காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் 17 ஆண்டுகள் பின் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் கடைசியாக, கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து, 17 ஆண்டுகள் கடந்த நிலையில், கோவிலில் பல்வேறு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, தமிழக அரசு, ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது. அதன்படி, அரசு நிதி, ஆணையர் பொதுநல நிதி, திருக்கோவில் நிதி, உபயதாரர் நிதி என, மொத்தம் 29 கோடி ரூபாய் செலவில், பல்வேறு திருப்பணிகளுக்கான முதற்கட்ட பாலாலயம், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 28 ல் நடந்தது. தற்போது, கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் முடிந்துள்ள நிலையில், கடந்த நவ., மாதம் 3ம் தேதி பந்தகால் முகூர்த்தம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 4ம் தேதி, புனிதநீர் நிரப்பிய குடங்களை, சிவாச்சாரியார்கள் கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள யாகசாலை மண்டபத்தில் வைக்கப்பட்டு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கோபூஜை, நவக்கிரக ஹோமம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு, ம்ருத்ஸங்கிரஹணம், பிரவேச பலி, ரக் ஷோக்ன ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடந்தது. கடந்த 5ம் தேதி காலை 8:00 மணிக்கு சாந்தி, திசா மூர்த்தி ஹோமங்கள், யாகசாலை நிர்மாணம், மாலை 4:30 மணிக்கு அங்குரார்பணம், ரக் ஷாபந்தனம், கும்பாலங்காரம், கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசம், யாகபூஜை, பூர்ணாஹூதியும், நேற்று முன்தினம் காலை மற்றும் மாலையில் விசேஷ சந்தி, யாகபூஜை, பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு விசேஷ சந்தி, பூர்ணாஹூதியும், மாலை 4:00 மணிக்கு விசேஷ சந்தி யாகபூஜை, நாடிசந்தானம், தத்வார்ச்சனை, ஸ்பர்சாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடந்தது.
இன்று அதிகாலை 3:00 மணிக்கு யாகபூஜை, பூர்ணாஹூதி, யாத்ராதான சங்கல்பம், கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து காலை 5:45 மணிக்கு மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். மதியம் 12:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யணா உத்சவத்தை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடக்கிறது.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் கார்த்திகேயன், செயல் அலுவலர் முத்துலட்சுமி, கோவில் திருப்பணி சிறப்பு அலுவலர் இணை ஆணையர் வான்மதி, துணை ஆணையர் ஜெயா, சிறப்பு அலுவலர் லஷ்மிகாந்த பாரதிதாசன், சரக ஆய்வாளர் அலமேலு, அறங்காவலர் குழு தலைவர் வேல்மோகன், அறங்காவலர்கள் ஜெகன்நாதன், வசந்தி சுகுமாரன், வரதன், விஜயகுமார், கோவில் சர்வ சாதகம் ஸ்தலம் பாலசுப்ரமணிய குருக்கள், ஸ்தானீகம் சங்கர் நாயஹர், ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள், உத்சவதாரர்கள், உபயதாரர்கள், காஞ்சிபுரம் நகர பொதுமக்கள், கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் இணைந்து செய்துள்ளனர்.
காஞ்சி காமகோடி பீடாதிபதிகள்; ஸ்ரீ ஏகாம்பரநாத சுவாமி தேவஸ்தானத்தின் கும்பாபிஷேகம் இன்று காலை 17 ஆண்டுகள் பின்ன்ர் நடைபெற்றது. விழாவில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஷ்ரஜ் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு வழிபட்டனர். பீடாதிபதிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.