காஞ்சியில் குருபெயர்ச்சி விழா விமரிசை கோவில்களில் சிறப்பு அபிஷேகம்



காஞ்சிபுரம்:குரு பகவான், நேற்று மாலை, 5:19 மணிக்கு, மேஷ ராசியிலிருந்து, ரிஷப ராசிக்கு பெயர்ச்சியானார். இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குரு கோவில், தட்சிணாமூர்த்தி சன்னிதி உள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, ஹோமம் உள்ளிட்டவை நடந்தது.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் முடங்கு வீதியில் உள்ள குரு ஸ்தலமான, கமலாம்பிகை சமேத காயாரோகணீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடந்தது. குரு பகவான் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், குரு பெயர்ச்சியையொட்டி, தாரை சமேத தேவ குரு பகவானுக்கு, மாலை 5:00 மணிக்கு மேல் விசேஷ அபிஷேக அலங்கார மகா தீபாராதனை நடந்தது.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், பாவூரில் உள்ள காகபுஜண்டர் குருகோவிலில் நேற்று மதியம் 2.00 மணிக்கு உலகாதி குருவுக்கும், குருபத்தினிக்கும், 27 நட்சத்திர குருமூர்த்திகள் மற்றும் 12 ராசி குருமூர்த்திகள் மற்றும் 16 திதி குருமூர்த்தி தேவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மதியம் 12.00 மணிக்கு அமிர்தசஞ்சீவி யாகமும், மதியம் 2.00 மணிக்கு குருபெயர்ச்சி மகா தீபாராதனையும் நடந்தது.

காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், குரு பரிகார ஸ்தலம் என, அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. நேற்று, மாலை 5:19 மணி அளவில், குரு, மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசிக்கு பிரவேசித்தார். இந்த குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, மூலவர் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரம் நடந்தன. உற்சவர் தட்சிணாமூர்த்தி, மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்