உத்திரமேரூர்; உத்திரமேரூர் ஒன்றியம் அழிசூர் கிராமத்தில், அம்புஜ குஜலாம்பாள் சமேத அருளாளீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. விக்கிரம சோழனின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.
இந்த கோவில் கிழக்கு முகமாக அமைக்கப்பட்டு, நுழைவாயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவில் வளாகத்தில் சுப்பிரமணியர், பைரவர், அம்புஜ குஜலாம்பாள் ஆகியோருக்கு தனி சன்னிதிகள் உள்ளன. இங்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பிரதோஷம், சிவராத்திரி ஆகிய நாட்களில் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலின் மூலவர், அம்பாள், முருகன் ஆகிய சன்னிதிகள் சேதமடைந்துள்ளன. மேலும், கோவில் பிரகாரங்களில் உள்ள தரைகள் சேதமடைந்து, செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. எனவே, கோவிலை சீரமைக்க, பக்தர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கோவிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக சட்டசபையில், 2024 –-- 25ம் ஆண்டுக்கான, ஹிந்து அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது, கோவிலின் மூலவர் சன்னிதி, அம்பாள் சன்னிதி, சுப்பிரமணியர் சன்னிதி மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவை புனரமைக்க, 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் பூவழகி கூறுகையில், “கோவிலை பழமை மாறாமல் புனரமைக்க, 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது,” என்றார்.