கேரளா கல்பாத்தி துலா உற்சவம்- மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் பத்திரிக்கை படைப்பு



பகிர்க copied

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிராமணர்கள் குடும்பத்துடன் 300 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் உள்ள கோவில்களில் பூஜை செய்வதற்காக மயிலாடுதுறையிலிருந்து பாலக்காட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அங்கு உள்ள அக்ரஹாரங்களில் வசித்து வருகின்றனர். மயிலாடுதுறையில் இருந்து சென்ற காரணத்தினால் மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் நடைபெறும் துலா உற்சவத்தை போன்று கல்பாசியில் ஐப்பசி மாதத்தில் தற்போதும் தீர்த்தவாரி உற்சவத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மாயூரநாதர் கோவிலில் உற்சவம் நடைபெறும் அதே நாள்களில் கல்பாத்தி காசி விஸ்வநாதர் கோவில், சாத்தபுரம் பிரசன்னா மகா கணபதி கோவில், பழைய கல்பாத்தி பெருமாள் கோவில் மற்றும் புதிய கல்பாத்தி மகா கணபதி கோவில் ஆகிய இடங்களில் நிலா நதிக்கரையில் தமிழ் மற்றும் கேரளா ஆச்சாரத்துடன் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இந்த விசேஷ நாளில் நான்கு அக்ரகாரங்களிலும் வேதபாராயணம், விசேஷ அபிஷேகம், யாகசாலை பூஜைகள் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெறும். மேலும் தினம்தோறும் உற்சவமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் நான்கு கிராமங்களுக்கு ஊர்வலம் சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து அனுகிரகம் செய்கிறார்கள். முக்கிய தினமான ஐப்பசி கடைசி நாள் அன்று (நவம்பர் 16) மாலை கல்பாத்தி சந்திப்பில் அனைத்து ரதங்களும் ஒன்று கூடி காட்சியளிக்கும் அற்புதமான தருணத்தில் ஆரத்தி காண்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்வு தேவரத சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த விழாவை காண்பதற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்நிகழ்வுக்கான முதல் பத்திரிக்கை பாரம்பரிய முறைப்படி நேற்று மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் மாயூரநாதர் சுவாமி முன்பு வைத்து படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணா தலைமையில் நான்கு அக்ரஹார நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் உற்சவ பத்திரிக்கை வழங்கி விழா குழுவினர் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்