பரமக்குடியில் விடிய விடிய தசாவதார திருக்கோலத்தில் அருள்பாலித்த கள்ளழகர்



பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்தார். தொடர்ந்து விடிய விடிய தசாவதார திருக்கோலத்தில் அருள் பாலித்தார்.

பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா நடக்கிறது. இங்கு ஏப்.18 காப்பு கட்டுதலுடன் விழா துவங்கி நேற்று முன்தினம்(ஏப்.23) அதிகாலை 3:30 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் காலை 10:00 மணிக்கு மகிழம்பூ, செண்பகப்பூ, தாமரை, மல்லிகை, ஏலக்காய் மாலை என தனக்குரிய வாசனை மலர்களை சூடி குதிரைவாகனத்தில் அமர்ந்தார். அப்போது பல்வேறு மண்டகப் படிகளில் சேவை சாதித்து ஆயிரம் பொன் சப்ரத்தில் எழுந்தருளி, இரவு 3:30 மணிக்கு காக்கா தோப்பு பெருமாள் கோயிலை அடைந்தார். பல ஆயிரம் பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி அழகரை வரவேற்று மகிழ்ந்தனர். தொடர்ந்து இரண்டு நாட்களும் பரமக்குடி நகர் முழுவதும் பல நூறு இடங்களில் அன்னதானம் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நேற்று மாலை 5:00 மணிக்கு அழகர் சேஷ வாகனத்தில் பரமபத நாதனாக அமர்ந்து அருள் பாலித்தார். அப்போது கருப்பண சுவாமியிடம் சிறப்பு பூஜைகள் நடத்தி, வைகை ஆற்றில் உள்ள மட்டா மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கினார். இங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் வழங்க அழகரை தரிசித்தனர். தொடர்ந்து வாணியர் மண்டகப்படிக்கு இரவு 11:00 மணிக்கு அழகர் சென்றடைந்தார். அங்கு மச்ச, கூர்ம, ராமர், மோகினி என பல்வேறு அவதாரங்களில் விடிய விடிய அருள்பாலித்தார். ஏ.டி.எஸ்.பி., காந்தி, ராமநாதபுரம் எஸ்பி., சந்தீஷ் தலைமையில், பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன், இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்