SS அம்பிகையின் அருட்கவசங்கள் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அம்பிகையின் அருட்கவசங்கள்
அம்பிகையின் அருட்கவசங்கள்
அம்பிகையின் அருட்கவசங்கள்

சிவனார் மனைவி என் சிரசினைக் காக்க
நாரணன் தங்கை என் நெற்றியைக் காக்க
கன்னிதுர்க்கை என் கண்களைக் காக்க
கண்மூன்றுடையான் என் கன்னங்கள் காக்க
மூகாம்பிகையாள் என் மூக்கினைக் காக்க
கூஷ்மாண்டினியாள் கூந்தலைக் காக்க
இமயத்தரசி என் இருசெவி காக்க
வாணித்தாயார் என் வாயினைக் காக்க
இலட்சுமித் தாயார் உடல் இலட்சணம் காக்க
முகமதன் அழகை முக்கண்ணி காக்க

பகவதி தேவி பற்களைக் காக்க
உமையாம்பிகையாள் என் உதடுகள் காக்க
நான்முகன் மனைவி என் நாவினிலிருக்க
நவதுர்க்கை தேவியர் நல்லோசை தருக
கருமாரி தேவி என் கழுத்தினைக் காக்க
கொற்றவை என்தன் குரல்வளை காக்க
சரஸ்வதி என்தன் சப்தத்தைக் காக்க
புவனேஸ்வரியாள் என் புஜங்களைக் காக்க
முன்கை முழங்கை முண்டினி காக்க
சிவ சிவதுர்க்கை என் சிந்தனை காக்க

விஷ்ணு துர்க்கை என் விரல்களைக் காக்க
மஞ்சள் மாதா மார்பினைக் காத்து
மாதருக்கெல்லாம் மார்பழகருளி
பிள்ளைக்கு ஊட்டிட பால்வள மருளி
மக்களைக் காத்திட மாதா வருக
காஞ்சி காமாட்சி கைகால் காக்க
வனதுர்க்கைத் தாயார் வயிற்றினைக் காக்க
முக்கோணத்தி என் முதுகினைக் காக்க
துலுக்காணத்தீஸ்வரி தொடைகளைக் காக்க
கோட்டைமாரி இருபாற் குறிகளைக் காக்க

முழங்கால் கணைக்கால் முத்துமாரி காக்க
இருடிகேசி இடுப்பினைக் காக்க
பிரம்மராம்பிகை என் பிட்டங்கள் காக்க
பார்வதிதேவி பாதங்கள் காக்க
விந்தியவாசினி விதியை வெல்க
காசி விசாலாட்சி காலமெல்லாம் காக்க
ஜகம் புகழ் வாழ்வை ஜாதவேதோ தருக
ஜ்வலத் துர்க்கை என் ஜாகையைக் காக்க
சாந்தி துர்க்கை சாந்தம் காக்க
சபரீ துர்க்கை சபரியாத்ரை அருள்க

லவண துர்க்கை லட்சங்கள் தருக
தீயில் ஆபத்தை தீப துர்க்கை தடுத்து
நீரில் ஆபத்தை நீலாம்பிகை நீக்கி
காற்றில் ஆபத்தை காயத்ரி காத்து
நவகிரகங்களும் நல்லன செய்தற்கு
நஞ்சுண்டன் மனைவி நல்லாணை இடுவாள்
ஆஸுரி துர்க்கை ஆலயம் அமைக்க
ஜெயத்தினைத் தருவாள் ஜெயதுர்க்கா தேவி
திருஷ்டி துர்க்கா கண்திருஷ்டி நீக்கி
வினவிடும் வரங்கள் வனதுர்க்கை தருக

ராஜயோக வாழ்வருள் ராஜராஜேஸ்வரியும்
கோமகள் அருளால் திருக்கோயில் கட்டி
திருமகள் அருளால் திருப்பணி நிறைந்து
துர்க்கைத்தாயார் நடுக்கொலு விருப்பாள்
அங்காளீஸ்வரி அங்கங்கள் காத்து
உடலின் அசைவுகள் உமையவள் காக்க
ஓட்டமும் வழிநடை ஓங்காரி காக்க
வாகன விபத்தின்றி வாராகி காக்க
மூச்சுக்குழலை மூகாம்பிகை காக்க
ஜாமத்தில் பயமின்றி ஜகன்மாதா காக்க

நாடியின் துடிப்பை நான்முகி காக்க
சந்தர்ப்ப சமயத்தல் சமயபுரத்தாள் காக்க
சந்தோஷிமாதா சந்தோஷம் தருக
ரேகைகள் அமைப்பை ரேணுகை காக்க
அன்னபூரணி ஆண்டாள் நாச்சியார்
உண்ணாமுலையாள் உணவென்றும் தருக
வடிவுடை நாயகி வடிவழகு காக்க
ஞானாம்பிகையாள் ஞானப்பால் அருள்க
அஷ்டலட்சுமி அங்கலட்சணங்கள் காக்க
கௌமாரி கௌரி கவுரவம் காப்பாற்ற

கருவில் உயிரை கருமாரி காக்க
கன்யாகுமரி கண்ணொளி காக்க
கன்னி பெண்டிர் கடிமனம் நிறைவுற
கங்காதேவி தீர்த்தம் தெளித்தருள்வாள்
ஜாதகக் குறையை ஜெகன்மாதா நீக்கி
தெசையில் புத்தியில் திரிபுரை காக்க
ஊத்துக்காட்டம்மை ஊடல்கள் நீக்கி
ஆதிபராசக்தி அனுதினம் காக்க
கற்கும் வேதங்கள் காயத்ரி காக்க
ஐயப்பன் மாதா ஐஸ்வர்யம் தருக

