ராமானுஜர் பகுதி-20 | 1000th year celebrations of holy Sri Ramanuja Acharya | ராமானுஜரின் 1000வது நட்சத்திர வைபவம்

ராமானுஜர் பகுதி-20

ஜூன் 17,2011



ராமானுஜரின் மனம் குளிரும் வண்ணம் திருக்கோஷ்டியூர் நம்பியின் பதில் அமைந்தது. அப்பா ராமானுஜா! நீ கேட்டு வந்துள்ள உயர்ந்த மந்திரத்தை உனக்கு நான் உபதேசிக்கிறேன். கலியுகத்தில் இம்மந்திரத்தை கேட்கும் தகுதி உனக்கு இருப்பதால் தான், பரந்தாமன் உன்னை என்னிடம் அனுப்பியுள்ளான். ஆனால், இந்த மந்திரத்தை நீ மட்டுமே மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இம்மந்திரம் தெரிந்தவர் இறந்த பின் வைகுண்டத்தை அடைவார். பிறவாவாழ்வெனும் முக்தி பெறுவார். அந்த பரந்தாமனுடன் ஐக்கியமாவார். வேறு யாருக்கும் இம்மந்திரத்தைச் சொல்லக்கூடாது, என்றார். பின்னர் ராமானுஜருக்கு ரகசியமாக அந்த மந்திரத்தைக் கற்பித்தார். அந்த மாத்திரத்திலேயே ராமானுஜர் தெய்வீக சக்தி பெற்றார். உள்ளத்தில் அமைதி நிலவியது. உலகத்தையே தன் கைக்குள் அடக்கியவன் எப்படி மகிழ்வானோ, அப்படியே மகிழ்ந்தார் ராமானுஜர். குருவின் பாதத்தில் விழுந்து தம் நன்றியைத் தெரிவித்தார். மந்திரம் தெரிந்த மகிழ்ச்சியுடன் ஸ்ரீரங்கத்துக்கு கிளம்பினார். புறப்பட இருந்த சமயத்தில் ராமானுஜரின் உள்ளத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. நாம் படித்த மந்திரம் வைகுண்டம் செல்ல உதவும் என்பது குருவின் வாக்கு. இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்பது அவரது கட்டளை. குருவின் கட்டளையை மீறக்கூடாது என்பது உண்மையே. அதே நேரம் இம்மந்திரம் தெரிந்த குருவும், நானும் மட்டுமே வைகுண்டம் செல்வதென்பது என்ன நியாயம்? ஊரில் எல்லாருக்கும் தெரியட்டுமே! எல்லாருமே இப்பிறவி துன்பத்தில் இருந்து நீங்கி, பரந்தாமனுடன் கலக்கட்டுமே! இதில் தவறென்ன இருக்கிறது? குருநாதர் ஏன் இப்படி சொல்கிறார்? என தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டார். சிந்தித்தார் சில நிமிடங்கள். இதை எல்லாருக்கும் சொல்லி விட வேண்டும். குருவின் கட்டளையை மீறுவதற்குரிய பாவத்தை நாம் ஏற்றுக் கொள்வோம். நாம் அழிந்தாலும், பிறர் வாழ வேண்டும், என்றவராய், திருக்கோஷ்டியூர் கோயில் வாசலுக்கு சென்றார்.

