சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மகாஸ்வாமி வழிபாடு செய்தார்.
தொடர்ந்து அவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கி கூறியதாவது: இன்றைக்கு பரமபவித்திரமான சங்கர ஜெயந்தி மகோத்சவம் எப்படி ஸ்ரீராமநவமி, ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி, விநாயக சதுர்த்தி, சிவராத்திரி, நவராத்திரி, முதலான பகவான் அவதாரம் பண்ணின நாட்களெல்லாம் நமக்கெல்லோருக்கும் பரமபவித்ரமாக இருக்கிறதோ அதேமாதிரி அந்த பகவான் இந்த உலகத்துக்கு அத்வைத தத்தவத்தையும் சனாதன வைதீக தத்துவத்தையும் உபதேசம் பண்ணுவதற்காக மோட்ச மார்க்கத்தை உபதேசம் பண்ணுவதற்காக ஜெகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாசார்யாளுடைய ரூபத்தில அவதாரம் பண்ணின இந்த வைஷாக சுக்ல பஞ்சமியும் நமக்கெல்லோருக்கும் அதேமாதிரி ஒரு பவித்திரமான நாள்.
பகவானுடைய எல்லா அவதாரங்களும் தர்மோத்தாரத்திற்காக அதர்ம நாசத்திற்காகதான் ஆயிறுக்கு. இப்பேர்பட்ட பல அவதாரங்களில் ஆதிசங்கர பகவத்பாதாள் அவர்களின் அவதாரம் இந்த கலியுகத்தில் ஆயிறுக்கு. இந்த கலியுகத்தில் ஆதிசங்கரர் இந்த உலகத்திற்கு ஞான உபதேசம் பண்ணுவதற்காக அவதாரம் பண்ணியிருக்கார். மத்த அவதாரங்களில் எப்படி பகவான் துஷ்ட சம்ஹாரம் பண்ணி தர்ம சம்ஸ்தாபனம் பண்ணியிருக்காரோ அந்த மாதிரி இந்த அவதாரத்தில் ஆதிசங்கரர் யாரையும் சம்ஹாரம் பண்ணவில்லை. ஏனென்றால் இந்த அவதாரத்தில் பண்ண வேண்டிய முக்கியமான காரியம் என்ன என்று கேட்டால் இந்த லோகத்தில் மக்களுக்குள்ள இருக்கிற அக்ஞானத்தை போக்கி ஞானத்தை கொடுப்பதற்காக தான் இந்த அவதாரத்தில் முக்கியமாக செய்ய வேண்டிய ஒரு காரியமாக இருந்தது. அதனால் தான் அந்த பகவான் குருவின் ரூபத்தில் அதுவும் இந்த உலகத்திற்கே குருவாக ஜகத்குருவாக ஜகத்குரு ஆதிசங்கர பகவத்பாதாளுடைய ரூபத்தில் அவதாரம் செய்துள்ளார் பகவான்.
ஆதிசங்கர பகவத்பாதாள் நம்முடைய இந்த பாரத தேசத்தில் 1200 வருடங்களுக்கு முன் கேரளத்தில் காலடி கிராமத்தில் ஆர்யாம்பாள் - சிவகுரு தம்பதிக்கு புத்திரராக அவதாரம் பண்ணியிருக்கிறார். அவருடைய 8வது வயதிலேயே இந்த தர்ம சம்ஸ்தாபனம் தான் என்னுடைய உத்தேசம் என்று சங்கல்பம் செய்து கொண்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டு வீட்டிலிருந்து கிளம்பி இந்த சனாதன தர்ம சம்ஸ்தாபனத்துக்காக பாரத தேசம் முழுவதும் சஞ்சாரம் செய்து எல்லோருக்கும் இந்த தர்மத்தின் பெருமையை உபதேசம் செய்திருக்கிறார். அதேபோல் உபநிஷத்தின் தத்துவமாக இருக்கும் அத்வைத சிந்தாந்தத்தை எல்லோருக்கும் உபதேசம் செய்து இந்த சம்சார துக்கத்தில் இருந்து மோட்சத்தை அடைவதற்கு வேண்டிய மார்க்கத்தை உபதேசம் செய்து இருக்கிறார்.
மோட்சம் என்றால் என்ன? மோட்சத்தை அடைவதற்கு என்ன செய்யனும், எந்த வழியில் நாம் செல்ல வேண்டும் முதலான எல்லா விஷயங்களையும் ரொம்ப தெளிவாக அவருடைய கிரந்தங்களில் உபதேசம் செய்து இருக்கிறார். பிரஸ்தானத்தில் பாஷ்யம், விவேகசூடாமணி முதலான பிரகரன கிரந்தங்களில் இந்த உலகத்திற்கு வேண்டிய மோட்ச மார்க்கத்தையும் அந்த மோட்ச மார்க்கத்தில் செல்ல ஆசார்யன் செய்ய வேண்டிய சாதனங்களையும் உபதேசம் செய்து இருக்கிறார். பல தேவதா ஸ்தோத்திரங்கள், கணேச பஞ்சரத்திரம், சிவானந்தலஹரி, செளந்தர்யலஹரி முதலிய ரொம்ப அற்புதமான ஸ்தோத்திரங்களை எழுதி, இந்த ஸ்தோத்திரங்களின் மூலமாக எல்லா மக்களும், எல்லா பகவத் பக்தர்களும் பகவானை அடையவதற்கான ஒரு வழியை காட்டி கொடுத்து இருக்கிறார். அதேபோல் பிரஷ்ரோத்தர ரத்ன மாலிகா, பஜகோவிந்த ஸ்தோத்திரம் முதலான கிரந்தங்களை அருளி, இந்த கிரந்தங்களில் பல விஷயங்களை உபதேசம் செய்து ஒரு நல்ல சமாஜத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை உபதேசம் செய்து இருக்கிறார்.
இந்த காலத்தில் இந்த தேசத்திலும், வெளிநாட்டிலும், இந்த உலகத்தில் நாம் பார்க்கக்கூடிய பல பிரச்னைகளுக்கு ஆதிசங்கரரின் இந்த கிரந்தங்களில் சரியான ஒரு விடை நமக்கு கிடைக்கும். அப்பேர் பட்ட பரிகாரத்தை இந்த கிரந்தங்களில் ஆதிசங்கரர் உபதேசம் செய்து இருக்கிறார். அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பிரஷ்ரோத்தர ரத்னமாலா போன்ற கிரந்தங்களில் ஆதிசங்கரர் என்னவெல்லாம் உபதேசம் செய்து இருக்கிறாரோ அந்த விஷயங்களை இந்த உலகத்தில் யாரும் எனக்கு இது தேவையில்லை என்று சொல்லவே முடியாது. அப்பேர் பட்ட பல விஷயங்களை இவருக்கு மட்டும்தான் நல்லது சொல்ல வேண்டும் அவருக்கு மட்டும்தான் நல்லது சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் எல்லோருக்கும் நல்லது சொல்ல வேண்டும். இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்கும் அவன் எந்த தேசத்தில் வேண்டுமானாலும் இருக்கட்டும் எல்லோருக்கும் நல்லவழியை காட்டவேண்டும் என்கிற ஒரு பெரிய எண்ணத்துடன் ஆதிசங்கரர் இந்த கிரந்தங்களை எழுதி இருக்கிறார். இந்த கிரந்தங்களில் உள்ள விஷயங்களை எல்லோரும் பார்த்தீர்கள் என்றால் அதில் எல்லோருக்கும் வேண்டிய உபதேசங்கள் தான் உள்ளது. அப்பேர் பட்ட கிரந்தங்களை உருவாக்கி ஆதிசங்கர் இந்த சமாஜத்திற்கு மக்களுக்கு மோட்ச மார்க்கத்தையும் காட்டிகொடுத்து இருக்கிறார்.
