பிரயாக்ராஜ்: மவுனி அமாவாசையை முன்னிட்டு, மகா கும்பமேளா நிகழ்ச்சியில் நேற்று ஒரே நாளில் 7.64 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் கூடும் திரிவேணி சங்கமம் பகுதியில் கடந்த 13ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது. இது, அடுத்த மாதம் 26ம் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் இங்கு நீராடி வருகின்றனர். இதுவரை 15 கோடிக்கு அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில், நேற்று (ஜன.,29) வட மாநிலங்களில் மவுனி அமாவாசையை முன்னிட்டு வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் குவிந்தனர்.
மவுனி அமாவாசை என்பது வழிபாட்டு தலங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு செய்வார்கள். மவுனி அமாவாசை என்பதால், நேற்று ஒரே நாளில் மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு 7.64 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். இதுவரை 27.58 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி உள்ளனர். இன்றும் மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.