மேட்டுப்பாளையம்: ‘வனபத்ரகாளியம்மன் கோவிலில் பிரசாத விற்பனை கடை அடைக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் பிரசாத பாக்கெட் உணவு பொருட்கள் விற்பனை செய்யவும், மாலைகள், தேங்காய், பழம் ஆகியவற்றை விற்பனை செய்யவும் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
கோவிலில் விற்பனை செய்த நிவேத்திய பிரசாத பாக்கெட்டில், எப்போது உற்பத்தி செய்தது, எந்த தேதி வரை அதை உபயோகப்படுத்தலாம் என, கம்ப்யூட்டர் வாயிலாக அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கோவிலில் விற்பனை செய்த பிரசாத பாக்கெட்டில், உற்பத்தி மற்றும் எதுவரை பயன்படுத்த வேண்டும் என்ற தேதி, மார்க்கரில் எழுதப்பட்டு உள்ளது.
அதனால் இது தரமான பிரசாத உணவுப் பொருளாக இருக்காது என்ற சந்தேகம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதை அறிந்த கோவில் நிர்வாகம், பிரசாத விற்பனை கடையை மூடியது. இது குறித்து கோவில் உதவி கமிஷனர் (பொறுப்பு) சரவணன் கூறியதாவது: வனபத்ரகாளியம்மன் கோவிலில், நிவேத்திய பிரசாத பாக்கெட் விற்பனை செய்ய, மாரியப்பன் டெண்டர் எடுத்து இருந்தார்.
இவரது டெண்டர் காலம், கடந்த ஜூன் மாதம், 30ம் தேதியுடன் முடிவடைந்தது. அடுத்த ஏலம் நடைபெறும் வரை, அவரையே பிரசாத பாக்கெட் விற்பனை செய்ய, கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் அவர் விற்பனை செய்த பிரசாத பாக்கெட்டில், கம்யூட்டர் பிரிண்டிங் இல்லாமல், கையில் எழுதி இருந்தது, நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தது. உடனடியாக பிரசாத பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்தும்படி கூறி, கடையை மூடி விட்டோம்.
மேலும் பக்தர்கள் வசதிக்காக, இந்து சமய அறநிலை துறை கமிஷனரிடம் அனுமதி பெற்று, கோவில் நிர்வாகத்தின் சார்பில், பிரசாத பாக்கெட்டுகள் விற்பனை செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உதவி கமிஷனர் கூறினார்.