SS ஆவுடைஅக்காளின் தட்சிணாமூர்த்தி படனம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ஆவுடைஅக்காளின் தட்சிணாமூர்த்தி படனம்
ஆவுடைஅக்காளின் தட்சிணாமூர்த்தி படனம்
ஆவுடைஅக்காளின் தட்சிணாமூர்த்தி படனம்

காப்பு

ஆதி முதலே ! அகண்ட வெளியானவரே ! மேக நிறத்தாரே ! விவேகமுரைத்தவரே !
ஞானம் உரைப்பதற்கு ரூபமெடுத்தவரே !
என் அஞ்ஞானம் போக்குவதற்கு அவதாரமானவரே ! சுத்த ஸ்வரூபி ! சுருதி மறைப்பொருளே !
சுருதி சொல்லுக்கு எட்டாதவரே ! ஆத்ம ஸ்வரூபி ! அகண்ட ரஸமானவரே! ஆக்ஞை ஸ்தானத்தே
ஆடுமென்று சொன்னவரே ! ஜெனன வியாதிக்கு ஒளஷதமிட்ட தேசிகரே ! தீருமய்யா ஜென்மவினை !
உம்முடைய சீர்பாதம் சரணம் ! சரணம் !

1. சின்மய ஸ்வரூபமான தக்ஷிணா மூர்த்தி ராஜர்
தேசிகராய் வந்து எனக்கு சற்றும்
சந்தேகமன்னியிலே அண்டமெல்லா மேகமாகி
சொல்லெனக்கு வாக்கியஞ் சொல்வார்

2. வெள்ளை நிறமாயிருக்கும் வேதாவின் நாயகியே
விளங்கியெந்தன் நாவில் வருவாய் சற்றும்
கங்குகரை காணாத ஸம்ஸார ஸாகரத்தில்
என்செய்வே னென்ற லையும்போது

3. செந்தாமரைப் பாதத்தில் சேர்வைபண்ணி தினந்தோறும்
சிந்தை வடிவு கொண்டே அமர்ந்தேன் அவர்
அஞ்சாதேயென்று சொல்லி அமிர்ததிருஷ்டி யாலே பார்த்து
என்தாபம் மூன்றையும் போக்கி

4. பொங்கித் ததும்பும் மனம் சிரவணத்தால் ஒழிவடைய
போதித்தார் நீ கேள், மனதே
சந்ததமுந் தைலதாரைபோல பக்தி பண்ணிவந்தால்
சத்புருஷா ளான வஸ்துவை

5. அவர்-தாளடியிலே வணங்கி சரணமென்று சொன்னவர்க்கு
தாமுரைக்கும் வாக்கியஞ் சொல்வர்
பூதமஞ்சைப் பிரியென்பர் போதந்தன்னை அறி என்பர்
போக்குவரத்தில்லை நோக்கென்பர்.

6. ஆசைதன்னை ஒழியென்பர் ஆத்மவிசாரணை பண்ணென்பர்
பிரம்மானந்த மாய்நீ இருவென்பர்
ஸாதுஸங்க வாஸனையை ஸந்ததம் விடாதேயென்பர்
உபசாந்தி தாந்தியோடே இருஎன்பர்.

7. விஷயத்தை விடுஎன்பர் வேதாந்தம் கேளென்பர்
மோகாந்தகாரம் தள்ளென்பர்
ஏகாந்தமாயிருந்து ஆராய்ந்துபாரென்பர்
வாராது வாஸனையென்பர்

8. சப்தஸ்பரிசரூப ரெஸகெந்த மிந்திரியங்களை
தைரியத்தினாலே அடக்கென்பர்
கட்டுப்படாமனதை மடக்கித்திருப்பிமெள்ள
ஸத்வாஸனைக்கே விடென்பர்

9. பக்திவிரக்திதனை பிரதிதினமும் பண்ணிவந்தால்
பந்தமுனக்கு வாராதென்பர்
ஸாகஸமாய்த் துணிந்து ஸர்வத்திலும் பற்றற்று
ஆகாசம் போலிரு வென்பர்

10. மனசு புத்தி அகங்காரம் சித்தத்தை சிவத்துடன்
ஒத்து லயமாக்கிப் பாரென்பர்
மலடிமைந்தன் போலேயிந்த மனதினால் வந்ததெல்லாம்
பதினாலு லோகமு மென்பர்

11. சற்றும் பிரமிக்காதே பாரென்பர் பார்க்கரெண்டு இல்லையென்பர்
அசையாமலேயிரு நீயென்பர்
ஜீவாத்மபுத்தி தேகபுத்தி அதுரெண்டும் அவித்தை என்பர்
அறிந்ததை விட்டுவிடென்பர்