கொடிய விஷங்களும் கொள்ளை நோய்களும்
குருதியைக் குடிக்கும் குறளைப் பேய்களும்
கோட்டை மாரியைக் கருத்தில் கொண்டிட
கதிகலங்கி மறைந்திட கடைக்கண் பார்க்க
வாதம் பித்தம் வாந்தி பேதி சீதம்
வயிற்று நோய்களும் (உடலை) வாட்டிடும் நோய்களும்
தேகத்தை மெலிவிக்கும் தொற்று நோய்களும்
புற்றும் குட்டமும் புத்திக் குழப்பமும்
விஷத்தால் ஜுரமும் உடல்வலி நோய்களும்
தொண்டைப் புண்ணும் தோல்வகை நோய்களும்

எவ்வித நோயும் எனை அணுகாமல்
நின்று நீ காப்பாய் நீலி திரிசூலி
நல்லோர் உறவை நாளும் அருள்வாய்
காமம் குரோதம் லோபம் மோஹம்
மதமாச்சர்ய மெனும் ஐம்பெரும் பூதம்
என்றுமே என்னுள் நுழைந்து விடாமல்
ஆதிபராசக்தி போதனை தருக
சூது பொறாமை சோம்பலில்லாமல்
சோரம் லோபம் துன்மார்க்க மில்லாமல்
வேத நெறிகளில் வழி பிசகாமல்

கிரகங்கள் ஒன்பதின் உறுதுணை நட்புடன்
பரமனின் பத்தினி வரமெனக் கருள்வாய்
மூப்பின் நோயும் வறுமையும் பசியும்
வந்தெனை வாட்டி வதை செய்யாமல்
அன்னபூரணி அணைத் தெனைக் காக்க
கொண்ட நோய்களைக் கொன்று குவித்திட
கோட்டை மாரியின் குங்குமக் கவசம்
இருவினை களைந்தே எமைக் கரையேற்ற
இமயத்தரசி இன்றே வருக
கன்னி துர்க்கையை எண்ணியே துதிக்க
பண்ணிய பாபங்கள் பறந்தோடிப் போகும்

அன்னை துர்க்கை அபயம் என்றிட
ஐம்பூதங்களும் அடிப்பணிந்தேத்தும்
வனத்தின் துர்க்கையை வணங்கிப் பணிந்து
நினைக்கின்ற நொடியில் நிச்சயம் வருவாள்
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி
மூங்கில் போல் சுற்றிலும் முசிந்து பெருகி
நின் திருக்கூட்டம் நித்தமும் பெருகட்டும்
நின் வழிபாடு வளர்ந்தே ஓங்குக
லோகம் யாவும் மோகம் கொண்டிட

லலிதாம்பிகை யொரு வழியினைக் காட்டி
வழிபடும் குழுவின் வளர்ச்சியைக் காக்க
கனி விளக்கொளியும் இனிதே பெருகி
துர்க்கையின் வழிபாடு துளிர்விட்டுத் தழைக்கும்
சர்வ ஜனங்களை என்வச மாக்கும்
சர்வேஸ்வரியாளின் வசிய மந்திரத்தை
சந்தோஷி மாதா வந்தோதியுரைக்க
உள்ளன்புடனே உன் திருநாமம்
ஓதியுரைத்தால் ஓம் என்றொலிக்கும்
நித்தமும் நான்சொல்லும் சிவசக்தி நாமம்
சித்தத்தில் சேர்த்திடும் சித்திகள் கவசம்-அதை
சத்தமாய்ச் சொல்ல சதாசிவம் சேரும்.

ஓம் ஓம் அன்னையின் அருளே போற்றி
ஓம் ஓம் ஜெய ஜெய துர்க்கா போற்றி
சித்தி புத்தி சிறந்தே போற்றி
வள்ளி தெய்வானை வளமுடன் போற்றி
பூரணை புஷ்கலை தேவியர் போற்றி
அனுமனின் அன்னை அஞ்சனை போற்றி
வெக்காளி மாகாளி ஜெயகாளி போற்றி
இச்சாசக்தி கிரியாசக்தி ஞானசக்தி போற்றி
ராஜகாளி தில்லைக்காளி நவகாளி போற்றி
வடபத்ரகாளி கல்கத்தா காளியும் போற்றி

கிருஷ்ண ருக்மணி பாமா போற்றி
ராஜ, வீர்ய, விஜயலெக்ஷ்மி போற்றி
திரௌபதை தேவி, துளஸியும் போற்றி
ஆதி, சந்தான, சௌபாக்யலக்ஷ்மி போற்றி
கண்ணனின் தாயார் யசோதை போற்றி
சூர சத்ரு சம்ஹாரி சிவகாமி போற்றி
சிவனுடல் பாதி மௌந்தரி நமோ நம
திருவரங்கப் பெருமான் தேவியர் நமோ நம
திருப்பதி மலையான் தேவியே நமோ நம
நான் முகப்பிரமன் தேவியே நமோ நம

பித்தன் பிறை சூடித் தேவியே நமோ நம
மருவூர் வாழும் மாதா நமோ நம
சரணம் சரணம் சர்வேஸ்வரியே
சரணம் சரணம் சாமுண்டீஸ்வரியே
சரணம் சரணம் சாரதாம்பாள்
சரணம் சரணம் சக்தியின் சூலம்
சரணம் சரணம் விநாயகன் தாயே
சரணம் சரணம் சரவணன் தாயே
சரணம் சரணம் சபரியான் தாயே
சரணம் சரணம் சத்தியம் வரணும்
மரணத்தை அழிக்கும் மாமருந்து தரணும்
அன்னையின் அருள் மழைக்குளமொரு கவசம்
அதில் குளித்தெழுமென் உடல்பொருள் ஆவி!

அம்பிகையின் அருட்கவசங்கள் முற்றிற்று.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar