காரைக்குடி; காரைக்குடியைச் சேர்ந்த பக்தர் ஒருவர், பிற பக்தர்கள் உதவியுடன் சபரிமலை கோயில் வடிவில் ரதம் செய்துள்ளார்.
காரைக்குடியைச் சேர்ந்தவர் செல்வராஜ் 65. ஐயப்ப பக்தரான இவர் 54 வருடங்களாக மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று வருகிறார். சில்வர் பட்டறை நடத்தி வரும் இவர் காரைக்குடி பருப்பூரணி அருகே, ஐயப்ப பஜனை மடம் இருந்த இடத்தின் அருகில் பக்தர்கள் உதவியுடன் ஐயப்பன் கோயிலை கட்டினார். தற்போது சபரிமலை ஐயப்பன் மூலஸ்தான வடிவில் ரதம் அமைக்க விரும்பினார். பக்தர்கள் உதவியுடன் பல லட்சம் செலவில் ரதத்தை உருவாக்கியுள்ளார். ஐயப்பன் கோயில் லட்சார்ச்சனை விழாவை ஒட்டி ரத ஊர்வலம் நடைபெறுகிறது. இன்று ரத வெள்ளோட்டம் நடந்தது.
குருசாமி செல்வராஜ் கூறுகையில்: சபரிமலை மூலஸ்தானம் போல் ஐயப்பனுக்கு ரதம் செய்ய வேண்டும் நீண்ட நாள் ஆசை இருந்தது. அழகப்பன் ஸ்தபதி மூலம் ரதம் செய்யத் தொடங்கினேன். ஐயப்பனின் அருளால் 4 மாதத்திலேயே செய்து முடிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பலர் உதவி செய்தனர் என்றார்.