SS அத்தனூர் அம்மன் இரட்டை மணிமாலை - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அத்தனூர் அம்மன் இரட்டை மணிமாலை
அத்தனூர் அம்மன் இரட்டை மணிமாலை
அத்தனூர் அம்மன் இரட்டை மணிமாலை

விநாயகர் காப்பு  நேரிசை வெண்பா

அத்தனூர் அம்மன்  இரட்டை மணிமாலை
பத்தனாய்ப் பண்ணுடன் பாடவே  சித்தனாம்
வேழ முகத்தான் விரைந்தருள் வேட்டளிப்பான்
ஆழ நினைப்பாம் அறிந்து

நூல்  நேரிசை வெண்பா

(1) பெருங்குடியர் பேணும் குலதெய்வம் பேசில்
ஒருங்கடிமை கொண்டாண்ட ஒண்மை  தருங்கையாள்
பத்திர காளி பராவு பராபரை
நத்தித் துதிப்பாம் நயந்து        

கட்டளைக் கலித்துறை

(2) நயந்து பணிவோர் நலம்பெற நல்லருள் தந்திடுவாள்
வியந்த விமலன் விழைவுறு வாமத்தள் விளங்கிழையாள்
பயந்த மனதைப் பயனாக்கி பாரோழ் புகழ வைப்பாள்
வயந்த அரியை வயமாக்கி வாகனம் ஆக்குவளே!

நேரிசை வெண்பா

(3) ஆக்கும் செயலும் அழிக்கும் அருவினையும்
காக்கும் தொழிலும் கருத்துடன்  நோக்குவாள்
ஏற்ற குலதெய்வம் என்று பெருங்குடியார்
போற்ற அருள்புரிவாள் போந்து

கட்டளைக் கலித்துறை

(4) துணையாம் பெருங்குடி தூய உழவர் குடிதனக்கு
இணையாம் இறைவன் இயைந்த அருளைப் புரிவதற்கே
கணையாம் விழியாள் கருத்தில் இனிப்பாள் கருதுவோரின்
பிணையாம் வினைநீக்கிப் பேரருள் ஈவாள் பெரிதுவந்தே

நேரிசை வெண்பா

(5) உவந்த பெருங்குடி உத்தமர் போற்றும்
தவந்தருதாயே! தரத்தில்  பவந்தரு
மாசுடை ஊழ்வினை மாய்த்துநீ மாண்புடைய
தேசுடை வாழ்வளிப்பாய் தேர்ந்து

கட்டளைக் கலித்துறை

(6) தேர்ந்த வரகைத் துறந்தே தெளிந்த குடியினராய்
ஆர்ந்த பெருங்குடி மக்கள் அமைந்து வணங்கிடவே
சார்ந்த குலதெய்வத் தாயே! சலியா மனத்துடனே
ஓர்ந்த அறிவும் திருவும் உவந்தளி உத்தமிமே!

நேரிசை வெண்பா

(7) உத்தமக் காளியே! அத்தனூர் அன்னையே!
வித்தக வேலன் விழைதாயே பத்தராய்
உம்மை வணங்க உயர்கோயில் ஆக்கியோர்
தம்மைத் தழைக்கச்செய் வாய்

கட்டளைக் கலித்துறை

(8) வாய்த்த பிறவியில் வாழ்த்திட வாயும், வணங்கியிட
சாய்த்த தலையும், சரணிணை சார்ந்திடக் கையிணையும்,
ஆய்ந்த தளியை அணைந்து வலம்வரக் காலிணையும்,
ஏய்ந்த முறையில் அளித்தாய்! எழிலார் வடிவழகே!

நேரிசை வெண்பா

(9) அழகின் உருவே! அருளின் பயனே!
குழகன் மதியன் குரவன்  பழகும்
இனிய துணையே இயைந்தே அணைந்தோர்
நினைய அருள்வாய் நிறைந்து

கட்டளைக் கலித்துறை

(10) நிறைந்த திருவும் நினைந்த கலையும் நிவந்தளிப்பாய்!
உறைந்த பனியை உருக்கும் ஒளியாய் உயர்ந்தவளே!
மறைந்த பெருமை மனிதர் அடைய மயலழிப்பாய்!
குறைந்த அறிவோர் குலவி உயரக் குறித்தருளே!

