SS விஜயா நித்யாவுக்கான அர்ச்சனை! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> விஜயா நித்யாவுக்கான அர்ச்சனை!
விஜயா நித்யாவுக்கான அர்ச்சனை!
விஜயா நித்யாவுக்கான அர்ச்சனை!

அழகு கொஞ்சும் ஐந்து முகங்கள்; ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள்; ஐந்து சிரங்களையும் அலங்கரிக்கும் அழகான மணிமகுடங்கள். மகுடத்துக்கு மகுடம் போல அழகானதொரு சந்திர கலை; அழகிய திருக்கரங்கள் பத்து; இடக்கரங்களில், சங்கு, பாசம், கேடயம், வில் மற்றும் செங்கழுநீர் பூவை ஏந்தியும், வலக்கரங்களில் சக்ரம், அங்குசம், வாள், அம்பு, நாரத்தம்பழம் ஆகியவற்றை ஏந்தியும், ஸர்வாபரண பூஷிதையாக மஞ்சள்நிறப் பட்டாடை உடுத்தி உதயகால சூரியனின் ஒளி போல தேஜோமயமாக ஜொலிக்கிறாள் விஜயா நித்யா.

ஜயம் என்றால் வெற்றி என்று பொருள். விஜயம் என்றால் விசேஷமான வெற்றி. செல்லுமிடமெல்லாம் வெற்றி என்றே பொருள். தன் பக்தனுக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பைக் கொடுப்பதே விஜயா நித்யாவின் பணி. பள்ளியிலும் கல்லூரியிலும் பரீட்சையில் வெற்றி; வேலைக்கான தேர்வில் வெற்றி; வேலையில் வெற்றி; முன்னேற்றத்தில் வெற்றி; வியாபாரத்தில் வெற்றி; வரவு செலவில் வெற்றி; சந்தோஷத்தில் வெற்றி; எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கையிலேயே வெற்றி.. இப்படி தொட்டதெல்லாம் துலங்கும்படியான ஒரு வாழ்க்கை சாத்தியமாகுமா?

கற்பனையிலும் கனவிலும் மட்டும் கண்ட வெற்றிகளை நிஜமாக்க, விஜயா நித்யாவின் பேரருள் இருந்தால் சந்தேகமில்லாமல் சாத்தியமாகும்.இன்றைய போட்டி நிறைந்த உலகில் வெற்றி என்பது சாதாரணமான ஒன்றல்ல. ஒரு வெற்றி கிடைப்பதற்கு உழைப்பும் திறமையும் மட்டும் போதாது. மிகுந்த திறமையும், கடின உழைப்பும் இருந்தும் பலர் சோபிக்க முடியாமல் குடத்திலிட்ட விளக்காகவே விளங்குவதை நாம் பார்க்க முடியும். திறமையையும் உழைப்பையும் சரியானபடி பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்த இரண்டையும் சரியான நேரத்தில் வெளிக்கொண்டு வருவது இறையருள் மட்டுமே! அப்படி வெற்றியடையச் செய்பவள் விஜயா நித்யா மட்டுமே!

வியாபாரமாக இருந்தாலும், வழக்காக இருந்தாலும் தன்னையே சரணமென்று பணிந்து வணங்கும் பக்தனுக்கு நியாயமான வெற்றியை அருள்கிறாள். தன் பக்தனை எந்த இடத்திலும் துவள விடாமல் ஜெயிக்க வைக்கிறாள்.

உலகில் வெற்றிபெற்ற பலரும், குடும்ப வாழ்வில் நிம்மதி இழந்து தவிப்பதை நாம் கேள்விப்படுகிறோம். இதை விஜயா தேவி போக்குவதோடு மட்டுமல்லாமல் குடும்ப ஒற்றுமைக்கும் வழிவகுக்கிறாள். இவளை முறையாக ஆராதனை செய்தால் - குடும்பத்தில் உள்ள மனஸ்தாபங்கள், கருத்து வேற்றுமைகள் மறைந்து மன சந்தோஷமும் ஒற்றுமையும் பெருகும்.

பண்டைய காலங்களில் போருக்குச் செல்லும் அரசர்கள், விஜயா தேவியை வழிபட்டு, அதன் பின்னரே புறப்படுவார்கள். புரட்டாசி மாத சுக்லபட்ச தசமியன்று சாயங்காலத்துக்குப் பின்னர் நட்சத்திரங்கள் உதயமாகும் காலத்துக்கு விஜயா என்றே பெயர்; அந்த நேரத்தில் துவங்கப்படும் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் (இதுதான் நம்மால் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது).

புலனடக்கம் மிகக் கொண்டு கடும் அனுஷ்டானங்களுடன் மனத்தை வென்ற சாதகன், இவளை முறையாக இவளது சக்ரத்தில் பூஜிப்பானாகில், அவனால் அடைய முடியாதது ஏதுமில்லை. அவன் வாழ்வில் எப்போதும் இன்பம் மட்டுமே நிலைத்திருக்கும். உலகியல் வாழ்வின் அனைத்து கூறுகளிலும் வெற்றியைத் தொட்டு, ஆன்ம வாழ்விலும் தன்னைத் தான் உணர்ந்து ஆன்ம வெற்றியையும் அடைவான். உபாஸனேதி சவும்யாம் ச ப்ரயோகே பீமதர்சனாம் எனும் வாக்கின்படி, நிஷ்காம்யமாக தன்னை வணங்கும் பக்தனுக்கு அவனது சகல காரியங்களிலும் வெற்றியைத் தருகிறாள் விஜயா தேவி. பிரதிபலன் எதிர்பார்க்காமல் வணங்கும்போது அம்பிகையை சவும்ய ரூபிணியாக - சாந்த வடிவில் வணங்கும்படி ஸம்ஹிதைகள் அறிவுறுத்துகின்றன. அதேசமயம் குறிப்பிட்ட பலனை எதிர்பார்த்து அதாவது எதிரிகளை வெல்லவோ, வழக்குகளில் நமக்கு வெற்றி உண்டாகவோ பூஜிக்கும்போது, அம்பிகையை உக்ர ரூபிணியாக தியானிப்பது வழக்கம். சிங்கத்தில் அமர்ந்த கோலத்திலும், அவளது பரிவாரங்கள் புலிகளின் மேல் வீற்றிருக்கும் கோலத்திலும் அம்பிகையை தியானித்து பூஜிக்க வேண்டும். இம்முறை, குருவின் நேரடி வழிகாட்டிதலில் செய்யப்படுதலே நலம் பயக்கும்.