12. தீர்க்ககால பிரமைதன்னை தினந்தோறுஞ் சிரவணத்தால்
போக்கிவிடு என்று சொல்வர்
மனனத்தைப் பண்ணென்பர் வஸ்துதானே நீயென்பர்
இருதயகிரந்தி யறுவென்பர்

13. நிதித்தியாஸ னத்திலிருந்து நிர்விகாரி யாயிருந்தால்
இரண்டுமில்லை பிராந்திகாணென்பர்
பொறுமையுடனேகூடி பூததயை பண்ணிவந்தால்
பூர்ணவடி வாகலாம் என்பர்

14. அருமையான ஆத்மஞானம் அறிதலெளிதென்பர்
அதிர்ஷ்டமுள்ள பேர்களுக்கென்பர்
காலமென்றுந் தேசமென்றுங் கலங்காதே நீ யென்பர்
கற்றுணர்ந்து உற்றுப் பாரென்பர்.

15. தர்ப்பணத்தில் பிரதிபிம்பம் போலே ஜகம் தள்ளென்பர்
தக்தபடம் போலே இருவென்பர்
சுஷுப்திபோலே ஜாக்கிரத்தில் சுகதுக்கமிரண்டையும்
சமபுத்தியாலே பாரென்பர்

16. சொப்பணம் காணிபிரபஞ்சம் சுத்தப்பொய் காணென்று சொல்வர்
செப்படி வித்தைபோலே பாரென்பர்
தத்பதமும் த்வம்பதமும் சோதித்துப் பாரென்பர்
தோற்றுமப்போது தன்வடிவென்பர்.

17. மூலாதாரத்திருந்து மூச்சடக்கித் தினந்தோறும்
மூல விருத்தி தியானம் பண்ணென்பர்
ஆறாதாரந்தன்னில் அதிஷ்டான தேவதையே
யார் இருக்கிறார் பாரென்பர்.

18. ஸஹஸ்ர தளத்தின் மேலே சக்தியோடு சங்கரனாரும்
தாமிருக்கிறார் பாரென்பர்
உத்ஸாகத்துடனிருக்கும் உவமையற்ற ஞானியர்க்கு
இந்த உண்மை தோன்றிடுமென்பர்.

19. அறிவற்ற அஜ்ஞானிக ளதைவிடப் போறாளென்று
ஆலயத்தில் ஈசன் உண்டென்பர்
பெரியவாளிருக்கிற தெல்லாம் சிவஸ்தலம் தரணி யெல்லாம் புண்ணியதீர்த்தம்
பார்த்ததெல்லாம் மூர்த்திகாணென்பர்

20. எத்தைஎத்தைச் சொன்னாலும் எல்லாமிது தானென்பர்
இன்னஇன்னதெனக் கூடாதென்பர்
இருதயமான ஆகாசத்தில் உதயமான சூரியன்போல்
இரவுபக லிரண்டில் லையென்பர்

21. மூணு குண மாய்ப்பிரித்து தோன்றுகிற லோகமெல்லாம்,
முயல்கொம்புபோலே பாரென்பர்
வேதமோடு சாஸ்திரங்கள் வித்தை அறு பத்தினாலும்
கற்றும் ஜன்மம் போகாதென்பர்.

22. ஸப்தகோடி மஹாமந்திரத்தால் ஜனன மரண முதலான
சித்தபிரமை போகாதென்பர்
ஆசையோடு மோகமற்று அனைத்தையும் ஒன்றாய்ப் பார்த்தால்
அப்போ வாக்கும் ஜன்மம் போமென்பர்.

23. ஆசையற்ற சுகம் போலே வேறு சுகமில்லை யென்பர்
அனுபோகமுனக்கு இதுதானென்பர்
விஷயமற்ற சுகம்போலே வேறுசுகமில்லை யென்பர்
மெய்யோ பொய்யோ நீயே பாரென்பர்

24. சத்துருவை விடு என்பர் பந்துவை தஹியென்பர்
வீடும்மாடும் அஸத்தியமென்பர்
சத்துருவை மித்திரனை ஸமனாகப்பாரென்பர்
தரணியெல்லாம் நீதானே என்பர்

25. உத்தம பக்தருக்கு ஒருவாக்கியத்தி னாலேதானே
சுவானுபோக முண்டாகுமென்பர்
பரிபக்குவ சுத்தருக்கு சத்குருவின் கிருபையினால்
சந்தேகங்கள் போய்விடுமென்பர்.

26. வஸ்துவெனக்குச் சொல்லிவந்த மஹாபோத ஸங்கிரஹத்தை
கற்றுணர்ந்து உத்துக் கேட்டார்க்கு
ஸத்தியமாய்ச் சொல்லுகிறேன் ஸந்தேகங்களன்னியிலே
ததாகார மாகிவிடுவார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar