர்க் கெல்லாம் நல்லருள் புரியும் நவநிதி யானவன் போற்றி
ஓம் சித்தம் முழுவதும் சிவத்தில் ஆழ்ந்த சின்மய குருவே போற்றி
ஓம் ராமனின் அருளில் கலந்தே இருந்த அனுமன் போன்றவன் போற்றி
ஓம் கர்ம யோகம் காட்டிய ருளிய கர்ம யோகியே போற்றி
ஓம் பக்தி யோகம் பாங்காய் பகர்ந்த பரம யோகியே போற்றி
ஓம் ஞான யோகம் நன்கு விளக்கிய ஞான மூர்த்தியே போற்றி
ஓம் ராஜ யோகம் ரகசியம் சொன்ன ராஜ யோகியே போற்றி
ஓம் நான்கு யோகமும் நயம்பட நவின்ற நல்லருள் யோகி போற்றி
(ஓம் ஜெய ஜெய ஹர ஹர விவேகா)
ஓம் கீதை சொன்ன கண்ணனைப் போன்ற ஞானப் பெருங்கடல் போற்றி
ஓம் கொதிக்கும் மனத்தைக் குளிர வைக்கும் குளிர்தரு நிழலே போற்றி
ஓம் மயக்கும் மாயை அறவே நீக்கிய மாமணி சூரியன் போற்றி
ஓம் அமைதி ஆனந்தம் ஆத்ம ஞானம் அளிக்கும் அருள்மலை போற்றி
ஓம் நரனை நாரணன் என்றே முழங்கிய நற்குண குன்றம் போற்றி
ஓம் சமய எழுச்சியும், சமுதாய மலர்ச்சியும் தோன்றிட காரணன் போற்றி
ஓம் மேலோர் கீழோர் பேதம் அகற்றிய ஞானப் பெருங்கடல் போற்றி
ஓம் கங்கையும் கீதையும் இந்துத் துவம் எனப் போற்றி உரைத்தவன் போற்றி
ஓம் சான்றோர்க் கெல்லாம் சான்றோன் ஆகிய சாந்த மூர்த்தி போற்றி
ஓம் மன்னரும் மக்களும் வணங்கி மகிழ்ந்த மாமணி ஜோதி போற்றி
(ஓம் ஜெய ஜெய ஹர ஹர விவேகா)
ஓம் ஞானபூமியே பாரதம் என்று நவின்ற நாவினன் போற்றி
ஓம் நற்பணி இயக்கம் நாட்டில் தொடர நல்லறம் நாட்டினன் போற்றி
ஓம் பாரதம் உலகின் குருவென முழங்கிய பாரத ஜோதி போற்றி
ஓம் பாரத மண்ணே பாரினில் சொர்க்கம் என்று புகட்டினன் போற்றி
ஓம் இந்திய நாட்டைக் கண்போல் காக்கும் காவல் தெய்வம் போற்றி
ஓம் புண்ணிய பூமி பாரதம் என்றே பாருக்குச் சொன்னவன் போற்றி
ஓம் சாதனை புரிந்தே சரித்திரம் படைக்க இளைஞரை அழைத்தவன் போற்றி
ஓம் தன்னம் பிக்கை கொண்டிரு என்று இடியெனச் சொன்னவன் போற்றி
ஓம் இந்திய தேசியம் எழுச்சி பெறவே இன்னுயிர் ஈந்தவன் போற்றி
ஓம் இந்து எழுந்திடு, தன்னை உணர்ந்திடு என்று முழங்கினன் போற்றி
(ஓம் ஜெய ஜெய ஹர ஹர விவேகா)
ஓம் இந்து தர்மம் மலர்ச்சியும் மேன்மையும் கண்டிடக் காரணன் போற்றி
ஓம் இந்திய நாடு எழுச்சி பெறவே இளைஞரை அழைத்தவன் போற்றி
ஓம் இளைஞர் அனைவரின் இதய வீரன் இலட்சியத் தலைவன் போற்றி
ஓம் வீர னாக எழுந்து நில் லென வீறுடன் சொன்னவன் போற்றி
ஓம் இளைஞர் வாரீர் புதுயுகம் படைப்பீர் என்றே கூவினன் போற்றி
ஓம் இந்தியர் நலனே என்நலன் என்று இயம்பிய எம்மான் போற்றி
ஓம் இந்திய மக்கள் என்னரும் தெய்வம் என்ற திருமகன் போற்றி