முதலில் தன் சீடர்களான முதலியாண்டான், கூரத்தாழ்வான் ஆகியோருக்கு இம்மந்திரத்தை போதித்தார். அடுத்து மக்கள் கூட்டத்தை அழைத்தார். அன்பர்களே!  உங்களுக்கு நான் உயர்ந்த மந்திரம் ஒன்றைக் கற்றுத் தரப்போகிறேன். செல்வம், உலக இன்பம் இவற்றையெல்லாம் விட உயர்ந்த ஒன்று உங்களுக்கு இதைக் கேட்பதால் கிடைக்கும், என்றார். எல்லாரும் ஒருமித்த குரலில் அம்மந்திரத்தைக் கூறுமாறு கேட்டனர். ஊருக்குள் இதற்குள் செய்தி பரவி விட்டது. நம் ஊருக்கு வந்துள்ள மகான் ஒருவர் ஒரு மந்திரத்தைச் சொல்லப் போகிறாராம். இதைச் சொன்னால், கிட்டாத பொருள் ஒன்று கிட்டுமாம். அது என்னவென தெரியவில்லை. நமக்கு இன்னும் பொருள், பொன், நினைத்த பெண்...இப்படியெல்லாம் கிடைத்தால், இன்னும் நல்லது தானே, என பாமரர்களும், ஏதோ ஒரு தெய்வீகப்பொருள் கிடைக்கப் போகிறதெனக் கருதி கற்றறிந்தவர்களும் அங்கு கூடினர். ராமானுஜர் என்ற கருணைக்கடல் மக்களுக்கு அம்மந்திரத்தை ஓதியது. அந்த மந்திரத்திற்கு எத்தனை எழுத்துக்கள் தெரியுமா? எட்டே எட்டு. இத்தொடரை வாசித்துக் கொண்டிருக்கும் அனைத்து அன்பர்களுக்கும் அந்த மந்திரம் என்னவென்று அறியும் ஆவல் இருக்கும். அதுமட்டுமல்ல, அதை ஓதினால், எங்களுக்கும் பரந்தாமனுடன் கலக்கும் பாக்கியம் கிடைக்குமே என்ற ஏக்கத்துடன் இருப்பீர்கள் அல்லவா? இதோ! பகவான் விஷ்ணு திருக்கோஷ்டியூர் நம்பிக்கு அறிவித்து, அவர் மூலம் ராமானுஜர் மக்களுக்கு அறிவித்த அந்த மந்திரம் இதுதான். உரக்க படியுங்கள். உங்கள் இல்லம் முழுவதும் இந்த மந்திரத்தின் ஒலி பரவட்டும். பக்தியுடன் படியுங்கள்.

அந்த பரந்தாமனை மனதுக்குள் கொண்டு வாருங்கள். சொல்லுங்கள்....உரக்கச் சொல்லுங்கள்...ஓம் நமோ நாராயணாய....ஓம் நமோ நாராயணாய...ஓம் நமோ நாராயணாய ராமானுஜர் சொன்ன இம்மந்திரத்தை அனைவரும் மும்முறை முழங்கினர். எல்லாருமே வைகுண்டம் செல்லும் பாக்கியத்தை அடைந்தனர். அடுத்து எங்கிருந்து இடிவரும் என்பதை ராமானுஜர் அறிந்திருப்பாரே! திருக்கோஷ்டியூர் நம்பியைச் சந்திக்க அவரே சென்று விட்டார். உள்ளே நுழைந்தது தான் தாமதம். அங்கே அதிகபட்ச வெப்பத்தில் பால் பொங்குவது போல, திருக்கோஷ்டியூர் நம்பி கொதித்து நின்றார். அடத்துரோகியே! குருவின் வார்த்தையை மீறிய உன்னிலும் பெரிய துஷ்டன் உலகில் யாருமில்லை. என் கண்முன்னால் வந்து, உன்னை பார்த்த பாவத்தை எனக்கு தராதே. குருவின் வார்த்தையை மீறிய நீயும் ஒரு மனிதனா? நீ பேயை விடக் கொடியவன். உன்னை நரகத்தில் சேர்க்கக்கூட யோசிப்பார்கள். அதையும் விட கொடிய இடத்திற்கு நீ செல்வாய், என்று உணர்ச்சியை வார்த்தைகளாக வடித்து கொட்டித் தீர்த்து விட்டார். குருவின் நிந்தனை கண்டு ராமானுஜர் சற்றும் கலங்கவில்லை. பலருக்கு நன்மை செய்த தனக்கு, குரு சொல்வது போல, கொடிய நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை எனக் கருதியவர், குருவிடம், ஆச்சாரியாரே! தாங்கள் சொல்வது முழுவதும் நியாயமே. நான் செய்தது தவறென்பது எனக்கும் தெரியும். ஆயினும், இந்த தவறுக்காக எனக்கு கொடிய நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை. ஆனால், இந்த மந்திரத்தைக் கேட்ட ஆயிரக்கணக்கானவர்கள் வைகுண்டம் செல்வார்களே! அதைக்கண்டு நான் மகிழ்வேன். அவர்கள் பரந்தாமனுடன் கலக்கும் காட்சியை என் மனக்கண்ணால் காண்கிறேன். எனக்கு கிடைக்கப் போகும் துன்பத்தை விட, மக்கள் அடையும் நன்மையே பெரிதாகத் தெரிகிறது, என்றார் பணிவுடன். ராமானுஜர் பேசப்பேச, திருக்கோஷ்டியூர் நம்பியின் முகம் மாறியது.

ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கு தாய்வீட்டு சீதனம்!

மேலும்