மோருக்கு விலை மோட்சம் | 1000th year celebrations of holy Sri Ramanuja Acharya | ராமானுஜரின் 1000வது நட்சத்திர வைபவம்

மோருக்கு விலை மோட்சம்

ஏப்ரல் 21,2017



திருமலை திருப்பதியில் ராமானுஜர் தம் சீடர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது மோர் விற்கும் பெண்மணி ஒருத்தி சென்று கொண்டிருந்தாள். அவளிடம் குடிப்பதற்கு மோர் கேட்டனர் சீடர்கள். அவளும் விலை ஏதும் சொல்லாமல், சீடர்களுக்கு வேண்டிய அளவுக்கு மோர் கொடுத்தாள். ராமானுஜரையும், சீடர்களையும் கண்ட அவளுக்கு மனதிற்குள் தானும் இவர்களைப் போல பக்தியில் லயித்து முக்தி பெற வேண்டும்  என்ற எண்ணம் உண்டானது. ராமானுஜர் அவளிடம், “மோர் என்ன விலை?” என்று கேட்டார். “சுவாமி! எனக்கு காசு வேண்டாம். பெருமாளுடன்  வாசம் செய்யும் பரமபதத்தில் மோட்சம் பெற வழிகாட்டுங்கள்” என்று கேட்டாள். “உனக்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும். ஆனால், மோட்சத்தை  வழங்கும் தகுதி தான் எங்களுக்கு இல்லை.

திருமலையின் மேலே நம் எல்லோரு க்கும் மோட்சம் தரும் பெருமாள் அமர்ந்திருக்கிறார். அவரிடம் போய் கேள்!” என்றார் ராமானுஜர். “சுவாமி!  திருமலையில் இருக்கும் பெருமாள் வாய் திறந்து பேச மாட்டாரே! நீங்கள் தான் எனக்காக சிபாரிசு ஓலை தரவேண்டும்” என்றாள். ராமானுஜரும் மோர் விற்கும் இடைச்சியின் நம்பிக்கையை மதித்து சிபாரிசு கடிதம் ஒன்றினை திருமலை திருப்பதி பெருமாளுக்கு எழுதத் தொடங்கினார். சீடர்கள்  அனைவரும் வேடிக்கை செய்கிறாரா, விநோதம் செய்கிறாரா என்று புரியாமல் விழித்தனர். ராமானுஜரின் சீட்டோலையை வாங்கிய மோர் விற்கும்  பெண், திருமலைக்கு புறப்பட்டாள். பெருமாளின் சன்னதி அர்ச்சகர்களிடம் ஓலையைக் கொடுத்தாள். “இது என்ன சீட்டோலை?” என்று அவர்கள்  கேட்டனர். ராமானுஜர் எழுதிய ஓலை என்பதை அறிந்ததும் மறுப்பு ஏதும் சொல்லாமல் பெருமாளின் திருமுன் சமர்ப்பித்தனர். பெருமாளே கைநீட்டி  ஓலையை எடுத்துக் கொண்டு,“உனக்கு மோட்சம் கொடுத்தேன்” என்றார். அப்போது வானில் ஒரு பிரகாசமான விமானம் ஒன்று வந்தது.  விஷ்ணுதூதர்கள் மோர் விற்கும் பெண்ணை ஏற்றிக் கொண்டு பரமபதம் கிளம்பிவிட்டனர்.

ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கு தாய்வீட்டு சீதனம்!

மேலும்