திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவர் சன்னதியில் மகா பைரவர் ஹோமம் நடந்தது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவர் யோகநிலையில் மேற்கு நோக்கி அமர்ந்த நிலையில் எழுந்தருளியுள்ளார். இவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவர் சன்னதி முன்பாக உள்ள யாகசாலையில் மகா பைரவர் ஹோமம் நடந்தது. காலை 8:40 மணிக்கு ரமேஷ் குருக்கள்,ராஜா குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மதியம் 12:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர், யாகசாலையிலிருந்து சிவாச்சார்யர்களால் கலசங்கள் மூலவர் சன்னதிக்கு புறப்பாடாகியது. பின்னர் கலசங்களிலிருந்த புனிதநீர் மற்றும் பால்,தயிர்,சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் யோகபைரவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.