திருத்தணி: திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
திருத்தணி அடுத்த மேல்திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவருக்கு சந்தன காப்பு, மதியம் மகாபாரத சொற்பொழிவு நடந்து வந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:30 மணிக்கு, 6,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்தனர். அப்போது, ‘கோவிந்தா... கோவிந்தா’ என, பக்தர்கள் பக்தி முழக்கமிட்டனர். பின், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி ஏ.எஸ்.பி., ஷூபம் திமான் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மதியம் கோவில் வளாகத்தில், தர்மர் பட்டாபிஷேகத்துடன் நடப்பாண்டிற்கான தீமிதி விழா நிறைவுபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.