SS திரவுபதி அம்மன் விருத்தம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> திரவுபதி அம்மன் விருத்தம்
திரவுபதி அம்மன் விருத்தம்
திரவுபதி அம்மன் விருத்தம்

1. சீர்பெற்ற வுலகினில் துவாபரயுகத்தினில்
ஜென்மித்து ஐவராக
செங்கோலுக்கதிபதி தர்மபுத்திரபீமர்
தனஞ்செய னகுலசகாதேவர்
பேர்பெற்ற திரிதராட்டிரன் மைந்தன் துரியனுடன்
சூதாடிபுவி தோர்த்துதான்
தேவிபாஞ்சாலியும் ஐவரும் வனவாசம்
சென்றுதான் பன்னிரண்டு
நேர்பெற்ற அக்யாதம் ஓராண்டு செல்லவே
நின்றுதான் விராடபுரத்தில்
நெடியமால் தயவினால் பாரத முடிக்கவே
நிகரிலாப் போர்பொருந்தி
மார்த்ததுரியன் மேல் நின்றுதான் விரிகூந்தல்
வாரியே முடித்தவுமையே
வனக்கிளி கதம்பமணி குங்கும வசந்தநெறி
மதிரூப பாஞ்சாலியே

2. நீடாளும் பாஞ்சாலன் எக்கியந்தன்னிலே
நீயொரு பெண்பிறந்தாய்
நெடிதொருவில்தனை வளைத்தவர் தமக்கு நீ
நிச்சயந்தருவனென்றார்
சோடாக சுயம்வரஞ் சாட்டிய துருபதன்
துரோபதை தனக்குமணமே
சொல்லரிய துரியோதிர ராஜனுந்தம்பிமார்
தொல்புவி மன்னவர்களும்
ஆடாதவில் தனை நாணேற் றிடாமலே
அவமதிப்பட்டுநிற்க
அப்போதுவனவாசம் காட்டினில் திரிந்தவர்க
ளனைவருந் தானிருக்க
வாடாத வில்தனை வளைத்து தானர்ச்சுனன்
மாலைதானிட்டுக் கொண்டார்
வனக்கிளி கதம்பமணி குங்கும வசந்தநெறி
மதிரூப பாஞ்சாலியே

3. தர்மமோநித்தியம் தர்மமோ முக்தியும்
தர்மருங் கொலுவிருக்க
தாஷ்டீகவீமனும் அர்ச்சுனனும் நகுல
சகாதேவ னருகிருக்க
வரமுள்ளதேவியுனை ஐவர்க்கும் பாரியாய்
மாதுநீ அருகிருக்க
மாதுநீ யொருவர்க்கும் பாரியுமல்லகாண்
மற்பொருது பார்க்கவந்தாய்
சாருத்த போரினில் ஐவரையுங் கொண்டு வந்து
சபதமே முடித்தவுமையே
சங்கரிசார்வல வுந்தனிட மகிமையான்
சாற்றவே முடியுமோதான்
வர்மகுண வஞ்சியேமாயோன் சகோதரி
வந்தென்னை ரட்சித்திடும்
வனக்கிளி கதம்பமணி குங்கும வசந்தநெறி
மதிரூப பாஞ்சாலியே

4. பஞ்சவரை துரியனும் விருத்துக்கு வாவென்று
பரிவாகவே யழைத்து
பாதகன் சகுனியும் வசனாபியைக் கலந்து
பரிந்துடன முதளித்தான்
வஞ்சனையறிந்துதான் மாயவர் கிருஷ்ணரும்
வண்டாய்ப் பறந்து வந்து
மணிரத்னதீபத்தை யணைக்கவே பஞ்சவர்கள்
மனம்வாடி திகைத்து நின்றார்
நெஞ்சினில் கபடமது யில்லாதபீமனும்
நிறைந்த அமுதையுருட்டி
நெடியமால் தயவினால் பசியாறியபீமனும்
படுகறையாய் மூர்ச்சையானார்
வஞ்சியே துளபமணி மாலையர்வயித்தியராய்
வந்துபீமருக் குயிரளித்தார்
வனக்கிளி கதம்பமணி குங்கும வசந்தநெறி
மதிரூப பாஞ்சாலியே

5. ஐவரையுங் கொண்டுபோயரக்கு மாளிகையினி
லடைத்தான் துரியோதிரன்
அக்கண்ட விலங்கிட்டு அக்கினியை மூட்டினான்
அப்போது தர்மர்தானும்
செய்யும்வகையே தென்று தேவரீர்மாயவரை
சிந்தையில் நினைத்தபோது
செந்துளப மாலையர் வந்துதானைவரையும்
தற்காத்து ரட்சித்தார்
தையலாள் துரோபதை சபையிலேகொண்டுவர
தம்பி துற்சாதனன்தான்
சற்றுந்தயவில்லாமல் பத்தினிதுகில்தனை
கைப்பற்றி யுரிந்தார்
வையமளந்தவரை மனதில் நினைத்திட
மாளாது துகிலளித்தார்
வனக்கிளி கதம்பமணி குங்கும வசந்தநெறி
மதிரூப பாஞ்சாலியே

