விழுப்புரம்: விழுப்புரம் நேருஜி சாலை வீரவாழி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி உற்சவம் நேற்று துவங்கியது.
அதனையொட்டி, காலை 6:00 மணிக்கு வீரவாழி அம்மன் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 8:00 மணிக்கு பூங்கரகம் ஜோடித்து ஊர்வலம் நடந்தது. கூழ் குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக வந்தனர். மதியம் 12:30 மணிக்கு கோவில் வளாகத்தில் கூழ் ஊற்றி சாகை வார்த்தல் வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மூலவர் அம்மன் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 8:00 மணிக்கும் கும்பல் படையலும் நடந்தது. இரவு உற்சவர் அம்மன் வீதியுலாவும் நடந்தது. செஞ்சி மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில், செஞ்சி அடுத்த மேலச்சேரியில் காட்டின் நடுவில் உள்ள பச்சையம்மன் கோவில்களில் நேற்று குல தெய்வ வழிபாடு நடத்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் பொங்கல் வைத்தும், குழந்தைகளுக்கு மொட்டையடித்தும் குல தெய்வ வழிபாடு நடத்தினர். திண்டிவனம் திண்டிவனம் பெரிய மாரியம்மன் கோவிலில் நேற்று காலை நடந்த கூழ்வார்த்தல் நிகழ்ச்சியில், பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செலுத்தி கூழ் படையலிட்டனர். பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.