முதல் காரியம்: பகவானுடைய அனுக்கிரகத்தை அடைவதற்குரிய வழியையும் காட்டிக்கொடுத்து இருக்கிறார். ஒரு நல்ல தேசம் ஒரு நல்ல சமாஜத்தை எப்படி தயார் செய்ய வேண்டும் எல்லா சமாஜத்தில் நாம் பார்க்கக்கூடிய எல்லா பிரச்னைகளுக்கும் எப்படி பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இந்த பிரச்னைகளே வராமல் இருக்க எப்படி வாழவேண்டும் ஏதாவது பிரச்னை வந்தாலும் அதிலிருந்து எப்படி வெளியில் வரவேண்டும் என்பதையும், இந்த பிரச்னை எதனால் வருகிறது, இந்த பிரச்னையின் மூலம் என்ன, இந்த பிரச்னையே வராமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் போன்ற எல்லா விஷயங்களையும் உபதேசம் செய்து இருக்கிறார். அதனால் தான் இந்த உலகத்திலேயே ஆதிசங்கரருக்கு இருக்கக்கூடிய ஒரு ஸ்தானத்தை நாம் வேறு எங்கையும் பார்க்க முடியாது. அப்பேர் பட்ட மகாபுருஷர் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள். அவர் நம்முடைய பாரததேசத்தில் அவதாரம் செய்து இந்த மாதிரி பல கிரந்தங்களை ரசனம் செய்து இருக்கிறார். இந்த கிரந்தங்களில் நல்ல விஷயங்களை உபதேசம் செய்து இருக்கிறார். அவர் செய்த பல காரியங்களில் முதல் காரியம் இது.
இரண்டாவது காரியம் : இந்த நல்ல விஷயங்களை மக்கள் வாழுகின்ற இடத்திற்கே சென்று அவர்களுக்கு உபதேசம் செய்தார். இதற்காக பாரத தேசம் முழுவதும் சஞ்சாரம் செய்தார். தவறான வழியில் போகும் மக்களிடம் சென்று இதுபோன்ற நல்ல விஷயங்களை உபதேசம் செய்து அவர்களை சரியான பாதைக்கு மாற்றினார். இந்த மாதிரி பல காரியங்களை நமது பாரத தேசத்தில் எல்லா இடங்களிலும் செய்து இருக்கிறார். நமது பாரத தேசத்தில் உள்ள பல க்ஷேத்திரங்களுக்கு போய் அந்த க்ஷேத்திரங்களில் உள்ள துஷ்ட சம்பிரதாயங்கள் என்னவெல்லாம் தப்பான சாஸ்திரத்திற்கு விரோதமாக சம்பிரதாயங்கள் உள்ளதோ அதுமாதிரியான சம்பிரதாயங்களை போக்கி சரியான ஒரு சம்பிரதாயம் ஒரு பத்ததியை கொண்டு வந்தார். இன்றைக்கும் ராமேஸ்வரத்தில் இருந்து பல க்ஷேத்திரங்களில் அந்த ஒரு சம்பிரதாயத்தை நாம் எல்லாம் இடத்திலும் பார்க்கலாம்.