6. பன்னிரண் டாண்டுதன் சென்றுமே வனவாசம்
பருகியே அக்யாதந்தான்
பாராளும் விராடனார் பக்கலில் ஐவரும்
பத்தினி மாறுவேடமாய்
தனியாகமயல்கொள கீசகன் தனைக்கொல்ல
தஷ்டீகபீ மன்றானும்
தாக்கிய அர்ச்சுனன் சண்டைக்குமாடுபிடி
சாரதி மாயன்றானும்
பனிசூழும் பாராளும் துரியனார்பக்கலில்
பாலகனைத் தூதனுப்ப
பாதி நாடாளவே ஐந்தூருங்கேளுமென
பகரவே மாயனார்க்கு
வாணி சூழ்த்தினா புரந்தனிலேகியே
மாயவர் தூது சென்றார்
வனக்கிளி கதம்பமணி குங்கும வசந்தநெறி
மதிரூப பாஞ்சாலியே

7. பாரதம் பதினெட்டு நாளுமே சென்றபின்
பரிவாள தருமருக்கு
பட்டாபிஷேக மேகட்டியே மகுடமுடி
பண்பாகவே சூட்டியே
சாரதியானதொரு மாயவர் வந்துதான்
சதுர்மறைகள் தானோதியே
சாத்தியே யரசாளும் செங்கோல் செலுத்தியே
தர்மராஜ னென்று போற்ற
வீரவாளுருவியே தம்பிமார் நால்வரும்
வீரியமாக நிற்க
வீரதம்பட்டமும் முரசுவல் லாரையும்
விருதுடனார்ப் பரிக்க
வன்னியே துரோபதா தாள்பூட்டி பூதேவியும்
வந்துதா னருகிருக்க
வனக்கிளி கதம்பமணி குங்கும வசந்தநெறி
மதிரூப பாஞ்சாலியே

8. உலமது ஆண்டபின் கலிபிறந்ததென்று
ஒன்றாகத் தம்பிமாரும்
உமையவள் துரோபதைமகாதேவருஞ் சொல்லவே
உடல்விட்டு வைகுந்தம்போய்
நிலைமையுடன் தர்மரும்வொண்டியாய் வைகுந்தம்
நெடியமால் பாதம்பெற
நிகரில்லாமாயவன் கருடனையழைத்துமே
நீஎதி ராகுமென்றார்
கலகமதிற்குலந்தனை விமானத்தில் வைத்துடன்
காட்டினார் வைகுந்தமே
கலியுகந்தனிலே அறியவேனைவர்க்கும்
கண்கண்ட தெய்வமானீர்
வரம்பெறு மடியார்கள் பங்கிலுறைவஞ்சியே
மாதுநீ துரோபதம்மாள்
வனக்கிளி கதம்பமணி குங்கும வசந்தநெறி
மதிரூப பாஞ்சாலியே

9. கொத்தளமுங் கொடிகளும் குமரவர்க்கங்களும்
கொக்கரித் தண்டமதிர
கூட்டமிட்டேயொரு பேய்களும் பூதமும்
குறுமுனிவன் பிசாசுபில்லி
விந்தையாஞ் சாகினி டாகினி மோகினி
திரிசூலிகாட்டேரியும்
வீரவீரர்களும் ராட்சத கணங்களும்
விடுபட்ட ராவிரிஷியும்
உந்தன் வீரபண்டாரமும் சாட்டியும் மணிகளும்
காணவே திடுக்கிட்டுதான்
ஓயம்மே ஓயம்மே நோய் போயினே னென்று
ஓடுமே கொக்கரித்து
முந்துநீ அடியேனைக் காத்து ரக்ஷித்திடும்
மகாவீர பாஞ்சாலியே
வனக்கிளி கதம்பமணி குங்கும வசந்தநெறி
மதிரூப பாஞ்சாலியே

பத்துமே பக்தியுடன் பாடினே னுன் மீதில்
பராசக்தி துரோபதம்மா
பாஞ்சாலன் கண்ணியே வீரமல் லாரியே
பத்தினி பரமேஸ்வரி
நித்தமுமுன் பாதமலர் நினைவிலே நினைத்திட
தீர்க்குமே பாவங்களம்மா
நீலிபாஞ்சாலி நீ கால கபாலியே
நெடியமால் தங்கையம்மா
உத்தமி துரோபதா நித்யகல்யாணியே
யோங்காரர வீரசக்தி
யுல்லாசகாமிநீ சல்லாபவாணிநீ
யுமையே பாஞ்சாலிகன்னி
வைத்திடும் சித்தமென வல்வினையை நீக்கிடும்
மகாவீர பாஞ்சாலியே
வனக்கிளி கதம்பமணி குங்கும வசந்தநெறி
மதிரூப பாஞ்சாலியே

திரவுபதி அம்மன் விருத்தம் முற்றிற்று.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar