திருப்பாவை பாடல் 29-30



சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

பொருள்: கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை  பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.

திருப்பாவை பாடல் 30

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பொருள்: அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்