இங்கு புதியதாக அமைக்கப்பட்டுள்ள வேதபுரி மகாலட்சுமி தாயார் சந்நதியில், தாயாரை சேவித்து நமது குறைகளை களைந்து, சகல வசதிகளையும் பெறலாம் என்பது ஐதீகம். தாயார் சந்நதியை தாண்டி வரும்போது, தீர்த்த கிணறு காணலாம். எப்போதும் வற்றாத தீர்த்த கிணறு, வறட்சி காலங்களில் ஊற்றாக ஊருக்கே தண்ணீர் கொடுத்தது. பெருமாளுக்கு திருமஞ்சன தரத்திற்கு, இந்த தீர்த்தமே உபயோகப்படுகிறது. தீர்த்த கிணற்றை கடந்து வந்தால், பெருமாளின் சந்நதியின் கருவறை மேல் கட்டப்பட்டுள்ள கோபுர தரிசனம் கண்டு பக்தி பரவசமடையலாம்.
அதையும் கடந்து, கன்னி மூலையில் பிரசன்ன கணபதி அமர்ந்து, பக்தர்களின் சிரமங்களை தீர்த்து வைக்கிறார். நாம் துவங்கும் காரியங்கள் தடையின்றி நடக்கவே கணபதியின் அருளை வேண்டுகிறோம். தேர்நிலையில் புதியதாக தோற்றப்பொலிவுடன் திகழ்கிறது தேர். அடுத்துள்ள பரமபத வாசல், கோபுர வாயிலும், வணங்குதற்கும், போற்றலுக்கும் உரியவை. ஏகாதசியன்று, சொர்க்க வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளும் காட்சியை கண்டு மகிழலாம். சொர்க்க வாசல் வழியாக சென்று பாவங்களை களைந்து, பரமபதத்தை அவனருளால் அடையலாம்.
மேற்கு வாசல் வழியாக உள் மண்டபத்தில் நுழைந்தவுடன், அங்கு தேஜஸ்மயமாக உலகளந்த பெருமாளை தரிசித்து பரவசமடையலாம். கருவறை மூலவரான ஸ்ரீஉலகளந்த பெருமாளை சேவித்த பின், உற்சவ மூர்த்தியான ஸ்ரீவரதராஜ பெருமாளை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ராய் தரிசிக்கலாம். மூன்றடி உயரமுள்ள இந்த செப்பு சிலைகள் அழகாக காட்சியளிக்கின்றன. ஸ்ரீஆண்டாள் சக்கரத்தாழ்வார் திருமேனிகளும், அர்த்த மண்டபத் தில் அருள் புரிகின்றனர்.
திருவிழாக்கள்
சித்திரை மாத நவமி திதியன்று, ராமநவமி, ஆடி வெள்ளி ஊஞ்சல் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, கருடசேவை, 10 நாள் நவராத்திரி உற்சவம், விஜயதசமி உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி உற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆண்டாள் பெருமாள் திருக்கல்யாணம். செப்., ல் விநாயகர் சதுர்த்தி நாளில் தொடங்கி 10 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியும் சிறப்பாக நடக்கிறது. ஒவ்வொரு ஞாயிறன்றும் சகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது.
பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் பெற, திருமண தடை நீங்க, நினைத்த காரியங்கள் நிறைவேற, நிலம், இடம் தொடர்பான பிரச்னைகள் தீரவும், இங்கே வேண்டுதல்கள் நடக்கின்றன. வேண்டுதல் நிறைவேறியதும் அன்னதானம், சிறப்பு அபிஷேகங்கள் நடத்துகின்றனர்.