புதுச்சேரி: அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றுடன் ஆன்மிக ஞானமும் இணைந்தால், மனித வாழ்க்கை சிறப்படையும் என, அமெரிக்கா நியூயார்க் வேதாந்த சொசைட்டியின் பொறுப்பாளர் சுவாமி சர்வப்ரியானந்தா பேசினார்.
புதுச்சேரி இன்டெக்ரா நிறுவனம் மற்றும் புதுச்சேரி ராமகிருஷ்ணா மடம் சார்பில், இருளில் இருந்து ஒளிக்கு உள்ளிருக்கும் ஒளியை கண்டறிதல் என்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இன்டெக்ரா மேலாண் இயக்குனர் ஸ்ரீராம் சுப்ரமணியா வரவேற்றார். நிகழ்ச்சியில் அமெரிக்காவின் நியூயார்க் வேதாந்த சொசைட்டியின் பொறுப்பாளர் சுவாமி சர்வப்ரியானந்தா பேசியதாவது: நுாறாண்டுகளுக்கு முன் சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார். அவர் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இந்திய ஆன்மிக சிந்தனைகளை எடுத்து சென்றார். புத்தர் வாழ்க்கையில் ஏற்படும் இரண்டு அம்புகள் குறித்து எடுத்துரைத்தார். அதில்,நோய், முதுமை, மரணம் உள்ளிட்டவை முதல் அம்பு, அதனால் ஏற்படும் அச்சம், பதற்றம், மனவேதனை ஆகியவை இரண்டாம் அம்பு போன்றவை. ஏற்கனவே நம்மிடம் இருக்கும் உண்மையை அறிவின் மூலம் அறிவது வேதாந்தத்தின் நோக்கம். அறியாமையிலிருந்து உண்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், மரணத்திலிருந்து அழிவற்ற நிலைக்கும் மனிதன் உயர வேண்டும். சத்–சித்–ஆனந்தம், இந்த மூன்றும் ஒரே பரம்பொருளின் இயல்புகள் என வேதாந்தம் எடுத்துரைக்கிறது.
மனிதனின் உண்மையான இயல்பை உணர்வதே ஆன்மிகத்தின் நோக்கம். தற்போதைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், இயந்திரங்கள் எவ்வாறு கற்றுக்கொள்கின்றன. மருத்துவ அறிவியல் உடலின் துன்பங்களை குறைக்க உதவுகிறது. ஆன்மிகம் மனதின் துன்பங்களை கடந்து அமைதியுடன் வாழ வழிகாட்டுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றுடன் ஆன்மிக ஞானமும் இணைந்தால், மனித வாழ்க்கை சிறப்படையும். நாம் தேடிக்கொண்டிருக்கும் உண்மையான மகிழ்ச்சியும், அமைதியும் நமக்குள்ளே இருக்கிறது’ என்றார். நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் எம்.பி., புதுச்சேரி ராமகிருஷ்ணமடம் நிர்வாகிகள் அசோக்மகராஜ், நித்யேஷானந்தா, அரசு செயலர் முத்தம்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்டெக்ரா இணை மேலாண் இயக்குனர் அனுராதாஸ்ரீராம் நன்றி கூறினார்.