Advertisement

கடகம் : தை ராசிபலன்


புனர்பூசம் 4ம் பாதம் : நட்சத்ர அதிபதி குருவின் ஏழாம் இடத்துச் சஞ்சாரம் தனித்து செயல்படுவதைத் தடுக்கும். ஏழாம் இடம் வலுப்பெறுவதால் நண்பர்களின் துணையுடன் செயல்படும் விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். தனாதிபதியின் நிலை திருப்தி வரும் வகையில் இருப்பதால் பொருள்வரவு தொடர்ந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் லேசான சலசலப்புகள் இருந்து வந்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் விருந்து கொண்டாட்டங்கள் அதிகரிக்கும். ஒரு சில விஷயங்களில் உடன்பிறந்தோரின் ஆதரவுடன் செயல்பட வேண்டியிருக்கும். தகவல் பரிமாற்றங்களில் உண்டாகும் தாமதத்தினால் ஒரு சில இழப்புகளுக்கு ஆளாக நேரிடும். மனதில் மட்டுமல்லாது உடலிலும் சுறுசுறுப்பு குறைந்து சிறிது சோம்பல்தன்மை குடிகொள்ளும். குடியிருக்கும் வீட்டினில் புதிய மாற்றங்களைச் செய்ய முற்படுவீர்கள். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். ஏதோ ஒரு தீவிர சிந்தனை சதா மனதினை ஆக்கிரமித்திருக்கும். மறைமுக எதிரிகள் வலுவிழப்பார்கள். உங்களை வைத்து ஆதாயம் கண்டவர்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும். வாழ்க்கைத்துணையின் சிறப்பான செயல்பாடுகள் உங்களது வாழ்வியல் நிலையை உயர்த்தும். அவரது பேச்சுக்கள் உங்கள் மன தைரியத்தை அதிகரிக்கச் செய்யும். இந்த மாதத்தில் எதிர்பாராத அவசிய செலவுகளை திடீரென்று சந்திக்க நேரிடும். பெற்றோருடன் லேசான கருத்து வேறுபாடு தோன்றும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். ஜன.யின் இறுதியில் எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும். மனதில் நிலவி வரும் குழப்பங்களினால் செயல்களில் சிரமம் காண்பீர்கள். குடும்பத்தில் உறவினர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெறத் துவங்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் ஒரு சில தொல்லைகளை சந்திக்க நேரிடும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நற்பலன்களைக் காணும் மாதம் இது.

பரிகாரம் : ஸ்ரீநிவாஸப் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் : ஜன. 15, பிப். 12

பூசம் : நட்சத்ர அதிபதி சனியின் ஏழாம் இடத்து நிலை அடுத்தவர்களின் துணை கொண்டு நினைத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்துமுடிக்கும் திறனை அளிக்கிறது. நண்பர்களுடனான பிரச்னைகள் தீரும். எல்லா விஷயங்களுக்கும் அடுத்தவர்களை நம்பி இருக்க வேண்டிய சூழலைக் கண்டு மனதில் லேசான வருத்தம் தோன்றும். தன காரகன் சுக்ரனின் சஞ்சாரம் மாதத்தின் முற்பகுதியில் சற்று சிரமத்தினைத் தந்தாலும், பிற்பகுதியில் பொருளாதார நிலை உயரக் காண்பீர்கள். ஜன. 30ம் தேதி முதல் சுக்ரனின் இடமாற்ற நிலையால் மனதிற்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறத் துவங்கும். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும். புதிய வாகனம் வாங்க விரும்புவோர்க்கு ஜன.யின் இறுதியில் நேரம் சாதகமாக இருக்கும். கண்டச் சனியின் தாக்கத்தினால் அவ்வப்போது மனதில் ஒரு வித அசதி தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். உடல்நிலை சீராக இருந்து வரும். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகள் உங்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும். எந்த ஒரு விஷயத்திலும் உடனிருப்பவர்களை அனுசரித்துக்கொண்டு கூட்டுமுயற்சியின் பேரில் செயல்படுத்தி வெற்றி காணவேண்டிய சூழல் நிலவுகிறது. சுபசெலவுகள் சற்று அதிகரிக்கக் கூடும். பெற்றோருடன் கொண்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்யோக ரீதியாக உடன் பணிபுரிபவர்களால் சிறிது சிரமத்திற்கு ஆளாக நேரிடும். எல்லா விஷயத்திலும் சிறிது பொறுமையைக் காப்பது நல்லது. வியாபாரிகள் எதிர்பார்க்கும் தன லாபத்தினை அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். குடும்ப விவகாரங்களில் நினைத்த காரியங்களை அமைதியான முறையில் நடைமுறைப்படுத்துவீர்கள். பூர்வீக சொத்துக்கள் அனுகூலத்தினைத் தரும். கூட்டுமுயற்சிகள் வெற்றியைத் தரும். திட்டமிட்டு செயல்படுவதால் செயல்வெற்றி சாத்தியமாகி வருகிறது. நன்மை தரும் மாதமே.

