விசேஷமான கோலத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கும் திருத்தலங்கள்!




சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் மிதித்து, சின்முத்திரை மூலம் ஞானத்தைப் போதித்து சாந்தி மற்றும் ஆனந்தத்தை அருள்பவர் தட்சிணாமூர்த்தி. விசேஷமான திருக்கோலத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கும் திருத்தலங்கள் சிலவற்றைப் பார்ப்போம். மதுரை பழங்காநத்தம் பஸ்ஸ்டாண்ட் அருகே காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவதட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்து அருள் பாலிக்கிறார். புலித்தோலை ஆடையாக அணிந்து, சப்தரிஷிகள் கீழே நிற்க முடிந்த தலையில் கங்கையுடன், வலது கை அபயமுத்திரையுடன் ஜபமாலை, இடது கையில் ஏடு, வலது மேல்கையில் நாகம், இடது மேல்கையில் அக்னி என சிவனே தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

மன்னார்குடி - பெருகவாழ்ந்தான் வழியில் 15 கி.மீ. தொலைவிலுள்ள கழுகத்தூர் சௌந்தரநாயகி சமேத ஜடாயுபுரீஸ்வரர் கோயிலின் பிராகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால் 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி - பூம்புகார் வழியில் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலமாகும். இங்கு உள்ள தட்சிணாமூர்த்திக்கு கீழ் சனகாதி முனிவர்களுக்கு பதில் பிரம்மா அமர்ந்த கோலத்தில் உள்ளார். பிரம்மனுக்கு உபதேசம் செய்த இந்த தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.

சென்னை ரெட்ஹில்ஸ் - பெரியபாளையம் சாலையில் அமைந்திருக்கும் திருக்கண்டலத்தில், திருகன்னீஸ்வரர் கோயிலில் பிருகு முனிவரின் பூஜையில் மகிழ்ந்து, இங்குள்ள ஈசன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அன்னை உமையைத் தன் மடியில் தாங்கி அருள்பாலிக்கிறார்.

சென்னையிலிருந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் வழியில் 56 கி.மீ., தூரத்தில் ஆந்திரா சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயில் உள்ளது. தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார்.

சிதம்பரத்துக்குத் தென்கிழக்கில் 3 கி.மீ. தொலைவிலுள்ள சிவபுரி எனும் திருநெல்வாயை அடுத்துள்ள மேலை திருக்கழிப்பாலை திருத்தலத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி, காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட பளிங்குக்கல்லால் <உருவானவர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி ராஜ அலங்காரத்தில் சிம்மாசனத்தில் மனைவியுடன் அருள்பாலிக்கிறார்.

தஞ்சை பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி அம்பிகை சமேதராக அருள்பாலிக்கிறார்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி, தர்ப்பாசனத்தில் அமர்ந்து, சனகர், சனந்தகர், சனாதனர், சனத்குமாரர், சிவயோகமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், திருமூலர் என எட்டு முனிவர்களுக்கும் அருள்புரியும் கோலம் மிகச் சிறப்பான ஒன்றாகும்.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே 8 கி.மீ., தொலைவில் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. பொதுவாக தெற்கு நோக்கி அருள்பாலிக்கும்
தட்சிணாமூர்த்தி இங்கு கிழக்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு.

எல்லாக் கோயில்களிலும் அபயமுத்திரையுடன் காட்சியளிக்கும் குரு பகவான், திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள திருலோக்கியில் அஞ்சலி முத்திரையில், கும்பிட்ட பெருமானாகக் காட்சி தருகிறார்.

திருநெல்வேலிக்கு அருகிலுள்ள தென்திருபுவனம் புஷ்பவனநாதர் திருக்கோயிலில், வழக்கத்துக்கு மாறாக வலக்காலை மடித்து இடது தொடைமேல் வைத்த நிலையில் அருள்பாலிக்கிறார்.

சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயிலில் இருந்து ஓமாப்புலியூருக்கு செல்லும் வழியில் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தட்சிணாமூர்த்தி
அம்மனுக்கு உபதேசம் செய்த காரணத்தினால் சேலை அணிந்திருப்பது சிறப்பு. குரு சன்னதி பொதுவாக கோயில் பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும். ஆனால்
இந்த தலத்தில் சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் மத்தியில் மகாமண்டபத்தில் தெட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் கபாலமும் சூலமும் ஏந்தியவராகக் காட்சியளிக்கிறார். இவர் காலடியின்கீழ் ஆமை போன்ற உருவம் காணப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை வேறெந்த கோயிலிலும் காணமுடியாது.

மயிலாடுதுறை காவிரிக்கரை வள்ளலார் கோயிலில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி. நந்திமீது அமர்ந்தவாறு அருள்பாலிக்கிறார். வேலூர் மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயிலிலோ, கோயிலின் கொடிமரத்தில் தென்திசையைப் பார்த்தவாறு அமர்ந்து அருட்காட்சி தருகிறார்.

மதுரையில் இருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் 33 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது திடியன் மலை கைலாசநாதர் கோயில்.  தமிழகத்தில் எங்குமே இல்லாதபடி, இங்கு மட்டுமே காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட தட்சிணாமூர்த்தி பதிநான்கு சித்தர்களுடன். நந்தியின் மீது அமர்ந்த நிலையில் இரண்டரை அடி உயரத்தில் அருளாட்சி புரிகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஆதிரத்தினேஸ்வரர் கோயிலிலும், சென்னை திரிசூலம் கோயிலிலும், தட்சிணாமூர்த்தி வீராசன நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.

திருவொற்றியூர் தியாகராஜர் - வடிவுடையம்மன் கோயில் வாசலுக்கு முன்புள்ள பக்க மண்டபத்தில் வடக்கு நோக்கி 9 அடி உயரம், 5 அடி அகலம் கொண்ட பிரமாண்ட வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.

அரக்கோணத்துக்கு 16 கி.மீ. தொலைவிலிருக்கும் தக்கோலம் திருத்தலத்தில் இருக்கும் சாந்த தட்சிணாமூர்த்தி வலக்காலை தொங்கவிட்டுக்கொண்டும், இடக்காலை மேலே வைத்துக்கொண்டு உத்கடி ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

பெரும்பாலும் சிவாலயங்களில் மட்டுமே இருக்கும் தட்சிணாமூர்த்தி, கல்லிடைக்குறிச்சி - மன்னார்கோயிலில் உள்ள வேதநாராயணர் கோயில் விமானத்திலும், மதுரை சோழவந்தானிலுள்ள பெருமாள் கோயிலிலும் அருள்பாலிக்கிறார்.

நாகலாபுரம் வேதநாராயணர் கோயில், திருப்பூந்துருத்தி, நஞ்சன்கூடு, காஞ்சிபுரம் கைலாசநாதர், தூத்துக்குடி கழுகாசலமூர்த்தி கோயில்களில் வீணாதர தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்.

தஞ்சை பாபநாசம் அருகிலுள்ள நல்லூர் கல்யாணசுந்த ரேஸ்வரர் திருக்கோயிலில் இரட்டை தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வடதிசையில் உள்ள ஆத்மநாதசுவாமி கோயிலில் தட்சிணாமூர்த்தி யோகநிலையில் அருள்பாலிக்கிறார்.

ஆந்திரா அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள ஹேமாவதியில் ஐயப்பன் போல் ஆசனமிட்டு, யோக மூர்த்தியாகத் திருக்காட்சி தருகிறார். கேரளா மாநிலம் சுகபுரத்தில், தட்சிணாமூர்த்திக்கென்றே ஒரு தனி ஆலயம் அமைந்துள்ளது. ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தை இயற்றியது இங்குதானாம்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்