மூன்றாவது காரியம்: ஆதிசங்கரர் காட்டிகொடுத்த இந்த வழி இந்த மார்க்கம் எப்போதுமே உலகத்தில் பிரசாரத்தில் இருக்க வேண்டும் என்கிற ஒரு பெரிய சங்கல்பத்தோடு நம்முடைய பாரததேசத்தின் நான்கு திசைகளிலும் நான்கு பீடங்களை ஸ்தாபனம் செய்து இருக்கிறார். இந்த பீடங்களில் தென் பாரதத்தின் பீடமாக இருக்ககூடிய சிருங்கேரி க்ஷேத்திரத்தில் ஆதி சங்கரர் ஸ்தாபித்த தட்சணாம்நாய ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம். இந்த மாதிரி நான்கு பீடங்களை ஸ்தாபனம் செய்து நான்கு பீடங்களில் இருக்கக்கூடிய ஜகத்குரு மகாசுவாமிகள் எல்லோரும் ஆசார்யர்கள் எல்லோரும் என்ன காரியம் செய்ய வேண்டும். எப்படி இந்த தர்ம பிரசாரம் செய்ய வேண்டும் என்பது போன்ற எல்லா விஷயங்களையும் அவரே உபதேசம் செய்து இந்தமாதிரி பீடங்களை ஏற்பாடு செய்து ஸ்தாபனம் செய்து இந்த தர்மம் எப்போதும் இந்த உலகத்தில் பிரசாரத்தில் இருப்பதற்காக வேண்டிய ஏற்பாடுகளை ஆச்சார்யார் ஆதிசங்கரர் செய்துள்ளார். இந்தமாதிரி யாரும் செய்ய முடியாத ஒரு வழியில் ஆதிசங்கரர் இந்த சனாதன தர்ம ஸ்தாபனத்தை இந்த எல்லா காரியங்களையும் வெறும் 32 வருடத்திற்குள்ளே ஆதிசங்கரர் செய்து முடித்து கடைசியில் இமாலயத்திலுள்ள கேதார க்ஷேத்திரத்திற்கு போய் அவருடைய அவதாரத்தை சமாப்தி செய்து இருக்கிறார்.
இன்னிக்கும் ஆதி சங்கரர் அவதாரம் செய்த காலடி க்ஷேத்திரத்தில் எந்த இடத்தில் அவர் அவதாரம் செய்தாரோ அந்த இடத்திற்கே போய் நாம் அந்த சன்னதியில் ஆதிசங்கரை தரிசனம் செய்யலாம். அதேபோல் ஆதிசங்கரர் எந்த இடத்தில் அவருடைய அவதாரத்தை முடித்துக் கொண்டாரோ அந்த இடமான கேதார்நாத்க்கும் போய் அந்த பவித்ரமான புனிதமான தலத்தையும் நாம் தரிசனம் பண்ணலாம். இந்தமாதிரி இந்த உலகத்திற்கு ரொம்ப பெரிய அனுகிரஹம் பண்ணினார். ஆதிசங்கரர் பகவத்பாதாளுடைய பரம பவித்திரமான ஜெயந்தி மகோத்சவம் இன்று எல்லா இடங்களிலும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. எல்லா மக்களும் எல்லா ஊர்களிலும் எல்லா வீட்டிலும் இந்த ஜெயந்தி என்பது நடக்கவேண்டும். எப்படி ராமநவமி, கிருஷ்ணாஷ்டமி முதலிய உத்சவங்களை நாம் எல்லோரும் மிகவும் சிரத்தையோட கொண்டாடிக்கொண்டு இருக்கிறோமோ அதேபோல் இந்த ஆதிசங்கர ஜெயந்தியையும் எல்லோரும் எல்லா இடங்களிலும் கொண்டாடனும் அவர் காட்டிக் கொடுத்த அந்த மார்க்கத்தை அனுசரித்து இந்த ஒரு வாழ்க்கையை பயன்படுத்திக் கொள்ளனும் என்ற ஒரு விஷயத்தை இந்த சந்தர்ப்பத்தில் எல்லோருக்கும் சொல்ல விரும்புகிறோம். இந்த ஒரு சங்கரஜெயந்தி மகோத்சவத்தில் ஸ்ரீசாரதா சந்திரமெளலீஸ்வரருடைய அதேமாதிரி இந்த தட்சிணாம்நாய ஸ்ரீசிருங்கேரி சாரதாபீடாதீஸ்வரர் எங்கள் குருநாதர் ஜெகத்குரு ஸ்ரீஸ்ரீபாரதி தீர்த்த மகாசுவாமிகளுடைய அனுக்ரஹத்தால் எல்லா ஆஸ்திகர்களுக்கும் சமஸ்த ஸ்ரேயஸ்களும் கிடைக்கட்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் ஆசிர்வாதம் செய்து கொண்டுகிறோம். இவ்வாறு மகாஸ்வாமி கூறினார்.