வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மகிஷாசுர வர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளிய ஆனந்தவல்லி அம்மன் அம்பு விட்டு அரக்கனை அழித்தல் நிகழ்வு நடந்தது.
இக்கோயிலில் அக்., 11 ல் ஆனந்த வள்ளி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் நவராத்திரி திருவிழா பூஜைகள் துவங்கின. தினமும் இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு கொலு பூஜை நடந்தது. நேற்று சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு பஜனை வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிறைவு நாளான இன்று காலை 10:00 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுர வர்த்தினி அலங்காரத்தில் வில், அம்புடன் அம்மன் எழுந்தருளினார். பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து கோயில் முன்வைத்து வழிபாடு செய்தனர். பின் கோயில் வளாகத்தின் வெளியே வாழைமர உருவில் மறைந்திருந்த மகிஷாசுர அரக்கனை ஆனந்தவல்லி அம்மன் அம்பு விட்டு அழித்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்தது. வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.