உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்தது.
சித்திரை மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிகம் என்பதால் இறைவனை குளிர்விக்கும் ஒரு வகையான வழிபாடுதான் பூச்சொரிதல் விழா என அழைக்கப்படுகிறது. அதன்படி, உத்திரமேரூரில் பழமை வாய்ந்த பல்லவர் கால துர்க்கையம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது. விழாவையொட்டி, அம்மனை வேண்டி விரதம் இருந்த அப்பகுதியைச் சேர்ந்த 108 பெண் பக்தர்கள், உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள முத்துபிள்ளையார் கோவிலில் இருந்து, பூக்கூடைகளில் பல வகையான வண்ண நிற மலர்களை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து, துர்க்கையம்மன் கோவிலை வந்தடைந்தனர். அங்கு மூலவருக்கு, அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். அதை தொடர்ந்து, மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.