ஆடிப்பெருக்கு; வீட்டிலும் செய்யலாம் பதினெட்டாம் பெருக்கு பூஜை..!
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும்.
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி 18ல் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது.
காவிரி, பெண்ணை, பொருணை ஆகிய மூன்று நதிகளிலும் ஆடிப் பதினெட்டு கொண்டாடுவதை, மூவாறு பதினெட்டு எனக் குறிப்பிடுவார்கள்.
காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம்.
ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போடவேண்டும். நிறைகுடத்திலிருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும், திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்க வேண்டும்.
தண்ணீரில் உதிரிப் பூக்கள் போட்டு, கற்பூர ஆரத்தி காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்
காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள்.
பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும்.
அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.