சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் வசதி ரத்து தேவசம்போர்டு- கேரள அரசு கூட்டாக முடிவு



சபரிமலை; சபரிமலை மண்டல - மகர விளக்கு சீசனில் கடந்த ஆண்டு போல் நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் சிரமப்படாமல் இருப்பதற்காக ஸ்பாட் புக்கிங் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. தினமும் 80 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்க கேரள அரசும் தேவசம்போர்டும் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு மண்டல மகர விளக்கு சீசனில் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டு 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. காடுகளிலும் மலைகளிலும் சிக்கிய பக்தர்கள் தண்ணீர் கூட கிடைக்காமல் சிரமப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் முடிக்காமல் இருமுடி கட்டுகளை காட்டுகளுக்குள்ளே விட்டுவிட்டு திரும்பி சென்றனர்.

சபரிமலை வரும் பக்தர்களை ஒழுங்கு படுத்துவதற்காக கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் விருச்சுவல் கியூ என்றஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை பக்தர்களுக்கு மட்டுமே இந்த முன்பதிவு வழங்கப்பட்ட நிலையில் கொரோனாவுக்கு பின்னர் முழுமையாக அனைத்து பக்தர்களும் ஆன்லைன் முன்பதிவு மூலம் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்காக நிலக்கல், பம்பை, எருமேலி மற்றும் கேரளாவின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்தி சபரிமலைக்கு வந்தனர்.

ஏற்கனவே தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு மூலம் அனுமதிக்கப்பட நிலையில், ஸ்பாட் புக்கிங் மூலமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் எல்லா சிஸ்டமும் தாறுமாறானது. இது கேரள அரசு மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ள மண்டல மகர விளக்கு கால சீசனில் ஸ்பாட் புக்கிங் வசதியை முழுமையாக ரத்து செய்ய திருவிதாங்கூர் தேவசம் போடும் கேரள அரசும் முடிவு செய்துள்ளது. தினசரி முன்பதிவு 80 ஆயிரம் ஆக தொடரவும் சீசனுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைன் முன்பதிவை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூட்டத்தில் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அதன் தலைவர் பிரசாந்த் கூறினார். பம்பை முதல் சன்னிதானம் வரை ரோப் கார் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக வரும் 23-ல் கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். நீதிமன்றம் அனுமதி வழங்கியதும் ரோப் கார் பணிகள் தொடங்கப்படும். முதற்கட்டமாக அப்பம் - அரவணைக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லவும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் சேவைக்கும் ரோப் கார் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்