பரிகாரம் : தைப்பூச நாளில் அன்னதானம் செய்யுங்கள்.
சந்திராஷ்டமம் : ஜன. 16, பிப். 12

ஆயில்யம்: இந்த மாதத்தில் எந்த ஒரு விஷயத்தையும் வெற்றிகரமாகச் செய்துமுடிக்க அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கண்டச் சனியினால் உண்டாகும் மனக்குழப்பங்கள் மனதின் ஒரு மூலையில் இருந்து வந்தாலும் ஏழாம் இடத்தில் இணைந்திருக்கும் வலுவான கிரகங்களின் பார்வை உங்கள் நட்சத்திரத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும். எதிர்பாராத நேரத்தில் சற்று தைரியத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தன காரகன் சுக்ரனின் நிலை சாதகமற்ற சூழலில் உள்ளதால் ஜன. 29ம் தேதி வரை பொருளாதார ரீதியாக சற்று சுமையாக உணர்வீர்கள். கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. சேமிப்புகள் கரையும் வாய்ப்பு உள்ளது. உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். வண்டி, வாகனங்கள் ஆதாயத்தைத் தரும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருந்து வரும். ஒரு சிலருக்கு தாயார் வழி சொத்துக்கள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் நடைபெறும். வாழ்க்கைத்துணையின் செயல்களுக்கு பக்கபலமாய் இருந்து செயல்படுவீர்கள். புதிய நண்பர்கள் சேரும் அதே நேரத்தில் அவர்களால் சிறிது செலவுகளைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டு. பெற்றோருடன் கொண்டிருந்த கருத்து வேறுபாடு மெல்ல விலகத் தொடங்கும். பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் ரீதியாக அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கும். கூட்டுத் தொழில் நல்ல தனலாபத்தினைத் தரும். எந்த ஒரு விஷயத்திலும் தனித்து செயல்படாமல், கூட்டாக இணைந்து செயல்பட்டு வெற்றி காணும் நேரமாக அமைந்துள்ளது. நண்பர்களால் கூடுதல் செலவுகளுக்கு ஆளானாலும் பின்னாளில் ஆதாயம் காண்பீர்கள். உடனிருப்பவர்களிடமும் கௌரவம் பார்ப்பீர்கள். ஜன.யில் அதிக செலவுகளுக்கு ஆளானாலும் பிப்.யில் தனலாபம் காணத் துவங்குவீர்கள். குடும்பத்தின் நிம்மதியைக் காப்பதில் மிகுந்த பொறுப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் நலனுக்காக எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்களில் வெற்றியைக் காண கூடுதல் செலவினையும், அலைச்சலையும் சந்திக்க வேண்டியிருக்கும். நற்பலனைத் தரும் மாதம் இது.

பரிகாரம் : சங்கரநாராயணரை வழிபட்டு வாருங்கள்.
சந்திராஷ்டமம் : ஜன. 17

Advertisement
 
Advertisement