அது பழச்சுவையென அமுதென
அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்
மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்
திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பொருள்: தேன்சிந்தும் மலர்களையுடைய சோலைகளைக் கொண்ட உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளிய சிவனே! திருப்பெருந்துறையில் வசிக்கும் தலைவனே! உன் பெயர் சொன்னால் அது பழம் போல் இனிக்கிறது. பால் போல் சுவையாக இருக்கிறது. உன்னைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது சிரமமானது. உன்னை எளிதாகப் பிடித்து விடலாம் எனச் சொல்கிறார்களே தவிர, தேவர்களால் கூட அதைச் செய்ய முடியாது. உன்னுடைய வடிவம் என்ன? இவன் தான் அவனோ? என்று அனுமானிக்கத் திணறும் தேவர்களுக்கே காட்சி தராத நீ, இதோ, என் நிஜ வடிவம் இதுவே எனச் சொல்லி, இதோ! எங்கள் முன்னால் இருக்கிறாய். எங்களை நீ என்ன செய்ய நினைக்கிறாயோ, அதைச் செய் என்றே உன்னிடம் கேட்போம். எம்பெருமானே! நீ எழுந்தருள்வாயாக.
விளக்கம்: மிக அருமையான கருத்துடைய பாடல் இது. எது எமைப்பணி கொள்ளும் ஆறு அது கேட்போம் என்ற வரி மிகுந்த சிறப்பைக் கொண்டது. கடவுளிடம் அதைக் கொடு,. இதைக் கொடு என்று கேட்பதை விட, எது சரியென்று படுகிறதோ, அதைச் செய் என்று கேட்பது மேலான கோரிக்கையல்லவா? அவனுக்கு தெரியுமே! நமக்கு என்ன தர வேண்டுமென்று! அதனால் நம்மை அவனிடம் ஒப்படைப்போம். அவன் தருவதை ஏற்றுக்கொள்வோம் என்பதே இப்பாடல் உணர்த்தும் கருத்து.