காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், பல்லவர் கால கட்டடக் கலையின் உச்சமாகத் திகழும் கைலாசநாதர் கோவிலில், பக்தர்களின் வசதிக்காகவும், சுற்றுலா பயணியரை கவரும் வகையிலும் மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காஞ்சி கைலாசநாதர் கோவில், கி.பி., 7ம் நுாற்றாண்டின் இறுதியில் பல்லவ மன்னன் ராஜசிம்மன் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்டு, அவரது மகன் மகேந்திரவர்மன் காலத்தில் முழுமை பெற்றது.
முழுமையாக மணற்கற்களால் கட்டப்பட்ட இக்கோவிலின் அடித்தளம் மட்டும் எடையைத் தாங்கும் வகையில் கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலைச் சுற்றி அமைந்த 58 சிறு சன்னிதிகளும், யாளி துாண்களும், சிவபெருமானின் 64 வகை தாண்டவ மற்றும் யோக வடிவச் சிற்பங்களும் உலக அளவில் புகழ் பெற்றவை.
தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியரும், பக்தர்களும் வருகை தரும் இக்கோவிலில், தனியார் நிதி நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதி பங்களிப்புடன், இந்தியத் தொல்லியல் துறை மூலம் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.
இது குறித்து தொல்லியல் துறை அதிகாரி ஸ்ரீதர் கூறியதாவது:
சுகாதாரமான புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. ஏற்கனவே உள்ள ஆர்.ஓ., குடிநீர் சுத்திகரிப்பு மையம் கூடுதல் திறனுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணியர் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, 10 நவீன ‘சிசிடிவி’ கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
கோவில் வளாகத்தை சுற்றிலும் அழகிய புல்வெளிகள், புதிய நடைபாதைகள், அமரும் இருக்கைகள் மற்றும் இரவில் கோவிலின் எழிலை உயர்த்தும் வண்ண மின்விளக்குகள் அமைக்கப்படுகின்றன.
மேலும், கோவிலின் வரலாறு மற்றும் வரலாற்றுசிற்பங்களின் விபரங்களை அறிய, கலாசார தகவல் பலகைகள் வைக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.