செய்யூர்: குமுளி கிராமத்தில் பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடந்தது. சித்தாமூர் அடுத்த குமுளி கிராமத்தில் பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இக்கோவிலை புனரமைக்கும் பணி தொடங்கி நடந்து வந்தது. திருப்பணிகள் முடிந்ததை அடுத்து கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் நேற்று கணபதி பிராத்தனையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜைகள் நடந்தன. நேற்று காலை 10:15 மணிக்கு கோவில் கோபுர விமானத்திற்கும், 10:25 மணியளவில் மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின் பச்சைவாழியம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்கரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டப்பட்டது. மாலை 5:00 மணிக்கு பச்சைவாழியம்மன் – மன்னார்சாமி திருக்கல்யாணம் நடந்தது. குமுளி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து, சுவாமியை வழிபட்டு சென்றனர்.