SS திருமாலின் திறமுரைக்கும் பரிபாடல்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> திருமாலின் திறமுரைக்கும் பரிபாடல்!
திருமாலின் திறமுரைக்கும் பரிபாடல்!
திருமாலின் திறமுரைக்கும் பரிபாடல்!

நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள;
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருந்தின் உள;

அதனால்,

இவ்வும், உவ்வும், அவ்வும் பிறவும்
ஏமம் ஆர்ந்த நிற் பிரிந்து
மேவல் சான்றன எல்லாம்

(பரிபாடல் 4-25-36,- திருமால் - கடுவன் இளவெயினனார் பாட்டு பெட்டநாகனார் இசை.)

உலகில் உள்ள எல்லாப் பொருளும் காக்கும் கடவுள் திருமாலிடம் இருந்து பிரிந்து மேன்மையுடன் இயங்கி வருகின்றன. திருமாலின் பண்புகள் ஒவ்வொன்றிலும் உள்ளன. அவரது ஒளியும், தேஜஸும். அதர்மம் அழிக்கும் வெம்மையும் சூரியனிடம் உள்ளன. தர்மவான்களைத் தாய்போல் காக்கும் குளிர்ச்சியும், அருளும் தன்மையும் திங்களிடம் உள்ளன. அனைவருக்கும் அருளுடன் வாரி. வழங்கிக் காப்பாற்றும் பண்புகள் மழையிடம் உள்ளன. கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? என்று ஆண்டாள் பெருந்தகை வியந்த நறுமணமும், மென்மையும் அவரது அம்சமாகப் பூக்களிடம் உள்ளன. பளிங்கு போன்ற தோற்றமும். பார்த்தவருக்கு ஆறுதல் தந்து. பார்க்கப் பார்க்கத் தூண்டும் பார்வைப் புலனுக்கு அடங்காத இறைவனின் பண்புகள் நீரில் உள்ளன. மூவுலகங்களும் கடந்து திரிவிக்கிரமனாக விசுரூபம் எடுத்து இறைவனின் உருவமும். இடிமுழுக்க ஒவியம் ஆகாயத்திடம் உள்ளன. வருதல், மறைதல், பண்பை ஒட்டி ஒவ்வொன்றும் கொண்டிலங்குகின்றது. எனவே. இது. அது. உது. பிறவெல்லாமும் இறைவனாகவே இருப்பதை விளக்கின்ற பரிபாடல். ஓங்கு பரிபாடல் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளன.

மாயோன் மேயக் காடுறை உலகம் என்று தொல்காப்பியம் மாயவனாம் திருமாலைக் காடும். காடு சார்ந்த இடமும் ஆகிய முல்லை நிலத்தின் கடவுளாகக் குறிப்பிட்டு. ஆனிரை மேய்க்கும் ஆயர்கள் கோவலர்கள் தொழுது வணங்கும் குழலூதும் கண்ணணைத் தொழுது பரவுதற்கு வித்திட்டது.

இறைவன் மீது பற்று வைத்தால், இறைவனை அறிதல். இறைவன் மீது காதல் கொள்ளுதல் என்ற பொருள்களைத் தரும். பரிபாடல் எனும் நூல் சங்க இலக்கிய எட்டுதொகை நூல்களில் ஒன்று. திருமால் பாகவதப்பிரியன் அல்லவா? அவரது திறம் உரைத்தற்கேற்ப சிற்றெல்லை 25 அடிகள். பேரெல்லை 400 அடிகள் வரையிலும் அமையவல்ல. பாவகையாகிய பரிபாட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

விரிமலர் புரையும் மேனியை; மேனித்
திரு நெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பின்
தெரிமணி பிறங்கும் பூணினை; மால்வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கைய
(பரிபாடல். 1.7.10; திருமால் - பாடியவர் பெயர் தெரியவில்லை)

திருவேங்கடவன் பூவை விரிமலர் போலும் மேனியன்; மேனியில் திருமகள் அமர்ந்த மார்பினன்; மார்பில் கௌஸ்துப மணி ஒளிரும் பூணினன், மலை மீது தீபம் என ஒளிர்பவன்; பொன்னணி கலன்கள் புனைந்தவன் பட்டு பீதாம்பரம் உடுத்தியவன் என்று சித்தரிக்கிறது.

