மாலை அணிந்து சபரிமலை போறீங்களா: இதை படிங்க..



கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள்.


ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது.



மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள் :

1. ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கும் சமயத்தில் உறுதியான கம்பியில் கட்டிய ஒரு மாலையே போதுமானது. துணை மாலை அவசியமே இல்லை.
2. முறையாக விரதம் இருந்தால் தங்களது மனசாட்சி அனுமதிக்கும் பட்சத்தில் மாலை போடாமல் 41 நாட்கள் விரதமிருந்து புறப்படும் நாளன்று மாலை போடுவதில் தவறேதும் இல்லை.
3. சென்ற தடவை உபயோகித்த மாலையை அது உறுதியாய் இருக்கும் பட்சத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.
4. சபரிமலை தரிசனம் செய்தபிறகு, வழியிலேயே மாலையைக் கழற்றாமல் வீட்டுக்குத் திரும்பிய பிறகு மாலையைக் கழற்றுவது முழுமையான, முறையான, உத்தமமான செயலாகும்.
5. மாலையை ஏதாவது ஒரு கோயிலில் கழற்ற இயலாத பட்சத்தில் அம்மாவைக் கொண்டு கழற்றலாம்.
6. மாலை போட்டுக் கொண்டே தகப்பனாருக்கு சிரார்த்தம் (திதி) செய்யலாம்.
7. மாலைபோட்டு விரதம் இருக்கும்போது, மனைவிக்குக் குழந்தை பிறப்பதென்பது சுபகாரியமே. மாலையைக் கழட்ட வேண்டாம். குழந்தை பிறந்து 6 நாட்கள் கழித்து, புண்ணியாதானம் முடிந்து குழந்தையைப் பார்க்கலாம். பிரசவ சமயத்தில் தாங்கள் உடன் இருக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தாலும், குழந்தையை உடனே பார்க்கவேண்டும் என்ற கடமை உணர்வு இருக்கும் பட்சத்தில் மாலையைக் கழற்றலாம். மாலை போட்டிருக்கும் போது கருவுற்றிருப்பது சுபகாரியமே! எனவே, மாலை போடலாம்.
8. நாற்பத்தோரு நாட்கள் முறையாக விரதம் இருந்து பயணத்தை மேற்கொள்வதே, போற்றத்தக்க உத்தமமான செயலாகும்.
9. சபரிமலை பயணத்தில் மிதியடி அணிந்துகொள்வது என்பது தங்கள் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தகுந்த முடிவு எடுக்கலாம். அணிவது தவறில்லை.
10. ஒருமுறை உபயோகித்த இருமுடிப்பையை மறுமுறை உபயோகிக்கலாம். அத்துடன் இன்னொருவர் உபயோகித்த இருமுடிப்பையை அது சுத்தமாக இருக்கும் பட்சத்தில் உபயோகிக்கலாம்.
11. முதல் வருடம் மலைக்குச் செல்லும் ஐயப்பமார்கள், கன்னிபூஜையை அவசியம் செய்யவேண்டும் என்கிறார்கள். வசதியில்லாத பட்சத்தில் கடன் வாங்கியாவது கன்னிபூஜையை செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஐயப்பன் அத்தகைய ஆடம்பரத்தை விரும்புவதும் இல்லை. தங்களால் எப்போது எவ்வளவு முடியுமோ, எப்போது இயலுமோ, வீட்டிலேயே உணவைப் பொட்டலமாகக் கட்டிக்கொண்டு, சாலையோரத்தில் உள்ள மிகவும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்றவரை அளிக்கலாம்.
12. தொழிற்சாலையில் வேலை செய்யும் போது கடமையைச் சரிவர செய்யும்பொருட்டு ஷு அணியலாம். இதில் குற்றம் ஏதும் இல்லை.
13. விரத காலத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டாம். மற்றபடி சாதாரணமாக சிகைக்காய், சோப்பு உபயோகிப்பதில் தவறில்லை.
14. மாலை போட்டுக் கொண்டு விரதம் இருக்கும் சமயத்தில், வீட்டிலுள்ளவர்களுக்கு அம்மை கண்டிருந்தால் அதே வீட்டில் இருக்கும் பட்சத்தில் மாலையைக் கழட்டுவது உத்தமம்! ஆனால், தாங்கள் வெளியே எங்கும் தங்கியிருந்தால் மாலையைக் கழட்டவேண்டிய அவசியமில்லை.

சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களின் கவனத்துக்கு:

1. ஐயப்ப விரதத்தில், மூட நம்பிக்கைகள் அவசியமில்லாதவை.
2. ஐயப்ப பூஜை என்ற பெயரில், ஒலிபெருக்கி வைத்து நள்ளிரவு வரை அடுத்தவர்களுக்கு இடையூறாக இருப்பது விரும்பத்தக்கதல்ல!
3. தங்களுக்கு இது எத்தனையாவது மலை என்று வினவுவதும், தான் இத்தனை தடவை மலைக்குச் சென்றிருக்கிறேன் என்று பெருமை அடித்துக்கொள்ள வேண்டாம்.
4. மாலை போடுதல், இருமுடி கட்டுதல் மிகவும் புனிதமான வைபவம் ஆகும். இதை வீடியோ, புகைப்படம் எடுப்பது உகந்த செயல்கள் அல்ல. இதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
5. இருமுடி கட்டும் நாளை ஒரு விழாவாக எண்ணி, உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பி அவர்களிடம் அன்பளிப்பாகப் பணம் பெறுதலும் ஐயப்ப பக்தி விதிமுறைக்குப் புறம்பானது. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் பொருள்களை சன்னிதான உண்டியலில் அப்படியே சேர்ப்பதுதான் முறை.
6. இருமுடி தாங்குபவர்களுக்கு பூமாலை அணிவித்து, அடுத்த நிமிடமே அந்தப் பூக்கள் மற்றவர்கள் காலில் பட்டுச் சீரழிவது விரும்பத்தக்க செயல் அல்ல.
7. சபரிமலை யாத்திரையின்போது, கன்னி சாமிகள்தான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தவறானது. பக்தியும் பணிவும் எல்லோருக்கும் பொதுவானது.
8. ஐயப்ப பக்தர்கள் வெளி ஸ்தலங்களுக்கு வழிபடச் செல்லும்போது, அங்குள்ள நடைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மதித்து நடத்தலும் அவசியமானது. உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமெனில், குருவாயூரப்பன் சன்னதியில் மிக சப்தமாக சரண கோஷம் சொல்லாமல், அமைதியாக வழிபடுதல்.
9. சபரிமலை யாத்திரை செல்லும் ஒவ்வொரு பக்தரும், ஒரு ஐந்து நிமிடமாவது பம்பை நதிக்கரையையோ அல்லது சன்னிதானத்தையோ சுத்தம் செய்வது மிகவும் போற்றத்தக்க செயலாகும்.
10. சபரிமலை யாத்திரையின்போது மிகவும் ஆடம்பரமான விருந்து உண்ணுதலைத் தவிர்த்தல் எல்லா வகையிலும் நல்லது.
11. சாப்பிட்ட இலைகளை, புனிதமான பம்பை நதியில் எறிந்து அந்தப் புண்ணிய நதியை அசுத்தப்படுத்துதல் மிகவும் தவறான செயலாகும். மாறாக, ஒரு குழி தோண்டி அவற்றைப் புதைக்கலாம்.
12. பம்பையில் விளக்கேற்றி வழிபடுதலை, மற்றவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல், அமைதியாக, ஆடம்பரமின்றி தங்கும் தாவளத்திலேயே (இடத்திலேயே) கொண்டாடுதல் மிக சிறப்பான செயல்.
13. சன்னிதானத்தில், கற்பூர ஆழிப் பிரதட்சிணத்தை எந்தவித அசம்பாவிதத்துக்கும் உட்படுத்தாமல் அடக்கமாகச் செய்வது எல்லோருக்கும் நல்லது.
14. கண்ணாடி பாட்டில்களையும் உடைந்த தேங்காய் மூடிகளையும் கண்ட இடத்திலும் போட்டு, மற்ற ஐயப்பன்மார்களின் பாதத்தைப் புண்ணாக்கும் பாவத்தைச் செய்ய வேண்டாம்.
15. ஐயப்பன் வழிபாட்டை, ஆவேசத்துக்கும் ஆக்ரோஷத்துக்கும் ஆடம்பரத்துக்கும் உட்படுத்தாமல், அமைதியாகவும் சாத்விகமாகவும் மேற்கொண்டால் அனைவருக்கும் நன்மையே.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்