ஓம் உலக அரங்கினில் இந்து சமயம் உயர்த்திய பெருமையன் போற்றி
ஓம் உலகை மாற்றிட நூறு இளைஞர் வாரீர் என்றனன் போற்றி
ஓம் என் நம்பிக்கை எல்லாம் இளைஞரிடமே என்றே உரைத்தவன் போற்றி
(ஓம் ஜெய ஜெய ஹர ஹர விவேகா)
ஓம் தேச பக்தி, தெய்வ பக்தி <உயிரெனக் கொண்டவன் போற்றி
ஓம் தேசமும் தெய்வமும் ஒன்றென உணர்த்திய உத்தம புருஷன் போற்றி
ஓம் அமர நாதனை இதயத்தில் உணர்ந்து அருளில் கரைந்தவன் போற்றி
ஓம் சீதையே பெண்களின் இலட்சியம் என்ற ஞானச் செல்வன் போற்றி
ஓம் சஞ்சலம் தீர்க்கும் விவேகா னந்த ஈசுவர கோடி போற்றி
ஓம் வெற்றிகள் அனைத்தும் விரைவில் வழங்கும் விவேகச் செல்வன் போற்றி
ஓம் நிவேதிதை தேவிக்கு நல்லருள் பொழிந்த ஞானச் சுடரோன் போற்றி
ஓம் அகண்ட பூரண பிரம்மச் சரியம் காத்த பெருமான் போற்றி
ஓம் ஆற்றல் நிரம்பிய ஆன்மிகம் பரப்பிய அருள்நிறை துறவி போற்றி
ஓம் <உத்தமத் துறவின் இலக்கியம் எனவே உலகோர் தொழுபவன் போற்றி
(ஓம் ஜெய ஜெய ஹர ஹர விவேகா)
ஓம் தர்மம் தழைத்திட திக்கெல்லாம் சென்று ஞானம் உரைத்தவன் போற்றி
ஓம் வையத்தின் வாட்டம் நீக்கிட வந்த வான்மதியானவன் போற்றி
ஓம் ஆளுமை அனைத்தும் அள்ளி வழங்கிய ஞான மாக்கடல் போற்றி
ஓம் எழுமின் விழிமின் உழைமின் என்ற எழுச்சி நாயகன் போற்றி
ஓம் ஏழைகள் வாழ்வு ஏற்றம் பெறவே என்றும் உழைத்தவன் போற்றி
ஓம் கோடை வெப்பமும் எழையர் வாழ்வில் குளிர்நிழ லாக்கினன் போற்றி
ஓம் மக்களுக் குழைக்கும் வாழ்வே தவமென விளங்கிட வைத்தவன் போற்றி
ஓம் மக்கள் தொண்டே தவமெனப் போற்றிய பொன்மனச் செம்மல் போற்றி
ஓம் மக்கள் தொண்டும் தெய்வத் தொண்டும் கண்ணெனப் போற்றினன் போற்றி
ஓம் ஆத்ம மோட்சமும் உலக நன்மையும் இலட்சியம் என்றவன் போற்றி
ஓம் அறம் பொருள் இன்பம் வீடு அருளும் விவேகா னந்தன் போற்றி
ஓம் தனக்குத் தானே நிகராய் விளங்கிய தனிப்பெரும் செல்வன் போற்றி
ஓம் நல்லோர் போற்றும் நற்குணச் செம்மல் நரேந்திர சிம்மம் போற்றி
ஓம் எங்கும் எதிலும் எப்போதும் எமக்கு வெற்றியே அருள்வோன் போற்றி
ஓம் அமர நிலையை ஆருயிர் பெறவே அமுதம் அளித்தவன் போற்றி
ஓம் உன்னதம் உத்தமம் அற்புத சரிதம் நரேந்திர சரிதம் போற்றி
ஓம் அற்புதம் அற்புதம் என்றே முழங்க அற்புத மானவன் போற்றி
ஓம் வணங்கவும் உரிய வாழ்த்தவும் உரிய வள்ளல் இணையடி போற்றி
ஜெயஜெய ஜெயஜெய விவேகா னந்தம்
ஹரஹர ஹரஹர விவேகா னந்தம்
சிவசிவ சிவசிவ விவேகா னந்தம்
சிவசிவ ஹரஹர விவேகா னந்தம்
ஹரஹர சிவசிவ விவேகா னந்தம்
விவேகா னந்தம் விவேகா னந்தம்
விவேகா னந்தம் விவேகா னந்தம்