பொன் அணி நேமி வலங்கொண்டு.....
புள்ளின கொடியவை

(பரிபாடல் 1.52.53- திருமால் - படியவர் பெயர் தெரியவில்லை)

வலது கையில் சக்கரம் ஏந்தியவர். கருடக்கொடி உடையவர் என்கிறது. பாம்பு இறை தலையனன். (பரிபாடல் 4.46-திருமால், கடுவன் இளவெயினனார் பாட்டு, பெட்டனாகனார் இசை) என்று ஆதிசேடன் பற்றி கூறப்பட்டுள்ளது.

திருமால் திருவுந்தித் தாமரையில் உதித்தவன் பிரமன். அவ்வகையில் பிரமனுக்குத் தந்தை என்று வேதங்கள் கூறுகின்றன.

தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும்
நீ என மொழியுமால் அந்தணர் அருமறை

(பரிபாடல் 3.12.14 - திருமால் கடுவன் இளவெயின்னார் பாட்டு, பெட்டனாகனார் இசை)

அருள் குடையாக, அறம் கோலாக
இருநிழல் படாமை மூர்-ஏழ் உலகமும்
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை

என்று காக்கும் கடவுள் திருமால். அருள் குடையாக, அறம் செங்கோலாகக் கொண்டு. மூன்று உலகங்களையும் தனது ஒரு குடையின் கீழ் காத்து வருவது சொல்லப்படுகிறது.

செயிர்தீர் செங்கண் செல்வ நிற் புகழ
பிருங்கலாதன் பலபல பிணிபட,
தாதை இகழ்வோன்......நீ
அவன் நன்மார்பு முயங்கி......
தடிதடி பலபட வகிர் வாய்ந்த உகிரினை

(பரிபாடல், 4.10.20. திருமால் கடுவன் இளவெயின்னார் பாட்டு, பெட்டனாகனார் இசை)

திருமால் அடி தொழும் பிரகலாதனைத் துன்புறுத்தும் தந்தையின் மார்பைக் கூரிய நகங்களால் வகிர்ந்து தசையைக் கிழித்த நரசிம்ம அவதாரம் கூறப்பட்டுள்ளது.

புருவத்துக் கருவல் கந்தரத்தால்
தாங்கி, இவ்வுலகம் தந்து, அடிப்படுத்ததை  நடுவண்
ஓங்கிய பலர்புகழ் குன்றினோடு ஓக்கும்

இறைவன் வராக அவதாரம் எடுத்து, உலகை மீட்டு தன் புருவத்தில் உலகைத் தாங்கிக் கொணர்ந்து தந்தமையும், வாமன் அவதாரம் எடுத்து, உலகைத் தன் திருவடியால் அளந்து, ஓங்கிக் குன்றமென நின்றமையும் போற்றப்படுகின்றது,

எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும். எண்களால் உணர்த்தப்படுவனும் அவனே! எண்களின் எண்ணிக்கை எல்லை கடந்த தத்துவனும் இறைவனே என்பதை.

பாழ் என, கால் என, பாரு என, ஒன்று என
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை

(பரிபாடல் 3,77,80, திருமால்-கடுவன் இளவெயினனார் பாட்டு, பெட்டனாகனார் இசை)

பூஜ்யம், சீரோ, சுழி சைபர், பாழ், வெறு வெளி எனப்படும் எண், கால், பாதி, பகுதி, அரை எனப்படும் பாகு எனும் பின்ன எண்களும். ஒன்று இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது எனும் தொண்டு ஆகிய எண்களும், கிருத, திருத, துவாபர, கலியுகம் எனப்படும் நால்வகைக் காலத்தும் பயன்படுத்தும் எண்களால் போற்றப்படும் சிற்ப்பிற்குரிய இறைதன்மை கூறப்படுகிறது.

தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்
மின் அவிர் சுடர்மணி ஆயிரம் விரித்த
கவை நா அருந்தலைக் காண்பின் சேக்கைத்
துளவம் சூடிய அறிதுயிலோனும்
விறல் மிகு ..... வளைவாய் நாஞ்சிலோனும்
நானிலம் துளக்கு அற முழுமுதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி, மணிமடல் பேர் அணி
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி
மூ உரு ஆகிய தலையிரி ஒருவனை

(பரிபாடல் 13.26.37, திருமால் நல்லெருதியார் பாட்டு இசை அமைத்தவர் பெயரி தெரியவில்லை)

திருப்பாற்கடலில், ஆயிரம் தலைகளைக் கொண்ட ஆதிசேடனாம் அரவணைப் பள்ளியுள் அறிதுயில் கொண்டிருப்பவன்; துளவ மாலை அணிந்தவன். வீரத்துடன் கருவியாம் நாஞ்சில் எந்தியவன். போரிட நடந்தவன். களிறெனக் கம்பீரமாக அணிகள் தரித்து ஒளியுடன் நிற்பவன் என்று இறைவனின் கிடந்த கோலம். போரிட, நடந்தகோலம், நின்ற கோலம் ஆகிய மூன்று உருவங்கள் கூறப்படுகின்றன.

புலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங்குன்றம்
பல; எனின் ஆங்கு அவை பலவே; பலவினும்
நிலவரை ஆற்றி, நிறைபயன் ஒருங்கி உடன்
நின்று பெற நிகழும் குன்று அவை சிலவே;
சிலவினும் சிறந்தன, தெய்வம் பெட்புறும்
மலர் அகல் மார்பின் மைபடு குடுமிய
குலவரை சிலவே; குலவரை சிலவினும்
சிறந்தது... நீள்நிலை ஓங்கு இருங்குன்றம்
நாறு இணர்த் துழாயோன் நல்கின்
அல்லதைஏறுதல் எளிதோ?

(பரிபாடல். 15.4.12 திருமால் இளம்பெருவழுதியார் பாட்டு, மருத்துவன் நல்லச்சுதனார் இசை)

கற்றுவல்ல புலவர்கள் கண்டு ஆராய்ந்து, உரைத்த நெடுங்குன்றங்கள் பலவே, அவற்றுள் நிலைத்த புகழுடைய குன்றங்கள் சிலவே, அத்தகு சிலவற்றுள்ளும் தெய்வங்கள் விரும்பிப் பூசிக்கும்படி திருமகளை மார்பில் கொண்ட மைவண்ணன் வதியும் மலைகள் சிலவே. அச்சிலவற்றுள்ளும் தொடர்ச்சியான மலைத் தொடரில் ஓங்கி, திகழும் மலையில், நறு மணமிகுத் துளபமாலை அணிந்த திருமால் அருள் தந்தால் அல்லது ஏறிச் சென்று அவனைக் காணுதல் எளிதோ? என்று இறைவனின் காணரும் தன்மை விதந்துரைக்கப்படுகிறது.

பரிபாடலில் கிடைத்திருக்கும் பாடல்கள் இருபத்து இரண்டு மட்டுமே. அவற்றுள் திருமால் பற்றியன ஆறு பாடல்கள். இவை பாடுவதற்கு, ஏற்ப இசையமைக்கப்பட்டிருப்பது குறிக்கத்தக்கது. பரிபாடல் பாடிய புலவர்களின் பெயர்களில் ஒருவர் பெயர் கேசவனார்; மற்றொருவர் பெயர் நல்லச்சுதனார் என்பது. இவ்விருவரும் தாமே தம் பாடல்களுக்கு இசையும் அமைத்துள்ளனர்.

தையலவரொரும். தந்தார் அவரொடும்
கைம்மகவோடும், காதலவரொடும்
தெய்வம் பேணித் திசை தொழுதினீர் சென்மின்

பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையே
நினைமின், மாந்தீர், கேண்மின், கமழ்சீர்!

நலம்புரி அம்சீர் நாம வாய்மொழி இசைத்து
இறை இருங்குன்றத்து அடிஉறை இயைக என,
பெரும்பெயர் இருவரைப் பரவுதும் தொழுதே!

(பரிபாடல். 15.46, 48, 27-28, 63, 66-67, திருமால் இளம்பெருவழுதியார் பாட்டு, மருத்துவன் நல்லச்சுதனார் இசை)

ஆடவர் தாம் மணந்த மனையாளோடும். தன்னைப் பெற்றவர்களோடும். தாம் பெற்ற குழந்தைகளோடும் மகளிர் தாம் மணந்த காதல் கணவரோடும் தெய்வத்தைப் போற்றி திசையைத் தொழுது. காணச்செல்லுங்கள். பொன் அணிகலன்களையும், பட்டுப் பீதாம்பரம் உடுத்த இறைவனை நெஞ்சில் நினையுங்கள்; அவனது சிறப்பைக் காதாரக் கேளுங்கள். திருமாலின் திருநாமத்தை வாயால் இசையுங்கள்! அவன் உறையும் பெரிய மலையைத் தொழுது பரவுக. அவன் உறையும் பெரிய மலையைத் தொழுது பரவுக. அவன் திருவடி பணிக என்று வழிபடு நெறியுரைக்கும் பரிபாடல் போற்றுதற்குரிய சங்கத் தமிழ்ப் பனுவலாகும். அதன்படி திருமாலைத் துதித்துப் பெரும்பேறு பெறுவோம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar