சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரமோற்சவம் வழிபடுவோர் விரும்புவதாக அறங்காவலர் மனு



சென்னை : சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரமோற்சவம் நடத்துவதில், வழிபடுபவர்களுக்கும், அறங்காவலர்களுக்கும் முழு உடன்பாடு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரமோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கு விசாரணை; இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணையில் உள்ளது. வரும் 10ம் தேதி, இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், கோவிந்தராஜ சுவாமி கோவிலின் நிர்வாக அறங்காவலரான திருவேங்கடவன் தாக்கல் செய்த மனு: சிதம்பரத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ சுவாமி கோவில் தனி கோவில்; அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிந்தராஜ சுவாமி கோவிலில் விழாக்கள் நடத்த, எப்போதும் பொது தீட்சிதர்கள் தடையாக இருப்பர். அதனால், பொது தீட்சிதர்களுக்கு எதிராக, சிதம்பரம் நீதிமன்றத்தில் கோவிந்தராஜ சுவாமி கோவில் அறங்காவலர்கள் வழக்கு தொடர்ந்தனர். கோவிந்தராஜ சுவாமி கோவில் நிர்வாகம் தொடர்பாக, 1932ல் திட்டம் வகுக்கப்பட்டது.

நிராகரிப்பு; அதன்படி, அறங்காவலர்களை அறநிலையத்துறை நியமிக்கிறது. கடந்த 1932ல் இருந்து இப்போது வரை, அறங்காவலர்கள் தான் நிர்வகிக்கின்றனர். கோவிந்தராஜ சுவாமிக்கு பிரமோற்சவம் நடத்த, 1979ல் அறங்காவலர்கள் முடிவு செய்து, அறநிலையத்துறை துணை ஆணையரை அணுகினோம். அவரும் விசாரணை நடத்தி, பிரமோற்சவம் நடத்த ஒப்புதல் அளித்தார். பொது தீட்சிதர்களின் ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டன. துணை ஆணையரின் உத்தரவை எதிர்த்து, அறநிலையத்துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்தனர். வழக்கு நிலுவையில் இருக்கும் போது, பிரமோற்சவம் நடத்த நிர்ணயிக்கப்பட்ட தேதி முடிந்து விட்டது. பிரமோற்சவம் நடத்த, 1983ல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. அதை எதிர்த்து, பொது தீட்சிதர்கள் குழு தொடர்ந்த வழக்கை, 1991ல் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கு நிலுவையில் இருந்ததால், அப்போதும் பிரமோற்சவம் நடத்த முடியவில்லை.

எதிர்ப்பு; பிரமோற்சவம் நடத்த ஒத்துழைக்கும்படி, பொது தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டும், தொடர்ந்து அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கோவிந்தராஜ சுவாமியை வழிபடுபவர்கள், பிரமோற்சவம் நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். அதனால், அறங்காவலர்களும், இணை ஆணையரிடம் வேண்டுகோள் வைத்தோம். இதற்கிடையில், பிரமோற்சவம் நடத்தக்கோரி, எம்.என்.ராதாகிருஷ்ணன் என்பவரும் வழக்கு தொடர்ந்தார். வரும் 25 முதல் 29 வரை பிரமோற்சவம் நடத்த, இணை ஆணையர் தேதி நிர்ணயித்துள்ளார். அதில், அறங்காவலர்கள், பக்தர்களுக்கு முழு உடன்பாடு உள்ளது. இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்