நேரிசை வெண்பா

(11) குறித்தே அழுதார்க் களித்தனை பாலை
பொறித்த புகலிப் புதல்வர்  மறித்தே
தமிழாய் மொழிந்தே தலைமகன் ஆனார்
குமிழேய் குயத்தாய் குவித்து

கட்டளைக் கலித்துறை

(12) வித்தேர் வரகை விழைந்தே துறந்த பெருங்குடியர்
கொத்தேர் குலதெய்வத் தேவீ! குலவுகூத் தன்பரணி
புத்தேர் புகழுடைக்காளீ! புகுந்தாரைக் காப்பவளே!
மத்தேர் தயிரின் மயக்க நிலைநீக்கி முன்னருளே

நேரிசை வெண்பா

(13) அருளைச் சுரக்கும் அனையே! அணைந்தே
பொருளைச் சுரந்து புகழைத்  தெருளை
புவியில் பெருக்க பெருங்குடி யார்க்கே
தவிரா தருள்வாய் தணிந்து

கட்டளைக் கலித்துறை

(14) தணியாச் சினத்தாய் தடிந்தாய் மகிடனைச் சண்டனுடன்
அணியார் சிலம்பில் அடிகள் இளங்கோ அரும்பரையாய்
கணியார் கனிதமிழ் வேட்டுவ வரியில் கட்டுரைத்தார்
பணியார் முடியாய்! பயனார் பெருங்குடி பார்த்தருளே

நேரிசை வெண்பா

(15) பார்க்கும் திசைதொறும் பாங்காய்ப் பரந்துறைவாய்!
யார்க்கும் அபயம் அளித்திடுவாய்  ஓர்க்கும்
வினையை விரட்டிப் பெருங்குடி மக்கள்
உனையே உவந்தணையச் செய்

கட்டளைக் கலித்துறை

(16) செய்யும் தொழிலும் செகத்தில் உயர்ந்த செழுந்தமிழின்
உய்யும் வளமும் உவந்தே அளித்திடும் உத்தமியே!
பெய்யும் மழையும் பெருகும் வளமும் பெரிதளிப்பாய்!
பொய்யும் புரட்டும் புவியில் புறம்போகப் பூத்தருளே

நேரிசை வெண்பா

(17) பூத்தகாளப்பநாயக்கநகர் பூங்கொடியே!
காத்த கடவுட் கருமணியே! வாய்த்த
பெருங்குடியார் பேணி வழிபடு தாயே!
ஒருங்கடியார் போற்ற அருள்

கட்டளைக் கலித்துறை

(18) அருளும் அழகும் அறமும் அடைவும் அகைந்தவளே!
பொருளும் பொலிவும் பொறியும் பொசியும் பொதிந்தவளே!
தெருளும் தெகிழ்வும் தெழிவும் தெளிவும் தெரிந்தவளே!
மருளும் மறமும் மயர்வும் மடமும் மறைத்தருளே!

நேரிசை வெண்பா

(19) மறைந்த மதியை முழுநில வாக்கி
உறைந்த புலவரை ஊக்கி  நிறைந்த
கவியரசு கந்தசாமி கண்டருள் செய்தே
கவிஞரைக் காத்தாய் கனிந்து

கட்டளைக் கலித்துறை  வாழ்த்து

(20) துணையாகும் தும்பிக்கை நாயகர் தூயருள் வாழியவே!
அணையாகும் அத்தனூர் அன்னை அருளோங்கி வாழியவே!
இணையாகும் செந்தமிழ் என்றென்றும் ஓங்கியே வாழியவே!
பணையாகும் பண்ணைப் பயிர்செய்து வாழி பெருங்குடியே!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar