செஞ்சி; செஞ்சி அருகே கி.பி.11ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து கல்வெட்டை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர் சுதாகர் வரலாற்று ஆர்வலர் முகில் ஆகியோர் செஞ்சி அடுத்த பெரும்புகை கிராமத்தில் கள ஆய்வு செய்தனர். இவர்கள், அங்குள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில், குளத்தின் அருகே உள்ள பாறை மீது கல்வெட்டு இருந்ததை கண்டு பிடித்தனர்.
இது குறித்து பேராசிரியர் சுதாகர் கூறியதாவது: இந்தக் கல்வெட்டு கிபி 11ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. சோழர் காலத்தை சேர்ந்தது. இந்த கல்வெட்டில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனின் தலையை கொய்த குலோத்துங்க சோழ மன்னனின் புகழை சொல்லியுள்ளனர். குலோத்துங்க சோழ மன்னனின் 31 வது ஆட்சியாண்டில் குலோத்துங்க சோழனுக்காக சம்புவராய முதலிகளில் கண்ணிறைந்த பெருமாள் அங்கராயனேன் என்பவர் குளம் வெட்டியதை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் நீர் நிலைகளை சோழர்கள் உருவாக்கினார்கள் என்ற வரலாற்று உண்மையை அறிய முடிகிறது. இவ்வாறு சுதாகர் கூறினார்.