எம்பெருமானாரும் ஈரத்தமிழும்! | 1000th year celebrations of holy Sri Ramanuja Acharya | ராமானுஜரின் 1000வது நட்சத்திர வைபவம்

எம்பெருமானாரும் ஈரத்தமிழும்!

மே 03,2017திக்கெல்லாம் திருவாய்மொழியின் பெருமøயினைப் பேசிய எம்பெருமானார் ராமானுசரின் ஆயிரமாவது ஆண்டு இது. பிரம்ம சூத்திரத்துக்குப் பேருரை, பகவத் கீதைக்குப் பேருரை, வேதாந்த தீபம், வேதாந்த சாரம், வேதாந்த சங்கிரகம், சரணாகதி கத்யம், திருவரங்க கத்யம், திருவைகுந்த கத்யம், நித்யகிரந்தம் ஆகிய நூல்களை வடமொழியில் அருளிச்செய்த எம்பெருமானார். தமிழில் ஏன் எதுவும் எழுதவில்லை எனும் கேள்வி. இதுவரையில் பதில் கிடைக்காமல் கிடக்கிறது.

ஆனால், எம்பெருமானாரின் வாழ்வைக் கூர்ந்து நோக்கியவர்கள், உடையவர் ஈரத்தமிழின் முழு வடிவமாக வாழ்ந்ததை நன்கறிவர். இயலும் பொருளம் இசையத் தொடுத்து, இன்கவிகள் அன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் ராமானுசன் எனும் திருவரங்கத்து அமுதனாரின் வரிகளைப் படித்தவர்கள், இதனை நன்குணர முடியும். எம்பெருமானார் திருமலை நம்பியிடம் ராமாயணம் பாடம் கேட்டவர். திருமலையாண்டனிடம் திருவாய்மொழி பயின்றவர். ஆளவந்தாரின் மூன்று கட்டளைகளில் ஒன்று, திருவாய்மொழியின் பெருமையைத் திக்கெங்கும் பரப்ப வேண்டும் என்பதாகும். இச்சூழ்நிலையில் எம்பெருமானார் எவ்வாறு தமிழைக் கைவிட முடியும்? தமிழ்தான் எப்படி எம்பெருமானாரைக் கைவிடும்?

எம்பெருமானாரைப் பாற்கடலில் பையத்துயின்ற பரமன் இவ்வுலகத்துக்கு வருவித்தமைக்கொரு காரணம் உண்டு. ஆளவந்தார் நோய்ச் சார்த்திக் கிடந்த பொழுது, விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டுவதற்கும். நிலைபெறுவதற்குமாக ராமானுசரை பெருமாள் இவ்வுலகுக்கு வருவித்தார். எதிராசருக்கு முன்பு பிரம்ம சூத்திரத்துக்கு வியாக்யானம் எழுதியவர்கள் தர்க்கத்தோடு எழுதாமல், குதர்க்கமாக எழுதினார்கள். வேதத்துக்கும் பிரம்ம சூத்திரத்துக்கும் விரிவுரை எழுதியவர்கள். முன்னோர்கள் எந்த அளவை, எந்தப் பிராமணத்தைக் கொண்டு விளக்கம் சொன்னார்களோ, அதிலிருந்து வழுவாமல் சொல்ல வேண்டும் என எழுதிப் போந்தனர். ஆனால், எம்பெருமானார், மேற்குறித்த நூல்களுக்கு விரிவுரை செய்பவர்கள் முன்னோர்கள் வகுத்த அளவுகோலைப் பெருக்கியும் பிரமாணத்தை விரிவுபடுத்தியும் வலிவோடும் பொலிவோடும் செய்ய வேண்டும் என்றார்.

ஸ்ரீவைணவத்துக்கும் விசிஷ்டாத்வைதத்துக்கும் எதிராக விரிவுரை செய்தவர்கள் அனைவரும் வட மொழியிலேயே எழுதியமையால், எம்பெருமானாரும் வடமொழியிலேயே எழுத வேண்டியது காலத்தின் கட்டாயமாயிற்று. அவர்கள் தமிழில் எழுதியிருப்பார்களேயானால், உடையவரும் தமிழிலேயே எழுதியிருப்பார். ஆறாயிரப்படிக்குத் திருக்குறுகைப் பிரான் பிள்ளானும், மூவாயிரப்படிக்குப் பெரியவரச்சான் பிள்ளையும் உரை எழுத முடியும். ஆனால், பிரம்ம சூத்திரத்துக்கும் பகவத் கீதைக்கும் எம்பெருமானார் மட்டுமே விளக்கவுரை எழுத முடியும். அதனால், அந்த அரிய பணியைத் தாம் எடுத்துக்கொண்டு உரிய பணியைச் சீடர்களிடம் விட்டு விட்டார்.

வேதங்களுக்கு விரிவுரை இயற்றியதுபோல், திருவாய்மொழிக்கு ஏன் விரிவுரை எழுதவில்லை என்பதற்கொரு காரணத்தைப் பெருமானாரே பகன்றிருக்கிறார். ராமானுசர் தம் சீடராகிய திருக்குறுகைப்பிரான் பிள்ளாளை அழைத்து, திருவாய்மொழிக்கு, ஆறாயிரப்படி, எனும் உரை செய்யுமாறு பணித்தார். ஆசாரியனுடைய பணியை நிறைவேற்றியபின், பெருமானாரே அப்பணியைச் செய்திருந்தால் சிறப்பாக இருக்குமே என்ற ஐய வினாவைத் திருக்குறுகைப்பிரான் எழுப்பினார்.

அதற்கு எம்பெருமானார் அளித்த பதில், ஈரத் தமிழின் கொள்கலனாய் எம்பெருமான் இருந்தமையைப் புலப்படுத்தும், யான் ஆறாயிரப் படியை எழுதியிருப்பேனேயானால், ராமானுசரே உரை எழுதிய பின், இனி நாம் என்ன எழுதுவது என்று எல்லோரும் திருவாய்மொழியைக் கைவிட்டு விடுவார்கள். அதனால் நீ எழுதியதுதான் சரி என்று அருளினார்.

வேத, வேதாந்தங்களுக்கு விளக்கவுரை எழுதுவது ஞானத்தின் வயப்பட்டு எழுத வேண்டும். திருவாய் மொழிக்கு உரை எழுதுவதென்பது உணர்வு வயப்பட்டும், அனுபவத்தின் முதிர்ச்சியோடும் எழுதப்பட்ட வேண்டிய ஒன்றாகும். எனவே, ஞானத்தின் வயப்பட்டு எழுத வேண்டிய பாஷ்யத்தைத் தாமே வடமொழியில் செய்தார். அனுபவத்தோடும்  உணர்வோடும் திருவாய்மொழி ஈட்டுரையைத் தம் சீடர்களிடம் தந்தார்.

நாதுமுனிகள் நாலாயிரத்தையும் தொகுத்து வகுத்துத் தந்தவர் என்றாலும், அவருடைய காலத்தில் திவ்யப்பிரபந்தம் நாடெங்கும் பரவவில்லை. ஆனால் எம்பெருமானார் அவதரித்த பிறகு, திருவாய்மொழி வடநாடு முழுமையும் பரவியது. நேபாளத்திலும் இன்று பல்லாண்டு, பல்லாண்டு ஓதப்பெறுகின்றது. திருவரங்கத்திலும் திருப்பதியிலும் திருவாய்மொழி ஓதப்பட வேண்டும் என்று செயல் திட்டம் வகுத்தவர் எம்பெருமானார்.

ராமாயாணப் பேருரைகள் நிகழ்கின்ற இடங்களில் எல்லாம் அனுமன் மறைந்து நின்று, ராமபிரான் பெருமைகளைக் கேட்பான் என்பது மரபு வழிச் செய்தி. அது போன்று திருவாய்மொழி மொழியப்படும் இடங்களில் எல்லாம் எம்பெருமானார் மறைந்து நின்று கேட்பார் என்பது ஐதீகம். எம்பெருமானாருடைய வாழ்வு முழுவதுமே, பிழிந்தெடுத்த தமிழ்ச்சாறாகவே அமைந்தது எனலாம்.

உடையவர் பகற்பொழுதெல்லாம் பிரம்ம சூத்திரப் பேருரையில் ஆழ்ந்திருப்பாராம். இரவுப் பொழுதில் திருவாய்மொழி பாராயணத்தில் மூழ்கியிருப்பாராம். இரவு அமுது செய்தபின் பள்ளிக் கட்டிலில் அமர்ந்து, சந்தை சொல்ல வாராயோ என அழைப்பாராம். (சந்தை சொல்லுதல் என்றால், ஒரு குழுவினர், உயர்வற உயர்நலம் உடையவன் எவன் என ஒலிக்க, அடுத்த குழுவினர், எவன் அவன் மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன் என ஓரடியைத் திரும்பத் திரும்பச் சொல்லல் ஆகும்.)

உடனே சீடர்கள் குழுவாகப் பிரிந்து திருவாய் மொழியின் பாசுரங்களைச் சொல்லச் சொல்ல அதனைக் கேட்டுப் பெருமானார் புளகாங்கிதம் அடைவாராம். இரண்டாம் சந்தையின்போது திருவாய்மொழியில் உருகி அவருடைய எலும்புகள் நைந்துருக ஆரம்பித்து விடுமாம். மூன்றாம் சந்தையின்போது பாசுரங்களைக் கேட்கக் கேட்க அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கத் தொடங்கிவிடும். அதனைப் பக்கத்தில் இருக்கும் சீடர்கள், வழிகின்ற கண்ணீரை மேலாடையில் ஏந்துவார்களாம்.

எம்பெருமானார் வடமொழி வாசலில் உடலை வைத்தார். திருவாய்மொழி மடியில் தலையை வைத்தார். பாவேந்தர், திருவாய்மொழியான தேனிருக்க எனப் பாடினார். இவ்வாறு தமிழை உச்சத்துக்குக் கொண்டு சென்றவர், எதிராசர் ஆகிய உடையவர் ஆகிய எம்பெருமானார் எம்பெருமானாரின் தமிழ் ஈரத்தமிழ் மட்டுமன்று; வீரத்தமிழும் ஆகும்.

ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கு தாய்வீட்டு சீதனம்!

மேலும்

சித்திரைக்கும் சீர்மை கொடுத்த ராமானுஜா

மேலும்

அருள்மிகு நம்பி நாராயணர் கோயில்

மேலும்