மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ வைபவத்தின் நிறைவு நாளான இன்று ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு சக்கர ஸ்நானம் நடந்தது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில், அமைந்துள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சி கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் தினந்தோறும் நடைபெற்றன. மேலும் ஸ்ரீ மலையப்ப சுவாமி அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஸ வாகனம், அண்ணபட்ஷி வாகனம் என தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து அருள்பாலித்து வந்தார். பிரம்மோற்சவ வைபவத்தின் நிறைவு நாளான இன்று ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு சக்கர ஸ்நானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலையில், சுவாமி உலாவுக்கு பிறகு கொடியிறக்கப்பட்டு, பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.