விஜயா நித்யாவுக்கான அர்ச்சனை:

ஓம் விஜயாயை நம:
ஓம் ஜயதாயை நம:
ஓம் ஜேத்ர்யை நம:
ஓம் அஜிதாயை நம:
ஓம் வாமலோசனாயை நம:

ஓம் ப்ரதிஷ்டாயை நம:
ஓம் அந்தஸ்திதாயை நம:
ஓம் மாத்ரே நம:
ஓம் ஜினாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் குலோத்பவாயை நம:
ஓம் க்ருசாங்க்யை நம:
ஓம் வாயவ்யை நம:
ஓம் க்ஷமாயை நம:
ஓம் க்ஷõமகண்டாயை நம:
ஓம் த்ரிலோசனாயை நம:
ஓம் காமாயை நம:
ஓம் காமேச்வர்யை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் காம்யாயை நம:
ஓம் காமப்ரியாயை நம:
ஓம் காமாயை நம:
ஓம் காமாசார விஹாரிண்யை நம:
ஓம் துச்சாங்க்யை நம:
ஓம் நிராலஸ்யாயை நம:
ஓம் நீருஜாயை நம:
ஓம் ருஜ நாசின்யை நம:
ஓம் விசல்யகரிண்யை நம:
ஓம் ச்ரேஷ்டாயை நம:
ஓம் ம்ருத ஸஞ்ஜீவன்யை நம:
ஓம் படாயை நம:
ஓம் ஸந்தின்யை நம:
ஓம் சக்ரநமிதாயை நம:
ஓம் சந்த்ரரேகாயை நம:
ஓம் ஸுவர்ணிகாயை நம:
ஓம் ரத்னமாலாயை நம:
ஓம் அக்னி லோகஸ்தாயை நம:
ஓம் சசாங்காயை நம:
ஓம் அவயவாம்பிகாயை நம:
ஓம் தாராதீதாயை நம:
ஓம் தாரயந்த்யை நம:
ஓம் பூர்யை நம:
ஓம் பூரிப்ரபாயை நம:
ஓம் ஸ்வராயை நம:
ஓம் ÷க்ஷத்ரஜ்ஞாயை நம:
ஓம் பூரிசுத்தாயை நம:
ஓம் மந்த்ர ஹுங்காரரூபிண்யை நம:
ஓம் ஜ்யோதிஷே நம:
ஓம் ஞானாயை நம:
ஓம் க்ரஹகத்யை நம:
ஓம் ஸர்வப்ராண ப்ருதாம்வாராயை நம:

விஜயா நித்யாவுக்கான பூஜை :

முதலில் லலிதா தேவியை மகாநித்யாவாக தியானிக்க வேண்டும்.

யா பஞ்சதச்யாத்மக மந்த்ர ரூபா
பஞ்சோபசார ப்ரிய மானஸாம்பா
பஞ்சாக ஹர்த்ரீம் மஹதீம் சிவாம்தாம்
அ: கார ரூபாம் ப்ரணமாமி நித்யாம்

என்று கூறி, லலிதா தேவியின் படத்துக்கோ யந்திரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர் சந்தனம் குங்குமத்தால் பொட்டு இடவும். பின்னர் அன்றைய நித்யாவான விஜயா நித்யாவை, அவளது யந்திரத்திலோ படத்திலோ தியானிக்கவும்.

ஜயப்ரதாம் ஸ்ரீ விஜயாத்ம போத
ஸெளக்ய ப்ரதாம் மோக்ஷவிதான க்ஷõம்
ஜயாதி ரூபாம் விஜயாமஜேயாம்
ஐகாரரூபாம் ப்ரணமாமி நித்யாம்

என்று கூறி, விஜயா நித்யா தேவியின் படத்துக்கோ யந்திரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர் சந்தன குங்குமத்தால் பொட்டு வைக்கவும்.

மேற்கூறிய நாமாவளியால் தேவிக்கு உகந்த சாமந்தி, மந்தாரை போன்ற மஞ்சள் நிற புஷ்பங்களால் அர்ச்சனை செய்து, பின்னர் தூபம் தீபம் காட்டவும். அவல் கொண்டு செய்யப்பட்ட நிவேதனங்களைச் சமர்ப்பிக்கவும். பின்னர் தேவியின் காயத்ரியைக் கூறி, கற்பூர ஆரத்தி செய்து பூக்களைப் போட்டு பிரார்த்தனை செய்யவும்.

விஜயா தேவிக்கு உகந்தவை:
நாட்கள்: வளர்பிறை துவாதசி, தேய்பிறை சதுர்த்தி
புஷ்பம்: மஞ்சள்நிறப் பூக்கள்
நைவேத்யம்: அவல்
காயத்ரி மந்திரம்:

விஜயா தேவ்யை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar